Advertisement

“ட்ரைவர் வந்துட்டானா?…”

“இன்னும் இல்லை. நா கூப்பிடாம வரமாட்டான்…”

“எதுக்கும் அவன் மேல ஒரு கண்ணு இருக்கட்டும்…”

“அவன் விசுவாசி தான். ஆனாலும் அவன் மேலயும் ஒரு பார்வை இருக்குது. எனக்கெதிரா எதாச்சும் செஞ்சா தான் எனக்கு தெரிஞ்சிருமே? அவனோட முகமே காட்டிக்குடுத்திரும்..”

“இப்ப என்ன பன்றான்?…”

“வாட்ச்மேன் கூட சிரிச்சு பேசிட்டு இருக்கான்…”

“இயல்பாவா இருக்கான்…”

“ஆமா அதை வச்சு தான் சொல்றேன். எந்த படபடப்பும் இல்லை. அவனோட நடவடிக்கைகள் எல்லாம் சாதாரணமா தான் இருக்கு…”

“ஹ்ம்ம், சரி பை…” என சொல்லி அழைப்பை துண்டித்துவிட அரங்கநாதன் காரின் கண்ணாடியை இறக்கி ட்ரைவரை அழைத்தான். அழைத்த வேகத்தில் ஓடி வந்த ட்ரைவர்,

“கிளம்பலாமா ஸார்…”

“ஹ்ம்ம், காரை பப்க்கு விடு…” என்றார்.

அவனும் ஒன்றும் சொல்லாமல் அவர் சொன்ன இடத்திற்கு காரை செலுத்தினான்.

—————————————————

அரங்கநாதனை பார்த்துவிட்டு நேராக மருத்துவமனைக்கு தான் வந்து சேர்ந்தான் பாலா.

அவன் வரும் நேரம் ஜீவா இரவு பணிக்கு வந்திருக்க அவளிடம் எதுவும் பேசும் மனநிலையில் இல்லை அவன்.

உள்ளே நுழைந்தவன் எப்போதும் ரிஷப்ஷனில் தன்னுடைய விவரத்தை கடைமைக்கென்று சொல்லி தான் அதை விட்டு உள்ளே செல்வான்.

அன்று பார்த்து ஜீவாவையும் பார்த்துக்கொண்டே அவன் கடந்துவிட அந்த முகத்தில் இருந்த பரபரப்பில் ஜீவா தான் துணுக்குற்றாள்.

“வானதி என்ன அவர் எதுவுமே பேசாம போறார்?…” என அவளிடம் கேட்க வானதிக்கு சுறுசுறுவென பொங்கியது.

இன்னும் அன்று நடந்ததை பற்றி வாய் திறக்கவில்லை ஜீவா. அதுவே வானதியை உறுத்திக்கொண்டு இருந்தது.

“எவர் போறார்?…” என பட்டென்று கேட்க அவளின் குரலில் தொனித்த வேறுபாட்டை ஜீவன்யா கவனிக்கவில்லை.

“அதான் அவர் பாலா…”

“ஓஹ் அவர் பாலாவா? எனக்கு தெரியாது. எங்களுக்கு எல்லாம் கிருஷ்ணா ஸார்ன்னா தான் தெரியும்…” என சொல்லவும் தான் துணுக்குற்று அவளை திரும்பி பார்த்தாள்.

“இப்ப நான் என்ன கேட்டுட்டேன்?…”

“அவர் பேசாம போறாருன்னு கேட்ட. ஆனா அவரை பத்தி எனக்கு எதுவுமே தெரியாதேம்மா?…” அதே நக்கல் கலந்த குரலில் அவள் பதில் சொல்லவும்,

“வானதி, நீ எதையோ மனசுல வச்சுட்டு பேசற மாதிரி இருக்கு…”

“நிஜமா எனக்கு தெரியலை ஜீவா. நீயே சொல்லிடு, எதைன்னு…”

“வானதி என்னாச்சு?…”

“எனக்கு ஒன்னும் ஆகலை. அவரை பத்தி எனக்கு என்ன தெரியும்? நிச்சயமா எதுவும் தெரியாது அவர் பேரையும், அவர் வேலையையும் தவிர்த்து. ஆனா…” என்றதுமே அவளுக்கு புரிந்துவிட்டது.

“வானதி…”

“என்ன மேடம்க்கு விளங்கிருச்சு போல?…”

“சொல்ல கூடாதுன்னு இல்லை. என்னோட சூழ்நிலை…”

“நான் எதுவும் கேட்கலையே ஜீவா. இங்க இத்தனை நாள் எல்லாரும் பேசிட்டு தான் இருக்காங்க. என்னன்னு உன்கிட்ட கேட்டேனா என்ன?…”

“ப்ளீஸ், இப்ப எதையும் சொல்ற மனநிலையில நான்…” என்ற ஜீவாவின் பேச்சு அப்படியே நின்றுவிட்டது அங்கே வந்து நின்ற பாலாவை கண்டு.

“என்ட்ரி குடுக்காம போய்ட்டேன். ஏதோ டென்ஷன்…” என அவன் வந்து நிற்கவும் ஜீவா வானதியை பார்த்தாள்.

அவள் முகத்தில் ஒரு இயலாமையும், வருத்தமும் பரவி இருக்க பாலாவையும் பார்த்துவிட்டு குனிந்து அவனின் பெயரை எழுதினாள்.

“வானதி…” பாலா அவளை அழைத்ததும்,

“சொல்லுங்க கிருஷ்ணா ஸார்…” என்றாள் சிரித்தபடி.

முகத்தில் எதையும் காண்பித்துவிடாமல் அவள் புன்னகை முகமாக அவனிடத்தில் பேச,

“ஜீவாவை நீங்க இன்னும் கொஞ்சம் கேர் பண்ணிக்கனும்…” என்றான்.

“ஓகே, ஸார். பார்த்துக்கலாம்…” என்றவளை கண்டு ‘இது என்ன விதமான பதில்?’ என ஜீவா தான் குழம்பி போனாள்.

“என்ன பார்த்துக்கனும்? இங்க வந்ததுல இருந்தே அவ தான் என்னை பார்த்துக்கறா. இதுல புதுசா என்ன இருக்கு? ஏன் இப்படி சொல்றீங்க?…” படபடவென ஜீவா பேசவும் வானதிக்கே சிரிப்பு வந்துவிட,

“விடு, பொரியாத. ஸார் சொன்னா காரணம் இருக்கும். ஒரு வார்த்தைல விடறியா நீ? எப்பன்னு சண்டைக்கு நிக்கிற?…” என்ற வானதி,

“இந்த ஊசி பட்டாசு தான் உங்களுக்கு கண்டிப்பா வேணுமா ஸார்?…” என்று கேலி செய்ததும் சூழ்நிலை இயல்பானது…”

“வானதி…” என ஜீவா அவளின் கையை பிடித்துக்கொள்ள,

“எனக்கு உன் மேல கோவம் தான். அதான் பேசினேன். பேசுவேன். என்கிட்டே நீ எதுவும் சொல்லலை. அட்லீஸ்ட் லைட்டானாலும் சொல்லிருக்கலாம். ஓகே இப்போ என்ன? நான் ஓகே தான்…” என்று வானதி சிரிப்புடன் சொல்ல ஜீவாவும் ஆமோதித்தாள்.

“ஓகே, லீவ் இட். இப்ப நான் சொல்றது சீரியஸ். கவனமா இருக்கனும். எங்கயும் போக கூடாது…” என்றவன்,

“ஜீவா நான் போய் அத்தையை பார்த்துட்டு வரேன். உன்கிட்ட பேசனும்…”

“ஹ்ம்ம் சரி…”

“நான் மட்டுமில்லை. உன்னை ஒருத்தர் மீட் பண்ணனும்னு சொல்லிட்டிருக்காங்க…”

“ஹ்ம்ம், யாரு?…”

“நானே வந்து சொல்றேன்…” என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்தான் பாலா.

இன்னும் அவளிடம் எதையும் அவன் பகிர்ந்திருக்கவும் இல்லை. கேட்டிருக்கவும் இல்லை. சொல்ல போனால் அதற்கு நேரமில்லை. இங்கே தானே இருக்கிறாள் என விட்டுவைத்திருந்தான்.

இப்போது பேச வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. சில விஷயங்களை ஆலோசிக்கவேண்டிய கட்டாயம்.

இது கத்தி மேல் ஒரு பயணம் அவர்களுக்கு. எங்கிருந்து ஆரம்பித்து எங்கே கொண்டுவந்து முடிப்பது என்று இருவேறு மனநிலையில் இருந்தார்கள்.

அதற்கான ஆதாரங்களை ஆவணங்களாக சேகரிக்கவே ராப்பகலாய் ஓடவேண்டிய நிர்பந்தம்.

அவனுக்கு பிடித்தமான ஒன்று தான் இந்த துப்பு துலக்குவதும், தானே ஆதாரங்களை கண்டறிந்து வழக்கை கையாள்வதும் என்பது.

ஆனால் இதில் மாட்டி இருப்பதென்னவோ ஜீவன்யா. அங்கே தான் அவன் நிதானமாக செயல்பட வேண்டியிருந்தது.

எதிராளிகளிடம் ஜீவன்யா பற்றிய எந்த  ஒரு ஆதாரமும் இல்லை என்றாலும் அரங்கநாதன் உருவாக்க முயல்வாரே?

அதைவிட முக்கியம் ஜீவாவும், தென்றலும் இதில் இருந்து பாதுகாப்பாக வெளிவருவது.

அவர்கள் தேடிக்கொண்டிருக்கும் அந்த ஒன்று கையில் கிடைத்துவிட்டால் போதும். களத்தில் இறங்கி ஆடுபுலி ஆட்டத்தில் வெட்டவேண்டியதை வெட்டி வீழ்த்துவது தான்.

‘இருக்கும் துறை என்ன? சமுதாயத்தில் பேர் என்ன? செய்வது எல்லாம் சட்டவிரோதம்.’ கை முஷ்டிகள் மடங்க கோபமாய் நினைத்தான் பாலா.

சாலாட்சியின் அறைக்குள் நுழைந்தவர் அவர் உறங்குவதை பார்த்துவிட்டு அங்கே அமர ஷேஷாவிடம் இருந்து அழைப்பு.

“ஸார்…”

“பாலா, சாலாட்சி எப்படி இருக்காங்க?…”

“இப்போ அவங்க பெட்டர் தான். இந்த ஒன் வீக்கா அவங்களே பேச ஆரம்பிச்சுட்டாங்க…”

“குட்…”

“ஆனா அப்பப்போ எமோஷனல் ஆகிடறாங்க…”

“ஹ்ம்ம்…”

“நாளை மறுநாள் கேஸ். ஆனா இந்த முறை வாய்தா கிடைக்க கூடாது அவங்களுக்கு…”

“முயற்சி பண்ணுவோம் பாலா…”  

“அத்தையை அங்க சேஃபா கூட்டிட்டு போய்ட்டு வரனும்…”

“அதை சொல்ல தான் கால் பண்ணேன்…”

“ஹ்ம்ம்…”

“அவங்க ஹாஸ்பிட்டல்லையே இருக்கட்டும். அவங்க வாக்குமூலம் மட்டும் தான் ஜட்ஜ்க்கு போகனும்…”

“ஸார் அரங்கநாதன் தான் கண்டிப்பா ஆஜர் ஆவார்…”

“சோ வாட்? நான் பார்த்துக்கறேன்….”

“ஓகே…”

“ஜீவன்யாகிட்ட இப்போ பேச வேண்டாம் பாலா…”

“ஓஹ்…”

“இந்த கேஸ் முடியட்டும். ஐ திங் அரங்கநாதன் நம்மளோட ஆர்க்யூமென்ட் என்னன்னு பார்த்துட்டு தான் அடுத்த காயை நகர்த்துவார்…”

“கெஸ் பண்ணேன்…”

“குட், சோ நமக்கு டைம் இருக்கு. நீ ரிலாக்ஸா இந்த கேஸை ஹேண்டில் பண்ணு…”

“சூர் ஸார்…” என சொல்லி அழைப்பை துண்டித்தான் பாலா.

Advertisement