Advertisement

“நீங்க இந்த கப்ல குடிங்க. அவங்க கொண்டு வரவும் நான் எடுத்துக்கறேன்…” ஜீவா சொல்ல,

“கொண்டு வரட்டும். இப்போ என்ன ப்ளாஸ்க்ல தானே இருக்கு? ஆறிடவா போகுது?…” என்றான்.

வானதியிடம் வேறு பேசிக்கொண்டிருக்க ஜீவாவிற்கு அவனிடத்தில் கேட்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் அவனை பார்ப்பதும், யோசிப்பதுமாய் இருக்க என்ன என்று புருவம் உயர்த்தினான் அவளிடம்.

“ம்ஹூம், ஒன்னுமில்லையே?…”

“என்னையே பார்த்திட்டே இருந்தியே. அதான் எதுவும் கேட்கனுமான்னு கேட்டேன்…” என்றதும் வானதி நமுட்டு சிரிப்புடன்,

“கப் வரவும் நீங்க டீ குடிங்க. நான் வாஷ் ரூம் போய்ட்டு வரேன்…” என எழுந்துகொண்டாள்.

“இப்ப எதுக்கு?…” ஜீவா அவளின் கையை பிடிக்க,

“எனக்கும் இப்ப தூக்கம் வருது. அதான் போய் பேஸ் வாஷ் பண்ணிட்டு வரேன்….” என கிளம்பினாள்.

“ஏய் வானதி…” என அவளை பார்த்துவிட்டு இவன் புறம் திரும்ப சிரிப்பில் உடல் குலுங்க தன் கன்னத்தை தாங்கியபடி நின்றான் பாலா.

“என்ன?…” என்றாள் முறைப்பை கையிலெடுத்தவளாக.

“என்ன என்ன?…” இன்னும் அதே குறும்பு புன்னகை தான்.

“ப்ச், உங்களால தான் அவ போய்ட்டா. ஏன் அப்படி கேட்டீங்க?…”

“நீ என்னை பார்த்த. நான் கேட்டேன். அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?…”

“தெரியாம பார்த்துட்டேன். கிளம்புங்க…” என கையை உயர்த்தி கும்பிட்டு காண்பிக்க குறும்பு மறைந்து பார்வை ரசனையாக மாறியது.

“கையை கீழ போடு ஜீவா…” என்றான் சன்னமான குரலில்.

“ஹாங்…” என அவனிடம் தென்பட்ட வித்தியாசத்தில் கைகளை கீழே இறக்கியவள் தன்னை ஆராய்ந்தாள்.

“இப்ப ஒண்ணுமில்லை. என்னை பார்த்து பேசலாம்…” சிரிப்பை அடக்கிக்கொண்டு பேசியவனை முறைத்து,

“கிளம்புங்க முதல்ல…” என சொல்ல,

“ஏன்?…”

“உங்ககிட்ட ஒண்ணு கேட்கலாம்ன்னா பேச்சும், பார்வையும் சரியில்லை…”

“நான் சரியா தான் இருந்தேன். நீ தான் என்னை சரியில்லாம பண்ணிட்ட…”

“நானா?…”

“ஆமா, இல்லையா என்ன? ஒழுங்கா தானே கேட்டுட்டு பேசிட்டு இருந்தேன்…” என பார்வையால் அவளின் செயலை காண்பிக்க,

“தெரியாம…” மீண்டும் கைகள் கும்பிட போக படக்கென்று மடியில் வைத்து அழுத்திக்கொண்டாள் கைகளை.

“சத்தமா கூட சிரிக்க முடியலை ஜீவா. உன்னோட…” என உதட்டை கடித்து புன்னகையை அடக்கினான்.

“அது தானா அப்படி வந்திருச்சு…” என்றவள்,

“இன்னைக்கு என்ன இவ்வளோ நேரம் இங்க இருக்கீங்க?…” என்றாள் பேச்சை மாற்றும் விதமாக.

“அத்தை பார்க்கனும்னு சொன்னாங்க. அதான் வந்துட்டேன்…”

“ஓஹ், அவங்க கேஸ் கோர்ட்க்கு என்னைக்கு வருது?…”

“இதை கேட்க தான் அப்படி பார்த்தியா?…”

“ம்ஹூம் அதுக்கில்லை. நீங்க போகும் போது சொல்லிட்டு போனீங்க. யாரோ மீட் பண்ணனும்னு சொல்றாங்கன்னு. அதான்…”

“அதுவா? நானே சொல்றேன்…”

“அவங்க உங்க அத்தை தானே?…”

“எவங்க?…”

“என்னை பார்க்கனும்னு சொன்னது?…”

“ம்ஹூம், இல்லையே…” என்றான்.

அவன் மறுத்து சொல்லவும் இப்போது யாராக இருக்கும் என யோசிக்க தொடங்கினாள் ஜீவா.

“ரொம்ப யோசிக்காத. நானே கூட்டிட்டு போறேன். ஆனா இப்போ இல்லை…”

“ஹ்ம்ம், சரி…”

“இதுக்கு தான் உன் ப்ரெண்ட் நம்மளை தனியா விட்டுட்டு போனாங்களா?…”

“வேற என்ன?…”

“ஹ்ம்ம், சுத்தம். நான் நம்ம கொலாபரேஷன் பத்தி பேசலாம்ன்னு நினைச்சா நீ கேஸ்ன்ற, அத்தைன்ற. விடிஞ்சிரும் போ…” என அவன் சொல்லியதும் சிரிப்புடன் தலையை தாழ்த்திக்கொண்டவள்,

“கேமரா இருக்கு. போங்க. கிளம்புங்க. இவ்வளோ நேரம் இங்கயா இருப்பீங்க?…” என விரட்ட,

“ஹ்ம்ம், இன்னும் டீ குடிக்கலை…” என்றதும் அவனுக்கு டீயை ஊற்றி கொடுத்தவள் தானும் எடுத்துக்கொண்டாள்.

பேசிக்கொள்ளாத மௌனம், இரவின் அமைதி, காற்றின் குளுமை, ரகசிய புன்னகை என இருவரும் அதனை ஆழ்ந்து அனுபவிக்க முதலில் குடித்து முடித்தவன்,

“பை…” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

ஒரு பெருமூச்சுடன் கப்பை கீழே வைத்துவிட்டு வானதியை தேட அவள் இன்னும் வந்தபாடில்லை.

அவளின் மொபைலும் அங்கே எங்கேயும் இல்லாதிருக்க அதற்கு அழைத்துவிட்டாள் ஜீவா.

“என்னடி முடிஞ்சதா?…” வானதியின் கிண்டல் பேச்சில்,

“உதை. ஒழுங்கா வா இங்க…” என அதட்டிவிட்டு போனை வைத்த பின்னும் முகத்தில் மலர்ந்த புன்னகை.

அதிலும் அவனின் பார்வை ஏற்படுத்திய சிறு கூச்சம் உள்ளுக்குள் குறுகுறுத்துக்கொண்டே இருந்தது.

“அப்பறம்? டீ எல்லாம் குடிச்சு முடிச்சாச்சு போல?…” என அவளின் முதுகில் வானதி தட்ட,

“உனக்கு இருக்கு. எடுத்துக்கோ…” என்றாள் ஜீவா.

இத்தனை மாதங்களில் ஜீவாவின் முகம் இத்தனை நிர்மலமாகவும், சந்தோஷமாகவும் இருந்து அன்று தான் காண்கிறாள் வானதி.

தனக்கே இந்த வித்யாசம் தெரியும் பொழுது பார்த்து பார்த்து விரும்பும் மனிதனுக்கும் தெரிந்திருக்குமே?

“என்ன கிருஷ்ணா ஸார் அதுக்குள்ளே போய்ட்டார்?…”

“வேலை இருக்காம்…”

“வாய்ப்பில்லையே. உன்னை இப்படி பார்த்துட்டு எப்படி போனார்?…”

“அடங்கு நீ. அதெல்லாம் இல்லை. சும்மா தான் பேசிட்டு இருந்தாங்க…”

“நிஜமாவா?…” வானதி இன்னும் சிரிப்புடன் கேட்க அந்த உணர்வே அடிவயிற்றில் கூச செய்தது.

புதிதாய் ஊற்றெடுத்த உணர்வில் ஜீவன்யா திண்டாடி போனாள். அவனின் பார்வையாகட்டும், அவனை குறித்தான இந்த கேலி பேச்சாகட்டும், அவளுக்கு ரசிக்கும்படியும், அதுவே வெட்கத்தின் முதல் படியாகவும் அமைந்தது.

“ப்ளீஸ் வானதி…” என சொல்லியவள்,

“டீயை குடி…” என பிளாஸ்க்கை நகர்த்தினாள்.

“ஹ்ம்ம், இதுவே ஸாரா இருந்தா உடனே ஊத்தி கப்பை கைல குடுத்திருப்ப?…”

“அச்சோ, என்னலாம் பேசற நீ?…” என்றவள் தானே ஊற்றி அவளுக்கு நீட்ட,

“அது. இதெல்லாம் சொல்லாம செய்ய பழகிக்கோ…” என சொல்லிய வானதி,

“சரோ மேம் பேசினதை பத்தி ஏதாவது சொன்னியா நீ?…” என்றாள்.

“ச்சே, ச்சே. அதை எப்படி சொல்ல? அதுவும் அவர்க்கிட்ட? அவங்க ஏதோ கோவம். பேசிட்டாங்க. இது நம்மோடயே இருக்கட்டும்…”

“ஹ்ம்ம்…”

“ஏற்கனவே நான் பேசினதுல மேம் ஹர்ட் ஆகிட்டாங்க போல. முகமே மாறிடுச்சு…”

“ஆனா நீ சரியா தானே கேட்ட. விடு. இவங்க இப்படி பேசுவாங்கன்றது தான் எதிர்பார்க்காதது…” என்றாள் வானதி.

இருவருமாக பொதுவாக பேசிக்கொண்டே இடையில் இருந்த வேலையோடு கடத்தினார்கள் அன்றைய பொழுதை.

—————————————–

அன்று வழக்கு. பாலாவின் முன்னால் அமர்ந்திருந்தான் பத்ரி. அவனை பார்த்திருந்த பாலாவின் முகம் அத்தனை இறுக்கம்.

“உன்னை வச்சு இந்த கேஸை ஜெயிக்கனும்னு நினைச்சேன். என் மூஞ்சில இப்படி கரியை பூசுவன்னு நான் நினைக்கலை…” என்றான் பாலா.

“அண்ணா ப்ளீஸ். சொல்றதை கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க. நீங்க இதுவரைக்கும் பட்ட கஷ்டம் என்னால் வீணா போய்ட கூடாது. அதுக்காக தான் சொல்றேன்…”

“அந்த அரங்கநாதன் கேட்பாரு, இவனை வச்சு ஜெயிச்சு காமிக்கிறேன்னு சொன்னியே, இவனை நம்பியா நீ களத்துல இறங்கினன்னு என்னை துப்ப போறாரு…” என்றான்.

“அண்ணா…”

“லாயர்ன்னு வெளில சொல்லாத. இன்னைக்கு நீ ஆஜர் ஆகற. அவ்வளோ தான்…” என்றவன்,

“இன்னும் எவ்வளவு நாள் தான் சும்மா சின்ன சின்ன கேஸை நடத்தி பொழப்பை ஓட்டுவ? உனக்குன்னு ஒரு பேர் வேண்டாமா?…” என்று கேட்டான்.

பத்ரிக்கும் வருத்தமாகவும், தன்னை குறித்தே அசிங்கமாகவும் இருந்து. ஆனாலும் தோற்றுவிட்டால் இதனால் பாலாவுக்கு இங்கே எத்தனை இறக்கமாக போகும் என்ற பயமே அவனை ஆட்டிப்படைத்தது.

“பயத்தை வெளில காமிக்காதன்னு எவ்வளோ சொல்றேன். உன்னை வச்சுக்கிட்டு…” என்ற பாலா,

“நிச்சயம் ஜெயிக்க முடியும்டா. நானும் அங்க தானே இருப்பேன். எவ்வளவு எவிடென்ஸ்…”

“எவிடென்ஸ் தான் ண்ணா. ஆனா?…”

“டேய் உனக்கு ஹோப் குடுக்கற மாதிரி ஒரு எவிடென்ஸ் காமிக்கட்டா?…” என்றவன் அவனின் மொபைலுக்கு அதை அனுப்பி வைக்க எடுத்து அதை பார்த்தவனுக்கு விழிகள் வெளியே விழுந்துவிடும் போல் இருந்தது.

“ண்ணா…” என அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாக பார்க்க,

“எப்படி இருக்கு? அத்தனை எவிடென்ஸ்க்கும் அப்பன் எவிடென்ஸ். இதையும் மீறியா தோத்திருவோம்ன்னு நினைக்க?…” என கண்சிமிட்டினான் பாலா.

“இதென்ன ண்ணா? எப்படி எப்படிண்ணா? அடிமடியில கை வைக்கிறதுன்றது  இதுதான்….”

“கை வைக்கிறோம்ன்றதா முக்கியம்? சரி அதை விடு. போலாமா? இன்னும் கொஞ்சம் நேரத்துல கூப்பிடுவாங்க. வா நாம போய் நம்ம டார்லிங்ஸோட மாஸ் என்ட்ரியை வேடிக்கை பார்ப்போம்…” என பாலா எழுந்துகொள்ள,

“எவ்வளோ கூலா இருக்கீங்க?…” என சிரித்தபடி பத்ரியும் எழுந்தவன்,

“டார்லிங்ஸா? எப்பவுமே உங்க டார்லிங் உங்க ஆளு தானே?…” என சிரித்தபடி சொல்ல,

“அவரை ஆளுன்னு சொல்ற உரிமை எனக்கு மட்டும் தான் இருக்கு…” என வெளியே வர அதே நேரம் அறையை கடக்க இருந்த ஆளவந்தான் மீது மோத அவர் அவன் மீதே சாய்ந்துவிட்டார்.

“வாட் எ போஸ்?…” என பத்ரி.

“போட்டோ எடுடா இவனே? பார்த்துட்டே நிக்கிற? இதெல்லாம் வேல்ர்ட்  ரெக்கார்ட்…” என்ற பாலா,

“என்ன ஆளு அங்கிள்?…” என அவரை பார்த்து குனிந்து கேட்க,

“போடா அங்கிட்டு…” என்று நிமிருவதற்கு பிடிமானமாய் அவன் முதுகை தடவினார்.

“எம்புட்டு இருக்குது ஆச, ஓ மேல அத காட்ட போறேன்…” என பாலா பாட விருட்டென அவனின் காலரை பிடித்து எழுந்து நின்றுவிட்டார்.

“உன்னை வச்சிக்கறேன் இரு, இரு…” என ஆளவந்தான் சொல்ல,

“இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா…” என தனக்கே பாடிக்கொள்ளவும் முறைப்புடன் அவர் செல்ல அடக்கமாட்டாத சிரிப்புடன் பத்ரியும், பாலாவும் ஹைபை கொடுத்துக்கொண்டார்கள்.

Advertisement