Advertisement

“வாடா குட்டி, உன் முகத்துல இவ்வளோ சந்தோஷத்தை இன்னைக்கு தான் பார்க்கறேன்…” என்று அவளையும் வாரி அணைத்துக்கொண்டாள்.

அதற்குள் பாலா சோலையம்மாவிடம் விவரத்தை சொல்லியிருக்க அவருக்கும் அத்தனை சந்தோசம்.

“செத்த நேரம் முன்ன தான் இங்க ஒரே கூச்சல் தம்பி. அக்கம்பக்கத்துல இருக்கறவங்க எல்லாம் செய்திய பாத்துட்டு ஜீவா புள்ளையை பத்தி என்னென்னவோ பேச ஆரம்பிச்சுட்டாங்க. வானதி ஒரு புடி புடிச்சுட்டா. அப்பறம் தான் கம்மின்னு போனாங்க…” என்றதும் பாலா தலையசைத்தான்.

‘இது சேவைக்கான இடம் என தெரிந்தும் இப்படியும் சிலர் புரிந்துகொள்ளாமல் தான் இருக்கிறார்கள். அடிப்படை குணமான இதை எல்லாம் மனிதர்களிடம் மாற்றிவிட முடியுமா என்ன?’ என நினைத்துக்கொண்டான் பாலா.

“வெளியிலையே நிக்கிறீங்களே? வாங்க உள்ள…” என அவர் உள்ளே சென்றவர்,

“இந்தா ஜீவா, போன் போட்டு ஒரு வார்த்த சொல்லிருந்தா ஆரத்தி எடுத்திருப்போம்ல. இப்பவும் அந்த தம்பிய வாசல்லையே விடுட்ட?…” என ஜீவாவிடம் அவர் கேட்கவும்,

“உள்ள வாங்க, வாங்க மாமா…” என்றாள் தென்றல்.

“யப்பா, முதல் தடவை வந்தப்போ கதவை கூட திறக்கமாட்டேன்னு பண்ணின ஆர்ப்பாட்டம் என்ன? இன்னைக்கு வரவேற்பென்ன?…”  வானதி கிண்டலாய் சொல்ல,

“அப்ப வக்கீல், இப்ப மாமா. அதான்…” என்றாள் தென்றல்.

“தெளிவு தான்…” என்று அவளின் கன்னத்தை பிடித்து கொஞ்சினாள் வானதி.

“ஓகே, நாங்க கிளம்பனும். இன்னொரு நாள் வந்து நிதானமா பேசலாம். இனிமே தான் லஞ்ச் கூட…” என பாலா சொல்லவும்,

“என்ன தம்பி? அதுக்குள்ளே?…” என்று அவர் கேட்க,

“தென்றல் உன் புக்ஸ் எல்லாம் எடுத்து வை. ஜீவா நீயும் உன் திங்க்ஸ் எடுத்து வை…” என்றவன்,

“ஏன்? அங்க தானே நாங்க போகனும்?…” என்று சிரித்தான்.

“வானதி இங்க வா…” என்று மகளை அழைத்தவர்,

“தென்றலு நம்ம கூட இருக்கட்டும். நீ சொல்லு…”  என்றார் அவளிடம்.

“ஆமா ஸார், தென்றல் இங்க இருக்கட்டுமே? எப்படியும் ஸ்கூல் இங்க இருந்து தானே? உங்க வீடுன்னா தூரம். நீங்க ஒன்னும் கவலைப்பட வேண்டாம். நாங்க பார்த்துக்கறோம். அட்லீஸ்ட் ஸ்கூல் முடியிற வரையாவது…” என்றாள் வானதியும்.

அவர்கள் சொல்வது எதற்கென புரிந்தாலும் புன்னகையுடன் மறுப்பாய் தலையசைத்தவன்,

“ஸ்கூல் ஒரு விஷயம் இல்லை. அதை நான் மேனேஜ் பண்ணிப்பேன். அதோட இப்ப அவங்க என் பாதுகாப்பில் தான் இருக்கனும். அதுதான் ரூல்ஸ்…” என்றான்.

அதற்கு மேல் அவனிடம் என்ன சொல்லி தென்றலை தங்களோடு இருத்தி கொள்வது என்று வானதியும், சோலையம்மாவும் யோசனையுடன் இருந்தார்கள்.

“நீங்க எப்போ வேணா வீட்டுக்கு வந்து ஜீவாவையும், தென்றலையும் பாருங்க. அவங்களும் வருவாங்க…” என்று சொல்லவும் அதற்கு மேல் அவனிடம் ஒன்றும் சொல்ல முடியாமல் வானதி ஜீவாவிடம் சென்றாள்.

அவள் எடுத்து வைக்க தானும் உதவிக்கொண்டே திருமணம் நிகழ்ந்தவற்றை கேட்டுக்கொண்டாள்.

உள்ளுக்குள் அத்தனை ஆச்சர்யம் ஷேஷா ஷக்தி தான் இவர்கள் திருமணத்தை நடத்தியிருப்பது.

எத்தனை நடந்திருந்தும் இனியாவது ஜீவாவும், தென்றலும் நிம்மதியாக இருந்தால் போதும் என்றிருந்தது வானதிக்கு.

“இங்க வினோதினி சிஸ்டர் இவங்கட்ட சொல்லிட்டு போகனுமா வானதி?…” என எல்லாம் எடுத்து வைத்துவிட்டு ஜீவா கேட்க,

“ஒன்னும் தேவை இல்லை. நீ நல்லா இரு. இங்க போய் எதுக்கு சொல்லிட்டு. வினோதினி இப்ப ட்யூட்டில இருப்பாங்க. அப்பறமா அவங்களா பேசினா பார்ப்போம்…” என்று வானதி சொல்லியதும் ஜீவாவின் முகம் மாறிவிட்டது.

“இவங்களுக்கெல்லாம நீ கவலைப்படுவியா? அடி தான் உனக்கு. இப்ப நீ சந்தோஷமா இருக்க வேண்டிய நேரம். இதை மட்டும் பாரு…” என்றவள்,

“இன்னைக்கு எனக்கு உன்னோட வரனும்னு ஆசை தான். ஆனா இப்ப நான் வர முடியாது. காலையில உன்னை எதுக்கு கூட்டிட்டு போறாங்கன்னு தெரியாம பயந்துட்டே இருந்தேன். இப்பதான் நிம்மதியா இருக்கு…”

வானதியின் கைகளை பிடித்துக்கொண்ட ஜீவாவிற்கு தொண்டையடைத்தது. எத்தனை கஷ்டங்களில் அவளும், அவளின் தாயும் தங்களுக்கு உற்ற துணையாக இருந்திருக்கிறார்கள் என நினைக்க கண்கள் பனித்தது.

“உனக்கு தேங்க்ஸ் சொல்ல கூட தோணலை…”

“சொல்லித்தான் பாரேன். நல்ல நாலு அடி தான்…” என்ற வானதி,

“கொஞ்சம் இருங்க, வரேன்…” என சொல்லிவிட்டு தன் வீட்டிற்கு ஓடினாள்.

“ஜீவா ரெடியா?…” என பாலா கேட்க, மூன்று பேக்குகளை எடுத்து வைத்தாள் ஜீவா. தென்றலும் தன்னுடைய ஸ்கூல் பேக்கை கொண்டு வந்து வைக்கவும்,

“புறப்படறோம்…” என்றான் பாலா சோலையம்மாவிடம்.

“ஒரு நிமிஷம், வானதி வந்திருவா…”  எனும் பொழுதே ஒரு தட்டில் வாழைப்பழமும், தம்ளரில் பாலும் என்று வந்துவிட்டாள்.

“எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை. வீட்டுல வேற ஸ்வீட் கூட இல்லை. அதான் இதை கொண்டு வந்தேன்…” என்ற வானதி தாயை பார்த்து,

“ம்மா, இது சரி தான?…” என கேட்டாள்.

“சரியா இருக்குத்தா. குடு…” என்றதும் அவள் நீட்ட ஜீவாவும் பாலாவும் பழத்தை சாப்பிட்டுவிட்டு பாலை ஆளுக்கு பாதியாய் குடித்தார்கள்.

“இந்தா தென்றல் உனக்கு சாக்லேட்…” என்று அவளுக்கும் நீட்டினாள்.

 “வேலைக்கு எப்போ வரதுன்னு நானே கால் பன்றேன் வானதி…” என சொல்லிக்கொண்டு ஜீவா கிளம்பினாள்.

கிளம்பும் முன் சோலையம்மாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க, ஜீவா கூட எதுவுமில்லை. ஆனால் பாலா விழுந்ததில் வெகுவாய் சங்கோஜப்பட்டுவிட்டார்.

“நல்லாருங்க நல்லாருங்க…” என சொல்லி கூச்சத்துடன் பின்னால் சென்றுவிட்டார்.

அனைவருக்கும் அங்கே அத்தனை நிறைவாய், மகிழ்ச்சியாய்  இருந்தது அந்த சிறு நிகழ்வு கூட.

சந்தோஷமாய் சொல்லிக்கொண்டு உடமைகளை எடுத்துக்கொண்டு கிளம்ப ஆங்காங்கே வீட்டில் இருப்பவர்கள் எட்டி பார்த்துகொண்டு இருந்தார்கள்.

கிளம்பி வரும் வழியில் மூவருக்குமான உணவை பாலாவின் வீட்டிற்கு வரும்படி ஆடர் செய்துவிட்டு வீடு வந்து சேர்ந்தார்கள்.

காரை நிறுத்திவிட்டு லக்கேஜை எடுத்த பாலா கதவை திறந்து உள்ளே நுழையும் முன்,

“இருங்க இருங்க. ரெண்டு பேரும் வலதுகாலை எடுத்து வச்சு தான் உள்ள வரனும்னு சோலை ஆன்ட்டி சொல்லிருக்காங்க. ஆரத்தி எடுக்க சொன்னாங்க. எனக்கு தெரியலை…” என்று தென்றல் சொல்ல இருவருக்குமே முகத்தில் மலர்ந்த புன்னகை.

அதுவரை இருந்த அத்தனை மனகிலேசங்களும் மறைந்து சிறு வெட்கம் பூக்க ஒருவரின் கையை ஒருவர் பற்றிக்கொண்டு பாலாவின் இல்லம் நுழைந்தார்கள்.

“அப்பறம் பூஜை ரூம்…” என தென்றல் அடுத்தடுத்து இன்ஸ்ட்ரக்ஷன் தர,

“வாலு, முதல்ல சாப்பிடுவோம். ஃபூட் வந்திருச்சு. போய் ப்ரெஷ் பண்ணிட்டு வா…” என்று அவளின் தலையில் லேசாய் கொட்டி அனுப்பியவன் அறைக்குள் அவர்களின் உடமைகளை கொண்டு வைத்துவிட்டு வந்தான்.

ஹாலில் நின்ற ஜீவா அந்த வீட்டை நின்ற இடத்தில் இருந்தே பார்வையால் வலம் வந்தாள்.

புகுந்த வீடு, கணவனாக மனம் கவர்ந்தவன். வீடு சேர்ந்த நிம்மதியை அந்த நொடி அவள் மனது கொண்டாடியது.  

Advertisement