Advertisement

“எனக்கு தெரிஞ்சிக்கிடுச்சுங்கயா, வெளில போனா என்னை இவங்க முடிச்சிடுவாங்க. அதான் என்னாலான உண்மைய சொல்லிட்டாச்சும் சாவோமேன்னு. இத்தன நாள் குறுகுறுப்பு. நீங்க நம்பாட்டியும் அதேன் நெசம்…” 

“ஹ்ம்ம், நல்ல ஞானம் தான். அதிருக்கட்டும். எதுக்காக அந்தம்மாவை கொல்ல சொன்னாங்கன்னு தெரியுமா?…”

“அது தெரியாதுங்க. ஆனா அவங்க இருந்தா இவங்களுக்கு பிரச்சனைன்னு சொன்னாங்க…”

“ஓகே, நீங்க இப்படி உட்காருங்க. இன்னும் விசாரணை முடியலை…” என அவனை ஓரமாய் பெஞ்ச் அருகே அமர்த்தி வைத்தான் பாலா.

“மை லார்ட், இப்போ உங்களுக்கு ஒரு விஷயம் தெளிவாகியிருக்கும். பரமேஷ்வர் சொன்னது போல அவர் சாலாட்சியம்மாவை கொலை செய்ய முத்துக்குமாரை அனுப்பலை. அனுப்பினது மயூரன் அன்ட் அரங்கநாதன்…”

“நோ…” என அரங்கம் அதிர ஒலி எழுப்பினார் அரங்கநாதன்.

“எஸ், எஸ். நீங்களும் இதுக்கு உடந்தை. அதை என்னால இப்பவே ப்ரூவ் பண்ண முடியும்…” என்று பாலாவும் அவருக்கு சமமாய் பேச,

“ஆடர் ஆடர் ஆடர்…” என்ற நீதிபதியின் அதட்டலில் இருவரும் சத்தத்தை குறைத்தாலும் அரங்கநாதன் நிதானமாகவில்லை.

“அரங்கநாதன் இது கோர்ட். உங்க இஷ்டத்துக்கு கத்தி பேசறீங்க? இன்னும் ஆர்க்யூமென்ட் முடியலை. நீங்க இப்படி இடையிட்டு இடையூறு செய்வது கோர்ட்டை அவமதிப்பதாகும்…” என மீண்டும் தன் கண்டனத்தை அவர் பதிவு செய்ய அரங்கநாதனுக்கு நடுக்கம் கூடியது.

“தேங்க் யூ மை லார்ட்….” பாலா சொல்லிவிட்டு,

“முதல் கொலையும், கொலை முயற்சியும் செய்ததுக்கு மயூரன் தான் காரண்ம்ன்றதை என்னால விஷுவலா ப்ரூவ் பண்ண முடியும். இரண்டாவது கொலை முயற்சி இப்பவே ப்ரூவ் ஆகிருச்சு…” என்றவன் ஒரு பென்ட்ரைவை நீட்ட அதை வாங்கி தனது மடி கணினியில் போட்டு பார்த்தார்.

“சம்பவம் நடந்த அன்னைக்கு மயூரன் கார் அந்த காம்பவுண்ட்க்குள்ள வந்ததுக்கும், போனதுக்குமான அந்த ஸ்ட்ரீட் சிசிடிவி கேமரா ஃபுட்டேஜ் சாட்சி. நெக்ஸ்ட் கிளிப்பிங்ல கார்ல போகும் போது முன் சீட்ல இருந்த மயூரனோட முகம் விண்டோ மிரர்ல வ்யுவ் ஆகுது…”

“அந்த ஸ்ட்ரீட் லைட் வெளிச்சமும், மழை பெய்திட்டிருந்த மின்னல் வெட்டும் போது அந்த டேர்னின்க் பாயிண்ட்ல கார் ஸ்லோவானதாள கேப்சர் பண்ண முடிஞ்சது. அந்த வெளிச்சமும் சேர்ந்து அந்த கிளியர் கிளாஸ் விண்டோவுக்குள்ள இருந்தது மயூரன்றத காட்டி குடுக்குது….”

“அது மட்டுமில்லை யுவர் ஹானர், அந்த நேரம் அவர் அந்த ஏரியாவை க்ராஸ் பண்ணி போனதை அங்கிருந்த சில வீடுகளோட சிசிடிவி ஃபுட்டேஜ் உறுதி படுத்துது….”

“இல்லை கார்ல இருந்தது நான், நான்தான்…” என பரமேஷ்வர் சொல்ல அதனை கண்டுகொள்ளாத பாலா,

“நெக்ஸ்ட் நாலாவது கிளிப்பிங் பாருங்க. அவங்க திரும்பி வர நேரம் அந்த ஏரியாக்கு வெளில கார்ல ஏற்பட்ட சின்ன பழுதால அந்த இடத்துல இருந்து இறங்கி வேற ஒரு காருக்கு மாறி இருக்கார் மயூரன். இதுவும் தெளிவா தெரிய வந்திருக்கு. பக்கதுல இருந்த ஜிம்ல இருந்து வாங்கின ஃபுட்டேஜ்…”

பாலா ஒவ்வொன்றையும் அத்தனை தெளிவாக எடுத்து வைக்க வீடியோக்களில் கூட அவ்வளவு தெளிவு. ஜூம் செயப்பட்டும், அதை போட்டோவாகவும் எடுக்கப்பட்டும் இருக்க பார்த்துவிட்டு தலையசைத்தார்.

“ராமமூர்த்தி, சாலாட்சி தம்பதிகள் தங்களோட வயதான காலத்தை நிம்மதியா அந்த வீட்டுல கழிச்சிட்டு இருந்த நேரம், மெயின் ரோட்ல மெயினான இடத்துல இருந்த பரந்த இடமும், வீடும், பில்டரான மயூரன் கண்ணை உறுத்த விளைவு இங்கே வந்து நிக்குது…”

“அவங்கக்கிட்ட எழுதி வாங்க முடியாம, மிரட்டி இடத்தையும் வீட்டையும் கேட்டு அவங்க மறுத்ததும் தான் இந்த அராஜகம் நடந்திருக்கு. அதுக்கும் ஒரு காரணம் இருக்கு…” என்றவன்,

“முக்கிய சாட்சியாக சாலாட்சியை விசாரிக்கனும். அவங்க வாக்குமூலம் தர தயாரான நிலையில் இருக்காங்க…”  என்றவன் அதற்கான ஏற்பாட்டை பார்க்க சுவற்றை நிறைத்த ப்ரஜெக்ட்டரில் தெரிந்தார் சாலாட்சி.

உடல்நிலை எந்தளவுக்கு பாதிப்படைந்திருக்கிறது என்பதை அவரை கண்டதுமே புரிந்துகொண்டார் நீதிபதி.

“நடந்ததை நீங்க சொல்லுங்கம்மா…” என்றதும் சாலாட்சியும் மெல்லிய குரலில் அன்று நடந்ததையும், தன் கண் முன்னே கணவனை கொலை செய்ததையும் அழுதுகொண்டே கூறினார்.

“கையெழுத்து போட்டு குடுத்தும் என் புருஷனை கொன்னுட்டானுங்க ஐயா. நாங்க இடத்தை குடுத்த பின்னாடியாவது விட்டிருக்கலாம். ஆனா விடலையே?…” என கதறி அழ பார்த்தவர்களுக்கு கலங்கிவிட்டது.

“உங்களுக்கான நியாயம் கண்டிப்பா கிடைக்கும் ம்மா. வருத்தப்படாதீங்க…”   என்றார் நீதிபதி.

சாலாட்சி பேசி முடித்ததும் அவற்றை அணைத்துவிட்டு மயூரனிடம் திரும்பினார் நீதிபதி.

“இந்த குற்றசாட்டை நீங்க இதுக்கு மேலையும் மறுக்கறீங்களா மயூரன்?…” என அவர் கேட்க மயூரனிடம் மௌனம்.

“இதற்கு உங்க வாதம் என்ன அரங்கநாதன்?….” என கேட்க அரங்கநாதன் எழுந்து இல்லை என மறுத்துவிட்டார்.

“யுவர் ஹானர், இதோட இன்னும் சில ஆதாரங்களையும் நான் இங்கே சமர்ப்பிக்க இருக்கிறேன்…”

“கோ ஹெட்…” என்றார்.

அடுத்து அவன் எடுத்து வைத்த ஆதாரங்கள் எல்லாம் மயூரன் எங்கெங்கே என்னென்ன குற்றங்கள் செய்திருக்கிறார் என்றும், யாரிடம் எல்லாம் மிரட்டி இடங்களை பறிமுதல் செய்கிறார் என்றும், எத்தனை கொலைகளும் அடக்கம் என்றும் ஒவ்வொன்றாய் எடுத்து வைத்தான்.

அத்தனையும் பெரிய பெரிய குற்றங்கள். இதை எப்படி காவல்துறையும், அரசாங்கமும் கண்டுகொள்ளாமல் விட்டது என நீதிபதி அரண்டு தான் போனார்.

“ஹவ் இஸ் பாஸிபிள்?…” என திகைப்புடன் பார்த்தவர் கமிஷனரை அழைத்து,

“இந்த குற்றசாட்டுகளின் அடிப்படையில் விசாரணையை துவங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிடுகிறேன். இதன் அனைத்து வழக்குகளையும் விசாரித்து மிக விரைவில் சமர்ப்பிக்க வேண்டும்…” என்றார் கடுமையாக.

பேசி முடித்து பரமேஷ்வரை பார்க்க பாலாவும் இன்னும் சில கோப்புகளுடன் வந்தான் அவரிடத்தில்.

“இந்த கேஸ்ல இருந்து தப்பிக்க தான் பரமேஷ்வரை அப்ரூவர் ஆகறதுக்காக இங்க அவரசரமா வரவழைச்சிருக்காங்க. அவசரமா தனி விமானத்தை ஏற்பாடு செய்து உடனே வரவழைக்கப்பட்டிருக்கார் பரமேஷ்வர்…”  

“பரமேஷ்வர் இத்தனை மாதங்கள் வெளிநாட்டில் இருந்ததுக்கான ஆதாரமும், அங்கே அவர் கலந்துகொண்ட பார்ட்டீகளின் வீடியோக்களும் இதில் இருக்கு…”  அதற்கான ஆதாரங்களையும் எடுத்து சமர்ப்பித்தான்.

“ஒரு குற்றத்தை மறைக்க எத்தனை குற்றங்கள்?…” என்ற நீதிபதி மயூரனை காவல்துறை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கும் படி உத்தரவிட,

“ஒன்மோர் ஆப்ளிகேஷன் மை லார்ட்….” என்றான் பாலா.

‘இன்னுமா?’ என்பதை போல அவர் பார்க்க பாலா அமைதியாய் நின்றான் அவர் அனுமதிக்காக. அவரும் அனுமதிக்க,

“அரங்கநாதனை விசாரிக்கனும்…”

“வாட்?…” என அரங்கநாதனும் கேட்க அங்கிருந்தவர்களும் திகைத்தனர்.

“அதுவும் இந்த வழக்கு சம்பந்தமாவா?…”

“எஸ் மை லார்ட்…” என்றதும் நீதிபதியின் பார்வையில் அரங்கநாதன் எழுந்து வந்து கூண்டில் நின்றார்.

“ஒரு லாயரா இருந்துட்டு எப்படி ஒரு குற்றவாளிக்கு துணை போனீங்க அரங்கநாதன்?…” என கேட்க,

“நான் எதுக்கும் துணை போகலை. மயூரன் எனக்கு கிளைன்ட். அவருக்காக நான் வாதாடுறேன். சில சட்ட சிக்கல்களுக்கு நான் அவருக்கு ஆலோசனை சொல்லியிருக்கேன். அவ்வளவு தான். மேற்படி அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை…”

“ஆனா சம்பந்தம் பண்ண போறீங்களே?…”  என்றான்.

“என் பையனுக்கும், அவர் பொண்ணுக்கும் பிடிச்சிருக்கு. பெரியவங்க நாங்க அக்சப்ட் பண்ணிக்கிட்டோம். தட்ஸ் ஆல்…”

“ஓஹ் நைஸ்…” என்ற பாலா,

“அப்போ இனி தான் நீங்க நெருங்க போறீங்க?…”

“அப்படியும் சொல்லலாம். உறவு முறையால. ஆனா என்னோட பிரபஷன் வேற. அவரோடது வேற. அதையும் நான் சொல்லிடறேன்…”  

“ஹ்ம்ம், பரவாயில்லை. கொஞ்சமும் சளைக்காம கிளியர் கட் பதில். ஆனா பாருங்க இதுல மாட்டிக்கிட்டீங்களே?…” என்று ஒரு டாக்குமெண்டை காண்பிக்க தீயை மிதித்ததை போல திகைத்தார்.

“மை லார்ட், இது சாலாட்சியம்மாகிட்ட அடிச்சு வாங்கின இடத்துல கட்டவிருக்கும் ஃபைவ்ஸ்டார் ஹோட்டலுக்கான அப்ரூவல் டாக்குமென்ட். ஹோட்டல் மயூரனோட பொண்ணு பேர்ல இருந்தாலும் அதோட அத்தாரிட்டி பாட்னர்ஸ் மயூரனும், அரங்கநாதனும்…”

“நோ நோ நோ…” என அரங்கநாதன் கத்த மயூரன் அவரை பார்த்தார்.

அரங்கநாதனுக்கு இப்போது தான் மட்டுமாவது தப்பிவிட வேண்டும் என்னும் எண்ணம்.

அதனை கொண்டே பேசிக்கொண்டு வர மயூரனுக்கும் அது புரிந்துபோக பல்லை கடித்தார்.

“என்ன நோ? இதுல இருக்கிறது உங்க சைன் தானே?…”

“அது உண்மை தான். ஆனா ஆனா. நான் இந்த ஹோட்டல் பாட்னர் எல்லாம் இல்லை…” என்று இரைந்தார்.

“ஓகே, அப்போ இன்னொரு குறும்படம் பார்ப்போமா?…” என்றவன் இப்போது ப்ரஜெக்ட்டரில் அதனை ஒளிரவிட்டான்.

அதன் சாராம்சம் அரங்கநாதன் காருக்குள் அமர்ந்து மயூரனிடம் பேசிய பேச்சுக்கள் தெளிவாக ஒளிபரப்பாகியது.

அதிலும் பாலாவை அவர் சொல்லிய அநாதை என்னும் வார்த்தை. பாலா அவரை  பார்வையால் குத்தி கிழித்தான்.

“இதுக்கு மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேன். உங்க ட்ரைவரை ஏமாத்தி நான் தான் உங்க கார்ல ஹிடேன் கேமரா செட் பண்ணேன். உங்க சீட்க்கு மேல இருக்கும். உங்க ட்ரைவர்ட்ட சொல்லி அதை தூக்கி போட சொல்லிருங்க அப்பறமா…” என்றவன்,

“மை லார்ட், இப்ப உங்களுக்கு புரிஞ்சிருக்கும். இவங்க இதையும் மறுத்தா இதோ அந்த நேரத்துல ரெண்டுபேரும் தான் பேசினாங்கன்றதுக்கான பேப்பர் டாக்குமென்ட் அன்ட் கால் ட்யூரியேஷன் சேர்த்தே இருக்கும்…” என அவன் நீட்ட நெஞ்சை பிடித்துக்கொண்டார் அரங்கநாதன்.

“இப்போ சொல்லுங்க அரங்கநாதன், உங்களுக்கும் மயூரனுக்கும் இந்த ஹோட்டல் பிஸ்னஸ் மட்டும் தானா?…” என்றதும் உடனே சுதாரித்த அரங்கநாதன்,

“நான் உண்மையை சொல்லிடறேன். என் பையனுக்காக பொண்ணு கேட்டு போனப்போ கிட்டத்தட்ட வற்புறுத்தி தான் இந்த டீல்ல என்னை இன்வால்வ் பண்ணினார் மயூரன். அந்த ஒரு மரியாதைக்காக அவரை காப்பாத்த நினைச்சேன். இதை தவிர எங்களுக்கு வேற எந்த சமபந்தமும் இல்லை…”

அரங்கநாதன் சொல்லிவிட்டு ஆமாம் என சொல் என்பதை போல மயூரனை பார்க்க மயூரனுக்கு அந்த சமிஞ்சை எதுவும் புரியவில்லை. அத்தனை கோபத்தில் இருந்தார்.

அரங்கநாதனோ தானாவது வெளியில் இருந்தால் மட்டுமே இதிலிருந்து தப்ப முடியுமா என பார்க்க முடியும். அப்படி இல்லை என்றால் கிடைத்த வாய்ப்பில் இந்தியாவை விட்டே சென்றுவிடும் முடிவில் இருக்க,

“அடபாவி எல்லா தப்புக்கும் கூட இருந்துட்டு, எல்லாத்துக்கும் திட்டம் போட்டு குடுத்துட்டு இப்ப ஒண்ணுமே தெரியாத மாதிரி பேசறியே? உன்னை எல்லாம்?…” என மயூரன் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ண ஆரம்பித்தார்.

“இவனும் தான், இவனும் என்னோட கூட்டு தான்…” என்ற மயூரனை அடக்கவே பெரும்பாடாக போனது.

“ஷ்ஷூ, இங்க கத்த கூடாது. இதுக்கே இவ்வளவு கத்தினா எப்படி?…” என்று மயூரனை சொல்லிய பாலா,

“நீங்க சொல்லுங்க அரங்கநாதன், நிஜமாவே இது மட்டும் தானா?…” என கேட்க அரங்கநாத கெஞ்சியேவிட்டார் அவனிடம் மெல்லிய குரலில்.

“உன் கால்ல விழறேன்டா, இதுக்கு மேல என்னடா வேணும்? தயவு செஞ்சு அந்த விஷயத்தை பேசிடாத….” என கேட்க அவரின் பேச்சு கேட்காத தூரம் தள்ளி பின்னால் வந்தான்.

“மை லார்ட், அரங்கநாதன் சொன்னதை போல அவங்க ரெண்டுபேருக்கும் இந்த ஒரு பிஸ்னஸ் மட்டும் இல்லை. இன்னும் ஒரு மிகப்பெரிய பிஸ்னஸ் இருக்கு. இந்த ஊர் உலகத்தோட பார்வையில இருந்து மறைவா…” என பாலா கூற,

“என்ன சொல்றீங்க பாலமுரளிகிருஷ்ணா? விளக்கமா சொல்லுங்க…” என்றார் நீதிபதி. மதிய உணவு நேரம் வேறு நெருங்கிக்கொண்டு இருந்தது.

“ஒரு நிமிஷம் யுவர் ஹானர்…” என்றவன் தனது அங்கே மொபைலை எடுத்து ஒரு மிஸ்ட் கால் மட்டும் கொடுத்து வைத்தான்.

“இப்போ வந்துடுவாங்க…”

“யார்?…”

“இந்த வழக்கோட முக்கியாமான சாட்சி. சொல்ல போனா இந்த வழக்கோட ஆதாரமே அவங்க தான்…” என்றவன்,

“திருச்சியில் இருக்கிற ஸ்பெஷல் கேர் ஹாஸ்பிட்டலோட ஒன் ஆஃப் தி ஷேர்  பெர்செனும், டாக்டருமான மிஸ்டர் சசிகரன் அரங்கநாதன். சன் ஆஃப் அரங்கநாதன்….” என்றான்.

மருத்துவமனையின் பெயருடன் மகனின் பெயரையும் கேட்டதும் சிலையாய் சமைந்து நின்றார் அரங்கநாதன்.

அவரின் பார்வை வாயிலிலேயே நிலைத்துவிட உள்ளே ஒரு சிறிய ப்ரீப்கேஸுடன் உள்ளே நுழைந்தான் சசிகரன்.

Advertisement