Advertisement

“நான் சொன்னேன்ல சொந்த வீடுன்னு. அப்படின்னா பூர்வீக சொத்து. அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கும் சேர்த்து இருந்ததை அப்பா காலத்திலையே பிரிச்சு குடுத்துட்டாங்களாம். அப்ப அப்போ கட்டின வீடுதான் இது…”

“ஓஹ், லீஸ்க்கு விட்டிருந்தேன்னு சொன்னீங்க? ஆனா எங்க தங்கியிருந்தீங்க நீங்க?…” என்றவளுக்கு கிடைத்த பதில் அவளே எதிர்பாராதது.

“எனக்கு விவரம் தெரியும் போதே அப்பா உடம்பு சரியில்லாம தவறிட்டாங்க. அம்மாவும் நானும் மட்டும் தான். அம்மாவும் என்னோட பதினாலு வயசுல ஒரு ஆக்ஸிடென்ட்ல தவறிட்டாங்க. அதனால அறக்கட்டளையோட ஆசிரமத்துல வளர்ந்தேன்…”

“நீ ஹாஸ்பிட்டல்ல பார்த்தியே சாலாட்சி அத்தை. அவங்க என்னோட சொந்த அத்தை. அப்பா இறந்த பின்னால அம்மாவுக்கு எந்தவகையிலையும் உதவலை அவங்க. எனக்கும் பெருசா அவங்கமேல ஈடுபாடு கிடையாது. அம்மாவுக்கு என்னை வளர்க்க வருமானம் தேவைப்பட்டுச்சு. வானம் ட்ரஸ்ட்ல வேலைக்கு சேர்ந்தாங்க…”

“அப்பா இல்லாததால ஒரே நாள்ல தலைகீழா மாறின மாதிரி எல்லாம் மாறிடுச்சு. வேற வழி இல்லையேன்னு ஸ்கூல் பசங்களுக்கு சமைச்சு போடற வேலைக்கு சேர்ந்தாங்க. அங்கயே தான் நான் படிக்கவும் செஞ்சேன். ஆரம்பத்துல இருந்தே அங்கயே படிச்சேன், வளர்ந்தேன்…”

“அம்மாவோட இறப்புக்கு பின்னால போனா போகுதுன்ற மாதிரி சாலாட்சி அத்தை வந்து என்னை கூப்பிட்டாங்க. ஆனா வீட்டை குடுத்துடனும்ன்றது மாதிரி அவங்க பேசிக்கிட்டதுல எனக்கு அவங்களோட போக விருப்பமில்லை. இல்லைன்னாலும் போயிருக்க மாட்டேன்…” எனும் பொழுதே வேதனையான புன்னகை.

அப்போதும் கூட இன்றைய சாலாட்சியின் நிலையை அவள் சொல்லிக்காண்பிக்கவில்லை ஜீவாவிடம் கூட.

“கஷ்டமா இருந்தா விடுங்க பாலா…” என அவனின் வருத்தத்தை பார்க்க முடியாமல் சொல்ல,

“இதுல என்ன கஷ்டம். சில கஷ்டங்கள் நம்மளை வலிமைப்படுத்தும். அதுமாதிரி தான் இதுவும். அப்பா போனதும் அவங்கபக்க சொந்தம் போச்சு. அம்மா போனதும் மொத்த உறவும் பொய்யா போய்டுச்சு. அதுக்காக உடைஞ்சிட முடியுமா?…”

“நான் பார்த்து வளர்ந்த வரைக்கும் அவங்க யாருமே அம்மாவோட இணக்கமா இருந்ததில்லை. பாசம், அரவணைப்பு, சந்தோசம், கஷ்டத்துல உதவறதுன்னு இப்படி அவங்கக்கிட்ட எதையுமே நாங்க பார்த்ததில்லை. அதனாலையோ என்னவோ தனிச்சே முடிவு பண்ணினேன்…”

“ட்ரஸ்ட்ல போய் சிவகங்காதரன் ஸாரை மீட் பண்ணேன். அவர்கிட்ட விஷயத்தை சொன்னேன். அங்கயே மேல படிக்கிறதாவும் தங்கறதுக்கு ஆசிரமத்துல இடம் தாங்கன்னும் கேட்டேன். என்னோட சூழ்நிலை புரிஞ்சது அவருக்கு…”

“இப்போ ஷேஷா ஸார் மாதிரி அப்போ அவர். என்னோட எதிர்காலத்துக்கு உறுதுணையா அவங்க இருந்தாங்க. இப்போ நான் இப்படி குடும்பஸ்தனா உன்னோட, தென்றலோட. எனக்குன்னு ஒரு பேமிலி. என்னை தேடவும் உறவுகள்…”

பாலா இத்தனை பேச்சிலும் முகத்தில் இருந்த புன்னகை வாடவே இல்லை. ஆனால் அது பரிணாமங்களை மட்டும் மாற்றிக்கொண்டது.

“அப்பவே ஒரு ஸ்ட்ராங் டிசிஷன் எடுத்தேன்னு சிவகங்காதரன் ஸார்க்கு என் மேல் ஒரு அபிமானம் உண்டு. அதை நான் இன்னும் பெருமைப்படுத்தினேன். அவங்களோட நம்பிக்கையை நான் எந்த விதத்திலையும் குறைச்சிடலை இப்போ வரைக்கும்…”

பாலாவின் வார்த்தைகளில் தான் அத்தனை தன்னம்பிக்கையும், வலிமையையும் இருக்கிறதென வியந்து பார்த்துக்கொண்டே நின்றாள்.

“எவ்வளவு நேரம் கதை கேட்கிறதா இருக்க? வா கீழே போகலாம். தென்றல் ரொம்ப நேரம் தனியா இருக்கா…” என சொல்லி அழைத்துக்கொண்டு கீழே வந்துவிட்டான்.

அதன் பின் இனி இரவு உணவை தானே செய்வதாக சொல்லி வேலைக்கு அவரை வர வேண்டாம் என சொல்ல சொல்லிவிட்டாள் ஜீவா.

“நைட் மட்டும் நான் பன்றேன். பகல்ல எப்பவும் போல அவங்களே வரட்டும்…” என்றுவிட்டாள்.

இரவு உணவை முடித்து தென்றல் முதலிலேயே சென்றுவிட விளக்குகளை அணைத்துவிட்டு நொடிநேர அணைப்பும், ஓரிரு முத்தங்களும் என இருவரும் தனி அறைகளில் தஞ்சம் புகுந்தனர்.

மறுநாள் தென்றலை பள்ளியில் விட்டுவிட்டு பாலாவுடன் தங்கள் இருந்த குடியிருப்பு பகுதிக்கு சென்ற ஜீவா மீதம் இருந்த பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றதை வானதியிடமே ஒப்படைத்துவிட்டு வந்துவிட்டாள்.

அத்தனை பொருட்களும் இல்லை என்பதால் பெரிதாய் சுமை என்பதும் இல்லை. அதனை முடித்துவிட்டு அவசியமான பொருட்களை வாங்க மால் சென்றனர்.  

“இந்த மால் வந்திருக்கியா ஜீவா?…” என கேட்டுக்கொண்டே அவளுடன் நடந்தான்.

“இல்லை, இதுவரைக்கும் பெருசா எந்த இடங்களுக்கும் போகலை. மிஞ்சிமிஞ்சி போனா அங்க பக்கத்துல இருக்கற இடங்கள், மளிகைகடை, பீச். அவ்வளோ தான். இதுக்கு வந்ததில்லை. வரக்கூடிய நிலமையிலையும் நாங்க இல்லை…”

“ஹ்ம்ம், ஓகே. இனி பார்த்துக்கலாம். இங்க முதல்ல வீட்டுக்கு என்னென்ன வேணும்னு வாங்கிட்டு மத்த ப்ளோர் போகலாம்….” என்றான்.

அங்கே சூப்பர்மார்கெட் உள்ளே நுழைந்தார்கள் இருவரும் பேசியபடியே. ஒரு ட்ராலியை எடுத்துக்கொண்டு வந்தனர்.

ஒவ்வொரு பகுதியாக காண்பித்துக்கொண்டே பாலா வர எதிர்பாராத விதமாக ஓரிடத்தில் ஆளவந்தானை பார்த்துவிட்டான் பாலா.

பார்த்த நிமிடம் உற்சாகம் பொங்க அவரை பார்த்து நடக்க ஆரம்பித்து, ஜீவாவையும் சத்தமின்றி அழைத்துக்கொண்டு வந்தான்.

“உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல, உன்னை என்னாத நெஞ்சும் நெஞ்சல்ல…” என்ற இவனின் குரலிலேயே திடுக்கிட்டு போனார் ஆளவந்தான.

தன் மறுபுறம் திரும்பி பார்த்த ஆளவந்தான் அவன் அங்கில்லை என்றதும் நெஞ்சில் கை வைத்து நிம்மதியாக மூச்சுவிட்டு இன்னொருபக்கம் திரும்பினார்.

“ஹை ஆளு அங்கிள்…” என அவர் திரும்பியதும் அருகே சென்று அவரின் கன்னத்தை தட்ட,

“டேய் விடுடா…” என அவனின் கையை பிடித்து உதறினார்.

“இங்கயும் வந்துட்டியா? உன் இம்சை தாங்கலை. பேசாம போயிரு…”  என தனது ட்ராலியுடன் நகர்ந்தார்.

“அட நில்லுங்க ஆளு…” என வழி மறித்துவிட ஜீவா என்னவோ என பாலாவை பார்த்து முழித்தார்.

“ஒரு முக்கியமான ஆளை உங்களுக்கு அறிமுகப்படுத்தனும்…”

“என்ன இன்னொரு ஆளா?…” என ஆளவந்தான் கேட்டதும் பக்கென்று சிரித்துவிட்டான்.

“ஆமா ஆமா, அதுவும் என் ஆளு தான்…” என்று சொல்லி,

“மீட் மை வொய்ப் ஜீவன்யா…” என காண்பிக்க அப்போதுதான் அவளை கவனிக்கவே செய்தார்.

கோர்ட்டில் தான் பார்த்தாரே பாலா சொல்லியதை. இருவரையும் முறைப்புடன் பார்த்துக்கொண்டு நின்றார் பேசாமல்.

“ஜீவா இவர் தான் என்னோட அமிதாப் மாமா. எவ்வளவு அடிச்சாலும் வலிக்காத மாதிரியே வாங்கிப்பார். இவர் தான் என்னோட ஆல் டைம் ஆளு…” என சொல்லவும் தலையில் அடித்துக்கொண்டார் ஆளவந்தான்.

“டேய் வாயை மூடுடா. எப்ப பார்த்தாலும் இதே வேலையா போச்சு உனக்கு…” என்று அவனிடம் எகிறியவர்,

“அதான் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கல்ல. அப்பறம் என்ன? நல்லாரு நல்லாரு…” என  சொல்லி அங்கிருந்து நகர போனார்.

“அட நில்லுங்க ஆளு. கேஸ் ஜெயிச்சதுக்கு ஒன்னும் சொல்லலையே?…” என வம்பிழுத்தான்.

“என்ன செய்யனும்?…”

“ஸ்வீட் எடு. கொண்டாடு. உங்களுக்கு ஓகேனா ரிசார்ட் போவோமா?…” என்றதும்,

“கருமம் கருமம். பொண்டாட்டியை பக்கத்துல வச்சுட்டு பேசற பேச்சாடா இது?…” என முறைத்தார்.

“அப்பா சொல்லுங்க, என்னோட ஆர்க்யூமென்ட் பத்தி…” என்று காலரை தூக்கிவிட்டான்.

“இப்ப இங்க வச்சு அவசியம் பதில் சொல்லனுமா?…”

“இல்லையா பின்ன? கொஞ்ச பேச்சா பேசினீங்க? மன்னர் பரம்பரை மண்ணாகட்டி பரம்பரைன்னு. என்னை மண்ணை கவ்வ வைக்கேன்னு. கடைசியில நீங்க கேஸ்ல வாதாட கூட இல்லை…” என்றதும் பல்லை கடித்தார் ஆளவந்தான்.

“அப்பறம் ஒரு முக்கியமான விஷயம்….” என்றவனை,

“இன்னும் என்ன?…” என்று எரிந்து விழுந்தார்.

“உங்க சீனியரை போய் நீங்க ஜெயில்ல பார்க்கும் போது நான் ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லிருங்க. அப்படியே நம்மளை பத்திய ஒரு விஷயத்தையும்…”

“நம்மளையா? என்ன?…”

“இந்த கேஸ்ல நான் ஜெயிக்க உத்வேகமா, எனக்கு பேக் போர்னா நீங்கதான் இருந்தீங்கன்றதை மறக்காம சொல்லிருங்க…”

“எதே நானா? இது எப்படா?…” என அவர் திகைத்து பார்க்க ஜீவாவுக்கு பாவமாய் போனது.

“என்ன இது? அவங்க பயப்படறாங்க…” என அவள் சொல்லவும் தனது முகத்தை உடனே விரைப்பாக மாற்றியவர்,

“இந்தாம்மா, நான் ஒன்னும் பயப்படலை. இவன்கிட்ட மனுஷன் பேசுவானா?…” என்றவர்,

“உன்னை பார்த்தாலே பாவமா இருக்கு. இவனை என்னன்னு சமாளிக்க போறியோ? ஆளு எப்பவும் ஒரு மார்க்கமா தான் சுத்துவான். அதனால பார்த்து இருந்துக்கோ. உன் நல்லதுக்கு தான் சொல்றேன் இதையும்…” என கூறினார்.

“சரிங்க ஸார்…” என்றாள் மரியாதையாய் ஒரு புன்னகையுடன்.

“அப்பறம் கொஞ்சம் ஜாக்கரதையாவும் இருங்க. எப்படியும் அரங்கநாதன் வெளில வந்திருவார். அதுக்கான முயற்சிகள் நடந்துட்டு தான் இருக்கு.  அவனுக்காக இதை சொல்லலை. நீ கொஞ்சம் மரியாதையா இருக்கேன்னு தான்…” என்றவர்,

“எங்க இவனை காணும்?…” என பார்க்க அவன் தன்னோடு சேர்த்து மூவரையும் வீடியோ எடுத்திருந்தான்.

“டேய் என்னடா பன்ற?…” என பதறியவரின் தோளில் கை போட்டு ஒரு போட்டோவும் எடுத்துக்கொண்டவன்,

“நாளைக்கே சீனியர் நம்பாம போய்ட்டா. எவிடென்ஸ் காமிக்கனும்ல. அதுக்கு தான்…” என்று சொல்லிவிட்டு ஜீவன்யாவுடன் அங்கிருந்து சிரிப்போடு நகர்ந்துவிட்டான்.

“தள்ளி போனாலும் துயரம் விடாம தொத்தும்ன்றது இதான் போல? இவனை வச்சிக்கிட்டு…” என புலம்பிக்கொண்டே அங்கிருந்து கிளம்பினார் ஆளவந்தான்.

ஜீவாவுடன் அனைத்தையும் வாங்கிக்கொண்டு வெளியே வந்த பாலாவிடம் சத்தம் போட்டாள் அவள்.

“ஆனாலும் ரொம்ப பன்றீங்க அவரை. பாவம் வீடியோ எடுத்தது பார்த்ததும் மூஞ்சி வெளுத்திருச்சு. பயந்துட்டார்…”

“அதுக்குத்தான் எடுத்தேன். இதெல்லாம் சில ட்ரிக். எப்போவாச்சும் யூஸ் ஆகும் பாரு…” என்றவன் அங்கிருந்து மற்ற தளங்களுக்கும் சென்று தேவையானதை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான் ஜீவாவுடன்.

திங்கள் கிழமை காலை வழக்கமான நேரத்தில் கிளம்பி தென்றலை பள்ளியில் விட்டுவிட்டு, ஜீவாவை மருத்துவமனையில் இறக்கிவிட்டு, பத்ரியையும் பார்த்துவிட்டு நீதிமன்றத்திற்கு வந்து சேர்ந்தான் பாலா.

அன்றைக்கு தனக்கு வேறு ஒரு வழக்கு மதியம் தான் இருப்பதால் அதனை பார்த்துக்கொண்டு இருக்க அவனை தேடி வந்தார் ஆளவந்தான்.

Advertisement