Advertisement

மின்னல் – 20

         நால்வரும் உள்ளே நுழைந்ததும் பகல் நேர பணியாளர்கள் அங்கே வரவேற்பில் நிற்க பாலாவை பார்த்ததும் ஒன்றும் கேட்கவில்லை.

ஆனால் ஜீவாவையும், தென்றலையும் அவனுடன் பார்த்துவிட்டு அவளின் கழுத்தில் இருக்கும் மாங்கல்யத்தையும் கண்டு திகைப்பாய் நின்றனர்.

“வா ஜீவா…” என அவளின் கை பிடித்து உள்ளே அழைத்து சென்றான் பாலா.

இரண்டாம் தளம் வந்ததுமே நேராக எங்கே செல்கிறான் என்று தெரிந்தது. இவர்கள் சாலாட்சியின் அறையை நெருங்கும் முன் அறையில் இருந்து சரோஜா வெளிப்பட,

“சரோ மேம்….” என நின்றுவிட்டாள் ஜீவா.

“ஹலோ மேம்…” என்று பாலா சொல்லவுமே திகைத்து போனவர் ஜீவாவையும் அந்த சூழ்நிலையையும் கண்டு,

“ஹலோ கிருஷ்ணா ஸார்…” என்று சொல்லிவிட்டு,

“கல்யாணம் ஆகிருச்சா?…”  என்றார் ஜீவாவிடம்.

“இப்ப தான் கொஞ்சம் நேரம் முன்னாடி…” பாலாவே பதில் சொல்ல,

“கங்க்ராட்ஸ் ஸார்…” என்று மட்டும் சொல்லிவிட்டு அவர் நகர்ந்துவிட்டார்.

“என்ன?…” ஜீவாவின் முகத்தை பார்த்து அவன் கேட்க,

“என்ன நினைக்காங்கன்னே தெரியலை. அவங்கக்கிட்ட எதுவும் சொல்லலை நான்…”

“பொறுமையா சொல்லலாம்…” என்றவன் சாலாட்சியின் அறைக்கு சென்று அவரிடம் நலம் விசாரித்துவிட்டு தங்கள் திருமணத்தை பற்றியும் சொல்ல கையசைத்து ஆசிர்வாதம் செய்தார் சாலாட்சி.

“என்னாச்சு? ஏன் பேசலை?…” என ஜீவா அங்கிருந்த நர்ஸிடம் கேட்க,

“வீடியோல பேசும் போது ரொம்ப எமோஷனல் ஆகிட்டாங்க. திரும்ப பிபி ஷூட்அப் ஆகிருச்சு.  அதான் பேச முடியலை…” என்றார் அவர்.

“ஓகே, ரெஸ்ட் எடுக்கட்டும். நாம பத்ரியை பார்த்துட்டு வருவோம்…” என்று அவர்களுடன் கிளம்பினான் பாலா.

அதே தளத்தில் தான் பத்ரியும் அனுமதிக்கப்பட்டிருந்தான். இவர்கள் செல்லும் முன்பே பாலா பார்க்க வந்திருப்பதை கண்டு சரியாக டாக்டர் வெளியே வந்தார்.

“டாக்டர் பத்ரி…” பாலா அவரிடம் கேட்க,

“நீங்க மட்டும் உள்ள வாங்க…” என்று அவர் சொல்லவும்,

“இவர் டாக்டர் சசிகரன்…” பாலா சொல்லவும் அவருக்கு தெரிந்திருந்தது.

“லைவ் ந்யூஸ் பார்த்தேன் கொஞ்சம் முன்னாடி தான்…” என்று சசிகரனை தெரிந்திருந்த விஷயத்தை இந்த வகையில் கூறினார்.

“வெல், இப்போ நாங்க பார்க்கலாம் இல்லையா?…” என்று பாலா சொல்லவும் தலையசைத்து அந்த அறைக்குள் சென்றார்.

“நீங்க ரெண்டுபேரும் இங்கயே இருங்க…” என ஜீவாவையும் தென்றலையும் வெளியே அமர வைத்துவிட்டு உள்ளே சென்றான்.

அவன் சென்ற சிறிது நேரத்தில் மீண்டும் சரோஜா அந்த ப்ளாக்கிற்கு வரவும் அவரை பார்த்த ஜீவா,

“தென்றல், ஒரு நிமிஷம் வந்திடறேன்…”

“எங்கக்கா?…”

“இரு வரேன். சரோ மேமை பார்த்துட்டு வரேன்…”

“நானும் வரேனே? என்னோடவும் அவங்க எதுவும் பேசலை?…”

“ம்ஹூம், இன்னொரு நாள் பேசலாம். சொல்றேன்ல…” என ஜீவா அழுத்தமாய் சொல்லவும்,

“சரி, போய்ட்டு வா…” என அங்கேயே சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

ஜீவாவும் எழுந்து சரோவை நோக்கி வேகமாய் வர போனில் பேசிக்கொண்டே அவர் அந்த அறைக்குள் நுழையும் முன் ஜீவாவும் அவரின் அருகே சென்றுவிட்டாள்.

“மேம்…” என நிற்கவும்,

“சொல்லும்மா…” என்றார் சிறிதும் ஒட்டுதல் இல்லாமல்.

“மேம், கோவமா இருக்கீங்களா?…” என ஜீவா கேட்க,

“எனக்கு என்னம்மா கோவம்? அதெல்லாம் எதுவும் இல்லையே?…” என்றவருக்கு அவளிடம் பேசவே விருப்பமில்லாதது அப்பட்டமாய் தெரிந்தது.

அது தான் சொல்லாமல் திருமணம் செய்துகொண்டதாலோ என ஜீவா நினைத்து வருத்தத்துடன் பார்த்தாள்.

“இந்த கல்யாணம், திடீர்ன்னு அவங்க ஏற்பாடு செஞ்சுட்டாங்க. இல்லைன்னா நிச்சயம் உங்ககிட்ட சொல்லாம எதுவும் நடந்திருக்காது மேம்…”

“இங்க பாரும்மா ஜீவா, இந்த கல்யாணம் எப்படி நடந்திருந்தாலும் நான் எதுவும் செய்ய போறதில்லை? என்னோட ப்ரெண்ட் என்கிட்ட உதவி கேட்டா. அதை வச்சு உன்னை இங்க சேர்த்தேன்…”

“மேம்…”

“அவ்வளோ தான். இதுக்கு மேல நீ என்னை கேட்டு எதையும் செய்யனும்னு நான் நினைக்கலை. இது உன் வாழ்க்கை. உன் விருப்பம். நான் கோவிக்க எதுவுமே இல்லை…”

“இல்ல மேம், நீங்க சரியா பேசாம கூட…”

“உண்மையை உடைச்சே சொல்லிடறேன். நானும் ந்யூஸ் பார்த்தேன். உன்னோட பேக்ரவுண்ட் இப்படின்னு நான் நினைக்கலை. எனக்கு அதை ஜீரணிக்க கொஞ்சம் கஷ்டமாவே இருக்கு. அதான். இப்ப நாம எதுவும் பேச வேண்டாம்…” என்று சொல்லிவிட்டு அவர் அறைக்குள் சென்றார்.

கேட்டவள் அந்த இடத்திலேயே ஆணியடித்ததை போல நின்றுவிட்டாள். அங்கிருந்து நகரமுடியாமல் அவள் நிற்க,

“ஜீவா?…” என்று அவளின் தோளை தொட்டான் பாலா.  

“ஹ்ம்ம்…” என்று திரும்பியவளின் முகம் வெளிறி இருக்க கண்ணீர் குளம் கட்டி நின்றது.

“ஹேய் என்னாச்சு?…” என்றவன் உள்ளறையை பார்க்க அங்கே இவர்களை பார்த்தவாறு இறுக்கத்துடன் சரோஜா நின்றிருந்தார்.

“சரி வா…” என அழைத்து சென்றவனுக்கு புரிந்து போனது.

“பத்ரி உன்னை பார்க்கனும்னு சொன்னான்…” எனவும்,

“எப்படி இருக்காங்க இப்போ?…” என்றாள் தன்னை நிதானத்திற்கு கொண்டு வந்தவளாக.

“அவனுக்கென்ன? சூப்பரா இருக்கான். கத்தி குத்து ஆழமில்லை. அதனால பிரச்சனை இல்லை. நானே பயந்திருந்தேன். இப்போ ஓகே…” என்று அழைத்து சென்றவன் அறைக்குள் தென்றல் சசிகரன் இருவரும் பத்ரியின் அருகே இருந்தார்கள்.

காலிலும், வயிற்றிலும் கட்டு போடப்பட்டிருக்க கையின் சிராய்ப்புகளுக்கும் மருந்திட்டிருந்தனர்.

“ஹாய் அண்ணி…” என்றான் பத்ரி தானாகவே முதலில்.

“ஹாய் எப்படி இருக்கீங்க?…” என கேட்க,

“இதோ இப்படித்தான்…” என்று பத்ரியும் சொல்லி சிரித்தான்.

“மேடம் இன்னும் ஷாக்ல இருந்து வெளில வரலைடா. இல்லன்னா உனக்கும் சேர்த்து பேசுவா…” என்று பாலா தான் சமாளித்தான்.

“பார்த்துக்கோங்க ண்ணா. என்னால தான் உங்க ஆர்க்யூமென்ட் கூட பார்க்க முடியாம போச்சு. ஆனா இதுவும் நல்லது தான்…” பத்ரி சொல்ல,

“நீ முதல்ல உடம்பை தேத்திட்டு வா. அடுத்த கேஸ்ல பார்த்துக்கலாம்…” என்று சொல்லிய பாலா சிறிது நேரம் இருந்துவிட்டு கிளம்ப ஆயத்தமானான்.

“நான் நாளைக்கு வந்து பார்க்கறேன் பத்ரி…” என சசிகரனும் சொல்லிவிட்டு,

“கிளம்பறேன் பாலா. டேக் கேர்…” என்று தென்றல், ஜீவாவிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டுவிட்டான்.

“ஓகே பத்ரி, நானும் போய் இவங்களை வீட்டுல விட்டுட்டு வரேன்…” பாலா சொல்ல,

“ண்ணா, ண்ணா. அதெல்லாம் வேண்டாம். இப்பதான் நீங்க வரதுக்கு முன்னாடி அம்மாட்ட பேசினேன். அம்மா வந்திருவாங்க இப்ப. நான் பார்த்துக்கறேன். நீங்க நாளைக்கு வாங்க. இன்னைக்கு அவங்களோட இருங்க…” என்று பத்ரி சொல்ல,

“ஓஹ், சரி பார்த்துக்கோ. கால் பண்ணு…” என்று சொல்லி கிளம்பியவன் வெளியே வந்து,

“போய் ட்ரெஸ் எடுத்துட்டு வீட்டுக்கு போகலாம்…” என்று சொல்லவும் ஜீவாவும் தலையசைத்தாள்.

அவளுக்கு தெரிந்துவிட்டது இனி குடியிருப்பில் இருக்க முடியாதென. சரோஜாவே இப்படி பேசி இருக்க அங்கிருக்கும் மக்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்று ஓரளவு கணித்துவிட்டாள்.

பாலாவிடம் சொல்லி இன்னும் சில நாட்கள், அல்லது தென்றல் பள்ளி படிப்பை முடிக்கும் வரையேனும் இங்கேயே இருப்பது பற்றி பேசுவதாக இருந்தாள்.

இப்போது பாலாவின் பேச்சும் சரி, சரோஜாவின் பேச்சும் சரி இங்கிருந்து அவனுடன் கிளம்புவது தான் சரி என்று பட்டுவிட்டது.

அதனால் எந்த பேச்சும் இன்றி ஒப்புக்கொண்டு கிளம்பலாம் என்று முடிவுக்கு வந்துவிட்டாள்.

“இப்போதைக்கு அவசரத்துக்கு தேவையான ட்ரெஸ், மத்த திங்க்ஸ் மட்டும் எடுத்து வச்சுக்கோங்க. இன்னொரு நாள் லக்கேஜ் எல்லாம் எடுத்துக்கலாம்…” என வாசலுக்கு வரவும் பாலா சொல்ல ஜீவா தலையசைத்து உள்ளே சென்றாள்.

அதற்குள் இவர்கள் சத்தத்தில் வானதி வந்துவிட சோலையாம்மாவும் அன்றைக்கு விடுமுறை எடுத்திருந்தார்.  

“வானதி அக்கா, அக்காவுக்கு கல்யாணம் ஆகிருச்சு…” என்று தென்றல் சந்தோஷமாக சொல்ல அவர்களை நோக்கி வந்தவளுக்கு பேரதிர்ச்சி.

“ஜீவா…” என உள்ளே எட்டி பார்க்க வானதியை பார்க்கவும் எடுத்து வைக்க சென்றவள் வேகமாய் வந்து அணைத்துக்கொண்டாள்.

“ஜீவா ஹேய் என்னாச்சு?…” என அவளிடம் கேட்க,

“ந்யூஸ் பார்த்தியா?…” ஜீவா.

“ஆமா பார்த்தேன். அதுக்கென்ன இப்போ? எனக்கு உண்மையா ரொம்ப சந்தோஷமா இருக்கு. இவ்வளவு ஸ்ட்ரகிள் நீ பேஸ் பண்ணிருக்க. ஏன் எதையுமே மனசு விட்டு நீ பேசலைன்னு காரணம் எனக்கு புரிஞ்சிருச்சு…” என்றவள் அவளின் தலையை கோதிவிட்டாள்.

“ஈஸி ஜீவா…” என புன்னகைத்தவள் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த மாங்கல்யத்தை பார்த்துவிட்டு,

“எனக்கு இது தான் ஷாக். எப்போ? எப்படி? ஆனா ரொம்ப சந்தோசம் தெரியுமா?…”  என வானதி கட்டிக்கொள்ள,

“நானும்…” என்று தென்றலும் வந்துவிட்டாள் அவர்களுடன்.

Advertisement