Advertisement

“ப்ச், பார்த்தியா மறுபடியும் எமோஷனல் ஆகற. அதான் உன்னை கொஞ்சம் டைவர்ட் பண்ண பார்த்தேன். நீயானா திரும்ப அதே மூடுக்கு தான் போற…” என்றான்.

“தெரியலை. என்னவோ இதை எல்லாம் ஜீரணிக்க முடியலை. ஆனா என்னையும், என்னோட பேக்ரவுண்டையும் ஜீரணிக்க முடியலைன்னு சரோ மேம் சொல்றாங்க. அவங்கக்கிட்ட இதை நான் எதிர்பார்க்கலை…” என்றவள் பேச்சுவாக்கில் அவனிடம் சொல்லியும்விட பாலாவிடம் எந்த மாற்றமும் இல்லை.

“சோ வாட்? அவங்க உன்னை டயஜிஸ்ட் பண்ணினா என்ன? இல்லைன்னா என்ன? இந்த மாதிரி மென்டாலிட்டி இருக்கறவங்களை நினைச்சு பீல் பன்றதை விடு…”

“முடியலை பாலா. ரொம்ப கஷ்டமா இருக்கு. இது என்னோட முடியாதே? என்னை இங்க அனுப்பி வச்ச ஆன்ட்டிக்கும் தானே கெட்டபேர் வரும்?…”

“அதை அவங்க பேஸ் பண்ணிப்பாங்க. ஒருவேளை இவங்களை பத்தி தெரிஞ்சதனாலையே என்னவோ உண்மையை சொல்லாம உன்னை இங்க அனுப்பி வச்சிருந்திருப்பாங்க….”

“ஹ்ம்ம் இருக்கலாம். இங்க அனுப்பும் பொழுதே சொல்லிட்டாங்க மூச்சு கூட விட கூடாதுன்னு. அதான் அவங்களை கூட நாங்க காண்டேக்ட் பண்ணலை. ஆனா சரோ மேம்…”

“ஜீவா, இதுதான் இவங்க. நமக்காக போலியா அச்சோன்னு பீல் பண்ணாம நேரா இப்படி சொன்னது எவ்வளவோ மேல்ன்னு நினைச்சுக்கோ. சியரப் கேர்ள்…” என்றான் அவளின் தலையை பிடித்து லேசாய் ஆட்டிவிட்டு.

“ஓகே நீ போய் தென்றலை பாரு. என்ன பன்றான்னு. கொஞ்சம் நேரத்துல வீட்டை கிளீன் பண்ணனும்னு கதவை தட்டுவாங்க. அதனால ஓபன் பண்ணியே வச்சிரு. போ…” என்றதும் ஜீவா எழுந்து அருகிருந்த அறைக்கு வந்தாள்.

அங்கே அவள் போனில் பேசிக்கொண்டிருக்க பார்த்ததும் தெரிந்தது வானதியிடம் என்று.

தானும் வாங்கி பேசினாள் ஜீவா. பேசும் பொழுதே வேலை செய்யும் பெண்மணி வந்துவிட தென்றலிடம் சொல்லிவிட்டு கட்டிலில் அமர்ந்துகொண்டாள்.

அவரும் வீட்டை பெருக்கி துடைத்துவிட்டு செல்ல தென்றல் கொண்டு வந்த பேக்கை எடுத்து அங்கிருந்த கப்போர்டில் அடுக்க ஆரம்பித்தாள்.

தனது பள்ளிக்கூட பையை தனியே வைத்தவள் அதிலிருந்து புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்துவிட்டாள்.

ஜீவாவிடம் எதுவும் பேசாமல் படிக்க ஆரம்பித்திருக்க போனில் பேசி முடித்த ஜீவா,

“என்ன தென்றல், தூங்கனும்னு வந்த?…”

“அக்கா தூக்கம் வரல. இன்னைக்கு ஸ்கூலுக்கு போகலை. நாளைக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு. சப்போஸ் டெஸ்ட் வச்சாங்கன்னா? அதான் படிக்கறேன். பப்ளிக் எக்ஸாம்ல நல்ல மார்க் ஸ்கோர் பண்ணனும்னு சசி அண்ணா சொல்லிருக்காங்க…”

“நானும் தான் இத்தனை நாள் சொன்னேன்…”

“அக்கா அப்போ இருந்தது வேற. இப்போ அப்படி இல்லை. நல்ல மார்க் கிடைச்சா…” என்றவள் பேச்சை நிறுத்திவிட்டு,

“உன் கூட பேசினா இதை மறந்திருவேன். நீ பேசாம இரு. இல்லைன்னா மாமா கூட போய் பேசிட்டு இரு…” என்று சொல்லி புத்தகத்தில் ஆழ்ந்துவிட்டாள்.

முன்புமே நன்றாக படிக்கும் பெண் தான். ஆனால் இந்தளவுக்கு தீவிரபாவம் முகத்தில் இல்லை. இன்று அதை கண்டுகொண்ட ஜீவா அவள் ஏதோ முடிவில் இருப்பதை புரிந்துகொண்டாள்.

தென்றலுக்கு நல்ல மதிப்பெண்கள் எடுத்து மெரிட்டில் நல்ல கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்றொரு எண்ணம்.

முன்பு இருந்தது தான் அக்காவின் அருகேயே இருந்துகொண்டு இங்கேயே ஏதேனும் கல்லூரியில் சேர்ந்துகொள்ளலாம் என்பது.

ஆனால் இப்போதோ வெளியூரில் சென்று படிப்பை பார்த்துக்கொள்வது என்று. வயது பெண்ணான அவளுக்கு இப்போதிருக்கும் சூழ்நிலை புரியத்தான் செய்தது.

அதிலும் பாலா தங்கள் இருவரயும் ஒரு அறையில் இருந்துகொள்ளுங்கள் என சொல்லியது இன்னுமே வருத்தமாகி போனது.

திருமணம் முடிந்தும் தான் ஜீவாவின் வாழ்க்கைக்கு இடைஞ்சலாகி விடுவோமோ என தோன்ற முடிந்தளவு இங்கிருந்து தான் விலகி நிற்பது இருவருக்கும் செய்யும் நல்லதாக நினைத்தாள்.

மாலை வரை பொழுதும் போகாமல் ஜீவா தென்றலை பார்ப்பதும், பாலாவை பார்ப்பதுமாக இருந்தாள்.

வெறுமனே இருந்த மனதும், புத்தியும் நாலும் யோசிக்க ஆரம்பித்தது. இனி தன்னால் தொடர்ந்து அங்கே வேலைக்கு செல்ல முடியுமா என்பது வரை யோசித்து பார்த்தாள்.

முடியும் என ஒருமனம் சொன்னாலும், இன்னொருபக்கம் வெகுவாய் சுணங்கவே செய்தது.

இரவு உணவை முடிந்ததும் தென்றலுக்கு ஜீவாவை எப்படி சொல்லி பாலா இருக்குமறைக்கு அனுப்புவது என்ற யோசனையுடன் முதலில் உண்டுவிட்டு அறைக்குள் வந்து படுத்துவிட்டாள்.

தானாகவே ஜீவா சென்றுவிட்டால் தேவலை என்று நினைத்துக்கொண்டு சங்கடத்துடன் வந்து படுத்துவிட்டாள்.

“ஜீவா தென்றல் போய் படுத்தாச்சு. நீயும் போய் தூங்கு. குட்நைட். நாளைக்கு பார்க்கலாம்…” என்று எழுந்துகொண்டான்.

திருமணம் முடிந்து முதல் நாள் இரவு. எப்படி இருக்கவேண்டிய இரவு என்ற தவிப்பு இருவருக்குள்ளும் இருந்தது.

ஜீவா அவனை பரிதவிப்புடன் பார்க்க அவளின் எண்ணங்கள் அவனுக்கும் புரிந்தது.

“ஹேய் என்ன இது? என்னால புரிய முடியாதா என்ன? பார்த்துக்கலாம். இப்ப நீ என் வொய்ப். என்னோட தான் இருக்க. ஹ்ம்ம், எனக்கும் ஆசைகள் இல்லாமல் இல்லை. ஆனாலும் நாம தென்றலையும் பார்க்கனும் இல்லையா?…” என சொல்லவும் ஜீவாவும் தலையசைத்தாள்.

“ஓகே அதை விடு. நாளைக்கு தென்றலுக்கு ஸ்கூல் லீவா?…” என கேட்டவன்,

“பப்ளிக் எக்ஸாம் எழுதற பொண்ணு. கிளாஸ் இருக்கும் தானே?… ”என்றும் அவனாகவே சொல்ல,

“ஆமா கிளாஸ் இருக்கு. எப்பவும் போல ஃபுல் டே தான் இருக்கும்…”

“ஓகே, நாளைக்கு நானே ட்ராப் பண்ணிடறேன்…”

“உங்களுக்கு கோர்ட்?…”

“சாட்டர்டே சண்டே லீவ் தான்…” என்றவன்,

“போ எவ்வளவு நேரம் இப்படி முகத்தை பார்த்துட்டே நிப்ப?…” என்று சொல்லவும் அவனை திரும்பி பார்த்துக்கொண்டே அந்த அறைக்கருகே செல்ல,

“ஜீவா…” என்ற அழைப்பில் திரும்பியவள் அவனின் அணைப்பில் இருந்தாள்.

நொடிநேர தழுவல் தான். ஆனால் உயிரை இறுக்கும் அணைப்பு அவனின் உணர்வுகளை பிரதிபலித்தது.

கன்னத்தில் அழுத்தமாய் தன் அதரங்களை மீசை முடிகள் துளைக்க முத்தமிட்டவன்,

“இப்ப போ. அட்லீஸ்ட் பர்ஸ்ட் நைட்ல முத்தமாவது குடுத்தேன்னு வரலாறு பேசும்…” என்று புன்சிரிப்புடன் சொல்ல,

“ஏன் இப்படி?…” என்றவளுக்கு பேச்சும் வரவில்லை.

கதவு வேறு அவள் பின்னால் நகர்ந்ததில் திறந்துவிட பாலா நகர்ந்துவிட்டான் உடனே.

“குட்நைட் ஜீவா…” என சொல்லி வாசலுக்கு சென்றுவிட்டான்.

“தூங்காம எங்க போறீங்க?…” என்றவளை திரும்பி பார்த்தவன்,

“நீ முதல்ல உள்ள போ. நான் டோர் லாக் பண்ணிட்டு வருவேன்…” என்று சொல்லி படியில் இறங்கிவிட ஜீவாவும் உள்ளே வந்தாள்.

தென்றல் உறங்கி இருக்க அதற்குள்ளாகவா என்பதை போல பார்த்துவிட்டு தானும் இரவு உடைக்கு மாறியவள் அவளருகே படுத்துவிட்டாள்.

மேலும் ஒருமணி நேரம் சென்றிருக்க சுத்தமாக உறக்கமில்லை ஜீவாவிடம். தென்றலிடம் அசைவில்லை என்பதிலேயே தெரிந்தது அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டாள் என.

மெல்ல எழுந்து ஓசைபடாமல் கதவை திறந்துகொண்டு வெளியே வந்தவள் தண்ணீரை எடுத்து குடிக்க செல்ல பாலா இருக்கும் அறையில் விளக்கு எரிந்துகொண்டு இருந்தது.

தானாகவே கால்கள் அந்த அறையை நோக்கி செல்லவும் அறை வாசலில் நின்று உள்ளே பார்த்தாள்.

அங்கே கட்டிலில் சுவற்றில் சாய்ந்து அமர்ந்தபடி கையில் ஒரு புத்தகமும், மடியில் குறிப்பேடும் சகிதமாய் பற்களில் பேனாவை கடித்தபடி தீவிரமாக எதையோ பார்த்துக்கொண்டு இருந்தான்.

ஜீவாவின் நிழலில் அவளை நிமிர்ந்து பார்த்தவன் என்னவென தலையசைத்து கேட்க,

“தண்ணி குடிக்க வந்தேன். இங்க லைட் எரியுதேன்னு வந்தா நீங்க தூங்கலை…”

“எனக்கு இது பழக்கம் தான் ஜீவா. இன்னொரு கேஸ்ல கமிட் ஆகிருக்கேன். அதுக்கு தான் ப்ரிப்பேர் பண்ணிட்டு இருக்கேன். தென்றல் தூங்கியாச்சா?…”

“அவ அப்பவே தூங்கிட்டா, நான் தான் இன்னும் தூங்கலை. தூக்கம் வரலை…”

“இந்த வீடு உனக்கு புதுசு இல்லையா? அதான்…” என்று சொல்லியும் இன்னும் அவள் நிற்க,

“நாளைக்கு பேசலாம் ஜீவா. இப்ப போய் தூங்கு…” என மீண்டும் அழுத்தி சொல்லவும் அவனிடம் பேசவேண்டும் என்றிருந்தவள் வந்தவழியே திரும்ப,

“ஓய், தண்ணியை குடிச்சுட்டு போ…” என்றான் சிரிப்புடன்.

“தெரியும்…” என்று சொல்லிவிட்டு அவள் செல்ல பாலாவும் எழுந்து சென்று அறையின் கதவில் சாய்ந்து நின்றான்.

தண்ணீரை குடித்துவிட்டு பிடித்துக்கொண்டு வந்தவள் அவன் நிற்பதை கண்டு அவளும் அங்கேயே நின்றுவிட ரசனையுடன் அவளை பார்வையால் சிறைபிடித்தான்.

கள்ளூர பார்க்கும் பார்வை உள்ளூர பாயுமே

துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே

வில்லோடு அம்பு ரெண்டு கொலலாமல் கொல்லுதே

பெண்பாவை கண்கள் இன்று பொய் சொல்லுதே

தேனோடை ஓரமே நீராடும் நேரமே

Advertisement