Advertisement

மின்னல் – 16

           பாலாவும் பத்ரியும் சிரித்துக்கொண்டே கோர்ட்டுக்குள் செல்ல மெதுவாய் படியில் இறங்கினர்.

“ஆனாலும் ரொம்பதான் ண்ணா. உங்களை பார்த்தா தெறிச்சு ஓடறார். நிஜமா போன ஜென்மத்துல அவரை துரத்தி துரத்தி லவ் பண்ணிருப்பீங்க போல?…”

“ஓஹ், அதான் இந்த விட்ட குறை தொட்ட குறை…” என சிரித்த பாலா,

“இப்ப மட்டும் என்ன? அவர்கிட்ட ப்ரப்போஸ் பன்னிருவோமா?…” என்றான் கண்ணடித்து.

“ண்ணா…” பத்ரி அதிர்ச்சியானவன்,

“அதுவும் என்னையும் இதுல கூட்டு சேர்க்கறீங்க?…”

“ஆளு என்னோட ஓன் ப்ராப்பர்ட்டி. நீ சாட்சிக்கு மட்டும் தான். பயப்படாத…”

“ம்ஹூம், அவரை விடறதா இல்லை போல நீங்க? ஆனாலும் நல்லாருக்கு…” என சிரித்தான்.

“நீ ரொம்ப எதிர்பார்க்கிற போலயே? உன்னோட ஆசையை நிறைவேத்தின மாதிரியும் இருக்கும். அவர்கிட்ட என் மனசை திறந்த மாதிரியும் இருக்கும்…” என்றதும் இன்னும் பத்ரி சத்தமாய் வாய்விட்டே சிரித்தான்.

மனம் விட்டு சிரிக்கும் அவனை வாஞ்சையுடன் பார்த்த பாலாவிற்கும் அத்தனை நிறைவு.

“இப்ப டென்ஷன் போய்ருச்சா? சில்லாகிட்டியா?…” என பத்ரியின் தோள் மேல் கை போட்டு பாலா கேட்க,

“ஹ்ம்ம், இப்ப மைண்ட் ப்ரீயா இருக்கு ண்ணா. இதுக்கு மேலையுமா யோசிப்பேன். என்னால முடியும். அதான் நீங்க இருக்கீங்களே? இன்னைக்கு பாருங்க, நீங்களே விசிலடிப்பீங்க….”   என்று சொல்லவும் அவனின் தோளை தட்டிக்கொடுத்தான்.

“விசில் மட்டுமா? உன்னோட ஆர்க்யூமென்ட் பார்த்துட்டு நான் என் ஆளுவை பார்த்து எப்படின்னு கண்ணடிக்கனும், அரங்கு முன்னால கட்டி பிடிக்கனும். கோர்ட் முழுக்க ஆளை தூக்கிட்டு சுத்தி சுத்தி வரனும். அவ்வளோ சந்தோஷப்படுத்தனும் நீ…” என சொல்ல,

“அது சரி. உங்க போதைக்கு நான் ஊறுகாவா? நீங்க அவர் சோலியவே முடிச்சுருவீங்க போல?…”

“ஒரு லவ் பேர்ட்ஸ பிரிச்ச பாவம் உனக்கு வேண்டாம்டா. கண்ணு வைக்காத…”

“எல்லாம் சரி, ஆமா அதென்ன ஊடால அரங்குன்னு என்னமோ வந்துச்சே?…”

“அது ஒரு ஃப்லோவ்ல வந்திருக்கும். கண்டுக்காத…” என கண் சிமிட்டினான் அவனிடம்.

“இது என்ன எனக்கு டிங் டிங்? நான் ஒன்னும் உங்க ஆள் இல்லை…”

“இது ப்ராக்ட்டிஸ் டா. அப்பத்தான் அவரை அடிக்கும் போது ஸ்ட்ரகிள் இல்லாம கரெக்ட்டா கான்பிடேன்ட்டா அடிக்க முடியும்…”

“ஆமா இதுவரைக்கும் அடிக்காத மாதிரி தான். முடியலண்ணா உங்களோட…” என பத்ரி தன் தலையில் தட்டிக்கொண்டான்.

“ஓகே, ஓகே, லீவ் இட்…” என்ற பாலா புன்னகையுடன்,

“முதல் கேஸ் நம்மோடதா தான் இருக்கும் பத்ரி. நிச்சயம் அரங்கநாதன் தான் ஆர்க்யூ பண்ணுவார்…”

“ஹ்ம்ம் புரியுதுன்னா, இப்ப ஆளவந்தான் ஸார் ஜட்ஜ் ஆபீஸ் ரூம்க்கு போறதும் கூட அதன் காரணமா இருக்கலாம்…”

“குட். இது உனக்கு ரொம்ப ரொம்ப முக்கியமான ஆப்பர்ச்சுனட்டி. சும்மா அடிச்சு ஆடு. இன்னொரு முக்கியமான விஷயம்…”

“ண்ணா…”

“இந்த கேஸ் மூவ் ஆகறதுல அவங்களுக்கு வேற சான்ஸ் இல்லன்னா உடனே ஜாமீனுக்கு தான் அடி போடுவாங்க. அதுக்கு சின்ன சான்ஸ் கூட குடுத்திற கூடாது. இன்னிக்கே போலீஸ் கஸ்ட்டில எடுக்கனும். அடுத்த ஹியரிங் தீர்ப்பா தான் இருக்கனும்…”

“நம்மக்கிட்ட இவ்வளோ எவிடென்ஸ் இருக்கே ண்ணா. அப்ப இன்னைக்கு தீர்ப்பு?…”

“அதுக்கு விடமாட்டாங்கடா. நமக்கு தெரியாதா என்ன? ஆனா முயற்சி பண்ணுவோம்….”

“இந்த எவிடென்ஸ் எப்படி ண்ணா? எனக்கு உண்மையா நடுங்கிருச்சு…”

“சில உண்மைகள் நடுக்கத்தை மட்டுமா தரும்?…” என்ற பாலா,

“இன்னைக்கு பெரிய பிரளயமே நடக்கலாம். நீ தடுமாறாம பேசனும். இப்ப இதை மட்டும் பேசு. அடுத்த கேஸ் நமக்கு இதுதான்…”

“சத்தமே இல்லாம எப்படிண்ணா இதை கோர்த்துவிட்டீங்க? உண்மையா இந்த கேஸ்க்காக அந்த கேஸா? இல்லை கோ இன்சிடென்ட்டா? ப்ராப்பர் டாக்குமென்ட் கிடைச்சும் ஏன்?…” என பத்ரி பிரமிப்பு விலகாமல் கேட்டான்,

“கோ இன்சிடென்ட் இல்லை. ஆனா அப்படியும் சொல்லலாம். இப்படி ஒண்ணு நடக்குதுன்னு சில மாதங்களுக்கு முன்னாடி தான் தெரியும். தெரிஞ்சுக்க வேண்டிய சூழ்நிலை வந்துச்சு…” என்று பூடகமாக அவன் சொல்ல,

“என்ன ண்ணா?…” பத்ரி ஆர்வமாக கேட்டான்,

“சொல்றேன். சொல்றேன். அதையும் நாம சேர்ந்து தான் பண்ண போறோம்…” என்று சொல்ல பத்ரியின் முகம் மலர்ந்தது.

“செய்யலாம் ண்ணா…” என உத்வேகத்துடன் சொல்ல,

“கிருஷ்ணா ஸார்…” என யாரோ கூப்பிடும் குரலில் பாலா திரும்பினான்.

“ஸார்…” என மேல நின்றிருந்தவனிடம் என்னவென்று கேட்கும் கண நேரத்தில் யாரோ இடிக்க வர சுதாரித்து விலகியவன் தன்னில் மோத வந்தவனை பிடிக்கும் முன் அவனுடன் சேர்ந்து பத்ரி கீழே உருண்டிருந்தான்.

“பத்ரி…” என்ற சத்தத்துடன் பாலா நெருங்கும் முன் கீழே உருண்ட பத்ரியை அடித்துவிட்டு அவன் எழுந்து ஓட முயல,

“அவனை பிடிங்க…” என்ற பாலாவின் சத்தத்தில் ஒருசிலர் இடித்தவனை பிடிக்க விரட்டினார்கள்.  

இங்கே கீழே விழுந்த பத்ரியின் கன்னம் தரையில் உரசப்பட்டு மூக்கில் இருந்து ரத்தம் வடிய துவங்கியது.

“பத்ரி, பத்ரி…” என தன் மடி கிடத்தியவனுக்கு உயிரே இல்லை.

“ண்ணா, கேஸ்…” என்று சிரித்தவனை எழுப்பி நிறுத்தவும் முடியவில்லை.

அவனே ஆசைப்பட்டு இதை செய்கிறேன் என்ற நேரத்தில் இப்படி ஆகிவிட்டதே என பாலாவினால் அதனை கடக்க முடியவில்லை.

தனது காலில் பலமான அடி பட்டிருக்க கொஞ்சமும் நகர்த்தமுடியவில்லை பத்ரியால்.

“வலிக்குது ண்ணா…” என கசியும் விழிகளுடன் அவன் சொல்ல,

“ஒன்னும் இல்லடா. இப்ப ஹாஸ்பிட்டல் போய்டலாம்…” என்ற பாலா என்று அவனின் உடலில் எங்கேனும் அடி பட்டிருக்கிறதா என தடவ வயிற்றை கத்தி  கிழித்திருந்தது.

“பத்ரி…” பாலாவினால் தாளமுடியவில்லை.

“ண்ணா கேஸ்…” என்று சொல்ல,

“டேய் என்னடா?…” என்னும் பொழுதே ஆம்புலன்ஸ் வந்துவிட்டது.

“சொல்லிட்டே இருந்தேன்ல இதுக்கு நீங்க தான் சரின்னு…”

மெல்லிய குரலில் பத்ரி சொல்ல சொல்ல அவனை பத்திரமாக ஏற்றி அனுப்பி வைத்த பாலா ஆம்புலன்ஸ் வெளியேறும் வரை அதனை வெறித்தபடி நின்றான்.

அதே நேரம் அந்த கார் உள்ளே அதில் வந்து இறங்கியவரை பார்த்தவனுக்கு தந்து ரத்தமெல்லாம கொதித்தது.

“இல்லை இது நான் நிதானமாக இருக்கவேண்டிய நேரம்…” என தன்னை தானே அமைதிப்படுத்தினான்.

காரில் இருந்து இறங்கிய மயூரனோ பாலாவை பார்த்து திகைக்க அவனின் காரில் வந்த அரங்கநாதன் பாலாவை கண்டு முறைப்புடன் இறங்கி வந்தார்.

அதற்குள் பத்ரியை தாக்கியவனை காவல்துறை பணியாளர்கள் பிடித்திருந்தார்கள். அவனை கண்டு இன்னுமே பேரதிர்ச்சி மயூரனுக்கு.

அந்த அதிர்ச்சி முகமே பாலாவிற்கு திருப்தியை தந்தது. மயூரனை நெருங்கி வந்த பாலா,

“என்ன ம…” என்று ஆரம்பித்து,

“பேர் என்ன? வாய்லையே நுழையலை. உன்னை பார்த்தா கூட எனக்கு உன் பேர் ஞாபகம் வரலை. இந்த…” என தன் தலைமுடியை காண்பித்து,

“இதான் ஞாபகம் வருது. தப்பு பண்ணிட்டியே மிஸ்டர் தயிர்…” என்று சொல்ல,

“என்னடா தப்பிச்சிட்டோம்னு தெனாவெட்டா? இன்னைக்கு தப்பிச்ச? ஆனா இதே மாதிரி…”

“நீ முதல்ல இன்னைக்கு தப்பிக்கிறியான்னு பாரு தயிரு….” என்று பேசியவனை கண்ட அரங்கநாதன்,

“கிருஷ்ணா யார்க்கிட்ட பேசறோம்ன்னு பார்த்து பேசு. மரியாதை முக்கியம். அவர் என்னோட சம்பந்தி…” என அவனை எச்சரித்தார்.

“ஓஹ் அதான் எல்லா தப்புகள்ளையும் சமபந்தியா மிஸ்டர் அரங்கநாதன்…”

“கிருஷ்ணா…” என இரைந்தார் அரங்கநாதன்.  

“ஷ்ஷ். யாருக்கு  மரியாதை? இவனுக்கா? இல்ல இவன் கூட நிக்கிற உனக்கா?…” என்று ஒருமையில் சொல்லிவிட அரங்கநாதன் ஆடிபோனார்.

“கிருஷ்ணா…”

“நானே தான். பாலமுரளிகிருஷ்ணா. இன்னைக்கு பார்க்கத்தான போறீங்க? தப்பு பண்ணிட்டீங்க. பெரிய தப்பு பண்ணிட்டீங்க. வெய்ட் அன்ட் ஸீ…” என சொல்லியவனின் முகத்தின் ரவுத்திரம் எதிரிலிருந்தவர்களை மோசமாய் சுட்டெரித்தது.

“இவனுக்கா பாவம் பார்த்தீங்க?…” என மயூரன் அரங்கநாதனை அதிருப்தியுடன் பார்க்க,

“நான் பாவம் பார்க்கலை. ஆனா அவனை ஒன்னும் பண்ண முடியாது. அதான் முயற்சி செய்யலை…” என்ற அரங்கநாதன்,

“சொன்னா கேட்கவே மாட்டீங்களா? இப்ப தேவை இல்லாம நமக்கு தான் கஷ்டம்…”

“ஏன் உங்க மேல உங்களுக்கே நம்பிக்கை இல்லையா?…”

“அப்படி சொல்ல வரலை…” என்ற அரங்கநாதனுக்கு வார்த்தை வரவில்லை.

“செய்யிறதை சரியா செஞ்சிருந்தா அட்லீஸ்ட் பத்ரியை எமோஷனலா உடைச்சிருக்கலாம் முதல்ல. அடுத்து அவனை எப்படி திணறடிக்கனும்னு எனக்கு தெரியும்…”

“இப்போ மட்டும் என்ன? பத்ரி இவனுக்கு வேண்டப்பட்டவன் தானே?…”

“இருக்கலாம். ஆனா இவன். ம்ஹூம், அவன் சொன்ன மாதிரி நாம இவனை சீண்டி விட்டு இப்ப இன்னும் பெரிய பிரச்சனையில மாட்டிக்கிட்டோம். கண்டிப்பா பெருசா எதாச்சும் செய்வான்…” என நொந்துகொண்டார்.

Advertisement