Advertisement

“தேங்க்ஸ் ஸார்…” என,

“எதுக்கு?…” ஷேஷாவின் முகத்தில் எப்பொழுதும் போல் சிறு புன்னகை.

“நான் உங்ககிட்ட ஒரு ஹெல்பா தான் கேட்டேன். நீங்க வீட்டுக்கே வர சொல்லுவீங்கன்னு நினைக்கலை…”

“சோ வாட் மேன்?…” என்ற ஷேஷா,

“கொஞ்சம் முன்னாடியே சொல்லியிருக்கலாம்…” என்றதும் பாலாவிற்கு அந்த நிமிடத்தை எப்படி கையாள்வது என்று சற்றே தடுமாற்றமாக இருந்தது.

இறைவனின் பாதத்தில் திருமாங்கல்யம் இருக்க அதனையே ஜீவா பார்த்துக்கொண்டிருப்பதை கண்டதும்,

“ஜீவா ஆர் யூ ஆல்ரைட்?…” என்றாள் ஷக்தி.

“ஹ்ம்ம், மேம். எஸ். நான் ஓகே தான்…” என அவள் சொல்லிய விதத்திலேயே அவளின் பரிதவிப்பு புரிந்தது.

இத்தகைய சூழலை தானும் தானே கடந்து வந்திருந்தோம் என்று ஷக்திக்கு தோன்றாமல் இல்லை.

“உனக்கு சம்மதம் தானே?…” என்றாள் ஷக்தி ஜீவாவிடம்.

“ஷக்தி…” ஷேஷாவின் அழைப்பில்,

“எனக்கு தெரிஞ்சுக்கனும். நான் கேட்கறேன். உங்க யாருக்கும் புரியாது ஜீவாவோட நிலை. ஆனா என்னால ஃபீல் பண்ண முடியும்…” என்று சொல்ல அனைவருக்குமே முகத்திலும் இறுக்கம்.   

ஷேஷாவிற்கோ ‘வருடங்கள் கடந்தாலும் இவள் இன்னும் இதை மறக்கமாட்டாளா?’ என்றிருந்தது.

ஆனாலும் மனைவியின் இந்த அழுத்தமான பேச்சில் அமைதியாக ஜீவாவை பார்த்தான்.

பாலாவின் விருப்பம் எத்தனையோ மாதத்திற்கு முன்பே தெரியும் என்றாலும் ஜீவாவின் விருப்பமின்றி அவளை நெருங்கமாட்டான் பாலா என்பதில் அவனுக்கு நிச்சயம்.

ஜீவாவின் விருப்பமும், பாலாவின் மீதான புரிதலும் இந்த சில நாட்களாக கவனித்து தான் வந்திருந்தான்.

அதனால் ஷக்தி ஜீவாவிடம் கேட்க பதில் என்னவென்று தெரிந்தும் அமைதி காத்தனர் அனைவரும்.

“ஹ்ம்ம் சம்மதம்…” ஜீவா ஷக்தியிடம் சொல்ல,

“அப்போ பாலாவை பிடிச்சிருக்கு. சரியா?…” என கேள்வியை மாற்றி கேட்டாள் ஷக்தி.

“ஷக்தி…” என்றான் ஷேஷா சற்றே அழுத்தத்துடன்.

“நான் எதுவும் தப்பா கேட்டுடலையே பாலா?…” ஷக்தி இப்போது பாலாவிடம் கேட்க,

“நோ மேம். நீங்க எப்பவும் ரைட்…” என்று சிரிப்புடன் அவன் சரண்டர் ஆக ஷேஷா தலையசைப்புடன் மொபைலை எடுத்துக்கொண்டு நகர்ந்தான்.

“ஓஹ்…” என்ற ஷக்தி பவனை பார்க்க அவனும், கிருஷும் தள்ளி சென்றுவிட,

“இப்ப சொல்லு, பாலா மட்டும் தான் இங்க. பாலா கேட்கலாம். நீ சொல்லு…” என்று ஷக்தி கேட்க ஜீவாவிற்கு என்ன இது? என்றானது.

‘இத்தனை ஏற்பாட்டையும் செய்துவிட்டு இப்போது பிடிச்சிருக்கான்னு கேட்காங்க’ என தோன்றியது.

“பிடிச்சிருக்கு…” என்றவள்,

“எனக்கு பிடிக்கும்ன்னு அவங்களுக்கு தெரியும். அதான் ஏற்பாடு பண்ண சொல்லி என்னையும் அழைச்சிட்டு வந்திருக்காங்க…” என்று சொல்லிவிட்டாள்.

“குட்…” என்ற ஷக்தி,

“பார்த்துக்கோ பாலா. இனி தான் கவனம்…” என்று சொல்லவும் ஜீவாவின் முகம் கலவரமானது.

“ஹேய் உடனே டென்ஷன் ஆகாத. பார்த்துக்கோன்னு சொன்னது வேற ரீசன். நீ பயந்துக்காத…” என்றாள் ஷக்தி.

“ஹ்ம்ம்…” என தலையசைக்க,

“கங்க்ராட்ஸ்…” என்றாள் ஷக்தி பொதுவாக இருவருக்கும்.

“எவ்ரித்திங் ஓகே? ஆரம்பிக்கலாமா?…” என்று ஷேஷா வந்துவிட்டான்.

அவனின் விரலை பிடித்தபடி தத்தி தத்தி நடந்து வந்துகொண்டிருந்தான் குழந்தை சிவேஷ் கங்காதரன். ஷேஷா, ஷக்தி தம்பதிகளின் புதல்வன்.

“என்னோட சன்…” என ஜீவாவிடம் ஷக்தி சொல்ல குழந்தையை பார்த்ததும் முகத்தில் ஒரு மலர்ச்சி.

அள்ளி கொஞ்சவேண்டும் போல் தோன்ற, அழைப்போமா என பாலாவிடம் திரும்பினாள் ஜீவா.

“ஹாய் குட்டி…” என தென்றல் குழந்தைக்கு கை காட்ட குழந்தையும் தனது கையை ஆட்டி சிரித்தது.

“கூப்பிடு, வருவான்….” ஷக்தி சொல்ல ஜீவாவிற்கு தயக்கம் தான் இன்னும்.

சகஜமாய் அவர்களிடம் பேசவும் முடியாமல் அவ்விடத்தில் ஒன்றவும் முடியாமல் இருக்க,

“பாலா…” என்ற ஷேஷாவின் குரலில் பாலா அவனிடம் திரும்பினான்.

“டைம் ஆகிடுச்சு. இதுவே ஈவ்னிங் ஆக போகுது. முதல்ல கல்யாணத்தை முடிப்போம்…” ஷக்தி ஜீவாவை பாலாவின் அருகே நிற்க சொன்னாள்.

“ரெண்டுபேருக்கு பிடிச்சா போதும், எந்த நேரம் கல்யாணம்ன்றது அடுத்து தான்…” என்ற ஷேஷா பாலாவிடம் கண்ணை காட்ட இறைவனை வணங்கிவிட்டு திருமாங்கல்யத்தை எடுத்து ஜீவாவின் கழுத்தில் அணிவித்து முடிச்சிட்டான்.  

பட்டுடைகள், அலங்காரங்கள், ஆடம்பரம், மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள், ஊர் உறவுகள் என எதுவுமற்ற அந்த எளிமையான திருமணம் கூட மனதிற்கு நிறைவாகவே இருந்தது.

அனைவரும் தங்களின் கைகளை தட்டி மேளங்களாய் ஓசை எழுப்பி மலர்களை தூவி அவர்களை ஆசிர்வதித்தனர். வாழ்த்து சொல்லி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

“ஜீவா?…” பாலாவின் அழைப்பு கேட்கும் நிலையில் அவள் இல்லை.

வாழ்க்கையில் இனி எதற்கும் இடமில்லை என்றிருந்தவள்.  தென்றலை தவிர வேறு எந்த உறவுகளும் இன்றி வாழ்ந்திருந்தவள். எந்த நிமிடம் தன்னுடைய கைக்கு விலங்கு பூட்டப்படுமோ என்று நிம்மதியின்றி கழித்து வந்தவள்.

திருமணம் என்ற ஒரு உணர்வுக்கு தனது வாழ்வில் இடமில்லை என்று மனதை புதைத்து வைத்தவளின் வாழ்க்கையில் இந்நாள்.

பிறக்கும் பொழுது உறவுகள் யாருமற்று குப்பையில் வீசி எறியப்பட்டவள் தான் அவள். இன்று தனக்கென ஒரு குடும்பம்.

மகிழ்ச்சியில் மனது விம்மியது. அத்தனை சஞ்சலங்களையும் ஒதுக்கிவைத்து அந்த நொடியை அனுபவித்தாள். புன்னகையுடன் பாலாவை ஏறிட்டாள்.

“என்ன?…” என்றவனிடம் தலையசைத்து ஒன்றுமில்லை என்று சொன்னாலும் முகத்தில் அத்தனை உணர்வுகள்.

அந்த நொடி வளர்த்த தாயை மனது தேடியது. தங்களை பிள்ளைகளாக சிறப்புடன் வளர்த்தவள் இழப்பு இன்றளவும் பாதித்துக்கொண்டு தான் இருந்தது.

“ஜீவா, ரிலாக்ஸ்…” என்று அவளின் கையை பிடித்து அழுத்தினான்.

“ஹ்ம்ம், ஓகே ஓகே…” என்று தலையசைத்தவள் கண்ணீரை உள்ளிழுத்து தன்னை நிலைப்படுத்தினாள்.

அனைவரும் வாழ்த்துக்களை தெரிவிக்க இருவரும் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார்கள்.

“சீக்கிரம் மேரேஜை ரிஜிஸ்டர் பண்ணிடலாம்….” என்று சொல்லிய ஷேஷா,

“ஜாயின் தி க்ளப் பாலா…” என்றான்.

“ஸார்…” என சிரித்தவன் முகம் மலர்ந்து இருந்தது.

“எங்களை பிளஸ் பண்ணுங்க…” என்ற பாலாவின் கையை பிடித்துக்கொண்ட ஷேஷா,

“சந்தோஷமா இருங்க…” என்று சொல்லவும்,

“ஹ்ம்ம், எப்பவும் ஷார்ட் அன்ட் க்ரிஸ்பி…” என்று ஷக்தி ஷேஷாவை கிண்டல் பேசினாள்.

“ஓகே, உள்ள போகலாம். வாங்க. இப்போ லஞ்ச் டைம். சாப்பிடலாம்…” ஷக்தி அழைக்க,

“இல்லை மேம், பத்ரியை இன்னும் போய் பார்க்கலை. முதல்ல அவனை போய் பார்க்கனும்…” பாலா தனது மணிக்கட்டில் இருந்த வாட்சை பார்த்தான்.

“பத்ரி சேஃப். இந்த வீக்லையே க்யூர் ஆகிருவான். நோ வொர்ரி…” என்ற ஷேஷா இன்னும் ஜீவா எதுவும் பேசாமல் இருப்பதை பார்த்துவிட்டு,

“ஓகே, நீ கிளம்பு. ப்ரீ ஆனதும் ஒரு நாள் லஞ்ச்க்கு வாங்க…” என சொல்லவும் ஷக்தி அவனை என்னவென்று பார்க்க அவன் ஜீவன்யாவை காண்பிக்கவும் அவளும் தலையசைத்தாள்.

“ஓகே ஸார், பை…” என்றவன் பவன் மற்றும் கிருஷிடம் சொல்லிகொண்டு கிளம்பினான்.

“அப்போ நானும் கிளம்பறேன். கொஞ்சம் வேலை இருக்கு…” சசிகரன் தானும் சொல்லி கிளம்ப,

“நாளைக்கு ட்ரஸ்ட்க்கு வாங்க சசிகரன். பேசலாம்…” என்றான் ஷேஷா அவனிடத்தில்.

“ஓகே ஸார்…” என அவன் கிளம்பிவிட,

“நான் ட்ராப் பன்றேன்டா. தனியா எங்க போற?…”

“ஒரு ப்ரெண்டை பார்க்க போறேன்…”

“இப்ப எதுவும் வேண்டாம். பத்ரியை பார்க்க போகலாம்…” என்றதும் சரி என்று உடன் சென்றான்.

ஜீவாவும் ஷக்தியிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினாள். கிளம்பும் முன் அவர்களுக்கு ஒரு பரிசை நீட்டிய ஷக்தி,

“திடீர்ன்னு மேரேஜ்ன்னு சொல்லிட்டாங்க. இல்லன்னா ட்ரெஸ், அக்ஸசரீஸ் எல்லாம் அரேஞ்ச பண்ணிருப்போம். கோர்ட்ல என்ன நடக்குதுன்னு டென்ஷன் வேற…”  என சொல்ல,

“இதுவே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மேம். தேங்க்ஸ்…” என்றாள் ஜீவா.

“தேங்க்ஸ் இருக்கட்டும். எப்போ எந்த விஷயம்னாலும் நீ என்கிட்டே ஷேர் பண்ணலாம்…” என்ற ஷக்தி,

“என்னவோ இன்னும் உன் முகத்துல பயம் இருக்கே. இதை எல்லாம் க்ராஸ் பண்ணி வா ஜீவா. பாலா இருக்கும் போது உன் பயத்துக்கு அவசியமில்லை…” என்றாள்.

“ஓகே மேம்…” என்ற ஜீவா,

“நாங்க கிளம்பறோம்…” என சொல்ல தென்றலும் அவளிடத்தில் வந்து சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டாள்.

Advertisement