Advertisement

மின்னல் – 3

“குட் லக் பத்ரி…” பாலா அவனை வாழ்த்த இன்னும் கண்ணில் சிறு பயம் இருந்தது பத்ரிக்கு.

“சரியா பண்ணிடுவேனா?…” அவனின் இந்த கேள்வி இது எத்தனையாவது முறை என்பது அவனுக்கே எண்ணிலடங்காது.

அத்தனைமுறை பாலாவிடம் கேட்டுவிட்டான் பத்ரி. பாலாவும் ஒவ்வொருமுறையும் தலையசைத்துக்கொள்வான்.

இப்போது இன்னும் சிறிது நேரத்தில் வழக்கு ஆரம்பிக்க இருக்க மீண்டும் அப்படி கேட்டதும் பாலாவை கோபமூட்டியது.

“நீ என்ன என் பின்னாலையே இருந்துடலாம்ன்னு முடிவு பண்ணிட்டியா? இப்படியே இருந்தா என்னைக்கு என்னை எதிர்த்து நீ வாதாட? உன்னை நினைச்சு நான் ப்ரவுடா பீல் பண்ண? என்னை பீல் பண்ண விடுடா…” என கோபத்தில் ஆரம்பித்து கேலியுடனே சொல்ல பத்ரிக்கு பதில் சொல்ல முடியவில்லை.

எத்தனை பெரிய கேஸ். அதை தன்னை நம்பி ஒப்படைத்திருக்கிறானே என்பதே பத்ரியை படபடப்பாய் இருக்க வைத்தது.

ஜெயித்துவிடவேண்டும். ஜெயித்துவிடவேண்டும் என்னும் பதட்டமே அவனை பாடாய் படுத்தியது.

“ஜெயிக்கனும்னு நினைக்காத. எடுத்ததுமே வெற்றி கிடைச்சுட்டா கொஞ்சம் மிதப்பாகிடும். நமக்கே அது ஒரு போதையை குடுத்துரும். அப்ப நாம தொட்டா வெற்றி அப்படின்ற நினைப்பு நம்மளை கீழே தள்ளிடும்…”

“இல்லை அப்படி நினைக்கலை சீனியர்..”

“டேய், ஒழுங்கா அண்ணான்னு சொல்லுடா. எப்ப பார்த்தாலும். கடுப்பேத்திட்டு…”  என்று அவனின் தலையில் தட்டினான் பாலா.

“அதென்னவோ சட்டுன்னு வரமாட்டுதே?…” என்று பத்ரி சிரிக்க,

“அது வரும் போது வரட்டும். இப்ப நீ என்ன நினைக்கிற? பாயிண்ட்ஸ் எல்லாத்தையும் திரும்ப நோட் பன்றதை விட்டுட்டு ஜெயிக்கனும்னு நினைச்சு பயந்துட்டே இருக்க?…” என்றதும் பத்ரிக்கு அவன் சொல்ல வருவது புரிந்தது.

“இங்க ஸ்ட்ராங்கா சர்வைவ் பண்ணனும். அதுக்கு என்ன பண்ணனும்னு யோசி. தோத்துருவோமோன்னும் நினைக்க கூடாது. உடனே ஜெயிச்சிடனும்னும் பதட்டப்பட கூடாது. முதல்ல உன்னோட பக்கத்தை ஸ்ட்ராங்கா வச்சுக்கோ. வரதை பார்த்துக்கலாம்…”

“என்னை நம்பி நீங்க இந்த ப்ராஜெக்ட் குடுத்திருக்கீங்க. அதான் நீங்கன்னா பிரச்சனை இல்லை…”

“அது சரி. அப்ப காலம் முழுக்க நீ இப்படியே இருக்க வேண்டியது தான்…” என்றவன்,

“நான் அரங்கநாதனா இருக்கமாட்டேன். ஆனா நீ பாலமுரளிகிருஷ்ணாவா இருக்கனும்னு நினைக்கேன். நீன்னு இல்லை. நம்ம ஜூனியர், இனி வர போற அட்வகேட்ஸ் எல்லாம் அப்படி இருக்கனும்…”

“ஹ்ம்ம்..”

“அதுக்குன்னு நான் அவ்வளவு நல்லவன்னு சொல்ல வரலைடா. எல்லாத்துக்கும் தலையாட்டுற?…” என்று சிரித்தான்.

“சீனியர் அங்க பாருங்க…” என்று பத்ரி காண்பித்த திசையில் ஆளவந்தானுடன் கோர்ட் போட்டிருந்த மனிதர் நின்றுகொண்டு இருந்தார்.

“அந்த கம்பெனியோட மேனேஜெர்…”

“ஹ்ம்ம், அடுத்த வாய்தா போல? செய்யட்டும். என்னதான் இழுத்தாலும் ஒன்னும்…” என தனது தலையை தடவி உள்ளங்கையை விரித்து காண்பித்தான் பலா.

“ண்ணா…” பத்ரிக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை.

அவனின் சிரிப்பில் ஆளவந்தான் பாலாவை பார்க்க சீரியசாய் பாலா அவரை நோட்டம்விட்டன.

“என்னண்ணா உடனே சீரியஸா பார்க்கறீங்க?…”

“அதெல்லாம் ட்ரிக். இப்ப பாரு என்னவோன்னு நினைச்சு என்னோட ஆளு சும்மா சிட்டா பறந்து இங்க வருவார்…” என சொல்லி முடிக்க சொல்லியதை போலவே ஆளவந்தான் வந்துவிட்டார்.

“என்ன பாலா, உன் பார்வையே சரியில்லையே?…” என வர,

“வந்தா நீங்க கலாய்ப்பீங்கன்னு தெரியும், தெரிஞ்சும் ஏன் ண்ணா தேடி வரார்?…”

“இதுக்கு பேர் தான் வான்டாடா வண்டில ஏறுறது பத்ரி…” என பாலாவும் சிரிக்காமல் சொல்லிவிட்டு பின்,

“பத்ரி, என் ஆளு வந்திருக்கார். ஒரு மரியாதை வேண்டாம்? நாங்க தனியா பேசனும். அதுக்குத்தான் ஆளு அங்கிள் வெய்ட்டிங்…”

“கிருஷ்ணா…” ஆளவந்தான் முறைக்க,

“அட இருங்க ஆளு, இவனை அனுப்பிட்டு நாம ஜாலியா பேசலாம்…” என்றவன்,

“போ…” என்றான் பத்ரியை பார்த்து. அவன் நகர்ந்ததும்,

“அப்பறம் ஆளு அங்கிள், பளபளன்னு சும்மா மாப்பிள்ளை மாதிரி வந்திருக்கீங்க. கண்ணை அங்கிட்டு இங்கிட்டு எடுக்க முடியலையே…” என்றான் கிண்டலுடன்.

“இந்த பேச்சை எல்லாம் என்கிட்டே வச்சுகாதன்னு உனக்கு ஏற்கனவே சொல்லிட்டேன்…”

“அதை நீங்க எனக்கு ரகசியமா ஜாடை காமிக்கும் போது சொல்லிருக்கனும். இல்லையா நான் உங்க கன்னத்தை கிள்ளும் போது சொல்லிருக்கனும். ஆளுன்னு உங்களை டிக்ளர் பண்ணும் போதச்சும் சொல்லிருக்கனும். இப்ப வந்து சரியில்லைன்னு சட்டம் பேசினா?…”

“என்னை திசை திருப்பனும்னு தானே இப்படி செய்யற?…”

“பார்ரா? எங்க வடக்கால திரும்பி கிழக்கால பாருங்க பார்ப்போம்….” என பாலா நக்கலாய் பார்க்க,

“இந்த கேஸ் எங்க பக்கம் தான். நாங்க தான் ஜெயிக்க போறோம்…” ஆளவந்தான் அத்தனை உறுதியாக சொல்ல உள்மனதில் குறித்துக்கொண்டான்.

“அப்பறம் ஏன் வாய்தா வாங்க வந்திருக்கீங்க? வாதாடி ஜெயிக்க வேண்டியது தானே?…”

“அதை நாங்க பார்த்துப்போம். அடுத்த ஹியரிங்ல இந்த கேஸ்ல நாங்க வின் பன்றோம். தோத்து போக தயாரா இரு கிருஷ்ணா…” என்றார் ஆளவந்தான் இறுமாப்புடன்.

“அதையும் பார்க்கலாம் ஆளு அங்கிள்…” என்ற பாலாவை நக்கலாய் பார்த்து சிரித்த ஆளவந்தான் இப்போது பத்ரியை பார்த்தார்.

“மண்குதிரை…” என அவனை பார்த்து சொல்ல,

“ஓஹ்…”

“நீ எப்படி இவனை நம்பி இந்த கேஸை குடுத்தன்னு எனக்கும் புரியலை. ஆனா எல்லாமே நல்லதுக்குத்தான் போல…” என்று பேச பேச பாலாவிடம் அமைதி.

அவனுக்கு ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது எங்கே இந்த அலட்சியம் ஆரம்பித்திருக்கிறது என்று.

“ஓகே, முதல் முறையா தோற்க்க போற. வாழ்த்துக்கள் கிருஷ்ணா…” என ஆளவந்தான் அவனிடத்தில் கை நீட்ட பாலாவும் கை கொடுத்தான்.

“பெஸ்ட் ஆகப் லக்…” என்று முகம் மாறாமல் அவன் சிரித்தபடி சொல்ல,

“இதுதான் உன்னை கீழே தள்ள போகுது கிருஷ்ணா. இந்த வாய்ப்பு எனக்கு எத்தனை பெருசுன்னு நான் உனக்கு சொல்ல வேண்டியதில்லை. ஆனா சொல்லனுமே. சொல்லியடிக்கனும் உன்னை…”

“சொல்லிட்டீங்க. அடிங்க பார்க்கலாம்…” என்றான் பாலா கையை கட்டிக்கொண்டு.

எத்தனை பேசியும் பாலாவை அவரால் கொஞ்சமும் அசைக்க முடியவில்லை. சின்ன முகமாற்றமும் இன்றி அவன் சிரித்துக்கொண்டே நிற்க,

“உன்னை அடுத்த ஹியரிங்ல பார்த்துக்கறேன். உன்னோட சீனியர் நான் யார்ன்னு உனக்கு காமிக்கிறேன்டா. உனக்கு முன்னாடி இங்க கால் பதிச்சவன் நான்…”

“அதுக்கு தான் விஷ் பண்ணிட்டேனே? போங்க போங்க போய் பொழைப்பை பாருங்க. அதான் வாய் தா தன்னு கேட்பீங்களே. அதை சொன்னேன்…”

“உன்னை நான் வாய்தா வாங்க வைக்கலை. அன்னைக்கு பேசிக்கறேன்…” என கோபத்துடன் உள்ளே செல்ல பத்ரியும் பாலாவின் கண்ணசைவில் உள்ளே சென்றான்.

அடுத்த கேஸ் அவர்களுடையது. பாலாவுமே உள்ளே செல்ல அந்த வழக்கிற்கு பொய்யான ஒரு விஷயத்தை சொல்லி வாய்தாவை வாங்கிக்கொண்டார் ஆளவந்தான்.

அதை பெரிய கர்வமாக நினைத்து அப்போதே ஜெயித்துவிட்டதை போல மிதப்புடன் பாலாவை பார்க்க ‘அய்ய’ என்று அவரை பார்த்தான் அவனும்.

மதிய உணவு நேரத்தில் வேண்டுமென்றே ஆளவந்தான் பாலாவை தேடி அவன் ஆபீஸ் ரூமிற்கு வந்தார்.

“உன்னை எங்கலாம் தேடறது கிருஷ்ணா?…”

“இந்த நேரம் நான் இங்க தானே இருப்பேன். நீங்க ஏன் ஆளு தேடனும்? உட்காருங்க…” என்றான் சாப்பிட்டுக்கொண்டே.

“நான் ஒன்னும் உன்கூட உட்கார்ந்து சாப்பிட வரல…”

“ஹ்ம்ம் வாய்தா வாங்கியாச்சுன்னு வெற்றிகுறி காமிக்க வந்தீங்களாக்கும்?…” க்ளுக் என்ற சிரிப்புடன்.

“ஹ்ம்ம் உனக்கு இன்னும் வாய் குறையலயே…”

“அது என்னைக்கும் குறையாது. உட்காருங்களேன். லஞ்ச ஷேர் பண்ணிக்கலாம்…” என்றான்.

அவனிடம் நக்கல் குறைந்து அமைதி வந்திருந்தது அதை கூட ஆளவந்தான் கவனிக்கவில்லை.

“எனக்கு வீட்டு சாப்பாடு இருக்கு. இதெதுக்கு?…” என்று வேண்டுமென்றே அவனை காயப்படுத்தி பேச முயன்றார்.

“அடடா, இதுக்கெல்லாம் நான் ஹர்ட் ஆகி அச்சொன்னு பீல் பண்ணுவேனா என்ன? எனக்கு நான் தான் என் குடும்பம். என்னை தேடி வரவங்களும் என் குடும்பம். போதாதா? இது கூட வீட்டு சாப்பாடு தான். அம்மா மாதிரி ஒரு அம்மா எனக்கு சமைச்சு குடுத்தனுப்பினாங்க…”

“மாதிரி தானே?…” இன்னும் நக்கல் குறையவில்லை அவருக்கு.

“ஆமா, ஏன் இப்போ அதுக்கென்ன? பாசம்ன்றது ஒண்ணு தானே? அது குடுக்கற ஆளை பொறுத்து மாறுபடும். அவ்வளோ தான்…” என்றவன்,

“ஆளுன்னதும் உங்களைன்னு நினைச்சுக்காதீங்க ஆளு அங்கிள்…”

“உனக்கு வாய்க்கொழுப்பு. என்கிட்டே மண்ணை கவ்வுவேல. அன்னைக்கு பேசிக்கறேன்…”

“அடுத்த ஹியரிங்க்கு இன்னும் இருபத்தைஞ்சு நாள் இருக்குது…”

“அதே தான் உனக்கும் சொல்றேன். இந்த இருபத்தைஞ்சு நாள் தான் உனக்கும் இருக்கு…”

“எதுக்கு எனக்கு இந்த கவுண்டிங்? நான் என்ன சவாலா விட்டேன்? ஜெயிச்சு காட்டறேன்னு. நீங்க தான் அப்படி பேசிட்டு வந்து நிக்கறீங்க. பார்த்து இருங்க…” என்றான் நமுட்டு சிரிப்புடன்.

“சவால்ன்னே வச்சுக்கோ. என்னை எவ்வளவு அசிங்கப்படுத்தின நீ…” என்றவரை பார்க்க சிரிப்பு தான் வந்தது அவனுக்கு.

“ரைட் இதை சொல்லத்தான் வந்தீங்களா? அப்ப நீங்க கிளம்பலாம்…” என்னும் பொழுதே அரங்கநாதனிடம் இருந்து போன் வந்தது பாலாவிற்கு.

“சொல்லுங்க ஸார்…” என.

“சாப்ட்டியா கிருஷ்ணா…” என்றார் அரங்கநாதன்.

“இப்போதான் சாப்ட்டு முடிக்க போறேன்…”

“கூட யார் இருக்கா?…”

“வேற யாருமில்லை. நம்ம ஆளு அங்கிள் கூட இங்க தான் இருக்கார்…” என்று சொல்லவும் ஆளவந்தானுக்கு யாரிடம் தன்னை பற்றி சொல்கிறான் என புரியாமல் பார்த்தார்.

“அவர் இந்நேரம் உன் ஆபீஸ் ரூம்ல என்ன பன்றார்?…”

“வாய்தா வாங்கிட்டாராம். அதான் என்கிட்டே வாய் தர வந்திருக்கார்…” என்றதும்,

“அவர்க்கிட்ட போனை குடு….” என்றதும் அவன் மொபைலை நீட்ட,

“போன்ல யாருன்னு சொல்லாம நீட்டுற. நான் உடனே வாங்கிடனுமா?…”

“நீங்கலாம் என்னன்னு சீனியர் லாயரானீங்க? இதுல பழத்தை தின்னு கொட்டை போட்டேன்னு பந்தா வேற…” என பலா பேச,

Advertisement