Advertisement

“அதான் ஒன்னுமில்லைன்னு சொல்லறேன். நீ நம்பாம கேட்கிற? சரி அதை விடு. இன்னைக்கு லேட்ன்னு ஒன்னும் சொல்லலையா?…” என பேச்சை மாற்றினான்.

“சரோ மேம் இல்லை. விஜயா மேம் தான் இருந்தாங்க. பார்த்ததும் கல்யாணம் ஆனதுக்கு விஷ் பண்ணாங்க….”

“ஹ்ம்ம்…”

“அவங்களால நம்ப முடியலையாம். கல்யாணம் முடிஞ்ச பின்னாடியும் வேலைக்கு வருவேன்னு…”  

“ஏனாம்?…” அவளுடன் பேச்சை வளர்த்தான் பாலா. மனது என்னவோ சமனப்பட மறுத்தது.

எத்தனை வழக்குகள் கையாண்டிருக்கிறான். எத்தனை மிரட்டல்கள். எத்தனை கொலை திட்டமிடல்கள். எத்தனையும் எளிதாக ஊதி தள்ளியவனுக்கு தனக்கென்று வந்த பொழுது வராத அச்ச உணர்வு இப்போது எழுந்தது.

“பாலா, நான் பேசிட்டே இருக்கேன். நீங்க என்ன சைலண்ட்டா இருக்கீங்க?…”

“ஹ்ம்ம், இல்லை ஒரு பைல் பார்த்தேன். அதான்…” என்று சொல்லிக்கொண்டே அவளிடத்தில் பேசினான்.

“சரி வேற யாரும் எதுவும் பேசலையா? உன்னோட கோ வொர்க்கர் ப்ளஸ் அங்க நீ வழக்கமா பார்க்கிறவங்கன்னு…”  

என்னதான் ஜீவா செல்கிறேன் என தைரியமாக சொல்லிவிட்டாலும் அவள் எப்படி எதிர்கொண்டிருப்பாளோ என நினையாமல் இருக்கமுடியவில்லை அவனால்.

“பெருசா ஒண்ணுமில்லை. சிலர் பார்த்துட்டு கண்டுக்கலை. ஒருசிலர் தேடி வந்து விஷ் பண்ணாங்க. எப்பவும் போல பேசினாங்க. இன்னும் கொஞ்சம் பேர் நின்னு பார்த்துட்டு எதுவும் பேசாம போய்ட்டாங்க. அவ்வளோ தான்…”

“ஓகே, லீவ் இட். போனா போகட்டும். நீ ஓகே தானே?…”

“ரொம்பவே. ஏன் பாலா?…”

“இல்லை, நீ ரொம்ப யோசிச்சிட்டு இருந்தியா? அதான் கேட்டேன். அங்க எப்படின்னு…”

“எனக்கு தெரிஞ்சு இதுதான். வேற பெருசா எதுவுமில்லை. இதோ வானதி இருக்கா. ஆன்ட்டி வந்து பார்த்துட்டு போனாங்க. வழக்கமான வேலை…”  எப்பவும் போல உற்சாகமாக பேச,

“குட், இப்ப ஓகே…” என பாலாவும் சிரித்தான்.

“ஹ்ம்ம், வாய்ஸ் நார்மல் ஆகிருச்சே…” என ஜீவா சொல்லியதும் ஆச்சர்யம் கொண்டவன்,

“ஏனாம்?…” என்றான் அவளை போலவே ராகமாய் இழுத்து.

“இல்லை, முதல்ல பேசும் போது உங்க வாய்ஸ் உங்க வாய்ஸ் மாதிரியே இல்லை. ஏதோ பதட்டமா தெரிஞ்சது. அதான் இப்போ பேசும் போது அப்படி தெரியலை…”

“ஹ்ம்ம், கவனிச்சியா நீ? ஓகே, வேறென்ன?…”  என்றான்.

“சரிதான், ரொம்ப ப்ரீயா இருக்கீங்க போல? இங்க அவ்வளோ தான், வேற ஒண்ணுமில்லை. நாளையில இருந்து நான் சீக்கிரமே கிளம்பனும். வழக்கமான நேரத்துக்கு வரனும். அப்போதான் நைட் ஷிப்ட் ஸ்டாஃப்ஸ் நேரத்துக்கு கிளம்ப முடியும்…”

“ஓகே, அதுக்கு ஏற்பாடு செஞ்சிடுவோம்….”

“ஏற்பாடுன்னா?…”

“எல்லாத்தையும் இப்பவே சொல்லனுமா? ஈவ்னிங் உன்னை பிக்கப் பண்ண வரப்போ சொல்றேன்…”

“ஈவ்னிங்கா? நீங்கபாட்டுக்கு உங்க கோர்ட் முடியற நேரத்துல கிளம்பி வந்திடாதீங்க. ஏழு மணி ஆகும் நான் கிளம்ப. தெரியும்ல…” என சிரித்தாள்.

“தெரியும் தெரியும். நான் வந்தா உன்னையா பார்க்க போறேன்? பத்ரி கூட இருப்பேன்…” என்றவன்,

“அத்தையை பார்த்தியா?…” என கேட்டான்.

“இல்லையே. போகவா? இப்ப நான் போலாமா?…”

“உன்னோட ப்ரேக் டைம்ல போய் பாரு. இல்லைன்னா கூட ஒன்னும் பிரச்சனை இல்லை. நீ உன்னோட ஷிப்ட் முடியவும் கிளம்பும் போது நான் வரவும் பார்ப்போம்…”  

“ஓகே, சரி வேலையை பாருங்க நீங்க…”

“ஜீவா…”

“ஹ்ம்ம், சொல்லுங்க…”

“இல்லை, நான் வச்சிடறேன்…” என சொல்லி கட் செய்துவிட யோசனையுடன் பார்த்தாள் மொபைலை.

“என்ன ஜீவா, ஸார்க்கு அங்க போயும் உன் ஞாபகமா?…” வானதி கிண்டல் பேச,

“அவங்க வாய்ஸ் சரியில்லை வானதி. என்னவோ டென்ஷனா இருக்காங்க போல. அதான் கூப்பிட்டு பேசியிருக்காங்க…”

“சரியா போச்சு. நீங்க என்ன நார்மல் கப்பிள்ஸ் மாதிரி இருக்கமாட்றீங்க? இதெல்லாம் கல்யாணம் ஆனா புதுமண தம்பதிகளுக்கே உரிய டென்ஷன். உன்னை தேடிருப்பார். அதான் போன் பண்ணிருப்பார்….” என்ற வானதி,

“அதை விடு, என்னவோ போய் பார்க்கனும்னு பேசிட்டு இருந்த? யாரை உன்னோட அந்த ரிலேட்டிவ் லேடியவா?…”  

“ஹ்ம்ம், ஆமா…” என ஜீவா.

“சரி இப்போ எல்லாமே ஓகே தானே? நீ வொர்க் முடியவும் போய் பாரு. யார் என்ன சொல்ல போறாங்க?…”

“ஹ்ம்ம்…” என்றவள் மேலும் பேசும் முன் ஆட்கள் வந்துவிட வேலைகள் அப்படியே சென்றது.

மதிய உணவு நேரத்திலும் பாலாவிற்கு அழைத்து பேசிவிட்டவள் தென்றலின் பள்ளிக்கு அழைத்து அவளின் ஆசிரியையிடம் கேட்டுக்கொண்டாள்.

மீண்டும் மீண்டும் அவரிடத்தில் தென்றலை பார்த்துக்கொள்ளும்படி அத்தனை வலியுறுத்தி சொல்லிவிட்டே அழைப்பை துண்டித்தாள்.

“இத்தனை பயம் எதுக்கு? அதான் அவங்க போலீஸ் கஸ்ட்டில இருக்காங்களே? அப்பறம் என்ன?…” வானதி அவளுக்கு ஆறுதலாய் பேச,

“ம்ஹூம், இந்த பயம் என்னைக்கும் குறையாது…” என்றவளுக்கு இன்னுமே அதீத பயம் அடிநெஞ்சில் எரிந்துகொண்டே தான் இருந்தது.

அன்று அரங்கநாதனும், மயூரனும் தங்களை பார்த்த பார்வை இன்றளவும் ஈட்டி பாய்ச்சிய உணர்வை பிரதிபலித்துக்கொண்டே தானே இருக்கிறது.

என்னதான் தன்னை தைரியமாக காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் இந்த நினைவு கொடுக்கும் வலியை அவளால் ஜீரணிக்கத்தான் முடியவில்லை.

இந்த எண்ணங்களை வேலையில் கொண்டுவராமல் ஒருபக்கம் வேலையையும் எந்த இடைஞ்சலுமின்றி செய்து முடித்தாள்.

மாலை தென்றலை பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு நேராக மருத்துவமனைக்கு வந்துவிட்டான் பாலா.

அவளை சாலாட்சி அறையில் இருக்க செய்துவிட்டு முக்கியமான வேலை என ஜீவாவிடம் சொல்லிக்கொண்டு மீண்டும் வெளியே சென்றான்.  

ஜீவாவின் ஷிப்ட் நேரமும் முடிய அடுத்த ஷிப்ட்டின் ஆட்கள் இருவரும் வந்ததும் வானதியும் கிளம்பிவிட மேலே சாலாட்சி அறைக்கு வந்தாள் ஜீவா.

அதே நேரம் சரோஜாவும் அவ்விடம் வர அவரின் அறையை தாண்டி செல்லும் முன் வழக்கம் போல அவருக்கு வணக்கம் செய்தாள்.

“குட் ஈவ்னிங் மேம்…” என்று தனது கடமையை எப்பொழுது போல செய்ய,

“உன் விஷ்ஷை தூக்கி குப்பையில போடு. யார் கேட்டா உன்கிட்ட விஷ்?…” என்று சுள்ளென்று பேசிவிட ஜீவா திகைத்து போனாள்.

“மேம்…”

“பேசாதம்மா. உன்னை இங்க சேர்த்ததுக்கு வேலை பார்க்கிறவங்க எல்லாரும் என்னை ஒருமாதிரியா பார்க்கறாங்க. என்னவோ உன்னோட நானும் கூட்டுன்ற மாதிரி. நீங்க தானே வேலைக்கு ரெக்கமன்ட் பண்ணுனீங்கன்னு. என் பேரே கெட்டு போச்சு…” என்று சொல்ல அதை அப்படியே கடந்துவிட முடியாது நின்றாள் ஜீவா.

“மேம், நான் எந்த தப்பும் பண்ணலை. என்னை வச்சு உங்களை ஒருமாதிரியா பேசறாங்கன்னு சொல்றது சுத்த அபத்தம்….”

“பேசவும் ஆரம்பிச்சுட்ட. பார்க்க அமைதியா இருந்தியேன்னு நினைச்சேன். அதானே கொலையெல்லாம் சர்வசாதாரணமா செய்ய போன உனக்கு பேசவும் சொல்லனுமா? நீ இப்படியெல்லாம் பேச காரணம் கூடவா தெரியாது?…” என்றார் இகழ்ச்சியாக.

“உங்க கற்பனைக்கு நான் பொறுப்பாக முடியாது மேம். நீங்க என்னை என்ன வேணாலும் நினைக்கலாம். ஆனா நான் என்ன பன்றேன்னு எனக்கு தான் தெரியும். நீங்க பேசறதால எதுவும் மாறிடாது. சரி நான் இப்படின்றதால உங்களுக்கு என்ன கஷ்டம் வர போகுது?…”

“ஜீவா என்ன வார்த்தை நீளுது….”

“என்னை நீங்க தான் பேச வைக்கறீங்க மேம். நான் விஷ் பண்ணேன். பிடிக்கலைன்னா நீங்க என்னை அவாய்ட் பண்ணிருக்கலாம். இதுவே நான் விஷ் பண்ணாம போயிருந்தா அதுக்கும் என்னை காரணம் சொல்லிருப்பீங்க. அதுவும் என்னோட ஹஸ்பன்ட் பொசிஷனை வச்சு…”

“இப்பவும் சொல்லுவேன், கிருஷ்ணா ஸார் உன்னை கல்யாணம் செஞ்சுகிட்ட மிதப்பு தான் உனக்கு. இங்க வந்தப்போ எப்படி இருந்த? இப்ப பார்க்க அழகான பூ மாதிரி உன் முகம். ஆனா தாழம்பூ, அதுக்குள்ளே இருக்கிற விஷநாகம் மாதிரி உன்னோட நீ…”

“சூப்பர் மேம். நான் தாழம்பூ மாதிரி தான். எனக்குள்ள விஷமும்  இருக்கும் தான். என்கிட்டே மட்டுமில்லை. எல்லா பொண்ணுங்களும் இப்படி தான் இருக்கனும். அப்போ தான் தங்களை காப்பாத்திக்க அந்த விஷத்தை கக்கினாலும் தப்பில்லை…”

“ஜீவா…” என்ற பாலாவின் குரலில் இருவருமே திரும்பி பார்த்தனர்.

அவன் திடீரென வந்து நிற்க சரோஜா முகம் திடுக்கிடலுடன் தன் திரும்பிக்கொண்டார்.

“கிளம்புவோமா?…” என்றான் அவளருகே வந்து நின்று.

“இருங்க பாலா. பேசிட்டு வரேன்…” என்றாள் அவனிடத்தில்.

அவனை வைத்துக்கொண்டா பேச போகிறாள் என சரோஜா பார்க்க பாலா அவரின் பக்கம் திரும்பவில்லை.

எப்போதும் பார்த்து சோறு புன்னகையாவது சிந்துபவனின் இந்த  பாராமுகத்தால் சரோஜா பேச்சற்று நின்றார்.

“நான் சொன்னது சரிதானே மேம்? பொண்ணுங்களுக்கு வாசம் மட்டும் தான் இருக்கனும்னு நீங்க நினைக்கறீங்க? உங்க வயசுக்கு முதல்ல நீங்க சொல்லணும் மத்த பொண்ணுங்களுக்கு எங்க எப்படி இருக்கனும்னு. ஏன் உங்க பொண்ணுங்களுக்கே சொல்லி தரலாம். சூழ்நிலைக்கு தகுந்தபடி செயல்படுன்னு…” என சொல்ல,

“ஜீவா தேவையில்லாம எந்த விளக்கமும் நீ குடுக்க வேண்டாம். அனாவசியங்களுக்கு எத்தனை பதில் சொன்னாலும் அதுவும் அனாவசியத்தில தான் போய் சேரும்…” என சுருக்கென்று சொன்னான் பாலா.

“ஆனா என்னை பேசும் போது என்னால அப்படியே போக முடியலையேங்க. இன்னைக்கு இந்த நிலைமை எனக்கு. இதே நிலைமை எப்போ வேணா யாருக்கு வேணா வரலாம்…” என்று ஜீவா சொல்லவும் சரோஜாவின் மனம் பதறியது.

கண்கள் கலங்கி சாபமிடுவதை போல இருந்ததோ அவளின் பேச்சு என்று பதட்டத்துடன் பார்த்தார்.

“பாதுகாப்பா இருக்கறவங்களுக்கு இந்த மாதிரி கஷ்டத்தை பத்தியும், போராட்டத்தை பத்தியும் எந்த உணர்வுகளும் தெரியாது. எல்லாம் அனுபவிக்கிறவங்களுக்கு மட்டும் தான். ஆனா அந்த அனுபவம் சிலருக்கு மட்டுமே சொந்தமில்லை. ஞாபகம் வச்சுக்கோங்க…”

“ஜீவா…” பாலா அவளின் கையை பிடித்து இழுத்தான்.

“கடவுள் ஆசிர்வாதத்துல நிம்மதியான, அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்திட்டு இருக்கீங்க மேம் நீங்களும் உங்க குடும்பமும். அது அப்படியே தொடரட்டும். எங்களோட வலி வேற யாருக்கும் வர கூடாதுன்றது தான் முதல் வேண்டுதலா இருக்குது இப்ப வரைக்கும்…”

அதற்கு மேல் அங்கே அவளை இருக்கவிடாமல் பாலா அழைத்துக்கொண்டு செல்ல ஜீவா விடாமல் பேசிக்கொண்டே சென்றாள்.

சரோஜாவிற்கு அத்தனை உறுத்தலாக இருந்தது அவளின் பேச்சு. அதிலும் வழியும் கண்ணீருமாய், வலி சுமந்த முகமுமாக. உள்ளே சென்றுவிட்டார் அவர்.

சாலாட்சி இருந்த அறைக்குள் அழைத்து சென்றவன் அவரிடம் பேசிவிட்டு தென்றலையும் அழைத்துக்கொண்டு ஜீவாவுடன் வீடு வந்து சேர்ந்தான்.

காலை எத்தனை சிரித்த முகமாய் வேலைக்கு சென்ற பெண், இப்போது இத்தனை வேதனையும் வருத்தமும் சுமந்த முகத்துடன் இருக்க பார்க்கவே முடியவில்லை அவனால்.

“ஜீவா…” என்று அவளை வீட்டினுள் அழைக்க அமைதியாக எழுந்து உள்ளே வந்தாள்.

ஓரளவு அதற்குள் தன்னை தனது உணர்வுகளை கட்டுக்குள் கொண்டுவந்தால பின் சாதாரணமாக நடமாட ஆரம்பித்துவிட்டாள். ஆனால் பாலாவிற்கு தான் மனது ஒருநிலையில் இல்லை.

அவன் பயந்ததை போல தான் தீர்ப்பு நாள் அன்றும் அந்த விபரீதம் அங்கே மிக பெரிதாய் நடந்தது.

Advertisement