Advertisement

மின்னல் – 19

            இன்னும் யோசனையுடனே தான் ஜீவா நின்றிருந்தாள். சம்மதம், சம்மதமில்லை என்று எந்தவித வார்த்தைகளும் அவளின் இதழ்களில் இருந்து அவிழவில்லை.

பொறுமையாக இருந்தான் பாலா அவளாக பேசட்டும், சொல்லட்டும் என்று. தானாக இதற்கு மேலும் நெருக்க கூடாதென்று நினைத்தாலும் இல்லை என்றுவிட்டால் அவளை விட்டு இந்த நிலையில் தன்னால் இருக்கமுடியும் என தோன்றவில்லை.

ஆனாலும் அத்தனை நம்பிக்கை, இதனை மறுக்கமாட்டாள் என்பதில். அதனால் அமைதியுடன் நின்றான்.

“அக்கா அதான் கேட்கறாங்க இல்ல. பதில் சொல்லு. ஏன் இப்படி நிக்கிற?…” தென்றல் ஜீவாவை பிடித்து உலுக்க அவளின் குரலே சொல்லியது அவளுக்கு இதில் சம்மதம் என்று.

பெரிதாய் பாலாவின் அதிகாரத்தையும், அதட்டலையும் தான் பிடிக்காதென்றாலும் அவன் மேல் தவறான எண்ணம் என எதுவும் இல்லை.

முந்தைய நாள் தங்களிடம் பேசும் பொழுது இதனையும் அவன் வலியுறுத்தி இருந்தான் தான் அவர்களுக்கு இனி யார் என்பதை விட அவர்கள் இனி தனக்கு எத்தனை முக்கியம் என்பதை பேசியிருந்தான்.

அவன் மீதான அபிப்ராயம் இப்போது இன்னும் உரிமையாய் கூடியது. ஏற்கனவே வானதியின் மூலம் பாலாவின் அத்தனை விஷயங்களும் அறிந்திருந்த ஒன்று தான்.

அதிலும் இன்று அத்தனைபேரின் மத்தியில் தன் மனைவியாக போகிறவள் என்று பாலா சொல்லியது அனைத்தையும் விட நிம்மதியை தந்தது. இது போதுமே என தோன்றியது.

சிறு பெண்ணாக இருந்தாலும், வாழ்க்கை அவளுக்கு நிறையவே கற்று தந்திருந்தது. எப்போதும் அவளின் எதிர்காலம் குறித்தே பேசும் அக்காவின் வாழ்க்கைக்கு நல்ல விடியல்.

என்றோ நடக்க போவது இன்றே நடக்கட்டும் என்று தான தோன்றியது. மனது முழுக்க எதிர்பார்ப்புடன்,

“சரின்னு சொல்லுக்கா…” என்றாள் தென்றல்.

“ஷ் அவளை யோசிக்க விடு தென்றல்…” என்றான் பாலா.

“அதை நீங்க இங்க கூட்டிட்டு வந்துட்டு சொல்ல கூடாது. யோசிக்க நேரம் குடுக்கறவங்க கல்யாணம்னு இப்படி கூட்டிட்டு வரமாட்டாங்க…” தென்றல் சொல்லவும் அவளை முறைத்தான்,

“ஜீவா வேண்டாம்ன்னு சொல்ல மாட்டா…” பாலா உறுதியாய் சொன்னான்.

“அவ்வளோ தைரியம்? ஹ்ம்ம்….” என தென்றல் இடுப்பில் கை வைத்து கோபமில்லா முறைப்புடன் பார்க்க,

“தென்றல், நீ வா அவங்க முடிவு பண்ணட்டும்…” என்றான் சசிகரன்.

அவன் அழைத்ததும் தென்றல் பாலாவை தான் பார்த்தாள் போகவா வேண்டாமா என்பதை போல.

சசிகரனை முதல்நாள் தான் தென்றல் பார்த்திருந்தாள் இந்த பிரச்சனையை ஒட்டி வழக்கு சம்மந்தமாக அவனையும் வைத்து தான் பாலா பேசியிருக்க அவன் மீது ஒரு அபிமானம் கூட.

பரவாயில்லை, பெற்றவரே தவறென்றாலும் தண்டனை வாங்கிக்கொடுக்க தயாராக இருந்தவன், இப்போது அதனை நிறைவேற்றியும் இருக்க அவன் மீது மரியாதையும் வந்தது.

“ஹ்ம்ம், போ…” என்று பாலா சொல்லவும்,

“ஏன் பாலாவை கேட்காம வரமாட்டியோ?…” என்றான் சசிகரன்.  

“அப்படின்னு இல்லை. சும்மா கேட்கனும்னு தோணுச்சு. அதான் டாக்டர்…”

“டாக்டர் வேண்டாம். அண்ணான்னே கூப்பிடு…” என்று புன்னகைத்தான் சசிகரன்.

இருவரும் பேசிக்கொண்டே தள்ளி வந்து நிற்க ஷக்தியும், ஷேஷாவும் அவர்களுக்குள் பேசிக்கொண்டு அமர்ந்திருந்தார்கள் இவர்கள் தானாக பேசி வரட்டும் என்று.

“ஜீவா…” மீண்டும் பாலா அழைக்கவும்,

“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. குழப்பமா இருக்கு…” என்றாள் உள்மனதை வெளிப்படையாக.

“என்ன குழப்பம்?…”

“இப்போ இந்த கல்யாணம், அதுவும் உடனே? இன்னைக்கு நான் இருக்கிற சூழ்நிலை. தென்றல்…” ஒவ்வொரு வார்த்தைகளும் ஒன்றுகொன்று முடிவில்லாமல் அவளின் பதட்டத்தை காட்டியது.

“ஓஹ், ஓகே அப்போ வேண்டாம்ன்னா ட்ராப் பண்ணிடலாம்…” என்று உடனே அவன் சொல்லவும் திடுக்கிட்டு பார்த்தாள்.

“என்ன? ஓகே தானே?…”

“கோபமா?…”

“இல்லையே? இதுல என்ன கோவம்? எனக்கு இது இன்னைக்கு நடக்கனும்னு தோணுச்சு. அதான் உன்னை கேட்காமலே உனக்கும் சேர்த்து முடிவு பண்ணினேன். காலையில இருந்த டென்ஷன்ல உன்னோட மனசை நான் யோசிக்கலை…”

“நான் வேண்டாம்ன்னு சொல்லலை. ஆனா…”

“ஓகே ஜீவா, இப்போ வேண்டாம் அதானே? ஈஸி…” என்றவன்,

“ஓகே, கிளம்பலாம்…” என்றான்.

“ஹ்ம்ம், இல்ல. கொஞ்சம் இருங்களேன்…” என்றாள் சற்று கோபத்துடன் இப்படி கிளம்புவதையும் அவன் உடனே செய்கிறானே என.

தூரத்தில் இருந்தவர்களை எல்லாம் வேறு கவனித்துவிட்டு தென்றலையும் பார்த்துவிட்டு பாலாவிடம் திரும்ப,

“அவங்க இருக்காங்கன்னு எதுவும் நீ நினைக்க தேவை இல்லை. தப்பு தான். உன்கிட்ட பேசிட்டு இன்னும் கொஞ்சம் நல்ல மூட்ல இருக்கும் போது கல்யாணம் பத்தி பேசியிருக்கலாம். ஆனா எனக்கு இப்போ பன்றது சரின்னு தோணிருச்சு…”

“நான் தப்புன்னு சொல்லவே இல்லையே?…” ஜீவா அவனின் பேச்சை நியாயப்படுத்தவும் முயன்றாள்.

“இங்க பார் ஜீவா, எனக்கு இந்த சூழ்நிலையில நான் உன்னோட இருக்கனும்னு என் மனசுக்கு பட்டுட்டே இருந்துச்சு. அதான் முடிவெடுத்து இங்க சொன்னேன்…”

“ஹ்ம்ம்…”

“உன்கிட்ட சொல்ல நேரமில்லை. இன்னைக்கு காலையில இருந்து என்ன டென்ஷன்னு உனக்கே தெரியும். அதான் உன்கிட்ட இது விஷயமா பேசவும் முடியலை…”

“இருக்கட்டும்…”

“என்ன இருக்கட்டும்ன்னு சாதாரணமா சொல்ற?…” என்ற பாலா அவளின் கையை எடுத்து தனது கைகளுக்குள் வைத்துக்கொண்டான்.

“எனக்கு தெரியும் உனக்கு இதுல எந்த அப்ஜெக்ஷனும் இருக்காதுன்னு. ஆனா உடனேன்னதும் தான் உன்னால முடியலை. ஜீவா நம்ம மனசு நெருக்கமானதுக்கு பின்னால யோசிக்கிறதுல அர்த்தமில்லைன்னு எனக்கு தோணுச்சு…”

அவன் பேச பேச பார்த்துக்கொண்டிருந்தவளின் முகத்தில் லேசாய் புன்னகை கீற்று.

வார்த்தைகளை கொண்டு எப்படி மடக்குகிறான் இவன் என்று சற்றே முறைப்புடன் பார்க்க.

“சரி, அப்போ நாம கிளம்புவோம்…” என கார் கதவை திறந்தவன்,

“நீ உள்ள இரு. நான் போய் அவங்கட்ட சொல்லிட்டு வரேன்…” என்று திரும்ப ஜீவா அவனின் தோளை பிடித்து திருப்பினாள்.

“எல்லாமே அவசரம் தானா? என்னை பேசவே விடமாட்டீங்களா?…” என,

“நீ தான் சைலண்ட்டா இருத்தியே. மௌனம் கல்யாணத்துக்கு மட்டும் சம்மதம்ன்னு எடுத்துக்க கூடாது. நோ அப்படின்றதுக்கும் தான். எவ்வளோ பார்த்திருப்போம்…” என சொல்லி நகர்ந்தான்.

“அச்சோ நில்லுங்க, உங்களோட…” என்று தன் கையை பிசைந்தவள்,

“சரி, எனக்கு ஓகே…” என்றாள்.

“என்ன ஓகே?…” சீண்டும் விதமாய் பாலா கேட்க,

“எல்லாத்துக்கும் தான். அதான் முடிவு பண்ணிட்டீங்களே? வேண்டாம்ன்னு சொல்ல மனசு இடம் கொடுக்கலை…” என்றவள் அங்கே நிற்பவர்களை பார்த்தாள்.

“தென்றல்…” என்றாள் தவிப்புடன்.

“இனி அவ நம்ம பொறுப்பு. இது தான் நம்ம குடும்பம்…”

“பாலா…”

“யாருன்னு தெரியாமலே ஒருத்தரை அறியாம ஒருத்தர் விரும்ப ஆரம்பிச்சோம். விருப்பத்தை சொல்லிக்காமலே இப்ப கல்யாணம் செஞ்சுக்க போறோம். ஆனா எதுவும் மனசுக்கு இஷ்டமில்லாம நடக்கலையே ஜீவா…”

“நம்பறேன்…”

“சூர்…”

“எஸ்…” என்றாள் கண்ணீருடன் மின்னும் விழிகளுடன்.

“ஹேய் போதும், எனக்கே நான் பேசறது இந்த செண்டிமெண்ட் எல்லாம் சிரிப்பு வருது. திரும்ப திரும்ப இப்படி பேச வைக்காத…” என்றான் அவளின் தலையை தட்டி.

“வா, ரொம்ப நேரம் ஆகிருச்சு…” என அழைத்து சென்றவன் தென்றல் அருகே சென்றதும்,

“உன்னோட அக்கா ஓகே சொல்லிட்டா…” என்றான் அவளிடத்தில்.

“அவ ஓகே சொல்லுவான்னு எனக்கு தான் தெரியுமே…” என்று அவளின் கைகளை பிடித்துக்கொண்டவள் இன்னுமே பாலாவிடம் உரிமையுடன் பேசாது தள்ளி இருப்பதை போலவே ஒரு தோற்றம்.

“ரொம்ப சந்தோஷம்க்கா. எனக்கு வேற என்ன சொல்றதுன்னு தெரியலை…” என்றவள் கண்ணீருடன் ஜீவாவை அணைத்துக்கொண்டாள்.

“கிருஷ்ணா…” பவன் அழைக்கவும் திரும்பி பார்த்தவன் அங்கே சென்றான் ஜீவா, தென்றலுடன்.

“வணக்கம்…” என ஜீவா பாலாவின் கண்ஜாடையில் ஆதிஷேஷனையும், ஷக்தியையும் பார்த்து சொல்ல,

“ஹாய்…” என்ற ஷக்தி,

“நார்மலா இரு ஜீவா. இவன் சொன்னன்னு இந்த பார்மாலிட்டீஸ் வேண்டாம்…” என்றாள்.

“எங்க மேம் நம்ம லிட்டில் சேம்ப்? நீங்க மட்டும் தான் இருக்கீங்க?…” என பாலா கேட்க,

“வருவான்…” என ஷக்தி சொல்லவும் பாலா ஷேஷாவிடம் திரும்பினான்.

Advertisement