Advertisement

மின்னல் – 24

           நீதிமன்றம் வந்ததும் தனது அலுவலக அறையில் வந்து அமர்ந்துகொண்டான் பாலா.

வரும் வழியில் தெரிந்த அத்தனைபேரும் அவனுக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்தனர். உபயம் ஆளவந்தான்.

பாலாவிற்கு திருமணமான விஷயம் அத்தனைபேரையும் புருவம் உயர்த்த வைத்தது.

யாரிடமும் ஒருவார்த்தையும் கூறாமல், அழைக்காமல் இப்படி திருமணம் செய்துகொண்டானே என சிலர் உரிமையாக கேட்கவும் செய்தனர்.

அத்தனைபேருக்கும் புன்னகையுடன் ஒரு பதில் அவனிடத்தில். விரைவில் வரவேற்பு ஏற்பாடு செய்தவதாகவும் சொல்லிவிட்டான்.

பதில் சொல்லி முடித்து தன் இடம் வரவே நேரம் கடந்தது. வந்ததும் அவனுக்கு பத்ரியின் ஞாபகம் தான்.

அவனின்றி ஒரு கை உடைந்ததை போல இருந்தது. அந்த அறையில் தன்னை சுற்றியே தான் இருக்கும் ஒருவன் இல்லாது இப்போது வருத்தமாக இருக்க அவனுக்கு அழைத்துவிட்டான்.

“சொல்லுங்கண்ணா, கோர்ட்டுக்கு போயாச்சா?…” என எடுத்ததும் அவன் கேட்க,

“வந்துட்டேன்டா. இங்க விஷயம் தெரிஞ்சிருச்சு போல? ஆளாளுக்கு விஷ்…”

“உங்க ஆளு விஷ் பண்ணாரா?…” என கேட்க பாலா முதல்நாள் நடந்ததை தெரிவித்தான்.

“ண்ணா, பாவம் அவர்…”

“நீ தான் சொல்லிக்கனும் அவர் பாவம்ன்னு…” என சொல்ல ஆளவந்தான் வந்துவிட்டார் உள்ளே.

“பத்ரி ஆளு டா…” என மெல்லிய குரலில் பாலா அவனிடம் சொல்லிவிட்டு போனை அணைக்காமலே ,

“வாங்க ஆளு அங்கிள். என்ன என்னை பார்க்காம இருக்க முடியலை போல? காலையிலையே வந்துட்டீங்க…” என்றதும் அவரின் முகம் என்னவோ போல் இருந்தது.

“ஆளு அங்கிள், சொல்லுங்க. என்ன விஷயமா வந்திருக்கீங்க?…” என்றான் சிரித்தமுகமாக.

“உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும், அதான் வந்தேன்…”

“பேசலாமே…” என்று மொபைலை கையில் வைத்துக்கொண்டான்.

அவர் அந்த அறையை சுற்றி பார்த்துக்கொண்டு இருந்தார் வேறு யாரும் இருக்கிறார்களா என்று.

“பத்ரியை தான் ஹாஸ்பிட்டல்ல படுக்க வச்சுட்டீங்க. எனக்கிருந்த ஒரே ஜூனியர் அவன் தான். இப்ப இங்க யாரை தேடறீங்க?…” என்றதும் அவனை முறைத்தார்.

“என்னவோ நான் படுக்க வச்சிட்ட மாதிரி பேசற நீ?…” என்றவர் உடனே கையில் இருந்த மொபைலை பார்த்து,

“என்ன இதையும் ரெக்கார்ட் பன்றியா?…” என முறைத்தார்.

“பண்ணனும்னா பண்ணிடலாம். ஆனா இதுவரைக்கும் செய்யலை…”

“எங்க, நீ உன் போனை காமி?…” என்றுவிட்டார் உடனே சிறுபிள்ளை போல.

அவரை தீர்க்கமாய் பார்த்த பாலா புன்னகையை விடுத்து இப்போது தனது போனில் வீடியோவை ஆன் செய்தான்.

“இப்ப பேசுங்க, ரெக்கார்ட் ஆகுது…” என்று காண்பித்து சொல்லவும் பல்லை கடித்தார்.

அவரின் கோபத்தையும் இயலாமையையும் பார்த்துவிட்டு ஒரு இகழ்ச்சியான புன்னகையுடன் வீடியோவை ஆஃப் செய்தான்.

“என்ன விஷயம்? காலையிலையே வந்திருக்கீங்க? சும்மா தேடி வரமாட்டீங்களே?…” என கேட்க,

“முக்கியமான விஷயம். உனக்கு மத்தியானம் தான் கேஸ்ன்னு இப்பவே வந்துட்டேன்…” என்றவர்,

“அதுக்குள்ளே அடுத்த கேஸ்ல ஆஜர் ஆகிட்ட?…” என்றார் நக்கலுடன்.

“ஏன்? ஆக கூடாதா? அதோட இது ஏற்கனவே ஒப்புக்கிட்ட கேஸ். இதுல உங்களுக்கு என்ன நஷ்டம்?…” என்றான் முகத்தலடித்ததை போல.

“ஆமா ஆமா…” என முனுமுனுத்தவர்,

“இங்க பாரு, நேரடியா விஷயத்துக்கு வரேன். இப்பவும் நீ ஒத்துவரமாட்டன்னு தெரிஞ்சும் உன்கிட்ட தான் வந்து நிக்கவேண்டியதா இருக்குது…”

“தெரிஞ்சும் ஏன் வரீங்க? கிளம்புங்க…”

“கிருஷ்ணா, நான் உன் நல்லதுக்காக தான் பேச வந்தேன்…”

“ஓஹ்…” என்றவனின் பேச்சின் தன்மையில்,

“ஆமாப்பா, உனக்காக தான். அதுவும் இப்பத்தான் சம்சாரியா ஆகியிருக்க. உன்னை நம்பி ரெண்டு பொண்ணுங்க இருக்குது…”

“இப்ப நீங்க சொல்லி தான் எனக்கே இது தெரியுது பாருங்க. சரி இப்ப என்ன அதுக்கு?…” என்றான் மேவாயில் கை வைத்தபடி.

“இந்த நக்கல் பேச்சு பேசினா நீ தான் அனுபவிப்ப…”

“ஹ்ம்ம், எத்தனைதடவை சொல்றேன். சொல்லவந்ததை சொல்லிட்டு கிளம்புங்கன்னு…”

“தலையெழுத்து, உன்கிட்ட பேசறதுக்கு இந்த சுவத்துக்கிட பேசிடலாம்…” என கடுப்பாகவும் பாலா எழுந்துவிட்டான்.

“அப்ப அதுக்கிட்டையே பேசுங்க. ஆனா அது உங்க ஆபீஸ் ரூம் சுவரா இருக்கட்டும்…” என்றவன்,

“ஆமா, பார்கவுன்சில்ல பேசிக்கறாங்க உங்க சீனியர் உள்ள போய்ட்டதால திரும்ப ரீ எலெக்ஷன் வைக்கனும்னு. இஸ் இட்?…” என்று அவன் கேட்க ஆளவந்தான் முகம் மாறியது.

“திரும்ப அதே போஸ்ட்டிங்க்கு தான் நிக்க போறீங்களா ஆளு அங்கிள்?…” கிண்டலாக அவன் கேட்க,

“பேசுவடா பேசுவ. எவ்வளோ பெரிய ஆளை தூக்கி ஜெயில்ல போட்டுட்டு நீ ஏன் பேச மாட்ட?…”

“ஆக்சுவலி ரெண்டு வருஷம் முன்னாடியே உங்களை தான் முதல்ல உள்ள தூக்கி போட்டிருக்கனும். கேஸ் குடுக்க ஆள் இல்லாம போனதால நடமாடிட்டு இருக்கீங்க நீங்க…”

“டேய்…”

“அட சும்மா நிறுத்துங்க. எப்ப பார்த்தாலும் பிபி பேஷன்ட் மாதிரி கொதிச்சிட்டு. நீங்க பண்ணினதுக்கு எத்தனை மனசு கொதிச்சிருக்கும்? கொஞ்சமும் இரக்கமில்லாம ஒரு பொறுக்கிக்கு ஆதரவா காசுக்காக வாதாடி அவனை தப்பிக்க வச்சு நாடுகடத்தினவர் தான நீங்க?…”

“கிருஷ்ணா நீ அதிகமா பேசற…”

“ஆமா பேசுவேன். இப்ப அந்த பொண்ணோட அப்பா கேஸை என்கிட்டே குடுக்கட்டும். அந்த பொறுக்கியோட சேர்த்து, பிராடுன்னு உங்களையும் தூக்கி உள்ள போடறேன். பார்க்கறீங்களா?…”

வேகமாய் எழுந்துவிட்டவன் மேஜையை தட்டிக்கொண்டு சொல்ல ஆளவந்தான் எச்சிலை கூட்டி விழுங்கினார்.

“அன்னைக்கு நான் இல்லாம போய்ட்டேன். இல்லைன்னா?…” என்று பல்லை கடித்தான் பாலா.

“இப்ப பழசு எதுக்கு உனக்கு?…”

“ஓஹ், அப்போ முடிஞ்சு போனதுக்கு எதுக்கு மோளம் அடிக்க வந்திருக்கீங்களாம்?…” என்று கேட்டு மேஜையில் ஏறி அமர்ந்துகொண்டான்.

“உனக்கே தெரிஞ்சிருக்கு நான் ஏன் வந்தேன்னு…” என்றதும் பாலா முகத்தில் கடுமை படர்ந்தது.

“என்னால பின்வாங்க முடியாது. அதுவும் இத்தனை தூரம் போராடினதும் இப்ப நீங்க ஈசியா வேலியை தாண்டி வெளில வரதுக்கா? முடியாது…” என்றவன் பேச்சில் தொனித்த ஆக்ரோஷத்தில் ஆளவந்தானுக்கு விழி பிதுங்கியது.

“கிருஷ்ணா அரங்கநாதன் ஸார் ரொம்பவே நொடிஞ்சு போய்ட்டார். இதுல மயூரன் வேற பேசிட்டார் போல?…”

“அதுக்கு?…”

“அரங்கநாதன் பயப்படறார். சசிகரனுக்கும் ஆபத்து வருமோன்னு…”

“என்ன காதுல பூ சுத்தறீங்களா? எல்லாம் தெரிஞ்சு அந்த கும்பல்ல பெத்த பிள்ளையை பிடிச்சு தள்ள நினைச்சவர் இப்ப மகனுக்காக பயப்படறாரா? நம்பற  மாதிரி இல்லையே?…”

“நம்பித்தான் ஆகனும். எல்லா மனுஷங்களுக்கு ஏதோ ஒரு நேரம் இப்படி தோணத்தான் செய்யும். இப்ப அவர் திருந்தி வாழ ஆசைப்படறார்..”

“இதை சொல்ல உங்களுக்கு கூசலையா?…” என்றான் எரிச்சலுடன்.

“ஏன்? நான் சொல்றதுல நம்பிக்கை இல்லையா?…”

“இல்லை, இல்லவே இல்லை…” என்றவன்,

“பணம், பணம்ன்னு அத்தனைபேர் உயிரையும் எடுத்தவர். இவருக்கு இப்ப திடீர்ன்னு ஞானோதையம் வந்துச்சா? அட போங்க ஸார். உண்மைய சொல்லனும்னா இப்ப உங்களை பார்த்தா கூட எனக்கு பாவமா இருக்கு. நாளைக்கு உங்களை கூட ஏதாவது செய்யலாம்…”

பாலா சொல்லவும் ஆளவந்தானுக்கு திக்கென்று தான் இருந்தது. ஆனாலும் கண்மூடித்தனமாக இருந்தவர்,

“இங்க பாரு கிருஷ்ணா. நான் பெயிலுக்கு அப்ளை பண்ண போறேன்…”

“கிடைக்காதுன்னு தெரிஞ்சுமா?…”

“ஆமா, முயற்சி தான். வேறென்ன? இதுல உன்னோட, ம்ஹூம்…” என்றவர்,

“எல்லா நேரத்துலயும் எல்லாரும் துணைக்கு இருந்திட மாட்டாங்க. நீ இதுக்கு கண்டிப்பா கஷ்டப்பட போற. தப்பு பண்ணிட்ட. ஏதோ பாவமே நீன்னு என்னோட கருத்தை தான் சொன்னேன்…” என்று சொல்லி எழுந்துகொண்டார்.

“உங்க கருத்து குறுத்தை எல்லாம் வேற எங்கியாச்சும் நட்டு வச்சு தண்ணி விட்டு வளர்த்துவிடுங்க. என்கிட்டே வேண்டாம்…” பாலாவும் சரியாக திருப்பி கொடுக்க,

“அவங்க உன்கிட்ட பேச வேண்டாம்ன்னு தான் சொன்னாங்க. நான் கேட்டேனா?…” என்றவரை மௌனமாக பார்த்தான்.

“நீ பட்டு திருந்தற ஆளு. முன்னாடியே எத்தனை பண்ணின. இப்ப எல்லாத்துக்கும் சேர்த்து அனுபவிப்ப. உன்னோட புதுசா உனக்கு உண்டாகியிருக்கிற குடும்பமும் சேர்த்து அனுபவிப்பாங்க. ஏதோ பாவமேன்னு பரிதாபப்பட்டு வந்தா? என்னவோ பண்ணு. ஆனா அவங்க ரொம்ப மோசமானவங்க…”

ஆளவந்தான் பேசிக்கொண்டே சென்றுவிட்டார். பாலாவின் மனதிற்குள் அவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஒலித்துகொண்டே இருந்தது.

‘உன்னை நம்பி இரண்டு பெண்கள் உள்ளனர்’ என்ற வார்த்தை சுருக்கென்று மனதை தைத்தது.

‘ஜீவா’ என தோன்றிய நொடி அவளுக்கு அழைத்துவிட்டான்.

“பாலா என்ன இந்த நேரம் கால் பண்ணியிருக்கீங்க?…” என்றாள் ஜீவா.

“ஹ்ம்ம் சும்மா தான்…” என்றவன் வலது கண்ணை மூடி ஒற்றை விரலால் தேய்த்துக்கொண்டிருந்தான்.

“பாலா என்னன்னு கேட்கிறேன்ல?…”

Advertisement