Advertisement

“அங்க இருந்த சிசிடிவி ஃபுட்டேஜ்ல பிரபாவோடு ஜீவாவும், தென்றலும் அழுதுக்கிட்டே வெளியே போன நேரம். அதன் பின்னால எவ்வளவு நேரம் கழிச்சு சிலிண்டர் வெடிக்குதுன்னு நேரத்தை பாருங்க. தென்றலும், ஜீவாவும் வெளியே வரும் போது மிசஸ் செழியன் வாசல் வரை வந்து கட்டியணைச்சு பிள்ளைங்களை அனுப்பியிருக்காங்க…”

“அப்படி இருக்கும் போது இவங்க அவங்களை கொலை செய்திருக்க முடியாது. அதே நேரம் அந்த தெருமுனை வரைக்கும் ஜீவாவும், தென்றலும் அதை கடந்து அடுத்த தெருவுக்குள்ள என்டர் ஆகறது எல்லாமே பதிவாகி இருக்கு. அப்படி இருக்க இதுலையே தேவையான தெளிவு கிடைச்சிருச்சு ஜீவன்யா, தென்றல் நிரபாராதிகள் அப்படின்னு…” என்றவன்,

“ஆனாலும் சில சந்தேகங்கள் இருக்கலாம். இது செழியன் மனைவி அவங்க வீட்டு இன்வெட்டார் வேலை செய்யவில்லைன்னு அந்த நிறுவனத்தின் சர்வீஸ் சென்டரில் கம்ப்ளைன்ட் செய்ததற்கான ஆதாரம்….” என்று அதனை நீட்டியவன்,

“முழுவதும் சாற்றப்பட்ட வீடு. கசிந்த வாயு வீட்டிற்குள் இருக்க அங்க ஒருமணி நேரத்துக்கு மேல மின்சாரம் துண்டிக்கப்பட்டு திரும்ப வந்திருக்கு. மின்சாரம் வந்த நேரமும் வீடு வெடிச்ச நேரமும் ஒரே நேரமா இருக்கு. அதற்கான ஆதாரம் அங்க உள்ள மின்சாரவாரியத்தில இருந்து பெறப்பட்டது…” என அதையும் நீட்டினான்.

“இதன் மூலமாக தான் அந்த விபத்து நிகழ்ந்திருக்கும் அப்படின்னு சொல்ல வரீங்களா கிருஷ்ணா?…” நீதிபதி கேட்க,

“இருக்கலாம் மை லார்ட். செழியனுடைய மனைவி வெளில வந்து ஜீவா, தென்றலை அனுப்பும் பொழுதே நிதானமா இல்லை. ரொம்பவே தொய்வான நடையுடன் தான் திரும்ப வீட்டுக்குள்ள போனாங்க. ஒருவேளை அவங்களே கேஸை திறந்துவிட்டுட்டு இந்த விபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்…”

“மகளாக வளர்த்த பெண்களுடைய மானத்திற்கும், உயிருக்கும் விளைந்த ஆபத்தினால் உண்டான விரக்த்தியில் வரக்கூடிய மனோபாவம் தான் இது. அதுவும் தன்னுடைய கணவனே என்னும்பொழுது ஏமாற்றமும், ஆத்திரமும் ஏற்பட நிறைய வாய்ப்புகள் உண்டு…”

“அதுவும் இல்லையா? நிஜமாகவே விபத்தாகவும் இருக்கலாம். எத்தனையோ செய்திகளை பார்க்கிறோமே? அப்படி அவரால தப்பி செல்ல நினைத்து முடியாமல் மயங்கி இருக்கலாம். அந்த நேரம் சிலிண்டர் வெடிச்சிருக்கலாம்…” என்றான் பாலா.

“இதில் ஜீவாவும், தென்றலும் எந்தவகையிலும் குற்றவாளிகள் இல்லை என்பது எனது வாதம் மை லார்ட். நான் ஒப்படைத்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றமற்றவர்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்…”

பாலா பேசிவிட்டு வந்து அமர்ந்துகொள்ள ஆதாரங்கள், சாட்சிகள், வாதங்களின் அடிப்படையில் ஜீவன்யாவும், தென்றலும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

அதன் சாரம்சத்தை திருச்சி நீதிமன்றத்திற்கு நீதிபதியே நேரடியாக தன் கைய்யப்பமிட்டு பேக்ஸில் அனுப்பி வைத்தார்.

இனி திருச்சியில் இந்த வழக்கு சம்பந்தமாக அழைக்கப்பட்டாலும் பெரிதாய் கவலை பட அவசியமில்லை என்று அத்தனை நிம்மதியானது பாலாவிற்கு.

அவனின் முகம் அப்போது தான் ஒளிரவே செய்தது. அவருக்கு நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தான்.

மதிய உணவு இடைவேளை அது. அதன் பின்னர் தான் அரங்கநாதன், மயூரன் வழக்கின் தீர்ப்பு என்று சொல்லியிருக்க வெளியே வந்து நின்றார்கள்.

“பாலா…” என்று ஜீவா வந்து அவனின் கையை பிடித்துக்கொள்ள அவனுக்கு எந்தவித தயக்கமும் இல்லையே.

ஜீவாவையும், தென்றலையும் தன் இரு கைகளால் அரவணைத்துக்கொண்டான் பாலா.

“அவ்வளவு தான். எல்லாமே முடிஞ்சது. எல்லாமே முடிஞ்சதுடா. இனிமே இதை பத்தி எந்த கவலையும் இல்லாம இருக்கனும் ரெண்டுபேரும். சரியா?…” என்று சிரிப்புடன் கேட்க கண்ணீருடன் ஜீவாவும், தென்றலும் அந்த சிரிப்பில் பங்கேற்றனர்.

“ஓகே, லஞ்ச்க்கு சொல்லியிருக்கேன். கார்லயே சாப்பிட்டுடுங்க. காலையிலையே அரங்கநாதன், மயூரன் கேஸ் வரும்ன்னு பார்த்தா இந்த ஆளவந்தானால நேரம் கடந்திருச்சு…” என்று தலையை தட்டிக்கொண்டான்.

“கிருஷ்ணா, ஆளவந்தான் அங்கிள்…” என சசிகரன் சொல்ல,

“உன்னை பார்க்கவா தான் இருக்கும்…” என்ற பாலா,

“ஜீவா தென்றலோட கார்ல உட்கார்…” என்று சொல்லவும் இருவரும் ஏறி அமர்ந்தனர்.

“வந்துட்டாரா…”

“இதோ பக்கத்துல…” என்று சசிகரனும் கண்டுகொள்ளாததை போல சொல்லி கையை அசைத்ததும் பாலா ஆரம்பித்தான்.

“இந்த மூட்டை பூச்சி இருக்குல அதை எப்படி அடிக்கனும்னு தெரியுமா சசி?…” என்று தீவிரமான முகத்துடன் கேட்பதை போல பாவனை செய்ய ஆளவந்தான் பாலாவின் பின்னால் நின்று அவன் பேச்சை கவனித்தார்.

“தெரியாதே நீ தான் சொல்லேன். கேட்போம்…” சசிகரனும் கவனிக்காததை போலவே பாலாவின் நாடகத்தில் பங்கேற்க,

“மூட்டை பூச்சியை பிடிச்சு உரலில் போட்டு இடிக்கவும்…”

“ஹ்ம்ம், அப்பறம்…”

“சாகும் வரை மாங்கு மாங்கென்று இடிக்கவும்…”

“ஏன் இடிச்சுட்டே தான் இருக்கனுமா? செத்துருச்சான்னு பாரு கிருஷ்ணா…”

“இதுக்குத்தான் சொல்றேன். நாம பாட்டுக்கு இடிக்கிற கேப்ல அது தப்பிச்சு போய் திரும்ப நமக்கே குடைச்சல் குடுத்தா?…”

“குடுக்கும் குடுக்கும். மூட்டைப்பூச்சிக்காக வீட்டை எரிச்ச கதையெல்லாம் இருக்கே?…” சசிகரன் நக்கலாய் சொன்னான்.

“ஹாங், அதுக்குத்தான். கிடைச்ச மூட்டை பூச்சியை பிடிச்சதும் பட்டுன்னு அடிச்சு தூக்கி போடாம எடுத்துட்டு உரலை தேடறதை விட்டு பொட்டுன்னு போட்டு தூக்கி வீசிடனும்….” என்று பாலா பாவனையுடன் சொல்ல சிரிப்பை அடக்கியபடி நின்றான் சசிகரன்.

“கிருஷ்ணா…” ஆளவந்தான் அழைக்க,

“எங்கையோ கேட்ட குரல் சசி…” என்று தன் காதில் கையை வைத்தான் பாலா.

“கிருஷ்ணா நான் தான்…” மீண்டும் ஆளவந்தான் அழைக்க,

“இது என் ஆளோட வாய்ஸாச்சே சசி…” என்று அப்படியே சுழன்று  திரும்பியவன்,

“மகாப்ரபு நீங்க இங்கதான் இருக்கீங்களா?…” என்று செய்த நடிப்பில் பல்லை  கடித்தார் ஆளவந்தான்.

“ஆளு உங்களை என் கண் தேடுதே…”  என்று பாட வேறு செய்ய,

“போதும், ரொம்ப ஆடாத. சசிகரன்கிட்ட அரங்கநாதன் ஸார் பேசனும்னு சொன்னார். அவனை அனுப்பு…” என சொல்ல,

“டேய் போடா…” என்று சசிகரனை பிடித்து ஆளவந்தான் மேல் விழுமாறு தள்ளிவிட சுதாரித்து ஆளவந்தான் நிற்பதற்குள் சசியை மீண்டும் பிடித்து தன் பக்கம் நிறுத்தி அவனின் தோளில் கை போட்டபடி அவரை பார்த்து சிரித்தான்.

“இது கொஞ்சம் கூட நல்லா இல்லை…” என ஆளவந்தான் பல்லை கடிக்க,

“அனுப்புன்னு சொன்னீங்க. அடுத்த செகண்டே அனுப்பினேன். பிடிச்சுக்க உங்களுக்கு முடியலைன்னா நான் என்ன செய்ய? வேணும்னா இன்னொருதடவை அனுப்பவா?…” என்றான் பாலா.

“என்னடா விளையாடுறியா?…” என்று கொதித்தவர்,

“சசி, அப்பாவை வந்து பாரு. இப்ப வந்திட்டிருப்பார். நீ வந்து பேசு. அவர் மனசுவிட்டு உன்கிட்ட பேசணும்னு நினைக்கிறார்…” என்றார் ஆளவந்தான்.

“முடியாதுன்னு சொன்னா?…” சசிகரன் உடனே பதில் தர அவனிடம் பாலாவிடம் பேசியதை போல பேச முடியவில்லை.

“என்னதான் தப்பு பண்ணிருந்தாலும் அவர் உன்னோட அப்பா. அவரால தான் நீ…” என்று சொல்ல,

“அதாவது அவர் காசுல படிச்சு வளர்ந்திருக்கன்னு சொல்ல வரீங்களா?…” சசிகரனின் பதிலில் திகைத்து போனார்.

“இல்லப்பா…”

“ப்ச், போதும், நீங்களும் அவரை மாதிரி தானே? உங்க வேலை என்னவோ அதை மட்டும் பாருங்க. என்கிட்டே இந்த பேச்சு வச்சுக்க வேண்டாம். அப்பறம் வயசுக்கு கூட மரியாதை இல்லை…” என்று பளிச்சென சொல்லிவிட்டான்.

“டேய் ஆனாலும் உனக்கு வாய் நீளம்?…” என்று பாலா சசிகரனை அதட்டி,

“என்ன இருந்தாலும் என்னோட ஆளு. இப்படி வயசாகிருச்சுன்னு எல்லாம் பேசாத. எனக்கு மனசு தாங்கலை…” என்று ஆளவந்தான் மேல் நெஞ்சை பிடித்தபடி பாலா சாய,

“டேய் தூர போடா…” என பிடித்து தள்ளிவிட்டார்.

“இவனோட சேர்ந்தா இப்படித்தான் உறவுன்னா என்னன்னே தெரியாம போகும். கடைசியில உனக்கு அப்பா இல்லாம பண்ணிட்டான் பாரு. அவனை மாதிரியே ஒத்தையா நிக்கனும் போல?…” என்று ஆளவந்தான் பேச,

“யோவ் போயா வாயை மூடிட்டு…” என்றுவிட்டான் சசிகரன் சத்தமாக.

சுற்றி இருந்த அத்தனைபேரும் என்னவென்று பார்த்து சசிகரன் சொல்லியதையும் கவனித்துவிட முகம் சிறுத்து போனது ஆளவந்தானுக்கு.

தலையை தொங்க போட்டுக்கொண்டு அவர் நகர்ந்துவிடவும் சசிகரன் சங்கடத்துடன் பாலாவை பார்த்தான்.

“ஸாரிடா…” என்று  அவனை அணைத்துக்கொண்டு சொல்ல,

“அட ச்சீ, இதுக்கு போய் பீல் பண்ணுவியா? அவர் சொன்னா எனக்கு யாருமில்லையா? ஏன், என் ப்ரெண்ட் நீயில்லையா? இப்ப எனக்கு என்னோட வொய்ப் இருக்கா…” என்றதும் தான் ஜீவாவும் இதனை கவனித்திருப்பாள் என்றே புரிந்து உடனே குனிந்து காரினுள் பார்த்தான்.

“ஹேய் ஜீவா…” என்று அவளின் கன்னம் தட்ட கண்ணீருடன் அவளை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தவள் தலையில் நறுக்கென்று குட்டினான்.

“உதை வாங்க போற. எதுக்காம் இந்த அழுகை?…” என்று கண்ணீரை துடைத்தவன்,

“தென்றல்…” என்றான்.

“நான் சொல்லிட்டேன் மாமா. இவ தான் சும்மா சும்மா பீல் பன்றா. அந்தாளுக்கு இருக்கு ஒருநாள்…” என்று தென்றல் சொல்லவும் சிரித்தவன்,

“ஓகே, சாப்பாடு வந்திருச்சு. வெரைட்டியா இருக்காது. தயிர் சாதம் மட்டும் தான் சொல்லியிருக்கேன். இதை சாப்பிடுங்க. நைட் பெரிய ட்ரீட். சரியா?…” என்று ஆபீஸ் பாய் கொண்டுவந்த உணவை வாங்கி அவர்களுக்கு நீட்டினான்.

பவனும் உடன் சென்றே உணவை வாங்கியிருக்க அதனால் எந்த பயமும் இல்லாது உண்டனர்.

“நீ உன் ரூம்க்கு போகலையாடா?…” சசியும் காரில் சாய்ந்துகொண்டே சாப்பிட,

“ம்ஹூம். இல்லை. இனி அங்க இப்ப அவசியமில்லை. எப்படியும் பத்து கேஸ் நிமிஷத்தில ஆரம்பிச்சிரும். அதனால சாப்பிட்டு இப்படியே உள்ள போயிடறேன்…”

Advertisement