Advertisement

மின்னல் – 18

             சசிகரன் உள்ளே நுழைந்ததும் மயூரன் அவனை பார்த்துவிட்டு அரங்கநாதனை ஆத்திரத்துடன் பார்த்தார்.

இப்படி எதுவும் என்றும் நடந்துவிட கூடாதென்று தானே இந்த கேஸ் முடியும்  முன் சம்பந்தம் பேசி அவர்களை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது.

இப்போது சசிகரன் எப்படி? கொஞ்சமும் அவன் மீது சந்தேகம் வரவில்லையே? என நினைத்து கொலைவெறி பொங்க அவனை பார்த்தார்.

சசிகரன் நேராக வந்து கூண்டின் அருகே நிற்கவும் அரங்கநாதனை இறங்க சொல்ல அதில் ஏறி நின்றுவிட்டான்.

“நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறில்லை…” என்று அரங்கநாதனை பார்த்துவிட்டு அவன் சொல்லியதில் இருந்தே அவனின் தார்மீக கோபமும், மனஉளைச்சலும் புரிந்தது.

“மிஸ்டர் சசிகரன், நேரடியாவே விஷயத்துக்கு வந்திடறேன். உங்கக்கிட்ட சுத்தி வளைச்சு பேசவேண்டியதில்லைன்னு தெரியும்…”

“நானே எனக்கு தெரிஞ்ச உண்மையை சொல்லிடறேன்…” என்று சசிகரன் பாலாவிடம் சொல்லிவிட்டு நீதிபதியை பார்த்தான்.

“வணக்கம் யுவர் ஹானர். நான் சசிகரன். இங்கே நின்னுட்டிருக்கிற அரங்கநாதனுடைய பையன். நான் ஒரு டாக்டர். இதுவரைக்கும் திருச்சில ஸ்பெஷல் கேர் அப்படின்ற ஹாஸ்பிட்டல்ல தான் வொர்க் பண்ணேன்…”

“வாட் யூ மீன் மிஸ்டர் சசிகரன்? பாலமுரளிகிருஷ்ணா உங்களை அந்த ஹாஸ்பிட்டல் ஷேர் பெர்சன்னு சொல்லிருந்தான்களே? நீங்க வொர்க் பண்ணேன்னு சொல்லறீங்க?…”

“எஸ், அது எனக்கு தெரியவந்தது சில நாட்களுக்கு, இல்லை மாதங்கள்னும் சொல்லலாம். என்னோட அப்பா விருப்பப்படி தான் நான் அங்க போய் ஜாயின் பண்ணினேன். அப்போ எனக்கு தெரியாது அந்த ஹாஸ்பிட்டல்ல நானும் ஒரு ஷேர் பெர்சன் அப்படின்றது…” என்றான்.

“எனக்கு தெரியாமலே கையெழுத்து வாங்கி என்னை நுழைச்சிருக்காங்க. அதோட எனக்கே தெரியாம அங்க நிறைய இல்லீகல் ஆக்ட்டிவிட்டீஸ் நடந்திருக்கு. அதுக்கு ஒரு மருத்துவனா நான் வெக்கப்படறேன்…” என்றவன் பாலாவை பார்க்க அவன் கண் அமர்த்திவிட்டு தானே தொடங்கினான்.

“மை லார்ட், ஒரு விசாரணையின் பெயர்ல தான் நான் அந்த ஹாஸ்பிட்டல் பத்தி விசாரிக்க வேண்டியதாக இருந்தது. அதன் மூலமா தான் அங்க நடந்த பயங்கரமான விஷயங்கள் எங்களுக்கு தெரிய வந்தது…” என்ற பாலா,

“சில வருஷங்களுக்கு முன் ஆரம்பிச்ச ஹாஸ்பிட்டல் தான் ஸ்பெஷல் கேர் ஹாஸ்பிட்டல். மயூரனோட இன்னொரு இல்லீகல் பிஸ்னஸ் ஆர்கன்ஸ் க்ரைம். அதுக்கு ஆரம்பத்துல இருந்தே மறைமுகமா சட்ட சிக்கல்களை கவனிச்சுட்டு வந்தது அரங்கநாதன்…”  

“பெரிதாய் பேச படாத ஹாஸ்பிட்டலா இருந்தாலும் அங்கே இந்த மாதிரி விஷயங்களுக்கு அதை யூஸ் பண்ணிட்டு இருந்தாங்க. அவங்களுக்கு தேவை மனித உடலுறுப்புகள். அதை வச்சு பிஸ்னஸ் பண்ணிட்டு இருந்திருக்காங்க.  எந்தவித சந்தேகமும் இல்லாத அளவுக்கு அவங்களோட இந்த க்ரைம் யாருக்கும் தெரியாதளவுல இருந்தது….”

“இதுல இன்னொரு முக்கியமான ஒருத்தர் அந்த ஹாஸ்பிட்டலோட  இன்னொரு ஷேர் பெர்சன் டாக்டர் செழியன். அவரோட மனைவி சுபலேகா…” என்றான்.

“இந்த விஷயம் இத்தனை வருஷமா நடந்ததுன்னா ஏன் யாருமே கம்ப்ளைன்ட் குடுக்கலை? இப்போ அவங்க எங்க?…”என நீதிபதி கேட்க,

“அவங்க இப்போ உயிரோட இல்லை மை லார்ட். ஒரு ஆக்ஸிட்டென்ட்ல அவங்க ரெண்டுபேருமே இறந்துட்டாங்க…” என்றதும் நீதிபதிக்கு இன்னும் குழப்பம்.

“கிருஷ்ணா நீங்க இன்னும் கொஞ்சம் தெளிவா சொன்னா நல்லா இருக்கும்…” என்று அவர் சொல்லவும் தலையசைத்தான்.

அது ஒரு தனி வழக்காக இருந்தால் இத்தனை யோசித்திருக்கமாட்டான். அதிலும் அவன் பேச போவது ஜீவன்யா, தென்றல் குறித்த வழக்காகிற்றே. மனது தடுமாறியது.

“இவன் எப்படி பேசுவான்? இது ஆக்ஸிடென்ட் இல்லை. கொலை. டாக்டர் செழியனை கொலை செஞ்சது அவனோட பொண்ணு. அதுக்கான எவிடன்ஸ் எங்கக்கிட்ட இருக்கு. ஆமா, செழியன் எங்களோட பாட்னர் தான். அவரை வச்சு தான் இந்த க்ரைம் நாங்க செஞ்சோம்…”

கொஞ்சமும் அச்சமின்றி பேசினார் மயூரன். இனி என்ன ஆனால் என்ன? என்பதாக இருந்தது மயூரனின் பேச்சு. அதுவே குற்றத்தை ஒப்புக்கொண்டதாகிற்று.

அரங்கனாதனோ மகனையே பார்த்துகொண்டு நின்றார். இத்தனை நாட்கள் கட்டிக்காத்த மரியாதை, புகழ் எல்லாம் சென்று இன்று மகனே தன்னை காட்டிக்கொடுக்க வந்துவிட்டதை ஏற்க முடியவில்லை.

“கிருஷ்ணா?…” என நீதிபதி கேள்வியாக பார்க்க,

“நானே தெளிவா சொல்றேன் மை லார்ட்…” என்றவன்,

“கொலை தான். ஆனா அதை செழியனோட பொண்ணு செய்யலை. அதையும் என்னால நிரூபிக்க முடியும்…” என இன்னொரு கோப்பையும் ஒரு பென்ட்ரைவ்வையும் எடுத்துக்கொண்டு வந்து நின்றான்.

“செழியன், சுபலேகா ரெண்டுபேரும் டாக்டர்ஸ். படிக்கிற காலத்தில இருந்தே காதலர்கள். திருமணமும் செஞ்சிக்கிட்டு வாழ்ந்து வந்தவங்களுக்கு குழந்தை இல்லாததால இந்த இரண்டு பெண்களையும் தத்து எடுத்துக்கிட்டாங்க….”

“ஆரம்பத்துல எல்லாம் சரியா தான் போய்ட்டிருக்க தன்னோட படிச்சவங்க எல்லாம் வசதியா இருக்க தான் மட்டும் இப்படியே இருக்கோமேன்னு வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு செழியன் வழிமாற ஆரம்பிச்சார். அதற்கு அவரோட சகவாச தோஷம்ன்னும் சொல்லலாம்….”

“ஒரு பார்ட்டில இன்னொரு நண்பன் மூலமா மயூரனும், அரங்கநாதனும் அறிமுகமாக அவங்க செழியனோட ஆசையை பயன்படுத்திக்கிட்டாங்க. தனியா மயூரன் ஹாஸ்பிட்டல் ஆரம்பிச்சு குடுத்து அதற்கு சைலன்ட் பாட்னர்ஸா தங்களையும் சேர்த்தாச்சு…”  

“செழியன் மனைவி சுபலேகாவுக்கு இந்த விஷயங்கள் எதுவும் தெரியப்படலை. அவரோட கண்ணை மறைச்சே இதை எல்லாம் கடந்த சில வருஷமா செஞ்சிட்டு வந்திருக்காங்க. பொண்ணுங்களும் வளர வளர பணத்தோட வரவு அதிகமாக மொத்தமா செழியன் பணத்தை மட்டுமே தேட ஆரம்பிச்சுட்டார்…”

“விஷயம் தெரியாம இருக்க அந்த ஏரியா ஸ்டேஷனுக்கு அதற்கு முன்பிருந்தே லஞ்சங்கள் கொள்ளை கொள்ளையா தரப்பட்டு வாயடைக்கப்பட்டிருக்கு. சின்ன பிசிறல் கூட இல்லை. அத்தனை தெளிவா இந்த குற்றங்களை செஞ்சிருக்காங்க…”

“நாளடைவில் அவரோட குற்றங்கள் கிடைச்ச சந்தர்ப்பங்கள்ல செய்யற தப்பு போய், குற்றம் செய்யன்னே தானே சந்தர்ப்பங்களை உருவாக்க ஆரம்பிச்சுட்டார்.  இதுல கொட்டின பணம் அவரை, அரங்கநாதனை, மயூரனை இன்னும் கொடூரமா மாத்திருச்சு…”

“செழியன் இன்னும் எல்லை கடந்து குடும்பம், பிள்ளைகள்ன்னு கொஞ்சமும் மனம் இறங்காம போனதுக்கான மிகப்பெரிய சாட்சி மகளா வளர்த்த பெண்ணையே பணமா பார்க்க ஆரம்பிச்சிட்டார். ரேர் க்ரூப் பிளாட் ஜீவன்யாவோடது….”

“அந்த பொண்ணோட இதயத்துக்கு மிகப்பெரிய விலை பேசின நேரம் தான் இந்த அசம்பாவிதம் நடந்தது. அந்த ஆக்சிஸிட்டேன்ட்ல தான் சுபலேகா, செழியன் மற்றும் இன்னொருவரின் மரணமும் அந்த வீட்டில் நிகழ்ந்தது…”

“அந்த கொலைகளையுமே செஞ்சு தன்னையும் மாய்ச்சுக்கிட்டாங்க டாக்டர் சுபலேகா. அதுக்கான ஆதாரம் அந்த பென்ட்ரைவ் இருக்கு மை லார்ட்..” என சொல்லவும் அதனை போட்டு பார்த்தார் நீதிபதி.

இரு பெண்கள் ஆண்கள் இருவரின் குடிபோதையில் தன்னை காத்துக்கொள்ள போராட அப்பெண்களை காக்க சுபலேகா போராடினார்.

ஒருகட்டத்தில் செழியனை அடித்த ஜீவன்யாவையும், தென்றலையும் கைபிடித்து கீழே அழைத்து செல்லும் காட்சியும் சுபலேகா மட்டும் வந்து மீண்டும் அந்த ஆண்கள் இருவரையும் அடிப்பது தெளிவாக தெரிந்தது.

அதிலும் செழியனுடன் இருந்தவன் தென்றலிடம் நடந்துகொண்ட முறையை கண்டதுமே நீதிபதியாக இருந்தாலும் தானும் ஒரு பெண்ணை பெற்றவராக உள்ள கொதித்து போனது.

ஒரு தகப்பனாக ஜீவன்யா கொலையே செய்திருந்தாலும் அதில் தவறென்ன என்பதை போல தான் தோன்றிவிட்டது.

“பொண்ணுன்னா? என்னவோ நம்ம ரத்தமா? எடுத்து தான வளத்தோம்? இப்ப என்ன?…” என இகழ்ச்சியாக பேசிய செழியனை அறைந்து தள்ள வேண்டும் என்றே எண்ணம் வந்துவிட்டது.

‘அப்பா அப்பா’ என்று செழியனின் நண்பனிடமிருந்து அலறிய தென்றலின் மேல் இரக்கமில்லாமல், மனைவியையும், ஜீவன்யாவையும் தடுக்க நினைத்தது அதற்கும் மேல் உட்சகட்ட அருவருப்பு.

குடித்ததினால் வலுவின்றி இருந்த செழியனை கீழே தள்ளிய ஜீவன்யா ஆத்திரம் தீருமட்டும் அடித்து நொறுக்க மயங்கி சரிந்த மகளை பிடித்த சுபலேகா ஜீவன்யாவை அழைத்து தென்றலுடன் கீழே சென்றதும் மீண்டும் வந்து அவரும் அடித்து போட்டதும் தெரிந்தது.

சற்று நேரத்தில் அவருமே அங்கே இருக்கவில்லை. வெளியேறியதை போல தெரிய வீடு மொத்தமும் சட்டென பற்றி எரியும் காட்சிகள் தெரிந்து உடனே திரை புகையுடன் அணைந்து போனது.

“இப்ப உங்களுக்கு இதை பார்த்ததும் விஷயம் புரிஞ்சிருக்கும் மை லார்ட். அந்த பொண்ணுங்களை இந்த காட்சியை பாதியா கத்தரித்து கொலை செய்ததாக காண்பித்து மிரட்டிக்கொண்டு இருக்கிறார்கள் இவர்கள் இருவரும்…” என அரங்கநாதனையும், மயூரனையும் காண்பித்தான்.

“மிகப்பெரிய கண்டத்திலிருந்து தப்பியதை போல ரெண்டுபேரையும் காப்பாத்தி கூட்டிட்டு போனது அவங்க வீட்டுல வேலை செஞ்ச வேலைக்கார பொண்ணு பிரபான்றவங்க. குற்றவாளி முத்துக்குமாரின் மனைவி. அதற்கடுத்த தெருவில் இருந்த சுபலேகாவின் நண்பரான ஒருத்தரிடம் ஒப்படைத்து அவரின் மூலம் சென்னை வந்து சேர்ந்தார்கள்…”

“மைலார்ட், ஒரு வருஷம் முன்னாடி வானம் அறக்கட்டளைக்கு இந்த இரு பெண்கள் ஆதரவு தேடி வந்திருந்தாங்க. சுபலேகாவோட தோழியான திருச்சில வேலை பார்க்கிற ஒரு டாக்டரோட ரெகமண்டேஷன் மூலமா.  ஆரம்பத்தில எந்த நெருடலும் இல்லாம தான் இருந்தது…”

“ஆனா அந்த பொண்ணுங்களோட பயம், எல்லாத்தை விட்டும் விலகி இருக்கிற விதம், இதுகெல்லாத்துக்கும் மேல ஒருநாள் அந்த சின்ன பொண்ணு கடுமையான காய்ச்சல்ன்னு ஹாஸ்பிட்டல்ல சேர்ந்த அன்னைக்கு தான் விஷயமே  தெரிஞ்சது…”

“அப்போ தான் கொலை, அப்பா அம்மான்னு அந்த பொண்ணு உளற அதை வச்சு என்னன்னு சந்தேகம் வந்ததால நான் விசாரிக்க ஆரம்பிச்சேன். அப்போ தான் இந்த விஷயத்தோட ஆணிவேர் எங்களுக்கு பிடிபட்டது…”

“அப்பவே நீங்க காவல்துறை கண்பார்வைக்கு கொண்டு போயிருக்கலாமே கிருஷ்ணா?…” என நீதிபதி கேட்க,

“அத்தனை எளிதா இதை கையாள முடியவில்லை மை லார்ட். எந்த சின்ன சந்தேகமும் இல்லாதபடிக்கு அங்க இந்த குற்றம் நடந்திட்டு இருந்தது. பாதிக்கப்பட்டவங்க திருப்பி கேட்க முடியாத இடத்துல இருக்கிறதை விட என்னன்னே தெரியாதவங்க…”  

“அப்படிப்பட்ட மக்கள்கிட்ட தான் இந்த உறுப்பு திருட்டை செஞ்சிருக்காங்க இந்த கிரிமினல்ஸ். இந்த பொண்ணுங்களை அனுப்பினவங்க மூலமா அங்க என்ன நடந்ததுன்னும் தெரிஞ்சிக்கிட்டோம். ஆனா அங்கையுமே எங்களுக்கு குழப்பம் தான்…”

“சசிகரன் அங்க வேலை பார்க்கிறதால அவர்கிட்ட உதவி கேட்டோம். ஆனா விஷயம் இத்தனை பெருசுன்னு அவருக்கும் தெரியாது. எங்களுக்கும் தெரியாது…” என்றவன்,

“இங்க மயூரன் பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன்ல வேலை பார்க்கிற சிலரை இப்படி ஆர்கன்ஸ்க்காக கொலையும் செஞ்சிருக்காங்க. யாருமில்லைன்னு அவங்க பில்டர்ஸ் சார்பாவே அதை தகனம் பண்ணிருக்காங்க…” என்றான் பல்லை கடித்தபடி.

“இதை ஏன் இத்தனை நாள் நீங்க சம்பந்தப்பட்ட ஏரியா போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்டா குடுக்கலை?…” நீதிபதிக்கு அத்தனை கோபம்.

இவ்வளவு தெரிந்தும் ஏன் நடவடிக்கை எடுக்க முயற்சிக்க என்று கோபத்துடன் தான் கேட்டார்.

“ஆதாரங்களுக்காக வெய்ட் பண்ணிட்டு இருந்தோம் மை லார்ட். அரங்கநாதன் பத்தி எல்லாருக்குமே தெரியும். இத்தனை ஆதாரங்கள் இல்லைன்னா இந்த கேஸ் நின்னிருக்காதே? இல்லன்னா இதையுமே ஊதி தள்ளிட்டு போயிருப்பார்…”

“எவிடென்ஸ போலீஸ் கலெக்ட் பன்றதுக்குள்ள சாட்சிகளை மட்டுமில்லை, ஆதாரங்களையுமே கலைச்சிட வாய்ப்பிருக்குன்னு தான் சத்தமில்லாம வேலையை பார்க்க வேண்டியதா இருந்தது. இன்னும் ஒருவாரத்தில்  திருச்சி கோர்ட்டில் இந்த கேஸ் பைல் பன்றதா தான் இருந்தோம். ஆனா…”

“இன்னும் என்ன கிருஷ்ணா ஆனா? இப்பவே நானே நேரடியா திருச்சி நீதிமன்றத்துக்கு இந்த வாழ்க்கை முறையீடு செய்கிறேன். இத்தனை உயிர்களுக்கு அச்சுறுத்தல்களாக இருப்பவர்கள் நிச்சயம் களை எடுக்கப்பட வேண்டியவர்கள்…” நீதிபதி சொல்ல,

“உண்மை தான் யுவர் ஹானர். மிக்க நன்றி…” என்ற பாலா,

“இப்பவும் அந்த இரு பெண்களுக்கும் அச்சுறுத்தல்களாக தான் இருக்காங்க இவங்க. அவங்கக்கிட்ட இருக்கிற ஆதாரத்துக்காகவும், ஜீவன்யா என்னும் பெண்ணின் இதயத்துக்காகவும். இப்பவும் அந்த பொண்ணை இவங்களோட டார்க்கேட்ல வச்சிருக்காங்க…” பாலா பேசி முடித்தான்.

Advertisement