Advertisement

மின்னல் – 17

          அரங்கநாதன் மயூரனுக்கு எந்த வித உதவியும் செய்ய முடியாமல் பாலாவை அவஸ்தையுடன் பார்த்தார்.

“சொல்லுங்க மயூரன், அங்க எதுக்காக போனீங்க?…” என பாலா கேட்க மயூரனுக்கு பதில் சொல்ல முடியவில்லை.

சொன்னாலும் பிரச்சனை, சொல்லாவிட்டாலும் பிரச்சனை. என்ன செய்வது என திருதிருத்தவர் நீதிபதியை பார்க்க,

“மிஸ்டர் மயூரன்…” பாலா மீண்டும் அழைக்கவும் பல்லை கடித்துக்கொண்டு பொங்கி வந்த ஆவேசத்தை அடக்கியபடி,

“அங்க ஒரு கேஸ் ஆகிருச்சு…” என்றார்.

“ஓஹ், என்ன கேஸ்? அதையும் நான் கேட்காமலே நீங்க சொல்லிட்டா இன்னும் நல்லா இருக்கும்…” என்றான் பாலா.

இத்தனை பாடுபடுத்தும் இவனை இங்கேயே கொன்றால் தான் என்ன? எனும் கொலைவெறியுடன் மயூரன் பாலாவை பார்க்க அரங்கநாதன் எழுந்துவிட்டார்.

“அப்ஜெக்ஷன் மை லார்ட். இந்த கேஸ் பத்தின விசாரணைக்கு என் கட்சிக்காரர் வெளி மாநிலம் சென்ற விபரத்தை எதற்கு எதிர்கட்சிக்காரர் துருவுகிறார் என்று தெரியவில்லை?…” என சொல்ல,

“அப்போ அந்த கேஸ்க்கும் இந்த கேஸ்க்கும் சம்பந்தமில்லைன்னு சொல்றீங்களா அரங்கநாதன்?…” என பாலா.

“ஆமாம்…” அரங்கநாதன் என்றுவிட்டார் வேகமாக.

“அப்படியா?…” என்றவன்,

“எதை வச்சு சம்பந்தம் இல்லைன்னு சொல்றீங்கன்னு கொஞ்சம் விளக்கமா சொல்றீங்களா?…” என அவரையே பேச வைத்தான்.

“இப்ப அது தேவை இல்லாத விஷயம். இந்த வழக்கை பத்தி மட்டும் பேசினா போதும். இப்படி சம்பந்தமில்லாத விஷயத்தை வச்சு கோர்ட் நேரத்தை வீணடிக்கிறதை நான் விரும்பலை…”

அரங்கநாதன் சொல்லிவிட்டு நீதிபதியை பார்க்க பாலாவும் அவரிடம் திரும்ப அவர் மீண்டும்,

“அப்ஜெக்ஷன் ஓவர் ரூல்…” என்று சொல்லிவிட்டார்.

“தேங்க் யூ மை லார்ட்…” என்று சிரம் தாழ்ந்து நன்றி சொல்லியவன்,

“மயூரன்…” என்று பார்க்க,

“அங்க கட்டிட்டிருந்த பில்டிங்ல கலப்படம் இருந்ததா புகார் வந்தது….”

“வெறும் கலப்படம்ன்னு புகார் மட்டுமா?…” என நக்கல் குரலில் கேட்டவன்,

“முழுக்க நனைஞ்ச முடிக்கு ஹேர் ட்ரையர் போட்டு தான் ஆகனும் மயூரன். உங்களுக்கு அது கொஞ்சம் கம்மின்னு காத்தாட விட்டா எப்படி?…” என முன்னதை சத்தமாகவும், பின்னதை மெதுவாகவும் சொல்ல,

“திஸ் இஸ் ரெடிகுலஸ்…” என்று கொந்தளித்தார் மயூரன்.

“அட சொல்றா மனோகரா. இல்லன்னா நான் புட்டு புட்டுன்னு வச்சுருவேன். அடுத்து அதோட ஆதாரங்கள் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்…” என மீண்டும் நக்கலாக உதடசைக்காமல் அவர் பக்கமாய் சாய்ந்தே பாலா சொல்ல,

“அப்ஜெக்ஷன் யுவர் ஹானர். என் கட்சிக்காரரை சத்தமில்லாமல் மிரட்டுவதாக எனக்கு தெரிகிறது…” என அரங்கநாதன் எழுந்து நின்று கத்த,

“வாட் இஸ் யூர் ப்ராப்ளம் அரங்கநாதன்? இன்னும் பாலமுரளிகிருஷ்ணா தன்  வாதத்தை நிறைவு செய்யலை. அதுக்குள்ள எத்தனை முறை தலையீடு பன்றீங்க? இன்னொருமுறை இது போல செஞ்சா சிவியர் ஆக்ஷன் எடுக்க வேண்டி இருக்கும்…” என எச்சரித்துவிட அவமானத்துடன் அமர்ந்துவிட்டார்.

“யூ ப்ரசீட்…” என பாலாவிடம் சொல்ல,

“தேங்க் யூ மை லார்ட்…” என்றுவிட்டு மயூரனிடம் மீண்டும் திரும்பிவிட்டான்.

“ஹ்ம்ம், சொல்லுங்க…” என முகத்தில் அப்பட்டமான மிரட்டலே இப்போது பாலாவிடம்.

மிஸ்டரில் ஆரம்பித்து, வெறும் பெயரில் வந்து நின்று, இப்போது வெறும் சொல்லுங்களில் அவன் பேச அடுத்து என்னவோ என யோசிக்கும் நிலையில்  மயூரன்.

“முக்கால்வாசி கட்டிடம் கட்டி முடிஞ்ச ஸ்டேஜ்ல அந்த கட்டிடம் இடிஞ்சு விழுந்துருச்சு. அதுல சிலபேர் இறந்துட்டாங்க…”

“சிலபேரா? ஹ்ம்ம் அப்பறம்?…”

“அதுக்காக தான் போனேன்…”

“அது ஓகே, ஆனா அந்த கேஸை எப்படி ஹேண்டில் பண்ணுனீங்க? அதாவது அதுக்கு காரணம் யாருன்னு கண்டுபிடிச்சீங்களா?…”

“அது, நாங்க அங்க பொறுப்பில விட்டிருந்த மேனேஜர் காசுக்கு ஆசைப்பட்டு அந்த மாதிரி கலப்படம் செஞ்சிட்டான். அதுல அவன் லாபம் பார்க்க…”

“ஆஹாங், உடனே உண்மையை ஒத்துக்கிட்டாரா?…”

“ஆமா அவரே மனசு மாறி அப்ரூவர் ஆகிட்டார்…”

“அதெப்படி அத்தனை பேர் இறந்தப்போ மாறாத மனசு நீங்க போனதும் மாறிடுச்சு. உடனே அவர் அப்ரூவர் ஆகிட்டார். அவரோட பொண்டாட்டி  அக்கவுண்ட்ல சொளையா சில லட்சங்கள். இப்பவும் உங்க ஆபீஸ் அக்கவுண்ட்ல இருந்து அவங்களுக்கு மாச செலவுக்கு பணம் போய்ட்டிருக்கே?…” என்ற பாலா,

“அதுக்கான ஆதாரம் இதோ யுவர் ஹானர்…” என அதன் பேப்பர் படிவங்களை சமர்ப்பித்தான்.

“அது ப்யூச்சர் பில்டர்ஸோட சென்னை பிராஞ்ச் ஆபீஸ் பேங்க் அக்கவுன்ட் டீடெய்ல்ஸ்…” என்றதும் திடுக்கிட்டு அரங்கநாதனை மயூரன் பார்க்க அவருக்கும் இது எப்படி சாத்தியம்? என்றானது.

“யூ சீட்டர், ஏதோ போர்ஜெரி பன்ற. என்னோட அக்கவுன்ட் டீட்டெய்ல்ஸ் எல்லாம் உனக்கு?…” என கத்திய மயூரன் பாலாவின் முகத்தை பார்த்ததும் வாயை மூடினார்.  

“யுவர் ஹானர் எனக்கு நீங்க கொஞ்சம் நேரம் தரனும். இந்த கேஸ்ல இருக்கிற பல விஷயங்களை இன்னைக்கு எல்லாரும் கண்டிப்பா தெரிஞ்சுக்கனும். ப்ளீஸ். அதுக்கு நீங்க அனுமதி வழங்கனும்…” என பாலா தாழ்மையுடன்  கேட்டுக்கொள்ள,

“பர்மிஷன் கிராண்டட்…” என்றதும் தான் பாலாவின் முகத்தில் இன்னும் வெளிச்சம் கூடியது.

“தேங்க் யூ யுவர் ஹானர்…” என்றவன்,

“அந்த கேஸ்ல இருந்து தன்னோட தம்பியை வெளி கொண்டு வர தான் தன்னோட மேனேஜரை சரிக்கட்டி அப்ரூவரா மாற சம்மதிக்க வச்சுட்டு, அந்த பில்டிங் பொறுப்பை தனக்கு நம்பகமான ஒருத்தருக்கு ஒப்படைச்சு தன்னோட தம்பியை அந்த மாநிலத்தை மட்டுமில்லை இந்தியாவை விட்டே அனுப்பி வச்சிட்டார்…”

“இல்லை, அந்த கேஸ்ல நிஜமாவே என் தம்பிக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அவனை வெளிநாடு அனுப்பி வச்சது உண்மை தான். ஆனா அது காரணமில்லை…” மயூரன் சொல்ல,

“வெளிநாடு எப்போ அனுப்பி வச்சீங்க?…”

“அந்த இன்சிடன்ட் நடந்தப்போ அனுப்பி வச்சேன். சில நாட்கள் இருந்துட்டு வரட்டும்ன்னு…”

“ஏன் எதனால அப்படி? அதுவும் சில நாட்கள்?…”

“அவனை அன்வாட்டடா அந்த கேஸ்ல இன்வால் பண்ணினதால ரொம்ப டிப்ரெஷன்ல இருந்தான். அதனால தான்…”

“ஓஹ் இதெல்லாம் டிப்ரஷனா? அப்போ எக்கச்சக்க டிப்ரஷன் இருக்கும் போல?…” என்ற பாலா,

“சரி திரும்ப எப்போ வந்தார்? ஒரு ஒரு வாரம் இருக்குமா?…”

“ஆமா…” என மயூரனும் உளறிவிட,

“என்ன?…”

“ஆங் இல்ல. தவறி வந்திருச்சு. அவன் வந்து மூணு மாசம் ஆச்சு…”

“ஆமா பதட்டத்துல தவறிருக்கும் தான்…” என தலையசைத்தவன்,

“அப்போ நீங்க சொல்லி தான் உங்க தம்பி மிசஸ் சாலாட்சியையும், அவங்க கணவர் ராமமூர்த்தியையும் கொலை செய்ய முயற்சி செஞ்சிருக்கார் இல்லையா?…”

“இல்லை, அதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்படி ஒரு விஷயம் நடந்ததே அதுக்கப்பறம் தான் எனக்கு தெரியும்…” என மயூரன் மறுக்க,

“அதெப்படி மயூரன், உங்க தம்பியோட கால் ஹிஸ்டரில உங்க நம்பர் மட்டும் தான் இருக்கு. வேற யாரையுமே காண்டேக்ட் பண்ண கூட இல்லை. அப்பறம் எப்படி அவர் ஆட்களை ஏற்பாடு செஞ்சு? வேற எதுவும் போன் நம்பர் வச்சிருக்காரோ?…”

“அது எனக்கு தெரியாது….” என சொல்ல,

“அச்சோ அப்பப்ப மறந்து போய்டறீங்க பாருங்க. இப்ப பாருங்க…” என்றவன்,

“யுவர் ஹானர், மயூரனோட தம்பியை விசாரிச்சா இன்னும் சில உண்மைகள் தெரியவரும்…” என்றதும் அவனின் தம்பியின் பெயர் சொல்லி அழைக்கப்பட அவரும் வந்து சேர்ந்தான்.

“உங்க பெயர்?…” பாலா கேட்க,

“பரமேஷ்…”

“பாரின் ட்ரிப் எல்லாம் எப்படி போச்சு?…”

“அதெதுக்கு உனக்கு?…” என கோபமான பரமேஷ் நீதிபதியை பார்த்து,

“தப்பு என் மேல தான். என்னோட அண்ணன்கிட்ட நல்ல பேர் வாங்கனும்னு தான் இப்படி ஒரு காரியம் பண்ணிட்டேன். ஏற்கனவே என்னோட கவனிப்பு இல்லாததால தான் எங்க மேனேஜர் போர்ஜரி பண்ணி எங்களோட பில்டர்ஸ் நேம் ஸ்பாயில் ஆகிருச்சு…”

“அதனால தான் அவருக்கே தெரியாம நான் இதை பொறுப்பெடுத்துக்கிட்டேன். அவர் அந்த சாலாட்சியம்மா வீட்டை வாங்க முயற்சி பன்றார், முடியலைன்னு கேள்விப்பட்டு அதை நான் எப்படியாவது முடிக்கனும்னு தான் ரவுடிகளை கூட்டிட்டு போனேன்…”

“ஆனா அங்க நிலைமை கை மீறி நாங்க அடிச்சதுல அந்தாள் செத்துட்டார். அந்தம்மா தப்பிச்சுட்டாங்க. இப்பவும் அந்தம்மாவை கொலை செய்ய நான் தான் ஆளை அனுப்பினேன். எல்லா தப்பும் என் மேல தான். நான் குற்றத்தை ஒப்புக்கறேன்…”

“என் அண்ணனுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரை விட்டுடுங்க. எனக்கு எந்த தண்டனை வேணும்னாலும் குடுங்க…”

அரங்கநாதன் சொல்லிக்குடுத்ததை போல மனப்பாடம் செய்து வைத்ததை அட்சுபிசகாமல் ஒப்பிப்பதை போல சொல்லிவிட்டான் பரமேஷ்.

“கொலை செஞ்சு அந்த இடத்தை வாங்கிக்கற அளவுக்கு என்ன அவசியம் உங்களுக்கும் உங்க அண்ணனுக்கும்?…” என பால கேட்க மயூரன், அரங்கநாதன் இருவரும் பதறினார்.

இனியும் அமைதியாக வேடிக்கை பார்க்க முடியாதென வேகமாக அரங்கநாதன் எழுந்துவிட்டார் இருக்கையை விட்டு.

“யுவர் ஹானர், இப்போ உங்களுக்கு உண்மை தெரிஞ்சிருக்கும். உண்மையை பரமேஷ்வரே ஒத்துக்கிட்ட பின்னால மேற்கட்ட விசாரணைக்கு அவசியமில்லைன்னு நான் கருதுறேன். அதனால் குற்றவாளிக்கு தகுந்த தண்டனையை தாங்களே…”  என்ற அரங்கநாதன் பேச்சு நின்றது.

பாலாவை பார்த்து தன் வாதத்தை நிறுத்த அவன் இதழ்களுக்குள் அடக்கிய புன்னகையுடன் அவரை பார்த்துக்கொண்டு இருந்தான்.

“ஸாரி யுவர் ஹானர்…” என்று சொல்லி தானே சென்று அமர்ந்துகொண்டார்.

“ஹ்ம்ம், அப்போ இந்த தப்புக்கெல்லாம் நீங்க தான் காரணம்…” பரமேஸ்வரிடம் பாலா கேட்க,

“ஆமா, எனக்கான தண்டனையை குடுங்க. இந்த கேஸை முடிச்சிடுங்க…”

“பார்ரா, இங்க யார் வக்கீல்ன்னே தெரியாம போச்சு. கேஸை முடிக்கிறதுலையே நம்ம சின்ன பகவதி குறியா இருக்காரு. குறும்பு…” என்ற பாலா பேச அருகே நின்றவர்களுக்கு அத்தனை சிரிப்பு அவன் பேசிய விதத்தில்.

“யுவர் ஹானர், இங்கே முக்கியமான ஒரு சாட்சியை அழைக்க உங்க அனுமதி வேண்டும்…” என்று அவர் தலையசைக்கவும்,

“முத்துக்குமார்…” என்ற அழைப்பில் மயூரன் திடுக்கிட அரங்கநாதனும் இவன் என்ன செய்கிறான் என்று பார்த்தார்.

பதட்டம் ஒருபக்கம் இருந்தாலும் பரமேஷ்வர் இத்தனை உறுதியுடன் சொல்லியிருக்க எப்படியும் தன்னால் இதனை உடைத்துவிட முடியும் என நம்பிக்கையுடன் இருந்தார்.

அங்கே சாட்சி என வந்தவன் ஜீவா சொல்லிய பிரபாவின் கணவனான முத்துக்குமார்.

“முத்துக்குமார், இங்க நிக்கிறாரே இவர் யாருன்னு தெரியுமா?…” என மயூரனை காண்பித்து கேட்க,

“தெரியும்ங்க…” என்றான் அவன்.

“எப்படி தெரியும்?…” என்றதும் சிறு தயக்கத்தின் பின்னர்,

“நான் வேலை பார்க்கிற ஆஸ்பத்திரி மூலமா பழக்கம்ங்க…” என்றதுமே அரங்கநாதனுக்கு நெஞ்சு வலி வந்ததை போல் ஆனது.

‘இப்ப எதுக்கு அந்த ஹாஸ்பிட்டல் பத்தி இவன் பேசறான்?’ என உடல் கூறுகள்  எங்கும் ரத்த ஓட்டம் வேகமெடுத்தது.

பாலா அவரின் முக பாவனையை கவனிக்கவென்றே திரும்பி பார்த்தவன் புருவம் உயர்த்தினான்.

அவரோ அவனின் போக்கை கண்டுகொண்டவராக ‘வேண்டாம்’ என்பதை போல தலையசைக்க பாலாவின் முகம் இறுகியது.

“அந்த விஷயத்தை நான் பின்னால கேட்கிறேன். இதோ இவரை தெரியுமா?…” என பரமேஷை காண்பிக்க நன்றாக பார்த்தும் அவனுக்கு தெரியவில்லை.

“பார்த்ததா ஞாபகமில்லைங்க…”

“நல்லா யோசிச்சு சொல்லுங்க முத்துக்குமார். இவரை பார்த்ததா ஞாபகம் இல்லையா? இல்லை பார்த்ததே இல்லையா?…”

“இல்லைங்க, பார்த்ததே இல்லை…”

“ஓகே, இப்போ விஷயத்துக்கு வருவோம். அட்வகேட் அரங்கநாதனோட பண்ணை வீட்டுக்கு ரெண்டு மாசம் முன்னாடி எதுக்காக போனீங்க?…”

“வானம் ஆஸ்பத்திரில ஒரு அம்மா இருக்காங்க. அவங்களை அங்கயே வச்சு முடிக்க சொல்லி என்கிட்டே பேசினாங்க…”

“யார் பேசினது?…”

“இந்த வக்கீல் ஐயாவும், அந்தா நிக்கிறவரும்…” என மயூரனை காண்பிக்க,

“திரும்பவும் கேட்கிறேன். நல்லா யோசிச்சு…”

“இங்க பாருங்கய்யா? நான் என் பொண்டாட்டியவே இந்தாளுக்காக கொலை பண்ணிருக்கேன். அதுக்கு காரணமும் இவரு தான். அப்படி இருக்கும் போது  இவங்களை தெரியாதா எனக்கு?…” என்றவிட அத்தனைபேரும் அதிர்ச்சியுடன் பார்த்தார்கள்.

“மாட்டிக்கிட்டோம்ன்னு ஆகி போச்சு. தப்பு தான். செஞ்ச தப்புக்கு என்னைக்காச்சும் அனுபவிக்கனும்னு என் சம்சாரம் சொல்லுவா. நான் கேட்டேனா? இனிமேயாட்டும் புத்தியோட இருப்போம்ன்னு இருக்கேன்…”

“என்ன திடீர்ன்னு இந்த மாற்றம்?…”

Advertisement