Advertisement

“கொஞ்சமும் மனசாட்சி இல்லாம நடந்துக்கிட்ட என்னோட அப்பாவை நினைச்சு எனக்கே அதிர்ச்சி தான். உயிரை காப்பாத்தற என்னை பெத்தவரு இப்படி ஒவ்வொரு உயிர்களையும் வேட்டையாடிட்டு இருந்திருக்காரு. என்னால முடிஞ்சது இந்த விஷயம் தெரிஞ்சதுல இருந்து அந்த ஹாஸ்பிட்டல்ல எதுவும் நடக்க விடாம கண்காணிச்சு தடுக்கிறது மட்டும் தான்…” என்ற சசிகரன்,

“அங்க யார் யார் என்னென்ன பண்ணிருக்காங்க, எத்தனை டாக்டர்ஸ் இதுல இன்வால்ட் ஆகியிருக்கங்கன்ற டீடெய்ல் இந்த ப்ரீப்கேஸ்ல இருக்கு. உண்மையா இப்படி சட்டத்தை காப்பாத்தறேன்ற போர்வைக்கு பின்னால சட்டத்துக்கு புறம்பான செய்கைகளை செஞ்சிருக்காங்க…”

“இவங்களை நீங்க சின்னதா தண்டிக்க கூடாது. அதே நேரம் அந்த ஹாஸ்பிட்டல்ல நிறையப்பேர் விவரம் தெரியாதவங்களும் இருக்காங்க. இவங்களோட கூட்டு சதில சிலருக்கு தான் பங்கு. வெளில விவரம் கசியாம இருக்கறதுக்காக…”

“அப்படி இருக்கிற நல்ல டாக்டர்ஸ்க்கு அரசாங்கம் உதவி செய்யனும். மருத்துவ துறை சேவைக்குன்னு அர்ப்பணிக்கப்பட்டது. ஆனா அதை இப்படி பணம் விளையும் இடமா மாத்தினதுல என்னை பெத்தவருக்கும் பங்கிருக்கு. எங்கப்பா பண்ணின ஒரே நல்ல விஷயம் அவரை மாதிரி என்னை வளர்க்காம இருந்தது மட்டும் தான்…”

சசிகரன் தன் பக்கங்களை சொல்லிவிட்டு கையெடுத்து கும்பிடவும் அங்கே நிசப்தம்.

அங்கிருந்த அத்தனைபேருக்கும் தலை சுற்றியது. எத்தனை குற்றங்கள். ஒரே நாளில் இத்தனை அதிர்ச்சிகள். ஆடி போய் தான் இருந்தார்கள்.

நீதிபதி அந்த இடத்திலேயே திருச்சி நீதிமன்றத்திற்கு தன் சார்பாக கடிதத்தை தயார் செய்து பேக்ஸில் அனுப்பிவிட்டார்.

“இந்த கேஸ் இத்துடன் முடியாது. இதில் இருப்பவங்களை எல்லாம் அடியோடு கண்டுபிடிச்சு தண்டிக்கனும்….” என நீதிபதி சொல்ல,

“இன்னும் ஒரு கடமை இருக்குது யுவர் ஹானர்…” என்ற பாலா,

“சசி…” என்றான்.

“நான் கூட்டிட்டு வரேன்…” என சசிகரன் வெளியேறினான்.

“இந்த லேப்டாப் செழியனோடது. இதிலிருக்கும் ஆதாரங்களும், பண பரிவர்த்தனைகளும் இந்த கேஸின் முக்கிய ஆவணம். எப்பப்போ எங்கேங்க ஆர்கன்ஸ் அனுப்பிருக்காங்கன்ற டீட்டெய்ல்ஸ்…” என்று பாலா அந்த லேப்டாப்பை அவரிடம் நீட்ட,

“அப்போ வீட்டோட எரிஞ்சிருந்த லேப்டாப்?” என மயூரன் திடுக்கிடலுடன் அரங்கநாதனை பார்த்தார்.

“மை லார்ட், என்னதான் தங்களை காப்பாத்திக்க செழியனையும், அவர் நண்பரையும் அடித்திருந்தாலும் அதுவுமே கொலை முயற்சியில் தான் பதிவாகும் என்பதால் நானே ஜீவன்யா மற்றும் தென்றல் இருவரையும் கோர்ட்ல ஒப்படைக்கிறேன்…” என்று பாலா சொல்லவும் அரங்கநாதன் நிமிர்ந்து பார்த்தார்.

எத்தனை புத்திசாலித்தனமாக அத்தனையையும் கோர்வையுடன் சொல்லி இத்தனை தூரம் தங்களை கொண்டு வந்ததும் இல்லாமல் தன்னால் செயல்படமுடியாதவாறு செய்துவிட்டானே என பார்த்தார்.   

சொல்லியபடி ஜீவன்யாவையும், தென்றலையும் காப்பாற்றவும் ஆவன செய்துவிட்டான்.

ஜீவன்யாவும், தென்றலும் சசிகரனுடன் உள்ளே வர இருவருமே உடல் உதற வந்துகொண்டிருப்பதை பாலா வலியுடன் உள்வாங்கினான்.

எச்சிலை கூட்டி விழுங்கியவனுக்கும் வேறு வழி இருப்பதாக தெரியவில்லை. இதனை மொத்தமாக முடித்துவிட வேண்டும் என்றே எண்ணினான்.

முதல் நாள் தான் இதனை ஜீவாவிடமும், தென்றலிடமும் பேசி சம்மதிக்க வைத்திருந்தான். அது எத்தனை நல்லதாக போனது என இப்போது தோன்றியது.

ஆனால் ஒரு வாரம் கழித்து என்றிருக்க இன்றே அப்படி ஒரு சூழ்நிலை வரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

அத்தனை வேகம் பாலாவிடம். இன்னும் எத்தனைபேரை இவர்கள் பலி எடுப்பார்கள் என்ற ஆத்திரம்.

சசிகரனும் போதிய ஆதாரங்களுடன் முதல் நாள் தன சென்னை வந்திறங்கி இருக்க அவனிடம் ஒரு காப்பியை கொடுத்துவிட்டு தன்னிடம் ஒரிஜினலை வைத்திருந்தவன் மறுவாரம் திருச்சி செல்வதாக இருந்தது.

அத்தனையும் மாறி போனது பத்ரியின் நிலையை கண்டதும். கொஞ்சமும் குற்ற உணர்ச்சி இன்றி தன்னுடைய செயலை இன்னுமின்னும் தொடர இருக்கிறார்களே என்ற ஆவேசம்.

உள்ளே வந்த ஜீவன்யா பாலாவை பார்த்துக்கொண்டே நிற்க தன்னை சுதாரித்துக்கொண்டவன்,

“மை லார்ட். இவங்க ஜீவன்யா. இவங்க தென்றல். இறந்து போன டாக்டர் செழியனோ…”

“இல்ல, இல்ல. அந்த பேரை சொல்லாதீங்க. சொல்லாதீங்க. அந்தாள் எங்களுக்கு யாருமில்லை. சொல்லாதீங்க. அக்கா நீ சொல்லு. சொல்ல வேண்டாம்ன்னு இவர்கிட்ட சொல்லு. சொல்லு…” என்று தென்றல் கத்த ஆரம்பித்துவிட்டாள்.

அவளின் அழுகையும் ஓலமும் பார்த்தவர்களை பதற செய்தது. கண்ணில் தேங்கிய பரிதாபத்துடன் பார்த்தனர்.

“தென்றல், தென்றல். காம்டவுன்…” என்றான் பாலா அவளருகே வந்து.

“எங்களை எதுக்கு கூட்டிட்டு வந்தீங்க?…” என்று அழுகையை நிறுத்தாமல் பாலாவிடம் கதற தென்றலை சமாளிக்க முடியவில்லை.

“இப்ப போய்டலாம். இப்போ போய்டலாம்…” என்று அவளின் தலையில் கை வைக்க முயன்றவன் வலிந்து தனது கரத்தை இறக்கிக்கொண்டான்.

“மை லார்ட், இப்ப இவங்களை ஒப்படைச்சது சட்டத்துக்காக. தவறு இவங்க மேல இல்லை. உங்களுக்கே புரிஞ்சிருக்கும். ஆனா கேஸ்ல இருந்து உடனே விடுவிக்கவும் முடியாது. அதனால இவங்களை என்னோட சொந்த ஜாமீன்ல விடனும். அதுக்கான மனு…”  என்று அவரிடம் நீட்டினான்.

“எந்த நேரமும் விசாரணைக்கு நான் இவங்களை கூட்டிட்டு வருவேன். அந்த பொறுப்பு என்னோடது. ஏனா ஜீவன்யா என் மனைவியாக போறாங்க…” என்றதும் புன்னகையுடன் சம்மதித்தார் நீதிபதி.

“மனமார்ந்த வாழ்த்துக்கள் இருவருக்கும். ஜாமீன் வழங்கப்பட்டது….” என்ற நீதிபதி,

“மயூரன், அரங்கநாதன் இருவரையும் கைது செய்து போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்குபடி காவல்துறைக்கு உத்தரவிடுகிறேன். ஒரு வார கெடு முடிவில் வரும் புதனன்று இந்த விசாரணையின் தீர்ப்பு வழங்கப்படும்…” என்று உத்தரவிட மயூரனும், அரங்கநாதனும் கைதுசெய்யப்பட்டனர்.

“உன்னை விடமாட்டேன்டா…” என்ற மயூரனின் கூச்சல்களும், அரங்கநாதனின் கூனிக்குறுகளுமான நடையுடனும் அவர்கள் அந்த வளாகத்திலிருந்து அழைத்து செல்லப்பட்டனர்.

அனைத்தும் முடிந்து நிம்மதியுடன் வெளியே வந்த பாலா அங்கே நின்ற பவனை நோக்கி வேகமாய் சென்றான்.  

“வெல்டன் கிருஷ்ணா…” என்று வந்ததுமே பவன் பாலாவை இறுக்க கட்டிக்கொண்டான்.

“தேங்க்ஸ் டா…” என்று சொல்லியவன் முகமெல்லாம வியர்வை பூத்திருந்தது.

மதிய உணவிற்குள் பரபரவென எத்தனை வாக்குவாதம்? ஒரே கேஸ் எத்தனை நேரம்? உயிரை கொடுத்து பேசிய நிமிடங்கள் மூச்சுக்கு தவித்ததே?

நீதிபதி நேர்மையானவராக இருக்க போய் இத்தனை எளிதில் அவனால் அடுத்தடுத்து அத்தனையும் விவரித்து ஒப்படைக்க முடிந்தது.

இல்லை என்றால் இழுபறி ஆகவும் வாய்ப்பிருந்து. கொஞ்சமும் அரங்கநாதன் சுதாரித்துவிடாமல் இருக்க சசிகரனை கொண்டு சத்தமின்றி காரியங்களை பார்த்து, அத்தனையும் திரட்டி, இதோ இன்று மொத்தமாய் உடைத்து சொல்லி பத்திரிக்கைகள் எல்லாம் கிழிக்க ஆரம்பித்துவிட்டனர்.

மீடியா மொத்தமும் பாலாவின் பக்கம் வர சசிகரன் பக்கம் நின்றுகொண்டிருந்த ஜீவன்யா, தென்றலுடன் இன்னுமே மிரண்டு கார் கதவை ஒட்டினார் போல நின்றுகொண்டாள்.

“ஓகே கிருஷ்ணா, நான் கிளம்பறேன். பாஸ் சொன்ன இடத்துக்கு வந்திரு…” என்று பவன் கிளம்பிவிட்டான்.

“கிருஷ்ணா மீடியா…” என பாலாவிடம் காண்பித்ததும்,

“ஜீவா, தென்றல் கார்ல ஏறுங்க…” என்று உடனே அவர்களை காரில் ஏற்றி அமர்த்திவிட்டவன்,

“சசி என்னோட வரனும் நீ. எங்கயும் போய்டாத. இன்னைக்கு முக்கியமான நாள்…”

“தெரியும்டா. பவன் ஷேஷா ஸார்ட்ட பேசிட்டிருந்ததை நான் கேட்டேன்…”

“ஹ்ம்ம், ஓகே…”

“எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டு தான் என்னை இல்லை எங்களை வரவே சொல்லியிருக்க….” என சசி சிரிக்க அதற்குள் பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்துகொண்டனர்.

வரிசையாக சரமாரியாக கேள்விகள் வந்துகொண்டே இருக்க சளைக்காமல் தன் பாணியில் அவன் புன்னகையுடனே பதில் கூறினான்.

எல்லாம் முடிந்து காரில் ஏறியவன் பின்னால் பார்த்தான். தென்றல் இன்னும் ஜீவாவை கட்டிக்கொண்டு விசும்பிக்கொண்டே இருப்பதை பார்த்துவிட்டு காரை கிளப்பினான்.

இருவருக்குமே அன்றைய நாள் சென்றுவிட்டு வந்ததை போல அப்படி ஒரு ஓய்ந்த தோற்றம்.

“ஜீவா…” என்ற பாலாவின் சத்தத்தில் அவள் ஏறிட்டு பார்க்க தென்றல் அவனை முறைத்தாள்.

“என்ன? என்ன முறைப்பு?…” அவளிடம் பாலா வம்பிழுக்க,

“க்கா நான் இவர்கூட பேச மாட்டேன். நேத்து எவ்வளவு நல்லவராட்டம் பேசினார்? தனியா லேடி ஜட்ஜ் தான் இருப்பாங்க. எல்லார் முன்னாடியும் எதுவும் நடக்காது. தனி ரூம்ல அவங்க மட்டும் தான் விசாரிப்பாங்க. நான் பார்த்துக்கறேன்னு. இன்னைக்கு என்ன பண்ணிட்டார் பாரு…”

பாலாவின் மேல் அத்தனை கோபத்துடன் இருந்தாள் தென்றல். அவளின் பேச்சை ஒரு சிரிப்புடன் கடந்தவன் காரை செலுத்தினான் இலகுவான மனதுடன்.

“தென்றல் அமைதியா இரு…” என்னும் பொழுதே சசி அவளுக்கு தண்ணீர் பாட்டிலை நீட்ட,

“எனக்கொண்ணும் வேண்டாம்…” என முறுக்கிக்கொள்ள,

“குடிம்மா, ரொம்ப அழுதிருக்க. எவ்வளோ சத்தம் கோர்ட்ல?…” என்று சசி அவளிடம் சொல்ல,

“ஆமாமா, இன்னும் கொஞ்சம் கத்திருந்தா கோர்ட்டே இடிஞ்சு விழுந்திருக்கும்…” என்றான் பாலா அவளை இயல்புநிலைக்கு கொண்டுவர.

அவனின் முயற்சியும் புரியத்தான் செய்தது. அதிகமாய் எதுவும் பேசாமல் அமைதியாகவே வந்தாள் ஜீவா.

இப்போது தங்களை பற்றிய முழு விவரமும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். வேலை பார்க்கும் இடத்திலாகட்டும், குடியிருப்பு பகுதியிலாகட்டும்.

மனது ஒரு நிலையில் இல்லை. தங்கள் மேல் தவறே இல்லையென்றாலும் அவற்றை எதிர்கொள்ள முடியாதே? ஊரெங்கும் தங்களின் முகம் ஒளிபரப்பப்பட்டு இருக்கும்.

பாலாவினுடனான கிசுகிசுப்புகள் சிலருக்கு கிண்டல் பேச்சோடு இருந்தாலும் ஒரு சிலர் சொற்பமானவர்கள் என்றாலும் பேச்சுக்களும், சைகைகளும் சகிக்கும் படி இல்லை.  

அதுவும் தென்றலால் நிச்சயம் அவற்றை கடந்து வரவே முடியாது என நினைக்க இன்னும் அதிகமாக நெஞ்சில் பாரமேறிய உணர்வு.

கார் நின்ற சத்தத்தில் தான் தன்னுணர்வு வந்தாள் ஜீவா. தென்றல் ஏதேதோ முணங்கியபடி தன்னை இறுக்கமாய் கட்டிக்கொண்டு உறங்கிவிட்டதில் புரிந்தது.

“தென்றல்…” என அசைத்து எழுப்பி பார்த்தவள் வந்து நின்ற இடத்தை கண்டு பாலாவை கேள்வியாக பார்த்தாள்.

“இறங்கி வா…” என்றதுடன் அவன் இறங்கிவிட தென்றலை எழுப்பி ஜீவாவும் கீழே இறங்கினாள்.

“இது யாரோட பங்களா க்கா? நாம ஏன் இங்க வந்திருக்கோம்?…” என்று தென்றல் கேட்க,

“ஜீவா…” என்ற பாலா கை நீட்டிய திசையில் இருப்பவர்களை கண்டு ஒன்றும் புரியாமல் நின்றாள்.

அங்கே சின்னதாய் கோவில் போன்ற அமைப்பில் சிறு குடில். உள்ளே விநாயகர் வீற்றிருந்தார்.

அதனருகே இருவர். அந்த இருவரின் பின்னாலும் நின்ற ஒருவன் மட்டுமே அவளுக்கு தெரிந்தவன். அவன் பவன். தன்னை சசிகரனுடன் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றவன்.

“இங்க எதுக்கு? யார் இவங்க?…” என ஜீவா கேட்க,

“இவங்க தான் வானம் அறக்கட்டளை நடத்தறவங்க. ஆதிஷேஷன் ஸார், அவரோட ஷக்தி மேம்….” என்றான் ஜீவாவிடம்.

“இங்க, இங்க?…” என அவள் தடுமாறினாள்.

“நமக்கு கல்யாணம். அதுக்கு தான்…” என்றவனின் புன்னகையில் அதிர்ச்சியுடன் ஜீவா நிற்க, தென்றல் நொடியில் சந்தோஷமாக பார்த்தாள்.

“சம்மதமா ஜீவா?…” என்றவனுக்கு என்ன பதில் சொல்வாள்?

மொத்த உணர்ச்சி குவியலாக ஜீவா மாறியிருந்தாள். கோர்ட்டில் சொல்லும் போது கூட இத்தனை அதிர்ச்சி இல்லை.

எப்படியும் சில நாட்கள் ஆகலாம் என்றிருக்க இவன் இன்றே என்றிருந்தது தான் அவளை ஸ்தம்பிக்க செய்தது.

தான் இருக்கும் மனநிலையென்ன? இவன் சொல்வதென்ன? மறுக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றாலும் இப்போதைய மனநிலை அவளுக்கு அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆனால் பிடிவாதம் போல இருந்தான் இன்றே என்று. இப்போது தான் தன் துணை அவளுக்கு அதிகமாக தேவைப்படும் என்ற உறுதி பாலமுரளிகிருஷ்ணாவிடம்.

Advertisement