Advertisement

அவசரப்பட்டு வழக்கம் போல யாருமற்றவர் என்று சாலாட்சியின் உயிரை எடுக்க முயல விளைவு தப்பித்தவர் சென்று சேர்ந்தது வானம் அறக்கட்டளையின் வாயிலில்.

இது ப்யூச்சர்ஸ் பில்டர்ஸும் எதிர்பார்க்கவில்லை. அரங்கநாதனும் எதிர்பார்க்கவில்லை.

அதன் பின்னர் அனைத்துமே மாறி போனது. வெறும் காவல்நிலையத்துடன் பணப்பரிவர்த்தனையோடு முடிந்திருக்க வேண்டிய விஷயம் இத்தனை நெருக்கடிகளை கொண்டுவந்தது.

போதாததிற்கு சாலாட்சி பாலாவின் சொந்த அத்தை. இது அதற்கு மேலும் பேரதிர்ச்சி அவர்களுக்கு.

தாய் தந்தை உறவுகளற்றவன் என அவனை நினைத்திருக்க புதிதாய் அறிந்துகொண்ட சொந்தமும் அதை அவன் காப்பற்றி காத்த விதமும்  அவர்களை நிலைகுலைய செய்தது.

பாலாவின் வாதத்திறனை அறிந்தவருக்கு சறுக்கல் தான். அதிலும் அவனின் ஆராயும் திறன் தான் இன்னும் அவரை மிரள வைத்தது.

“இவன் ஒரு கேஸ்ல இறங்கினா அதை மட்டும் பார்க்கமாட்டானே? தோண்டிட்டே இருப்பான் ஆரம்ப புள்ளி வரை….” என ஆளவந்தானிடம் சொல்லும் பொழுதே அத்தனை பயம் தான்.

அதை நிரூபிப்பதை போல பாலா முதலில் கட்டிடம் எழும்புவதற்கு ஸ்டே ஆடர் வாங்கிவிட்டான்.

அந்த கட்டிடம் எழும்பும் இடத்தின் பத்திரம் தன் பெயரில் என வாதிட்டவர்களுக்கு அது முதல் தோல்வி.

வாய்தா வாங்கி தங்களின் பக்கத்தை இன்னும் பலப்படுத்த முயல அதுவே பாலாவுக்கும் சாதகமாக போனது.

தாய் பத்திரமும் தங்களிடம் இல்லாமல், வெறும் கையெழுத்தை மட்டும் வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாது.

சாலாட்சி உயிருடன் இருக்கும் வரை ஜெயிப்பதுவுமே மிகவும் கடினம் என புரிந்துபோன பொழுது தான் வானம் மருத்துவமனைக்குள் நுழைய துருப்புசீட்டாய் ஜீவாவை வைத்து தங்கள் திட்டத்தை செயலாக்க நினைக்க அதிலும் தோல்வி.

தாங்கள் அனுப்பியவனும் அவர்களிடம் சிக்கிக்கொள்ள இப்போது அந்த மீண்டும் ஜீவாவை மிரட்டும் அந்த ஆதாரமும் இல்லாமல் கடைசியாக பாலாவை பேசி பணிய வைக்க முயலுமா என முயன்று இப்போது அவனின் பதிலில் முகம் வெளிறி அமர்ந்திருந்தார்.

“ஷேஷாவை மீட் பண்ண சொல்லி ஏன் இத்தனை முயற்சி பன்றீங்கன்னும் எனக்கு தெரியும் ஸார். ஆனா அவரை பத்தி தெரிஞ்சும் ஏன் பார்க்கனும்னு நினைக்கறீங்க?…” என்றதற்கு என்ன பதில் சொல்வார்?

நிச்சயம் ஒரு குருட்டு நம்பிக்கை தான். பேசினால் கேட்டுவிடமாட்டானா என்று தான்.

ஷேஷாவிடம் செல்வதற்கு வேறொரு முக்கிய காரணமும் இருந்தது அரங்கநாதனுக்கு.

பாலாவின் அத்தை தான் சாலாட்சி என தெரிந்த பின்னர் இதனை அவன் நிச்சயம் அத்தனை எளிதில் விட்டுவிடமாட்டான்.

ஆனால் ஷேஷாவிடம் பேசி பிரச்சனயை சுமூகமாக முடித்துக்கொள்ளலாம் என்று சொல்வதற்கு நினைத்துக்கொண்டு இருந்தார் அரங்கநாதன்.

இதை முன்பே செய்திருக்கலாம். ஆனால் அதற்கு ப்ர்யூச்சர்ஸ் நிர்வாகம் ஒப்புக்கொள்ளாது இழுத்தடிக்க கடைசியில் இங்கே வந்து நிற்க இறுதியாய் இரண்டு முடிவுகள் எடுத்திருந்தனர்.

இடமும் வேண்டாம், கேஸும் வேண்டாம். இடத்தை சாலாட்சியிடமே ஒப்படைத்து மன்னிப்பை கேட்டுவிட்டு விலகிவிடலாம் என்று பேசுவதாகவும் இருக்க ஒருவேளை ஷேஷா சொல்லி பாலா கேட்பான் என்னும் ஒரு ஆசை வேறு.

இரண்டில் எது நடந்தாலும் தங்களுக்கு சாதகம் என குறுக்குபுத்தியால் யோசித்து வைத்திருக்க அவரின் ஒவ்வொரு அசைவையும் படித்தவனுக்கு இது புரியாமல் போகுமா என யோசிக்காமல் விட்டுவிட்டார்.

“சொல்லுங்க ஸார்…” பாலா கேட்க,

“அந்த இடத்தை உங்கத்தைக்கே விட்டு கொடுத்துட்டா? அப்ப உனக்கு சந்தோஷமா?…” என கேட்கவும் இகழ்ச்சியான புன்னகை பாலாவிடம்.

“கடைசியா நீங்க இங்க தான் வருவீங்கன்னு நல்லா தெளிவா எனக்கு தெரியும் ஸார்…” என சிரித்தவன்,

“இந்த கேஸை நான் வித்ட்ரா பன்றதா இல்லை…” என சொல்ல,

“கிருஷ்ணா…” என அவரின் கர்ஜனை என்னவோ காதுக்குள் நாராசமாக தான் ஒலித்தது பாலாவிற்கு.

“எனக்கு தெரியும் ஏன் இத்தனை கஷ்டப்படறீங்கன்னு. ஒண்ணா ரெண்டா எத்தனை கொலை? எவ்வளவு போர்ஜெரி? ப்யூச்சர்ஸ் பில்டர்ஸ் ப்யூச்சர் இனி ப்யூச்சரே இல்லாம போக போகுது…” என கடுமையாக அவன் சொல்ல,

“கிருஷ்ணா நாங்க வேணும்னா இடிச்ச வீட்டை திரும்ப அதே போல கட்டி குடுத்திடறோம். இருந்து வாழ எவ்வளோ பணம் வேணுமோ அவ்வளவு குடுக்கோம். உன் அத்தைட்ட மன்னிப்பும் கேட்கிறோம்…”

“கேட்டா? கேட்டா எல்லாம் சரியா போச்சா? இது எங்க கண்ணுல படற வரைக்கும் தான் உங்களுக்கு ம்ஹூம், அந்த ப்யூச்சர்ஸ்க்கு வாழ்வு. இனிமே…” என்றவன் கோபத்துடன் அங்கிருந்து கிளம்ப போக,

“அப்போ நானும் இனி அமைதியா வேடிக்கை பார்க்க போறதில்லை…” என சத்தமாய் அரங்கநாதன் சொல்ல பலா திரும்பி பார்த்தான்.

“ஜீவன்யா, தென்றல்…” என்றதும் பாலாவின் புருவம் சுருங்க,

“எனக்கெப்படி தெரியும்ன்னு பார்த்தியா?…” என்று சிரிக்க,

“நான் ஆச்சர்யப்படலையே? நாமலாம் லாயர்ஸ். எல்லாமே தெரிய வந்திடலைன்னா இத்தனை வருஷம் நீங்க லாயரா இருந்ததுக்கே அர்த்தமில்லை…” என சொல்லவும் அரங்கநாதன் முகம் கறுத்தது.

“இப்பவுமா உனக்கு கொஞ்சமும் உதறலை?…”

“இல்லை…”

“அவ அப்பனையே கொலை செஞ்சிருக்கா அந்த பொண்ணு…”

“ஓஹ்…”

“என்ன ஓஹ்? அதுக்கான வீடியோ ஆதாரம் என்கிட்டே இருக்கு?…”

“அப்படியா?…”  

“கிருஷ்ணா இத்தனை அலட்சியமா உனக்கு?…” என கடுப்புடன் அரங்கநாதன் கேட்க,

“அலட்சியமெல்லாம் இல்லை. நீங்களா ஒரு பொய்யை உண்மையாக்க முயற்சி  பன்றீங்கன்னு சொல்றேன்…”

“என்னது பொய்யா? துடிக்க துடிக்க அவ அப்பாவையே கொன்னிருக்கா. கூட இருந்தவரையும் குடும்ப நண்பரையும் கொன்னிருக்கா. அவ அம்மாவோட சேர்த்து வீட்டை எரிச்சிருக்கா. இது ஒரு ஆக்ஸிடென்ட் அப்டின்னு கேஸை முடிச்சிருக்காங்க…”

“கதை நல்லா இருக்கு ஸார்…”

எத்தனை பேசியும் பாலாவிடம் கொஞ்சமும் அச்சமில்லை. பிடிகொடுக்காமல் வார்த்தைகளை தெளிவாய் யோசித்து அவன் பேச பேச எரிச்சலுடன் அவனை பார்த்தார்.

“நான் இப்ப நினைச்சாலும் அந்த கேஸை ரீஓபன் பண்ணி அவளை ஜெயிலுக்கு அனுப்ப முடியும்…”

“ஃபன்னி திங்கிங். கனவு கண்டிருக்கீங்க போல? முழிச்சுக்கோங்க. பை ஸார்…” என்று சொல்லியவனை உட்சபட்ச கோபத்துடன் பார்க்க,

“நான் கிளம்பறேன். நிறைய வேலை இருக்கு…” என்றவன்,

“இன்விடேஷன் குடுக்க போகும் போது சொல்லுங்க ஸார். ஷேஷா ஸாரை மீட் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு. பார்த்தா நானும் ஒரு ஹாய் சொல்லிப்பேன்…” என்று சொல்லிவிட்டு தன் சட்டையில் மாட்டியிருந்த கூலரை கழற்றி கண்களில் கோர்த்தவன் சிரிப்புடனே விடைபெற்றான்.

அங்கே ஆளவந்தான் குறுக்கும் நெடுக்குமாக கையை பின்னால் கட்டிக்கொண்டு நடந்துகொண்டிருக்க சத்தமின்றி சென்றவன் அவரின் இடுப்பில் கிள்ளிவிட்டு,

“பை ஆளு அங்கிள்…” என்று கூலரை கழற்றிவிட்டு கண்ணடித்து செல்ல,

“உன்னையெல்லாம்…” என கொதித்துக்கொண்டு வந்த பேச்சை கேட்க அவன் அங்கே இல்லை.

அவன் சென்ற சிறிது நேரத்தில் தனது பேக்குடன் வெளியே வந்த அரங்கநாதன் ஆளவந்தானை சற்றும் கவனிக்கவில்லை.

கோபமும், ஏமாற்றமுமாக அவர் கடந்து சென்றுவிட ஆளவந்தானும் அரங்கநாதன் சென்றதை கவனிக்கவில்லை.

தலைவேதனையாக இருந்தது. ஏற்கனவே தனது சம்பந்தியிடம் பேசி சாலாட்சியிடம் நிலத்தை மீண்டும் ஒப்படைத்துவிடலாம் என்ற யோசனையை வலியுறுத்தி சம்மதிக்க வைத்ததே பெரும் பாடாக இருந்தது. இப்போது அதிலும் தோல்வி.

அரங்கநாதனின் ட்ரைவர் அவரை பார்த்ததும் ஓடி வந்து பேக்கை வாங்கிக்கொள்ள இன்னும் குறையாத கோபத்துடன் காரை நெருங்கினார் அரங்கநாதன்.

“ஹலோ ஸார், வீட்டுக்கு கிளம்பியாச்சா?…” என கேட்டு அவரின் முன்னே பாலா வர அவன் இன்னும் செல்லாமல் இருப்பதில் எரிச்சலுடன் பார்த்தார்.

“உள்ள வச்சு கேட்டதுக்கு பதில் சொல்லாம போனா என் மனசாட்சி என்னை தூங்க விடாது பாருங்க. அதான் இங்க இப்ப சொல்லலாம்ல…” என்றான்.

 “உள்ளயே பதில் சொல்லியிருக்கலாம் தான். ஆனா எதுவும் எவிடன்ஸ் ஆகிடாம இருக்கனுமே? அஸ் எ லாயரா எனக்கு ஸ்ட்ரைக் ஆகிருச்சு. ஆனா நானும் ஒரு லாயர்ன்றது அந்த நேரம் உங்களுக்கு தான் மறந்து போச்சு…”

“கிருஷ்ணா போய்டு. நான் பயங்கர டென்ஷன்ல இருக்கேன்…”

“அதெப்படி ஸார், நீங்க கேட்டிருக்கீங்க இல்லையா? ஆமா கொலை செஞ்சிருக்கா தான் ஜீவா. வீட்டை எரிச்சிருக்கான்னே வச்சுக்குவோம், நீங்க அந்த கேஸை ரீஒபன் பண்ணனும். அவ்வளவு தானே செய்ங்க…”

“கிருஷ்ணா…”

“நிஜமாவே நீங்க கேஸை ரீஒபன் பண்ணுங்கன்னு தான் சொல்றேன். எனக்கும் அதுதான் வேணும். இனியாவது எந்த குற்றவுணர்ச்சியும் இல்லாம அவ சந்தோஷமா இருக்கனும்…”

“இல்லை, நான் இதை சும்மா விடமாட்டேன். நீ இத்தனை பேசின பின்னாடியும்…” அரங்கநாதன் உறுத்து விழிக்க,

“விடாதீங்க. உங்களுக்கே தெரிஞ்சிருச்சு நாளை மறுநாள் கேஸ்ல என்ன தீர்ப்புன்னு. அப்ப உங்களோட அடுத்த கேஸ் இதுதானே? டூ இட். அவளை எப்படி வெளில கொண்டு வரனும்னு கூடவா எனக்கு தெரியாது? நான் செய்வேன்…” என்றவன்,

“அப்பறம் தங்களுக்கு தெரியாத சட்டமொன்றுமில்லை…” என இரு கைகளையும் விரித்து நக்கலாக சொல்ல கண்ணை மூடி கோபத்தை குறைக்க முயன்றார் அரங்கநாதன்.

“அப்பறம் என்ன சொன்னீங்க? எங்கத்தைக்கு பணம் குடுத்து வீட்டை கட்டி குடுத்து செட்டில் பன்றதா? அவங்க கண்ணு முன்னாடியே அவங்க வீட்டுக்காரரை கொன்னு போட்டிருக்கீங்க? அவங்களையும் அடிச்சு காயப்படுத்தி கையெழுத்து வாங்கிருக்கீங்க. இது எல்லாம் நீங்க தர்ற பணத்தால எல்லாம் மாறிடுமா?…”

பாலாவின் முகமே பயங்கரமாக இருக்க இத்தனை ஆக்ரோஷத்தை அவனிடம் இதுவரை அவர் பார்த்ததில்லை.

எச்சிலை கூட்டி விழுங்கியவர் அவனின் பேச்சுக்களை கேட்கமுடியாமல் அதே இடத்தில் தான் நின்றார்.

சிரித்த முகத்துடன் இயல்பான உடல்மொழியுடன் தான் பேசினான். ஆனால் அத்தனைக்கு பின்னாலும் மறைந்திருந்த சீற்றம் மொத்தமாய் அவனின் விழிகளில் தெறித்தது.

“சொல்லி வைங்க உங்க சம்பந்திட்ட, இனி எந்த குடும்பத்தோட  ரத்தத்திலையும் அவனோட பொழைப்பை ஓட்ட முடியாதுன்னு. கம்பி எண்ண தயாரா இருக்கட்டும்…” என்றவன் மீண்டும் கூலரை கண்களில் மாட்டிக்கொண்டவன்,

“ஒரு ப்ரீ அட்வைஸ். அதுவும் உங்களுக்காக நிச்சயமா இல்லை. இது சசிகரனுக்காக. உங்க பிள்ளை தானே? அவனோட நல்லதுல உங்களுக்கும் பங்கிருக்குல. உங்களோட பேராசையால உங்க மகன் வாழ்க்கையை அழிச்சிடாதீங்க…”

பாலா தீர்க்கமாய் சொல்லிவிட்டு வேகமாய் அவ்விடம் விட்டு நகர்ந்துவிட அரங்கநாதன் அசையாமல் அங்கேயே நின்றிருந்தார்.

Advertisement