Advertisement

மின்னல் – 14

            பாலாவின் பேச்சை கேட்டுவிட்டு தனது காரில் ஏறி அமர்ந்த அரங்கநாதன் உடனே தனது சம்பந்திக்கு அழைத்துவிட்டார்.

“சொல்லுங்க அரங்கநாதன்…” என்ற அக்குரலில் சற்றே தயங்கினாலும் விஷயத்தை முழுவதுமாக சொல்லிவிட்டார் இவர்.

“இதுக்குத்தான் முன்னாடியே சொன்னேன், அவனை தூக்கிடறேன்னு. நீங்க தான் இழுத்தடிச்சீங்க. இப்ப எங்க வந்து நிக்குது பார்த்தீங்களா?…”

“அது முடியாது. ஆனா பாலா பின்வாங்கமாட்டான். எனக்காக குருதட்சணையான்னு கேட்டும் அவன் மனசு மாறலை…” என்றார் பல்லை கடித்துக்கொண்டு.

“விடுங்க. அவனை நான் பார்த்துக்கறேன்…”

“ஷேஷா…”

“அவன் என்ன பெரிய இவனா? அவனுக்கு மேல ஆள் பலம் என்கிட்டயும் இருக்கு…”

“தப்புக்கணக்கு போடறீங்க மயூரன். இந்த அவசரம் தான் வேண்டாம்ன்னு சொல்றேன். அந்த இடம் விஷயத்துல தான் என் பேச்சை கேட்காம அவசரப்பட்டு சிக்கலை உருவாக்கிட்டீங்க…”

“அரங்கநாதன், என்னை என்ன நினைச்சீங்க? ஒருதடவை சறுக்கினா என்னை என்ன ஒன்னும் ஆகாதவன்னு நினைச்சீங்களா?…” கோபத்துடன் ஆத்திரம் கொப்பளிக்க பதில் வந்தது மயூரனிடம் இருந்து.

“நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க. அமைதியா இருங்க…” என்றவர்,

“நீ வெளில வெய்ட் பண்ணு…” என ட்ரைவரை  காரை விட்டு இறங்க சொல்லிவிட்டார்.

யார் மீதும் நம்பிக்கை இல்லை. பாலாவை நம்ப முடியாது. அவன் யாரை வேண்டுமானாலும் பேசியே தன் வழிக்கு கொண்டு வந்துவிடுவான்.

“இப்ப சொல்லுங்க…”

“என்ன சொல்ல நீங்க தான் அமைதியா இருக்க சொன்னீங்க. என்னால முடியலை. அமைதியா எப்படி இருக்க? என்னோட தொழில் தாண்டி இது எனக்கு இது பெரிய அவமானம்…”

“அது இன்னும் அதிகமாகாம இருக்கனும்னா நான் சொல்றதை கேட்கிறதை தவிர வேற வழி இல்லை…”

“சொல்லுங்க…” என்றவரின் குரலில் அத்தனை கடுப்புகள்.

“இந்த கேஸ் பாலா ஜெயிச்சா விட்டுடுங்க…”

“என்ன? எவ்வளவு சுலபமா சொல்லிட்டீங்க?…”

“ஆமா எல்லாம் கடந்துடுச்சு. இனி நோ யூஸ்…” அவரே கைவிரித்துவிட,

“அவன் என்ன பெரிய இவனா? என்ன பண்ணிட முடியும்?…”

“அவனை குறைச்சு எடை போடறீங்க நீங்க? அறநிலையத்துறை அமைச்சர் அகத்தியனையே ஆட்சில இருக்கும் போதே வந்து பாருன்னவன். ஒருத்தன் பலசாலி, இன்னொருத்தன் புத்திசாலின்னு அவங்க சேர்ந்து இருந்தாலே டேஞ்சர். இங்க ரெண்டுமே ரெண்டுபேருக்கும் இருக்கு…”

“ம்ஹூம், என்னால பின்வாங்க முடியாது…”

“புரிஞ்சுக்கோங்க சம்பந்தி. முன்ஜாமீன் வாங்கினாலும் உடைச்சுட்டு கேஸ் நடத்த தெரிஞ்சவன். வாய்தாவுக்கே ஏன் விட்டுவச்சான்னு நான் அப்ப இருந்ததுல யோசிக்காம விட்டுட்டேன்…”

“ம்ஹூம், கோட்டை விட்டுட்டீங்க…” மயூரன் கோபத்துடன் சொல்ல,

“ஆமா, தப்பு தான். கோட்டை தான் விட்டுட்டேன். இந்த கேஸ்ல நாளை மறுநாள் நானே ஆஜர் ஆகறேன்…” என அரங்கநாதன் கடைசியாக சொல்ல,

“ஆஜர் ஆனா? என்ன பண்ணிடுவீங்க? உங்ககிட்ட தொழில் கத்துகிட்டவன், இன்னைக்கு உங்களையே எதிர்த்து நிக்கிறான். ஜெயிக்கிறான்…”

இது அரங்கநாதனை அவமானத்திற்குள்ளாக்கினாலும் வேறு வழி இல்லை எதிர்த்து மறுத்து பேசுவதற்கு.  

“என்னால முடிஞ்சதை நான் செய்வேன்…”

“அப்ப இந்த கேஸ் அவனுக்கு தான் சாதகமா?…”

“கிட்டத்தட்ட…”

“ஆனா அவன் ஜெயிச்சா கூட அந்த சந்தோஷத்தை அனுபவிக்க அவன் இருக்க மாட்டான்…”

“நான் திரும்பவும் சொல்றேன். அவனை சீண்டாதீங்க…”

“எதுக்கு இத்தனை பயம் அவன் மேல?…”

“இது பயமில்லை மயூரன். எச்சரிக்கை. நம்மளை நாமே தற்காத்துக்க வேண்டிய சூழ்நிலைல இருக்கோம்…”

“என்னை பார்த்துக்க எனக்கு தெரியும்…”      

“ம்ஹூம், நான் சொல்றது இன்னுமா உங்களுக்கு புரியலை?…”

“என்ன?…”

“அவன் இவ்வளவு உறுதியா இதுக்குள்ள இறங்கி இருக்கான். அந்த சாலாட்சி சாட்சி சொல்ல வருவாங்கறது மட்டுமா காரணம்? இல்லை அந்த இடத்தை நீங்க எப்படி வாங்கினேங்கன்றதோட ஆதாரங்கள் மட்டும் வச்சா அவன் விளையாடறான்?…”

“அரங்கநாதன், தெளிவா சொல்லுங்க…”

“இதை இத்தனை நாள் சொல்லாம இருந்தது என் தப்பு தான் ஆனா சொல்லிடறேன். இனியும் நிலைமை கை மீறாம, நீங்க அவனை நெருங்காம இருக்க…”

“எனக்கென்னமோ நீங்க என்னை பயம் காட்டற மாதிரியே இருக்கு. என்ன உங்க சிஷ்யன்ற சாஃப்ட் கார்னரா?…” என்ற கேள்வியில் அரங்கநாதன் சிரித்துவிட்டார்.

“இத்தனை வருஷமா என்கூட பழகி இருக்கீங்க. என்னை பத்தி இன்னுமா முழுசா புரிஞ்சுக்கலை? என் பையனையே உங்களுக்கு மருமகனாக்க போறேன்…”

“பின்ன? ஏன் அவனை நினைச்சு இத்தனை பயம்?…”

“இது என்னையும் காப்பாத்திக்கறதுக்கான முயற்சின்னு வச்சுக்கோங்களேன்…”

“அரங்கநாதன்…”

“இங்க எல்லாருக்கும் தெரியாத ஒரு விஷயம். என் மனைவி, மகனுக்கும் தெரியாத ஒரு விஷயம் என்ன?…”

“நம்மளோட பார்ட்னெர்ஷிப்…”

“எஸ், அது வெறும் பில்டிங்கல மட்டுமா?…” என்றதுமே மயூரனின் மூளை ஓட்டமெடுத்தது.

இப்போது மொத்த நாளங்களும் இறுக்கிப்பிடிக்க மயூரனுக்குமே அச்ச உணர்வு வியாப்பிக்க ஆரம்பித்தது.

“அரங்கநாதன்…”

“எஸ், நிச்சயம் கண்டுபிடிச்சிருப்பான். ஆனா ஏன் இன்னும் வெளிக்கொண்டுவராம இருக்கான்னு தான் எனக்கு புரியலை?…”

“ஒரு வேளை நாம எதுக்காக காத்துக்கிட்டு இருக்கோமோ அதுக்காகவா இருக்குமோ?…” மயூரனின் கேள்வியில் அரங்கநாதனுள் அந்த எண்ணம் பளிச்சிட்டது.

“எஸ், கரெக்ட்…” என அரங்கநாதன் கண்டுபிடித்துவிட்டதை போல கூக்குரல் எழுப்ப,

“நீங்க எல்லாம் என்ன வக்கீல்?…” என கேட்டுவிட்டார் மயூரன்.

“சம்பந்தி…”

“ப்ச் விடுங்க, அப்போ அந்த பொண்ணை தூக்கினா வழிக்கு வருவானா?…”

“இல்லை, அவளை தூக்கறதும் சுலபமில்லை. ஆனா அதை செஞ்சு நாமளே நம்ம பக்கத்தை பலவீனமாக்கிக்க கூடாது. அவன் ஏன் இத்தனை நாள் சைலன்ட்டா இருந்தான்னு எனக்கு தெரிஞ்சுக்கனும்…”

“எப்ப பார்த்தாலும் இதையே சொல்றீங்க. வேற வேலை இல்லையா? எப்பவும் பாசிட்டிவா பேசவே மாட்டீங்களா?…” அடக்கமுடியாத ஆங்காரம் மயூரனின் பேச்சில்.

“நீங்க பேசறதுக்கு தான் பதில் சொல்றேன். இதுல என்னோட சுயநலமும் இருக்கே…”

“அந்த சுயநலம் தான நம்மளை சம்பந்தி ஆக்கிருக்கு…”  

“அதை விடுங்க, முதல்ல இந்த கேஸ் முடியட்டும். அவன் அன்னைக்கு என்னென்ன ஆதாரங்களை எல்லாம் சமிட் பன்றான்னு பார்ப்போம்…”

“டேமிட்…”

“இப்ப நாம ஆத்திரப்பட கூடிய இடத்துல இல்லை. முதல்ல நான் சொன்னதை செய்ங்க. பினாமி ரெடியா?…”

“என்னோட ப்ரதர் தான் இருக்கானே. நான் பேசிட்டேன்…”

“இதுவரைக்கும் நடந்த எதுலையும் நீங்க நேரடியா தலையிடலைன்றதனால நம்ம பக்கம் அது ஒரு ப்ளஸ். இப்போதைக்கு இந்த கேஸ்ல இருந்து நீங்க விடுபடனும். அந்த இடத்துல உங்க தம்பி கொஞ்ச நாள் இருக்கட்டும்…”

“கொஞ்ச நாள்ன்னா?…”

“கண்டிப்பா சீக்கிரமே ஜாமீன்ல எடுத்துடுவோம்….”

“அப்போ மட்டும் அவன் எதுவும் பண்ண மாட்டான?…”

“அதுக்கும் ஒரு செக் வைப்போம்…” என்ற அரங்கநாதன்,

“இந்த முறை அவனுக்கு வாய்ப்பு. அடுத்த தடவை அவனை நான் ஜெயிக்காம விடபோறதில்லை.  பாலமுரளிகிருஷ்ணா என்னைக்கும் அநாதை தான். அவனை எந்த சொந்தமும் இல்லாம நிற்கதியா நிக்க வைப்பேன்…”

“நீங்க என்னவும் செய்ங்க, அந்த பொண்ணுங்க…”

“அவங்க இப்ப உங்களுக்கு தேவையா?…”

“கண்டிப்பா. எவ்வளவு நாள் காத்துக்கிட்டு இருக்க?..” என்ற மயூரனின் முகம் பயங்கரமானது.

“அப்பவே சுதாரிச்சு அந்த பொண்ணுங்க ஷேஷா பாதுகாப்புக்குள்ள போறதுக்கு முன்னாடியே தூக்கிருந்திருக்கனும்…”

“எங்க? அந்த வேலைக்காரி தான் திட்டம் போட்டு எப்படியோ இவன்கிட்ட அனுப்பிட்டாளே? உயிரை விடற வரைக்கும் இதுங்க ரெண்டும் இடத்தை சொல்லலை. தெரியாதுன்னே சாதிச்சுட்டா…”

“ஹ்ம்ம், நமக்கும் அந்த வீடியோ கிடைக்கிற வரைக்கும் இதை ஆக்ஸிடென்ட்ன்னு தானே நாம நினைச்சோம்…”

“அந்த நேரத்துல நாம கொஞ்சம் அசந்த நேரம் அந்த பொண்ணுங்களை இங்க அனுப்பி நம்மளையும் தேடவிட்டு. இப்ப தானே இருக்கிற இடம் தெரிஞ்சது….”

“இன்னொரு தப்பும் பண்ணிட்டோம். அன்னைக்கே அந்த பொண்ணு நம்மளை பார்க்க வந்தப்பவே அவளை நம்ம கஸ்ட்டில எடுத்திருக்கனும். சாலாட்சி கேஸ்க்கு அவளை யூஸ் பண்ண நினைச்சது நாம பண்ணின தப்பு…”

மாற்றி மாற்றி அவர்களின் தவறுகளையும், அவர்கள் கோட்டை விட்டுவிட்டதையும் பேசி இன்னுமே தங்களின் வன்மத்தை வளர்த்துக்கொண்டிருந்தனர்.

Advertisement