Advertisement

மின்னல் – 2

           பாலா அரங்கநாதன் அலுவலகத்தில் இருந்து கிளம்பியவன் பத்ரியை அவன் சொன்ன இடத்தில் இறக்கிவிட்டுவிட்டு வானம் மருத்துவமனையை நோக்கி காரை செலுத்தினான்.

ஆனால் மூளை மட்டும் அரங்கநாதன் அலுவலகத்தில் நடந்தவற்றையும், அவரின் பார்வையின் பின்னால் ஒளிந்திருந்த பாஷைகளை பற்றியுமே ஆராய்ந்துகொண்டு இருந்தது.

ஓயாத பரீசீலனை மனதிற்குள். இதுவல்ல அது, அதுவல்லவென்றால் எது என அனுமானங்கள் புத்தம் புதிதாய் சில அவதாரங்களை எடுத்துக்கொண்டு இருந்தது.

மாலை நேரம் மயங்கி இருளும், நிலவும் வலம் வர கத்திருக்க செஞ்சாந்துகள் பூசியவிதமாய் மேகங்கள் நிறம் மாறி இருக்க அந்த ஏகாந்த நேரத்தில் மருத்துவமனை வளாகத்திற்குள் அவனின் கார் நுழைந்தது.

காரை நிறுத்திவிட்டு சாவியை கைகளால் சுழற்றியபடி உள்ளே நுழைந்தவன் நேராக சென்றது ரிசப்ஷனுக்கு தான்.

“எக்ஸ்யூஸ்மீ…” என்றதும் கணினியின் முன் அமர்ந்திருந்தவள் அந்த குரலில் வேகமாய் நிமிர்ந்தாள்.

அவனை பார்த்ததும் சட்டென்று அத்தனை கோபத்தையும் அவளின் முகத்தில் கொண்டுவந்து முறைப்பை காட்டாத விதமாய் மறைத்துக்கொண்டு சாதாரணமாய் அவனை ஏறிட்டாள்.

“எஸ் ஸார்…” என்றதும்,

“நம்பர் டூ ட்வெண்டி ஃபோர்ல இருக்கற பேஷண்ட் டிஸ்சார்ஜ் சம்மரி பத்தி பேசனும்…” என்றதும் என்ட்ரியை தட்டினாள்.

“எங்களுக்கு மேனேஜ்மென்ட்ல இருந்து எந்த டிஸ்சார்ஜ் பத்தி ஆடரும் இன்னும் வரலை. சோ நீங்க சம்பந்தப்பட்ட டாக்டர்கிட்ட பேசுங்க…” என்றாள்.

“ஓகே…” என சொல்லி நகர,

“ஹலோ ஸார், நாளைக்கு பேசுங்க. இப்போ விசிட்டர்ஸ் டைம் முடிஞ்சது…”

“ஆஹாங், எனக்கு அது தெரியாது பாருங்க…” பாலாவின் முகத்தில் அத்தனை விஷமம்.

“ஜீவா பேசாம இரு…” என வானதி அவளை பார்க்க,

“நீ சும்மா இரு…” என அவளை அதட்டினாள் ஜீவா.

“விசிட்டர் டைம் இவருக்கு மட்டும் இல்லையாமா?…” என்றவளின் சிடுசிடுப்பு அவனை பாதிக்கவில்லை.

அவள் வந்த நாளில் இருந்து கவனித்துகொண்டு தானே இருக்கிறான். பெரிதாய் எந்த வருத்தமும் இல்லை அவளின் கோபத்தில்.

“ஓகே, நான் அந்த ரூம்க்கு போறேன். ட்யூட்டி டாக்டர் வந்தா நான் வந்திருக்கேன்னு இன்பார்ம் பண்ணிருங்க…” என்று நகர்ந்துவிட்டான் இதழ்களுக்குள் அதக்கிய புன்னகையோடு.

அவனின் அந்த கேலி சிரிப்பை கண்டுகொண்டவள் பற்களை நறநறவென கடித்தாள்.

“ஜீவா என்னடி இது? எதுக்கு இப்ப இவ்வளோ டென்ஷன் ஆகற? உட்கார்…” என வானதி சொல்ல,

“எப்படி சிரிச்சுட்டு போறான் பாரு…” என்றாள் கடுப்புடன்.

“அவர் சாதாரணமா இருக்கறது கூட உனக்கேன் இப்படி தெரியுது? ஸார் எப்பவும் ஜோவியல் டைப்…” வானதியின் பேச்சு அவளின் காதில் விழுந்தால் தானே?

அமைதியாக வேலையை பார்ப்பதை போல இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு உதறல் இருந்துகொண்டே இருந்தது.

‘யார்? யார்? என்னை தெரிஞ்சவங்க இங்க யாருமில்லை. இங்க நான் இருக்கிறதும் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. எப்படி நான் இங்க இருக்கேன்னு தெரிஞ்சது?’

மனதில் கடுமையான நினைவுகள். விழிகளில் விஷமாய் கொட்டும் நிகழ்வுகள் படமாய் வந்து போயின.

தன்னை அமைதிப்படுத்த முடியாத விஷயங்கள் நிதானமிழக்க செய்ய முகமே மாறிவிட்டது அவளுக்கு.

ஜீவா…” வானதியின் அழைப்பில்,

“வாஷ் ரூம் போய்ட்டு வரேன். டூ மினிட்ஸ்…” என எழுந்து சென்றுவிட்டாள் ஜீவன்யா.

அந்த அறக்கட்டளை மருத்துவமனைக்கு அவள் வேலைக்கு வந்து ஒருவருடம் போல் ஆகவிருக்கிறது. இன்றளவும் புரிந்துகொள்ளமுடியாத புதிர் தான் ஜீவா.

பெயரில் தான் ஜீவன் இருகிறதே தவிர ஜீவாவின் மொத்த உயிரும் அவளின் தங்கையிடம் தான் இருந்தது.

இத்தனை நாளாக ஒன்றாக வேலை பார்த்து வருகின்றனர். அருகருகே குடியிருப்புகள்.

வேலை செய்பவர்களுக்கென கட்டி தந்திருந்த வானம் குழுமத்தின் குடியிருப்புகள் அவை.

அதில் தான் ஏனையோர் வசித்து வருகின்றார்கள். வானதி தன் தாயுடன், ஜீவன்யா தன் தங்கையுடன்.

தாய் தகப்பன் இன்றி பெண் பிள்ளைகள் மட்டும். சொல்லிக்கொள்ளும் சொந்தங்கள் என எவரும் இல்லை.

அடைக்கலமென தஞ்சம் புகுந்திருந்தார்கள் அந்த பாதுகாப்பு அரணுக்குள். ஆனாலும் இன்றளவும் அந்த பாதுகாப்பை அவள் உணரவில்லை.

நெருக்கமாய் யாரிடமும் பேசாதவள், நெருங்காதவள். முதலில் வானதியுமே பேச யோசித்து பின் இவள் சுபாவமே இதுதான் போலும் என பழகி வர அந்த எல்லையில் இருந்த நட்பும் கூட பிடித்தது.

அவர்களுக்கு அன்று இரவு பணி. வந்ததில் இருந்தே டென்ஷனில் இருந்தவள் இப்போது பாலாவை பார்த்து இன்னுமே டென்ஷனாகி இருந்தாள்.

வானதிக்கு வேலைகள் இழுத்துக்கொள்ள மேனேஜ்மென்ட்டில் அந்த வார லெட்ஜரை ஒப்படைக்க வேண்டிய நாள் என்பதால் மீண்டும் அதனை சரி பார்த்துகொண்டு இருந்தாள்.

“வானதி, அம்மாவுக்கு ஒரு போன் செய்யேன்…” என ஜீவா வந்தமர,

“இப்ப பத்து நிமிஷம் முன்னாடி தானே பேசின? அதுக்குள்ளே என்ன?…” லெட்ஜரில் இருந்து பார்வையை விலக்கியவளாக வானதி கேட்டாள்.

“சரி நானே கூப்பிடறேன்…” என தனது மொபைலை எடுக்க உடனே பிடுங்கிக்கொண்டாள் வானதி.

“முதல்ல உட்கார். உட்கார் சொல்றேன்…” என்று அதட்ட,

“போனை குடு. நீ கால் பண்ணலை. நானே பண்ணிக்கறேன்…”

“திஸ் இஸ் டூ மச்…” வானதி சொல்லிக்கொண்டிருக்கையில் ஒரு நர்ஸ் வந்துவிட்டார்.

“என்ன என்னவோ தீவிரமான டிஸ்கஷன் போல? உங்களுக்குள்ள சண்டையா?…” என வந்தமர்ந்தார் அவர்.

“அதெல்லாம் இல்லை வினோ க்கா. சும்மா பேசிட்டு இருந்தோம். ஜீவா தலை வலிக்குதுன்னு சொன்னா. அதான் டீ குடிப்போமான்னு கேட்டுட்டு இருந்தேன்…” வானதி பேச்சை மாற்றினாள்.

நர்ஸ் வினோதினி நல்ல மாதிரி என்றாலும் எந்த விஷயமும் அவளின் வாயில் நிற்காது. பேச்சினோடு அப்படியே வந்துவிடும்.

“அப்படியா? அப்ப சரியான நேரத்துல தான் வந்திருக்கேன். எனக்கும் சேர்த்தே சொல்லிரு…”  என அவர் இன்னும் சாய்வாக அமர்ந்துகொண்டார்.

“நீங்க உங்க ரூம்லயே குடிக்கலாமே? ஏன் இங்க?…” சாதாரணமாக கேட்பதை போல ஜீவா கேட்டுவிட வினோதினிக்கு அது வித்யாசமாக படவில்லை.

ஆனால் அதற்கும் சேர்த்து வானதி முறைத்தாள் ஜீவன்யாவை. அதை புறம் தள்ளியவள் வினோதினி பதிலுக்கு பார்த்திருக்க,

“ஏன் இன்னைக்கு இங்க குடிச்சா டீ இறங்காதா எனக்கு? ரவுண்ட்ஸ் வந்தேன். அப்படியே இங்க வந்துட்டேன். கொஞ்சம் நேரம் ரெஸ்ட்…” என்றதும் ஜீவா அமைதியாகிவிட வானதியிடம் பேச ஆரம்பித்தார் வினோதினி.

பேச்சுவாக்கில் அத்தனை விஷயங்களும் வினோதினி தன்னை போல சொல்லிகொண்டு வர வானதியும் சுவாரசியமாக கேட்டுக்கொண்டாள்.

டீயை குடித்து முடித்து எழுந்துகொண்ட வினோதினிக்கு அங்கிருந்து செல்லவே மனதில்லை.

“பேசாம நானும் ரிசப்சனிஸ்ட் ஆகிடலாம் போல. இங்க எவ்வளோ அமைதியா இருக்குது…” என்று சொல்லிக்கொண்டார்.

பத்து மணி ஆகியிருக்க ஆள் நடமாட்டங்கள் குறைந்து வெறிச்சோடி இருந்தது அந்த ப்ளாக்.

“போங்க, போங்க. இக்கரைக்கு அக்கரை பச்சை. அவ்வளோ தான்…” என்றாள் வானதி கிண்டலுடன்.

“இந்த வீக் ஃபுல்லா நைட் ஷிப்ட்டா? முன்னாடி எல்லாம் ஜீவாவை நைட்ல பார்க்கவே முடியாது. லாஸ்ட் டூ மந்த்ஸ் ஜீவா வரா. எப்படி இந்த மாற்றம்?…” வினோதினி கிளம்புவதை போல தெரியவில்லை.

“இன்னும் கொஞ்சம் நேரத்தில நம்ம சரோ மேம் ரவுண்ட்ஸ் வருவாங்க. கேளுங்களேன் எப்படின்னு…” வானதி சிரித்துக்கொண்டே கிண்டலடிக்க,

“இதுக்கு என்னை போன்னு நீ விரட்டியிருக்கலாம்…” அப்போதும் சிரித்துக்கொண்டே சொல்லிய வினோதினி,

“நாளைக்கு நைட் இதே டைம்ல வந்திடறேன். ரிலாக்ஸா இருக்கு…” என பேசி கிளம்பிவிடவும் தான் மூச்சே வந்தது ஜீவாவுக்கு.

“இந்தாம்மா, நீயே பேசு…” என தானே தனது தாய்க்கு அழைத்துவிட்டாள் வானதி.

கொஞ்சம் விட்டால் அப்படியே போட்டது போட்டபடி கிளம்பி சென்றிருப்பாள் ஜீவன்யா. அதனாலேயே வினோதினியை பேசி அனுப்பிவைத்தாள் வானதி.

“என்னம்மா? பாப்பாட்ட குடுக்கனுமா?…” வானதியின் தாய் சோலையம்மாள் கேட்க,

“ஆமாம்மா, என்ன பன்றா? தூங்கிட்டாளா?…” ஜீவாவின் குரலில் பரபரப்பு.

“அது எங்க தூங்க? படுக்கமாட்டேன். அக்கா பேசட்டும்ன்னு உக்கார்ந்திருக்குது. இந்தா தாரேன்…”  என்று போனை அவர் தந்திருப்பார் போலும்,

“ஜீவாக்கா…”

“தென்றல், இன்னும் தூங்கலையா?…” என்றாள்.

“ஹ்ம்ம், இல்லை. தூக்கம் வரலை. என்ன செய்ய? சோலையம்மா கதை சொன்னாங்க. கேட்டேன். ஆனா தூக்கம் வரலை…”

“அவங்க எங்கயும் போக மாட்டாங்க. உன்னோடவே தான் தூங்குவாங்க. அதனால நிம்மதியா தூங்குவியாம். நாளைக்கு ஸ்கூல் இருக்குதுல…” என்றதும் அவள் பக்கம் மௌனம்.

“ஓகே, நைட் தூக்கம் வரலைன்னா, இல்லை எழுந்துட்டா எனக்கு கால் பண்ணு. நான் பேசறேன்…” என்றாள் வழக்கம் போல.

“சுத்தம்…” வானதி விளையாட்டாய் சலித்துக்கொண்டாள்.

Advertisement