Advertisement

மின்னல் – 21

          இன்னும் உள்ளே சென்று எதுவும் பார்க்கவில்லை. ஹாலில் இருந்தபடியே அவள் சுற்றி பார்க்க அதற்குள் பாலா காட்டிய ஒரு அறையில் இருந்து முகத்தை கழுவிக்கொண்டு வந்தாள் தென்றல்.

“இந்த பேக்கிங்கை பிரிங்க. நான் ப்ளேட் எடுத்துட்டு வரேன்…” என்று பாலா சொல்ல,

“நான் எடுத்து வைக்கிறேன்…” என்று வந்தாள் ஜீவா.

“அக்கா, நீயும் போய் பேஸ் வாஷ் பண்ணிக்கோ. ரொம்ப டயர்டா இருக்க…” என்ற தென்றல் உணவு வந்திருந்த பையை எடுத்து பிரித்தாள்.

“பர்ஸ்ட் சாப்பிட்டு வீட்டை பார்க்கலாம்…” பாலா உள்ளிருந்தே சத்தம் கொடுக்க அவன் குரல் வரும் திசையில் நகர்ந்தாள் ஜீவா.

“ஹேய் நான் தான் வரேன்னு சொன்னேன்ல? அப்பறம் என்ன?…” அங்கே குடிக்க தண்ணீர் பிடித்துக்கொண்டு இருந்தான் அவன்.

“இல்லை சும்மா தான்…” என அவனின் கேள்விக்கு பதில் சொல்லியவள் அந்த அடுக்களையை நிதானமாக பார்த்தாள்.

நன்றாக விசாலமாகவே இருந்தது அது. பெரிதாய் அதிக பாத்திரங்கள் கூட இன்றி மிக மிக அளவாக, இருந்தது.

“வா சாப்பிட்டு வந்து அப்பறம் எதுவேணாலும் பேசலாம். ரொம்ப பசி…” என சொல்லி அவளை தள்ளிக்கொண்டு டைனிங் டேபிளுக்கு வந்திருந்தான்.

“தென்றல் இந்தா ப்ளேட்…” அவளிடம் ஒன்று நீட்டியவன் ஜீவாவையும் அமர சொல்லி பிரித்து வைத்திருந்த உணவுகளை எல்லாம் எடுத்து வைக்க,

“நான் வைக்கறேன்….” என அவன் வைத்திருந்த கரண்டியை தான் வாங்கிக்கொண்டாள் ஜீவா.

“ஓகே, இதை நீ வை. நானும் வைக்கறேன்…” என்று கூட்டு பொரியல் என கொஞ்சம் கொஞ்சமாக மூன்று தட்டுகளிலும் இருவரும் வைத்தனர்.

“ஓகே, கல்யாண சாப்பாடு ரெடி…” என சொல்லி பாலா சாப்பிட ஆரம்பிக்க தென்றலும், ஜீவாவும் சிரித்தனர்.

“ஓய், என்ன கிண்டலா? கல்யாணத்தன்னைக்கு சாப்பிடற சாப்பாடு கல்யாண சாப்பாடு தானே?…” என்று சொல்லியவன்,

“பேசாம சாப்பிடுங்க…” என்றதும் இருவருமே உண்ண ஆரம்பித்தனர்.

இனிப்பும் சேர்த்தே அவன் ஆடர் செய்திருந்தான். அதையும் பங்கிட்டு முடித்து எல்லாம் எடுத்து வைத்துவிட்டு வந்து அமர்ந்தவன்,

“வீடு ஓகே வா?…” என்றான் தென்றலிடம்.

“இங்க நீங்க தனியாவா இருக்கீங்க?…” அவள் கேட்க,

“ஏன் இன்னும் பத்திருபது பேரை கூட சேர்த்துக்கட்டுமா?…”

“நீங்க ஒரு ஆளே போதும். பத்திருபது என்ன? அதுக்கு மேலையே சமம்…” என்று தென்றல் சிரித்தாள்.

“ஹ்ம்ம், சரிதான்…” என்றவன்,

“ஓகே, வீட்டை பார்த்திடலாம். ரொம்ப பெருசு ஒன்னும் இல்லை…” என்று சொல்லி எழவும் ஜீவாவும் தென்றலும் வந்தனர்.

“இது சொந்த வீடு தான். படிப்பு முடியற வரைக்கும் இதை லீஸ்க்கு விட்டிருந்தோம். படிப்பு முடியவும் எனக்கு இன்கம் வரவும் நானே வந்துட்டேன். மெயிண்டனன்ஸ் கொஞ்சம் பேட் தான். அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க…”  என்றான்.

வாசலில் கார் நிறுத்த இருந்த சிறு இடத்தில் ஆரம்பித்து ஹால், ஹாலின் பக்கவாட்டில் ஒரு படுக்கை அறை, அதன் அருகே இன்னொரு படுக்கை அறை.

எதிரே அடுக்களை. அதை ஒட்டிய உணவருந்தும் இடம். உள்ளிருந்தே மாடிக்கு செல்லும் படி. மேலே சிறு அறை. இவ்வளவு தான் வீட்டின் பரப்பளவு.

“ரெண்டு பெட்ரூம் தான்.  ஒண்ணு என்னோட அபிஷியல்…” என இன்னும் பார்க்கப்படாத அந்த அறையை திறந்து காண்பித்தான்.

அலுவலக அறை தான். அத்தனை சட்ட புத்தகங்கள். பெரிய அலாமரி என்று சிறு நூலகம் போல இருந்தது. ஓரமாக டேபிளும், கணினியும், நாற்காலியும். இன்னொரு பக்கம் சுவற்றை ஒட்டிய ஒற்றை படுக்கை.

“இதுதான் மாஸ்ட்டர் பெட்ரூம். ஆனா இது நான் இப்படித்தான் யூஸ் பண்ணிட்டு இருக்கேன். நீங்க ரெண்டுபேரும் அந்த ரூமை யூஸ் பண்ணிக்கோங்க…” என்று பாலா சாதாரணமாக சொல்ல தென்றல் அமைதியாக ஜீவாவை பார்த்தாள்.

“இப்ப போய் ரெஸ்ட் எடுங்க. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. முடிச்சுட்டு வரேன்…” என அந்த அறைக்குள் செல்ல போனவன்,

“பயப்படாம இருக்கனும். இங்க உங்களுக்கு முழு பாதுகாப்பும் இருக்கும். ஆனா என்கிட்டே சொல்லாம, தனியா எங்கயும் போக கூடாது. புரியுதா?…” என்றான்.

“ஹ்ம்ம், ஓகே…” என ஜீவா சொல்ல,

“ஓகே, நான் போய் தூங்கறேன். நீ மாமா கூட பேசிட்டு இரு…” என தென்றல் உள்ளே சென்றுவிட்டாள்.

அவள் மட்டும் உள்ளே சென்றதும் ஜீவா அப்படியே நிற்க பாலாவிற்கு அவள் சென்றதை கண்டு சிரிப்பு.

“என்னவாம் தென்றல் பெரியமனுஷி மாதிரி பேசறா, நடந்துக்கறா…” என்று கேட்டுக்கொண்டே அந்த அறைக்குள் நுழைந்தவன்,

“இங்க வா, நீ இப்ப அங்க போனா உன்னை எதாச்சும் சொல்ல போறா? கொஞ்சம் நேரம் என்னோட இரு….” என்றான்.

அவனுடன் அந்த அறைக்குள் நுழைந்தவள் கட்டிலில் அமர பாலாவும் இலகுவாய் அவளருகே வந்து அமர்ந்துகொண்டான்.

“என்ன எதுவும் பேசலை ஜீவா? சைலண்ட்டா இருக்க?…” அவனே ஆரம்பிக்க,

“ஹ்ம்ம், ஒண்ணுமில்லை. சும்மா யோசிச்சுட்டு இருக்கேன்…” மெதுவாய் அவள் சொல்லவும் மென்மையான புன்னகை பாலாவின் முகத்தில்.

“உனக்கு முக்கியமான ஒருத்தவங்களை காமிக்கிறேன்…” என எழுந்தவன் கட்டிலின் தலைபக்கம் இருந்த கப்போர்டை திறந்தான்.

ஒரு பெரிய புகைப்படம் அங்கே ஒரு மேடை போல அமைத்து அதில் வைத்து அதிலிருக்கும் இருவருக்கு மாலை போடப்பட்டிருக்க கேள்வியாய் அவனை பார்த்தாள்.

“அம்மா, அப்பாவா?…” ஜீவா கேட்க தலையசைத்தான் பாலா.

“கரெக்ட்டா சொல்லிட்ட…” என சிரிக்கவும் ஜீவாவிற்கு வருத்தமாக இருந்தது.

தனக்கும் சரி, தன்னை வாழ்வின் சரிபாதியாய் தன்னை பிணைத்துக்கொண்டவனுக்கும் சரி பெற்றோர்கள் என யாருமில்லாததை எண்ணி மனது வருந்தியது.

அது தன் சந்ததிக்கும் எத்தனை பெரிய இழப்பு என்று நினைத்து உள்ளுக்குள் மருகினாள்.

என்ன வரம் வாங்கி பிறந்தேன் நான்? இத்தனை கஷ்டங்கள்? எனக்கும் யாருமில்லை, இனி வரும் பிள்ளைகள் என நினைக்கும் பொழுதே விசும்பல் வரும் போல் இருக்க அதனை அடக்கிக்கொண்டு மீண்டும் வந்து அமர்ந்துவிட்டாள்.

“என்ன எமோஷனல் ஆகிட்டியா?…” என்று கேட்ட பாலா கதவை மூடி வைத்துவிட்டு வந்து அமர்ந்தான்.

“இதுக்கு போய் பீல் பண்ணுவியா என்ன? இனிமே நம்மோட பிள்ளைங்களுக்கு நாமளும், அவங்க பிள்ளைங்களுக்கும் நாம தாத்தா பாட்டியாவும் இருந்துப்போம். சரிதானே?…” என்றதும் அவன் தன்னை கண்டுகொண்டதில் முகத்தில் லேசாய் புன்னகை.

“நல்லா தான் சிரிக்கிறதுங்க மேடம். ஒண்ணு சண்டைக்கு நிப்ப. இல்லையா சைலண்ட்டா இருப்ப? உன்னை எப்படி ஹேண்டில் பண்ண?…”

“எப்படியும் பண்ண வேண்டாம். விடுங்க…” என்றவள்,

“இங்க பூஜை ரூம் எதுவும் இல்லையா?…” என கேட்டாள்.  

“ஏன் நீ செண்டிமெண்ட் ஏதாவது வச்சிருக்கியா?…”

“இல்லை அப்படி எதுவும் இல்லை. ஆனா இருக்கும் தானே?…”

“அம்மா இருந்தவரை இருந்துச்சு. இப்ப அம்மா தான் கடவுள்…” என்றவன்,

“ஏன் நம்மளுமே கடவுள் தான். நம்மோட பயபக்தி நம்ம நேர்மைல இருக்கனும். நம்ம வெளிப்படுத்திக்கிற விதத்துல தான் நம்மளை கடவுளா, மிருகமான்னு மத்தவங்க பார்ப்பாங்க…” என்று அவளின் கன்னம் தட்டினான்.

“உனக்கு வேணும்னா சொல்லு, வச்சிடலாம். யூர் விஷ்…” என சொல்ல வெளியே அழைப்பு மணி அடித்தது.

“யாரோ பெல் அடிக்காங்க…”

“நீ போய் பாரு. நான் ஷர்ட் மாத்திட்டு வரேன்…” என்று சொல்ல ஜீவா சென்று கதவை திறக்க அங்கே ஒரு நடுத்தர வயது பெண்மணி நின்றிருந்தார்.

“யார் நீங்க?…” என்ற ஜீவாவிற்கு பதிலாக லேசாய் புன்னகைத்தவர் ஒன்றும் சொல்லாமல் வீட்டிற்குள் வந்துவிட்டார்.

“ஹலோ நில்லுங்க, யார் நீங்க? பேசாம போறீங்க?…” என்று அவரை மறித்து நின்று கேட்டாள்.

“ஜீவா அவங்களை விடு…” என்று பாலா வரவும் அப்பெண்மணி அடுக்களைக்குள் நுழைந்துவிட்டார்.

“இவங்க யார்? கேட்டா எதுவும் சொல்லலை? பேசாமலும் போறாங்க…” என்றாள்.

அவர் நேராக அடுக்களைக்குள் செல்வதை வைத்து ஒருவேளை வேலைக்கு தானோ என்று தோன்றினாலும் தானாக எதுவும் அதை கேட்கவில்லை.

“அவங்க வேலை பார்க்கட்டும். நீ வா…” என அழைத்து அறைக்குள் சென்றான்.

“ஓஹ் வேலைக்கா? அப்போ ஏன் எதுவும் பேசலை? சொல்ல வேண்டியது தானே?…”

“எப்படி பேசுவாங்க? கோவமா இருப்பாங்களா இருக்கும்…”

“கோவமா? யார் மேல?…”

“உன் மேலையும் தான். என் மேலையும் தான்…” என்றவன் அங்கே மேஜையில் இருந்த கோப்புகளை எல்லாம் எடுத்து பிரிக்க ஆரம்பித்தான்.

“என் மேலையும்ன்னா? நான் என்ன பண்ணேன்? நான் இப்ப தான் இவங்களை பார்க்கறேன்…”

“என்னை கல்யாணம் பண்ணியிருக்கியே?…”

“ப்ச், புரியற மாதிரி சொல்லுங்க…” என அவனின் முன்னே வந்து நிற்க,

“நீ தான் அவங்க மக வாழ்க்கைக்கு குறுக்க வந்திட்டியே? அதான் கோபம்…”

“என்ன?…” என்றவளுக்கு தாறுமாறாக எண்ணங்கள் பறந்தது.

ஒருவேளை தூரத்து சொந்தமோ என்று. சாலாட்சியை போன்று இவரும் ஏதேனும் ஒருவகையில் உறவோ என்று.

“அவங்க பொண்ணை எனக்கு கட்டி வைக்கனும்னு ரொம்ப ஆசையா இருந்தாங்க. நீ தான் என் மனசை கலைச்சு என்னை கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டியே? அதான் பேசலை…” என்றான் சாதாரணமாக.

“நான் உங்க மனசை கலைச்சேனா? அநியாயமா பேசாதீங்க…” ஜீவா கோபத்துடன் கேட்க,

“ஓகே, நானே கலைஞ்சிட்டேன். போதுமா? ஆனா என் வொய்ப் நீ தானே? அப்ப கோவம் உன் மேல தான்…”

“என்ன விளையாடறீங்களா? சும்மா என்னையே சொல்ல கூடாது…”

“ஓகே, சொல்லலை. டென்ஷன் ஆகாம இப்படி உட்கார்…”  என அவளின் தோளை பிடித்து அமர வைக்க,

“விடுங்க நீங்க. என்னை சொன்னா டென்ஷன் ஆகாதா? இத்தனைக்கும் அவங்க யாருன்னு கூட தெரியாது எனக்கு…”

“ஓகே, உன்னை சொல்லலை. என்னை சொல்லிக்கறேன்…” நமுட்டு சிரிப்புடன் பாலா கூறினான்.

“சிரிக்காதீங்க. அவங்க பொண்ணு எங்க?…”

“அவங்களுக்கே தெரியாது…”

“என்ன?…” என குழப்பத்துடன் அவள் எழுந்துகொள்ள,

“அவங்களுக்கு பொண்ணே இல்லை. நான் சும்மா கலாய்ச்சேன்…”

“உங்க விளையாட்டுக்கு ஒரு அளவே இல்லையா?…” என்றாள் முறைத்துக்கொண்டு.

“விளையாடனும்னு தான் ஆசை. பார்க்கலாம்…” என விஷமமாக சிரிக்க அப்போதும் ஜீவா அதனை கவனிக்கவில்லை.

“ஆனா அவங்க ஏன் பேசலை? லேசா சிரிச்சாங்க. யாருன்னு கேட்டதுக்கு பார்த்துட்டு பேசாம போய்ட்டாங்க…” என்றதும் விளையாட்டாய் பேசிக்கொண்டிருந்தவன் அதை விடுத்து,

“அவங்களால பேச முடியாது. யாருமில்லை. நம்ம வானம் ஆசிரமத்துல தான் இருந்தாங்க. இப்பவும் இருக்காங்க. இங்க எனக்கு சமைக்க வீட்டை சுத்தம் செய்யன்னு வருவாங்க…” என்றவன்,

“இன்னைக்கு நான் தான் லேட்டா வாங்கன்னு சொல்லிருந்தேன் நேத்தே. அதான் இந்த நேரம் வந்திருக்காங்க. வேலை முடிச்சுட்டு நைட்டுக்கு டின்னர் செஞ்சு வச்சுட்டு கிளம்புவாங்க…” என்றான்.

“நம்மளோட கஷ்டம் தான் பெருசுன்னு நாம நினைச்சிட்டு இருக்கோம். ஆனா இங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கஷ்டத்தை அனுபவிச்சிட்டு தான் இருக்காங்க இல்லையா?…” ஜீவாவின் குரல் மாறிவிட்டிருந்தது.

Advertisement