Advertisement

மின்னல் – 15

            நள்ளிரவு கடந்தும் பாலா ஜீவன்யாவை தேடி வரவில்லை. வேலைகள் முடிந்து இரவு பணி ஆட்கள் மட்டும் அங்குமிங்குமாக தெரிய வர ஜீவாவிற்கு உறக்கம் வருவதை போலிருக்கவும் வானதியை பார்த்தாள்.

“என்ன, டீ வேணுமா?…” வானதி அவளின் பார்வையை கண்டு கேட்க,

“ஹ்ம்ம், டீ சொல்லு. முகத்தை கழுவிட்டு வரேன். தூக்கம் வர மாதிரியே இருக்கு…” என ஜீவா எழுந்துகொள்ள,

“வர வர நைட் ஷிப்ட்ல ஓயாம முகத்தை கழுவுற. இதுதான் அதிகமா கனவு காண கூடாதுன்றது…” வானதியின் கிண்டலில் அவளை முறைத்துவிட்டு சென்றவள் முகத்தை கழுவிவிட்டு வந்தாள்.

“இப்பதான் கிருஷ்ணா ஸார் கிளம்பினார்…” வேண்டுமென்றே வானதி கூற,

“தேடி வந்தாரா? கூப்பிட்டிருக்கலாம்ல. என்ன சொன்னார்?…” என வேகமாய் ஜீவா கேட்கவும்,

“நீயாடி இது?…” என வானதி சிரித்துவிட்டாள்.

வானதியின் இந்த கேலியில் மனம் சுணங்கினாலும் முகத்தில் அத்தனை தெளிவில்லை.

ஏமாற்றத்துடன் அமர்ந்தவளுக்கு தன் உணர்வுகளை வானதியிடம் வெளிப்படுத்தவும் முடியவில்லை.

“ஜீவா சும்மா விளையாட்டுக்கு தானே? என்ன இது?…” என்று அவளின் தோளோடு லேசாய் அணைத்துக்கொள்ள,

“ம்ஹூம் அதுக்கில்லை. என்னால எதுவும் உன்கிட்ட சொல்ல முடியலை…”

“அதனால என்ன? அதை தெரிஞ்சா தான் உன்னோட இருப்பேனா நான்? நீ எதுவும் சொல்ல வேண்டாம். உன்னை நீயே கஷ்டப்படுத்திக்கவும் வேண்டாம்….”

“ஆனா நீ கோச்சுக்கிட்டியே?…”

“ஆமா, உன்னை பத்தினதை இன்னொருத்தர் வந்து எனக்கு சொல்றாங்க. ஆனா எனக்கு நீ சொல்லலை…”

“அது…”

“ரீசன் வேண்டாம். நீ எல்லாமே எக்ஸ்ப்ளைன் பண்ணனும்னு இல்லை. அது உன்னோட பர்ஸனல். அட்லீஸ்ட் இப்படின்னு மேலோட்டமா லைட்டா சொல்லிருந்திருக்கலாம்….”

“அன்னைக்கு இருந்த டென்ஷன்ல சொல்ல முடியல…”

“இருக்கலாம். ஆனா ஏன் லேட்ன்னு வந்தப்போ கிருஷ்ணா கூப்பிட்டு ஸார் பேசினார்ன்னு சொன்னா நான் என்ன சொல்ல போறேன்? இல்லை என்ன பேசினார்ன்னு கேட்கவா போறேன்? எனக்கும் இங்கிதம் தெரியும் ஜீவா…”

“ஹ்ம்ம்…” என்றாள் மெல்லிய குரலில்.

“ஓகே, ஓகே அதை விடு. திரும்ப எதுக்கு பேசிக்கிட்டு…” என்னும் பொழுதே சரோஜா வந்துவிட்டார் அங்கே.

“வானதி லாஸ்ட் வீக் லெட்ஜர் எங்க?…” என கேட்க உடனே ஜீவா அவரை திரும்பி பார்த்தார்.

“மார்னிங் ஷிப்ட்லயே குடுக்க சொல்லிட்டு போனேன். இன்னும் தரலை. நல்லா பார்க்கறீங்க வேலை…” என கடுகடுப்பாய் அவர் சொல்ல ஜீவா அமைதியாக இருந்தாள்.

“இதோ இப்ப எடுத்து தரேன் மேம். நீங்க கேட்டது தெரியாதே…” என வானதி லெட்ஜரை எடுக்க,

“மார்னிங்கே வந்தேன். அதுக்குள்ளே தான் ரெண்டுபேரும் கிளம்பிட்டீங்களே. இப்பலாம் நினைச்ச நேரம் கிளம்பிடறது. கூட அரைமணி நேரம் இருந்தா என்னவாகிடும்?…” என்று வேண்டுமென்றே சரோஜா காயப்படுத்தி பேச ஜீவா வாயை திறக்கும் முன்,

“மார்னிங் ஷிப்ட் ஸ்டாஃப்ஸ் வந்துட்டாங்க மேம். அதுக்கப்பறம் நாங்க எப்படி இருக்க முடியும்? ரிசப்ஷன்ல ரெண்டு பேர் தானே இருக்கனும்? எங்க டைம்க்கு கரெக்ட்டா வந்திடறோம்…” என வானதி சொல்ல,

“ஓஹ் எல்லாம் டைமிங் தானா உங்களுக்கு? எனக்கே ரூல்ஸ் சொல்லி குடுக்கற?…” என்றார் நக்கலாய் சரோஜா.

“மேம்…” என வானதி பேச,

“இரு வானதி…” என அவளின் கை பிடித்த ஜீவா,

“கூட இருக்கிறதை பத்தி எங்களுக்கு ஒண்ணுமில்லை மேம். இனிமே நீங்க சொல்ற மாதிரி இருந்துட்டே போறோம். நாளையில இருந்து கூட எவ்வளோ நேரம் இருக்கனும்னு சொல்லுங்க…” என சொல்லிவிட,

“அந்தளவுக்கு ஆகி போச்சு. இல்ல. நான் கூட உன்னை பாவமேன்னு நினைச்சுட்டேன்…” என்றார் ஜீவாவை பார்த்து எள்ளலாய்.

“பாவப்பட்டவங்க தான் மேம். இங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொருத்தர் பார்வையிலையும் பாவப்பட்டவங்க தான். உங்க பார்வையில நான் பாவப்பட்டவ. இருந்துட்டு போறேன். எனக்கு அதுல எந்த குறைச்சலும் வந்திடாது…”

“பேசவும் பழகிட்ட…”

“கேள்வி கேட்டுட்டு பதில் சொல்லலைன்னா திமிர், அகம்பாவம், திண்ணக்கம்ன்னு சொல்றீங்க. கேட்டதுக்கு பதில் சொன்னா பேச பழகிட்ட. என்ன தான் செய்யனும் மேம்?…”  

தன் வார்த்தைகளில் அவளின் வாழ்க்கையின் வலியை காண்பித்து கொண்டிருந்தாள் ஜீவா.

“நான் என்ன பேசறேன்? நீ என்ன பதில் சொல்ற?…” சரோஜாவிற்கு அத்தனை டென்ஷன். 

“நீங்க கேட்டதுக்கு தான் மேம் பதில். உங்க மேல பெரிய மரியாதை வச்சிருக்கேன். இப்பவும் அது முழுமையா இருக்கு. என்மேல ஏதோ கோவத்துல நீங்க என்னை பேசறது தான் கஷ்டமா இருக்கு…” என்றவள்,

“நீங்க இல்லன்னா இங்க நான் இல்லை. அதை நான் என்னைக்கும் மறக்க மாட்டேன். என்னை திட்டனும்னா நீங்க நேரடியாவே திட்டலாம். ஆனா இதுவரைக்கும் நீங்க செய்யாததை செஞ்சு, அதுக்கு நான் காரணமாகி. ப்ளீஸ் மேம், எனக்கு மனசுக்கு கஷ்டமா இருக்குது…” என ஜீவா சொல்லவும் திகைத்துவிட்டார்.

உண்மை தானே? இத்தனை வருட அனுபவத்தில் இங்கே வேலை பார்ப்பவர்கள் யாரையுமே தனிப்பட்ட விதத்தில் எந்தவித பேச்சுக்களையும் பேசியதில்லை.

இன்றைய தனது பேச்சு எத்தனை கீழ்த்தரமான அர்த்தத்தில் இருந்தது என்பதை உணர்ந்தவருக்கு உள்ளம் திடுக்கிட்டது.

தான் பார்த்து வேலைக்கு சேர்த்த பெண் தனக்கும் மேலான ஒரு முக்கியத்துவமான இடத்திற்கு சென்றதை ஏதோ ஒருவகையில் மனது ஜீரணிக்கவில்லை.

அன்று தன்னுடைய பேச்சையும், அறிவுரையையும் எடுத்துக்கொள்ளாமல் அடுத்த நொடியே பாலாவிடம் சென்று அவள் நின்றதும், பாலா அதற்கு தன்னிடம் பேசியதும் என அவமதிப்பாக நினைத்தவருக்கு இன்று ஜீவா பேசியது தான் உண்மையான அவமானமாக இருந்தது.

ஒரு சிறுபெண் தன்னை உணர்த்திக்காட்டி பேசிய விதத்தில் உள்ளுக்குள் சிறுத்து போனவர் எதுவும் பேசாமல் அங்கிருந்து திரும்ப அவர் கண்பார்வைக்கு படுமிடத்தில் பாலா நின்றிருந்தான்.

அவனை பார்த்ததுமே திடுக்கிட்ட சரோஜா ஜீவாவை பார்க்க அவள் வேறு திசையில் பார்த்துக்கொண்டு இருந்தாள். வானதி அவளுக்கு என்னவோ சமாதானமாக சொல்லிக்கொண்டிருந்தாள்.

வாங்க வந்த லெட்ஜரை மறந்துவிட்டு சரோஜா நகர போக வானதி தான் மீண்டும் அழைத்தாள் அவரை.

“மேம் லெட்ஜர்…” என்று எடுத்து நீட்ட,

“ஹ்ம்ம்…” என வாங்கிகொண்டார்.

அப்பெண்கள் இருவரும் இன்னும் பாலாவை கவனிக்கவில்லை என்பதும் புரிந்தது அவருக்கு.

மன்னிப்பு கேட்க கூட முடியவில்லை. எங்கே இப்போது கேட்டால் அதுவும் பாலாவை பார்த்ததனால் என நினைத்துக்கொள்வார்களோ என லெட்ஜரை வாங்கிவிட்டு சென்றுவிட்டார்.

பாலா அவரை நிறுத்தி ஏதேனும் பேசுவானோ என பார்க்க அவன் எதுவும் பேசவும் இல்லை. அவரை பார்த்த பார்வையை அகற்றவும் இல்லை.

என்ன நினைத்து பார்க்கிறான் என கண்டுபிடிக்கமுடியாத விதமாய் இருந்தது. கோபமோ, இவ்வளவு தானா நீயும் என்னும் விதமாகவோ எதுவும் இல்லை.

ஆனால் ஒன்றுமட்டும் புரிந்தது. அவன் தன் மீது வைத்திருந்த அபிமானம் நிச்சயம் கீழிறங்கி இருக்கும் என்று.

தன்னை குறித்தே வருத்தத்துடன் தன்னுடைய அலுவல் அறை நோக்கி சென்றுவிட்டார் சரோஜா.

அவர் சென்று இரண்டு நிமிடம் கழித்தே பாலா அங்கே வந்து நின்றான் ஜீவாவுக்கும், வானதிக்கும் தெரியும்படி.

“வாங்க கிருஷ்ணா ஸார்…” என வானதி இலகுவாக சொல்ல ஜீவாவால் முடியவில்லை.

ஆனால் அவனிடம் எதையும் காட்டிக்கொள்ள கூடாதென நினைத்து லேசாய் புன்னகைத்தாள்.

“ரிலாக்ஸா இருக்கிற மாதிரி தெரியுதே?…” என்று பாலா கேட்க,

“அப்படியெல்லாம் இல்லைன்னு சொல்ல மாட்டோம் ஸார். டே டைம்ல ரிலாக்ஸ் பன்ற நேரம் ரொம்ப கம்மி. அதுவும் எப்போவாவது தான். ஆனா நைட் ஷிப்ட் கண்டிப்பா ரிலாக்ஸ் பண்ண டைம் கிடைக்கும்…”

வானதி படபடவென்று பேச ஜீவாவை பார்த்துக்கொண்டே அவளின் பேச்சிற்கு தலையாட்டினான்.

“என்ன முகமே டல்லா இருக்கு?…” ஜீவாவை கேட்க,

“தூக்கம் வர மாதிரி இருக்கு. அதான்…” அவள் குரலே உள்ளடங்கி இருந்தது.

அவன் முகம் பார்த்து பேச முடியவில்லை ஜீவாவால். அதிலும் சற்று முன் சரோஜா பேசிவிட்டு சென்றது இன்னும் மனதை விட்டு அகலவில்லை.

“தூக்கம் வந்தா ட்யூட்டி நர்ஸ் யாராச்சும் ப்ரீயா இருந்தா வந்து உன் சீட்ல இருக்க சொல்லிட்டு நீ ஒன் ஹாவ்ர் ரெஸ்ட் எடுத்துட்டு வா…” என்றான்.

“இல்லை தூக்கம் போயிருச்சு. தூக்கம் இப்ப வரலை…” என்னும் பொழுதே அவர்களுக்கான டீ ப்ளாஸ்க்கில் இரு கப்களுடன் வந்துவிட்டது.

“ஸார் உங்களுக்கு…” என கொண்டுவந்தவர் கேட்க,

“ஒரு கப் மட்டும் கொண்டு வாங்க. இதுலையே ஷேர் பண்ணிப்போம்…” என்று அனுப்பினான்.

எப்போதும் எந்த மருத்துவமனையில் உணவிற்கென கேண்டீன் இரவும் செயல்படும்.

அவசரத்திற்கோ, வேலை செய்பவர்களுக்கோ என்று அவர்கலும் இரவு பணியில் இருப்பதனால் எந்த நேரமும் எல்லாம் கிடைக்கும்.

Advertisement