Advertisement

 மின்னல் – 26

          காலையில் நேரமே கிளம்பிவிட்டனர் நீதிமன்றத்திற்கு. செல்லும் வழியில் சசிகரனையும் சேர்த்து அழைத்துக்கொண்டார்கள்.

கிளம்பும் முன் தென்றலை பத்திரமாக ஜீவாவுடன் தான் இருக்க வேண்டும் என அத்தனை முறை சொல்லிவிட்டான்.

ஷேஷா பவனுடன் செக்யூரிட்டிக்கு இரண்டுபேரையும் சேர்த்து அங்கே அனுப்பி வைப்பதாக சொல்லியிருக்க பாலாவும் அதுவும் சரி என்றுவிட்டான்.

காரில் சென்றுகொண்டிருக்க பத்ரி பாலாவுக்கு அழைத்து பத்திரமாக இருக்கும் படி வேறு சொல்ல, அங்கே செல்லவும் தான் தெரிந்தது அன்றைய விசாரணையில் ஆளவந்தான் அரசு தரப்பு வழக்கறிங்கராக ஜீவா, தென்றலை விசாரிக்க இருப்பதே.

“கிருஷ்ணா நான் வேணும்னா ஆளவந்தான் அங்கிள்ட்ட பேசட்டுமா?…” என்றான் சசிகரன்.

“அவசியமில்லை சசி. இது விசாரணை மட்டும் தான். அவர் தான் ஆஜர் ஆவாருன்னு முன்கூட்டியே ஒரு கெஸ் இருந்துச்சு. ஆனாலும் வேற யாரையாவது ஏற்பாடு செய்வாங்கன்னும் நினைச்சேன். பேசட்டும். கேள்வி தானே? கேட்கட்டும்…” என்ற பாலா,

“ஜீவா சொன்னது ஞாபகம் இருக்கு தானே ரெண்டுபேருக்கும்…”  என்றதும் இருவரும் தலையசைத்தனர்.

“முதல்ல உங்களை தான் விசாரணைக்கு கூப்பிடுவாங்க. நானும் அங்க தான் இருப்பேன். அவர் கேட்கிற கேள்வியை பதட்டமில்லாம கவனிச்சு பதில் சொல்லுங்க. வேணும்னே அவர் திசை திருப்பற மாதிரி கேட்பார். இந்த கேஸ்ல இன்னும் உங்களை இன்வால்வ் பண்ணனும்னே பேசுவார்…”

“என்ன?…” என்று ஜீவா பார்த்தாள்.

“ஹேய் பதறாத ஜீவா, உங்க பதில் சரியா இருந்தா இன்னைக்கு உங்களை இந்த கேஸ்ல இருந்து விடுவிச்சிருவாங்க. சரியா தான் இருக்கும். சொன்னது ஞாபகம் இருக்குது தானே? என்கிட்டே சொன்னதை அப்படியே சொன்னா போதும். கேஸ் முடிஞ்சது…” என்றவனின் பார்வை ஜீவாவை துளைத்தது.

அவள் எதை சொல்ல கூடாதோ அதை சொல்ல வேண்டாம் என்பதன் அர்த்தத்தை சுமந்து நின்ற பார்வைக்கு சம்மதித்தாள்.

“அது எப்படி உறுதியா சொல்றீங்க?…” தென்றல் கேட்க,

“அன்னைக்கே ஆதாரத்தோட எல்லாம் உடைச்சாச்சு தென்றல். இப்போவுமே நீங்க ஜாமீன்ல தான் இருக்கீங்க. அன்னைக்கே இதை நான் பேசிருக்கலாம். ஆனா அன்னைக்கு சூழ்நிலையே வேற…” என்ற பாலா,

“சசி, டேக் கேர். நான் உள்ள போறேன். நீ பார்த்துக்கோ…” என கோர்ட்டுக்குள் செல்லவும் காரில் இருந்து இறங்கிக்கொண்டான்.

“நான் கால் பண்ணவும் வாங்க…” என்று சொல்லி அவன் சென்றுவிட்டான். அலுவலக அறைக்குள் செல்லும் முன் பவன் அழைத்துவிட்டான்.  

“கிருஷ்ணா, நான் வந்தாச்சு. கார்க்கு பின்னாடி தான் வெய்ட் பன்றேன். டோன்ட் வொர்ரி மேன்…” என்று சொல்ல,

“யஹ்ப் பவன்…” என சொல்லி அழைப்பை துண்டித்துவிட்டு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு மீண்டும் வெளியே வந்தான்.

முதல் விசாரணை முடிந்த நேரத்தில் அரங்கநாதனும், மயூரனும் மற்றும் இந்த வழக்கு சம்பந்தப்பட்ட இன்னும் சில குற்றவாளிகள் என்று அனைவரையும் அழைத்து வரவிருக்கிறார்கள்.

கூடுதல் பாதுகாப்புகள் அங்கே பலப்படுத்தப்பட்டு இருந்தது. மற்ற வழக்குகள் சமபந்தமாக வந்தவர்களும், பத்திரிக்கையாளர்களும் ஆவலுடன் ஆர்வமாக காத்திருந்தனர்.

நிச்சயம் தீர்ப்பு குற்றவாளிகளுக்கு எதிராக தான் இருக்கும் என்பதில் அனைவருக்கும் நம்பிக்கை இருந்தது.

அந்தளவிற்கு அரசாங்கத்தையே ஆட்டிப்பார்த்திருந்தது அந்த வழக்கு. கட்டிட துறையில் மட்டுமல்லாது, மருத்துவத்துறையிலும், கூலிப்படை வைத்து அராஜகம் செய்வது என்ற சட்டத்திற்கு புறம்பான மனித உயிர்களுக்கு பெரும் அச்சுறுத்தல்களாக அவர்கள் இருந்ததை கண்டு அதிர்ந்திருன்தது.

வழக்கு திருச்சி கோர்ட்டிலும் நடத்தப்பட உடனடியாக அங்கிருந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டதோடு அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

பெரும் போராட்டமாக உருவாக இருந்ததை கட்டுக்குள் கொண்டுவந்து சூழ்நிலையை அமைதிப்படுத்தினார்கள் காவல்துறையினர்.

அதற்கும் மேல் மயூரனின் கட்டுமான நிறுவனத்தையும் முடக்கி வைத்தது. தீர்ப்பில் அரங்கநாதனின் பட்டமும், பதவியும் பறிக்கப்படும் என்றும் பரவலாக பேசிக்கொண்டனர்.

விசாரணைகளில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்க தலை சுற்றிபோனார்கள்.

இரண்டு வழக்குகளிலும் சம்பந்தப்பட்டவர்களையும் சேர்த்தே மொத்தமாக கைது செய்தனர்.

இதோ முதல் விசாரணையாக ஜீவாவும், தென்றலும் உள்ளே அழைக்கப்பட்டனர்.

இருவரும் ஒரே கூண்டில் ஏறி நிற்க எதிரே பாலா அமர்ந்திருந்தான் அவர்களை பார்த்தபடி.

அவர்கள் இருவரின் பெரும் பலம் பாலா. அவனின் முகபாவனையே போதுமானதாக இருந்தது பெண்கள் இருவருக்கும்.

ஆளவந்தான் பாலாவை இகழ்ச்சியாய் பார்த்துவிட்டு எழுந்து விசாரணையை துவங்கினார் அவர்களிடத்தில்.

முதலில் இருவரின் பெயரையும், படிப்பு விவரத்தையும் கேட்டு முடித்தவர் அடுத்து வந்தது சம்பவம் நடந்த அன்றைக்கு.

“சம்பவம் நடந்த அன்னைக்கு என்ன நடந்ததுன்னு திரும்பவும் சொல்ல முடியுமா?…” என்றார் ஆளவந்தான்.

பாலா தன்னிரு கை விரல்களையும் ஒன்றோடொன்று கோர்த்து பிரித்தபடி எந்த உணர்வையும் காண்பிக்காது அமர்ந்திருந்தான்.

“அன்னைக்கு…” என்று தென்றல் ஆரம்பிக்க,

“நான் சொல்றேன் ஸார்…” என்ற ஜீவா மூச்சை இழுத்து பிடித்தவளாக பேச ஆரம்பித்தாள்.

“அன்னைக்கு காலையில ப்ரெண்ட் வீட்டுக்கு க்ரூப் ஸ்டடிக்கு கிளம்பிட்டேன். எப்பவும் தென்றலும் என் கூட தான் வருவா படிக்க. ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு போனதும் தான் லேப்டாப் மாறின விஷயமே தெரியும். இது அப்…”

“ஹ்ம்ம், சொல்லுங்க ஜீவன்யா. அவர் உங்களை வளர்த்தவர். அப்பா தானே?…” என நக்கலாக தென்றலை தூண்டிவிடும்படி இருந்தது அவரின் பேச்சு.

அன்றைக்கு போல இன்றும் தென்றல் நிதானமிழந்து கத்தி கூச்சலிடுவாள் என்று நினைத்து தான் அவர்களை திசைதிருப்பினார்.

“அப்ஜெக்ஷன் மை லார்ட்…” என எழுந்துவிட்டான் பாலா.

“ஏற்கனவே விசாரித்து முடிக்கப்பட்ட ஒன்றை இப்படி தூண்டி துருவும் நோக்கம் என்னவோ? அன்றைக்கே அந்த இரு பெண்களும் செழியனை தந்தை என சொல்லியதற்கு எதிர்ப்பை தெரிவித்தாகிற்று. செழியன் போல ஒருவரை தந்தை என சொல்லிக்கொள்ள யாருக்காகினும் விருப்பமின்றி தான் போகும்…”

“ஆனால், அரசு தரப்பு வக்கீல் அதை சொல்லியே எனது கட்சிக்காரரின்  ஏற்கனவே காயம்பட்டவர்களின் மனதை புண்படுத்துகிறார். அவரை மனமுடைய செய்ய முயற்சி செய்கிறார்…” என்று பேசினான் பாலா.

அவன் பேசியதற்கு மறுப்பும் சொல்லாத நீதிபதி ஆளவந்தானை கண்டன பார்வை வேறு பார்த்தார்.

அதற்கு மேலும் அவரால் பேசவும் முடியவில்லை. இதுவுமே மயூரனின் மிரட்டல்  என்பதால் மட்டுமே இவ்வளவு பேசியதும். கூடுதாலாக பாலாவின் மீதான வஞ்சமும்.

எப்படியும் என்ன பேசினாலும் அன்றே முடிந்துவிட்ட வழக்கை மீண்டும் இப்படி பேசுவது என்பது பலனளிக்காது என்று சொல்லியும் அவர் கண்டுகொள்ளவில்லையே.

எரிச்சலுடன் தனது துரிதமாக விசாரணையை முடித்துக்கொண்டு வந்து அமர்ந்துவிட்டார் ஆளவந்தான்.  

இதை கூட தன்னால் செய்ய முடியவில்லையே என்னும் ஆதங்கமும், கழிவிரக்கமும் அவரை பந்தாடியது.

இப்படி அரங்கநாதனின் கைப்பிடிக்குள் இருந்து இருந்தே தன் நிலை இப்படி ஆனதோ என எண்ணிக்கொண்டு இருந்தார்.

“இப்ப உங்களுக்கு தெளிவா புரிந்திருக்கும் மை லார்ட். க்ரூப் ஸ்டடின்னு போன இடத்துல தான் லேப்டாப் மாறி இருக்கிற விஷயமே ஜீவன்யாவுக்கு தெரிந்திருகிறது…”

“எத்தனை தான் மனைவி பிள்ளைகள் என்று இருந்தாலும் செழியன் தனது மொபைல், லேப்டாப் எதையும் வேறு யாரும் பயன்படுத்த கூடாதென கடுமையாக கண்டித்து வைத்திருக்கிறார்….”

“அதன்பொருட்டு ஜீவன்யாவும் சார்ஜில் இருந்த லேப்டாப்பை அப்படியே கவனியாது மாற்றி எடுத்து வந்திருக்க பதட்டம் இருக்க தானே செய்யும். கூடுதலாக சிறிது நாட்களாகவே செழியனுக்கும் அவர் மனைவிக்கும் இடையில் சில மனகசப்புகள் வேறு…”

“இதனை கொண்டு பிரச்சனை பெரிதாவதால் விருப்பமில்லாத இருவரும் உடனே கிளம்பி வீட்டிற்கு வர அங்கே தாங்கள் கண்ட காட்சியோ தாயை செழியனும், அவர் நண்பரும் சேர்ந்து தாக்கிக்கொண்டு இருப்பது…”

“பிரச்சனை என்னவென்றே தெரியாத நேரத்தில் இருவரும் இடைபுகுந்து தாயை காப்பாற்ற நினைத்த நேரம் தென்றல் அந்த நண்பரிடம் அதுவும் குடித்து நிதானமின்றி இருந்தவரிடம் சிக்கிக்கொள்ள விளைவு நீங்கள் அன்று வீடியோவில் பார்த்தது…”

“இருவரையும் அடித்து போட்டுவிட்டு கீழே வந்தவருக்கு அந்த வீட்டில் வேலை செய்யும் பிரபாவும் அந்த நேரம் வர பிள்ளைகளை முதலில் காப்பதே முதற்கடமையாக இருக்க அவருடன் தனது தோழியின் இல்லத்திற்கு முதலில் அனுப்பி வைத்துவிட்டார் தானும் வருவதாக சொல்லி…”

“ஆனால் எங்கே செழியனும், அவரின் நண்பரும் பிழைத்துவிட்டால் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல இந்த சமூகத்திற்கே ஆபத்து என நினைத்தவர் இருவரையும் கொலை செய்துவிட்டு தப்பிக்கும் நேரம் சமையல் வாயு கசிவின் காரணமாக சிலிண்டர் வெடித்து மொத்த வீடும் எரிந்துபோனது…”

“ஐ அப்ஜெக்ஷன் மை லார்ட்…” என்று எழுந்துவிட்டார் ஆளவந்தான்.

“அது எப்படி சிலிண்டர் கசிவால தான் அந்த விபத்து ஏற்பட்டிருக்குன்னு சொல்றீங்க? இதுவும் இந்த இரு பெண்களும் திட்டமிட்டு அவரையும் சேர்த்து கொலை செய்துவிட்டு தப்பிக்க இப்படி வீட்டை எரித்திருக்கலாம்…”

ஆளவந்தான் அவருக்கு கிடைத்த சிறு வாய்ப்பையும் விட கூடாதென்று பேச ஆரம்பித்துவிட்டார்.

நிச்சயம் இதை பாலா விட போவதில்லை. ஜெயிப்பான். ஆனால் அது அவனுக்கு அத்தனை சுலபத்தில் கிடைக்க விடுவேனா பார் என்பதை போல பார்த்தார்.

அவரின் எண்ணங்களை சரியாக யூகித்த பாலாவும் தனது பைலில் இருந்த சில காகிதங்களை உருவினான்.

Advertisement