Advertisement

மின்னல் – 13

            அரங்கநாதன் பாலாவை பார்த்த பார்வையில் பாலாவிற்கு எந்த குற்றவுணர்ச்சியும் இல்லை.

‘இதுவா எனக்கும், என் வார்த்தைக்கும் நீ தரும் மதிப்பு?’ என்பதை போல அப்பட்டமான குற்றசாட்டல் தான் அவரிடத்தில்.

எதற்கும் அவனிடத்தில் பிரதிபலிப்பு இல்லை. என்ன வேண்டுமென்றாலும் நினைத்துக்கொல்லுங்கள் என்று நிற்க,

“அவர் உன்னை வளர்த்துவிட்டதுக்கு இதுதான் பிரதி உபகாரமா?…” ஆளவந்தான் தான் குதித்தார்.

“அவருக்கு பெருமை சேர்க்கிறதுன்னா அதை என்னோட தொழில்ல காண்பிப்பேன். நான் எத்தனை கேஸ் ஜெயிக்கிறேனோ அங்க அவரோட பங்கும் இல்லாமல் இல்லை. அதுதான் அவருக்கு நான் குடுக்கற மரியாதை…”

“இப்ப என்ன கேட்டுட்டார்? அந்த ஷேஷாவை பார்க்கறதுக்கு நீன்னா சட்டுன்னு ஏற்பாடு பண்ணுவன்னு தானே கேட்டார்…”

“நான் ஏன் பண்ணனும்? நான் என்ன சார்க்கு பி.ஏவா? இல்லையே?…” பாலாவின் பதில் சுருக்கென்று இருந்தது.

அதுவும் ஆளவந்தான் முன்னிலையில் தன்னை அவமதிப்பதை போலவே அவர் நினைத்தார்.

“பேசுடா, உன்னை வளர்த்துவிட்டதுக்கு நீ பேசு. இப்படி பேசவும் அவர் தான் கத்து குடுத்தார் மறந்துடாத…”  

“நான் பிறந்த கொஞ்ச நாள்லயே எங்கம்மா எனக்கு பேச சொல்லி குடுத்துட்டாங்க. வாழ்க்கை எனக்கு யார்க்கிட்ட எப்படி பேசனும்னு சொல்லிக்குடுத்திருக்கு. சட்டமும், ஸாரும் சூழ்நிலை அறிஞ்சு எப்படி பேசனும்னு சொல்லிக்குடுத்திருக்காங்க…”

“இவன் என்ன இப்படியே பேசறான்? ஸார் நீங்க போன் போடுங்க. உங்களோட பவர் அப்படி. கண்டிப்பா சேஷாவே உடனே வர சொல்லுவான்…” என்றதும் பாலா ஆளவந்தானை பார்க்க,

“என்ன? என்ன பார்க்கிற? அவன் என்னை விட சின்ன வயசு தானே? நான் அப்படித்தான் சொல்லுவேன். என் வயசு அவன் அனுபவம்…” என்று சொல்லவும் அரங்கநாதன் தலையில் கையை வைக்க பாலா சிரித்துவிட்டான்.

“நல்லா கத்துக்குடுத்திருக்காங்க உங்களுக்கு…” என நக்கலாய் பாலா சொல்ல,

“என்ன? என்ன சொல்லிட்டேன்?…” என திருதிருத்தவர்,

“எதுக்கு நீ சிரிக்கிற?…” என்றார்.

“இதுக்குதான் மனப்பாடம் பண்ணிட்டு வாய்தா கேட்க வாதாட வர கூடாதுன்றது. உங்க அனுபவம் அவர் வயசு. அப்படி சொல்லனும்…” என்றவனின் இகழ்ச்சி பேச்சில் அரங்கநாதனுக்கு தான் அவமானமாக இருந்தது.

“நான் ஷேஷாவை சொன்னா உனக்கேன்டா? அவனே ஒன்னும் சொல்லமாட்டான் போல? இந்த  குதி குதிக்கிற?…” 

“எஸ், அவர் எதுவும் சொல்லமாட்டார். உங்களை மாதிரி வயசுக்கோ, அனுபவத்துக்கோ மரியாதை கொடுக்கிறவர் இல்லை ஷேஷா…” என்றவன்,

“உண்மைக்கும், மனிதாபிமானத்துக்கும் மரியாதை தரும் மனுஷன். உங்களை மாதிரி ஆளுங்களே இப்படித்தான்னு அவருக்கு தெரியும். அதனால நீங்கல்லாம் கணக்கிலையே கிடையாது…” என்றான் உரைக்கும்படி.

பாலா பேச பேச அரங்கநாதனுக்கு தான் டென்ஷன் ஏறியது. அத்தனை கோபமும், ஆவேசமும் அவரின் மனதிற்குள் புகைந்துகொண்டு இருந்தது.

“யோவ் எந்திச்சு வெளில போயா…” என்று அரங்கநாதன் ஆளவந்தானிடம் எரிந்துவிழ ஆளவந்தானும் சென்றுவிட்டார்.

‘இவருக்கு போர்ஸ் எல்லாம் என்கிட்டே தான். அவன் கண்ணுல விரலைவிட்டு ஆட்டறான். ஒன்னும் வேலைக்காகலை. அந்த கோபத்தை என்கிட்டே காட்டுறது.’ என நினைத்துக்கொண்டே வெளியே சென்று அமர்ந்துவிட்டார்.

அரங்கநாதன் ஆளவந்தான் செல்வதையே பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு பாலாவை ஏறிட்டார்.

ஒரு பெருமூச்சுடன் ரோலிங் சேரில் இருந்து எழுந்தவர் அங்கிருந்த சோபாவில் சென்று அமர்ந்து,

“இங்க வந்து உட்கார் கிருஷ்ணா…” என தன்னருகே இருந்த இருக்கையை காண்பிக்க பாலாவும் மறுக்காமல் சென்று அமர்ந்தான்.

“உனக்கு நான் தனியா சொல்லனும்னு இல்லை கிருஷ்ணா. உனக்கே தெரியும் நான் ஏன் உன்னை பேச சொல்றேன்னு…”

“அதனால தான் நானும் பேசலை ஸார்…” பாலா பதிலளிக்க,

“கிருஷ்ணா என் சூழ்நிலையை புரிஞ்சுக்கோ…” என சத்தமாகவே குரல் உயர்த்த பாலாவிடம் அதே அமைதியும், ஆழ்ந்த பார்வையும்.

“நாளை மறுநாள் கேஸ் ஹியரிங் வருது…”

“தெரியும்…”

“எனக்கு ஒரு விஷயம் தெரியனும்…”

“சொல்றதா இருந்தா கண்டிப்பா சொல்லுவேன். நீங்களும் தெரிஞ்சுக்கலாம்…” என்றான் அப்போதும் பிடிகொடுக்காமல்.

அரங்கநாதனால் நறநறவென பல்லை கடிக்கத்தான் முடிந்தது அவனின் பதிலை கேட்டு.

“கிருஷ்ணா என்ன இது?…”

“நீங்க கேளுங்க ஸார்…” என்றான்.

“நாளை மறுநாள் கேஸ்ல ஆஜர் ஆக போறது நீயா? பத்ரியா?…”

“ஏன் இந்த சந்தேகம்? பத்ரி தானே ஹேண்டில் பண்ணிட்டு இருக்கான்?…”

அவரையே அவன் பதிலால் குழப்ப அரங்கநாதனுக்கு என்னவோ நம்பிக்கை இல்லை அவனின் பதிலில்.

“அன்னைக்கு நீ ஆஜர் ஆனா?…”

“எனக்கு தெரியாது. அன்னைக்கு எனக்கு வேற கேஸ் இருக்கு…” என்றவன் முகம் இறுக்கம் பெற்றிருந்தது.

“உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கனும். நீ எனக்கு தர்ற குருதட்சணையா நினைச்சுக்கோ…” என்ற இறைஞ்சுதலை பாலா சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.

திகைப்புடன் அவரை பார்த்தவனின் அந்த நொடி நேர உணர்ச்சியை கண்டுகொண்டவராக அரங்கநாதன் அதே தொனியில் பேசலானார்.

“இந்த கேஸ்ல நீ ஆஜர் ஆக கூடாது. எனக்காக இதை ஒண்ணை மட்டும் பண்ணு…” என்று சொல்ல பாலாவிடம் அமைதி.

‘நான் வழக்கில் வாதாடவில்லை என்றால் இவரால் பத்ரியை ஜெயித்துவிட முடியும் என்பதில் எத்தனை இறுமாப்பு?’ என நினைக்கையில் ஆச்சர்யமாக இருந்தது.

“சசி கல்யாணம் நெருங்குது. இந்த கேஸ் நல்லபடியா ஜெயிச்சிட்டா இன்னும் நிம்மதியா கல்யாண வேலையை பார்ப்பேன். இது என்னோட பிரஸ்டீஜ் சம்பந்தப்பட்டது…” என சொல்லி பாலாவை பார்த்தார்.

“அதுக்கு?…”

“அதான் சொன்னேனே? இந்த கேஸ்ல இருந்து…”

“இல்லை, இது நியாயமில்லை ஸார். உங்களுக்கு நான் உரிய குருதட்சணை தரனும்னா அது என்னோட வெற்றியா தான் இருக்கனும்…” என்று சொல்ல அரங்கநாதன் முகம் மாறியது.

“கிருஷ்ணா…”

“நீங்க வேற எதுவேணாலும் சொல்லுங்க…”

“எதையுமே நீ தான் கேட்கமாட்டேன்றியே?…”  

“அப்போ அதுல இருந்தே நீங்க தெரிஞ்சிருக்க வேண்டாம் நான் உங்களோட கட்டுப்பாட்டுக்குள்ள வரமாட்டேன்னு….”

“கிருஷ்ணா…”

“நியாயமா நீங்க கேளுங்க. அதுவும் என்னோட தனிப்பட்ட விஷயமா தான் இருக்கனும்…”

“இதோட விளைவுகள் விபரீதமா இருக்கும் கிருஷ்ணா…” முகத்தில் இப்போது அப்பட்டமான பழி உணர்ச்சி.

“முதல் முதல்ல உங்களோட இன்னொரு முகத்தை எனக்கு காமிச்சிருக்கீங்க. வெல், எதையும் நான் பேஸ் பண்ண தயாராகிட்டேன்…”

“இல்லை நீ இப்படி பேச கூடாது…” என்றவருக்கு கொஞ்சமும் நிதானமில்லை.

“நீ பணத்துக்கும் மசியமாட்டேன்ற. வேற என்னதான் வேணும்?..”

“நீங்க ஏன் இந்த ஒரு கேஸ்க்காக இவ்வளோ மெனக்கெடறீங்க? நான் தெரிஞ்சுக்கலாமா?…”

“ஹாங் அதெல்லாம் ஒண்ணுமே இல்லை. இது என்னோட சம்பந்தியோட பேர் சம்பந்தப்பட்டது…”

“அப்படியா?…” பாலாவின் முகத்தில் இகழ்ச்சி புன்னகை.

“கிருஷ்ணா…” பல்லை கடித்தார் அரங்கநாதன்.

“அப்படி பார்த்தா எத்தனையோ கேஸ் அவர் மேல இருக்கே? அப்ப எல்லாம் போகாத பேரா?…”

அத்தனை நக்கல் அவனின் குரலில். கேட்டதும் அரங்கநாதனின் முகம் சிறுத்துவிட்டது.

“எதுக்கு இப்ப இந்த கேஸ் என்கிட்டே வரவும் இவ்வளவு பயம்?…” என்றான் அவரிடம் நேரடியாக.

“இதுவரைக்கும் இது பெரிய விஷயம் இல்லை. ஆனா இப்ப இது மிகப்பெரிய விஷயம் தான், நீ இந்த வழக்கை பத்தி மட்டும் பேசமாட்டியே?…” என்றவருக்கு லேசாய் வியர்த்தது.

பாலா ஒரு வழக்கை கையிலெடுத்தால் அதன் மொத்த சாரம்சத்தையும் உள்ளங்கைக்குள் கொண்டு வந்துவிடுபவன்.

சின்ன ஓட்டையை கூட விட்டுவைக்காமல் தனது புத்திசாலித்தனத்தால்  முடக்கிவிடுபவன்.

இந்த கேஸும் மற்ற லாயராக இருந்தால் ஜெயித்தாலும் பெரிதாய் பிரச்சனையின்றி அதன் பின்னர் மேல்முறையீடு செய்து தங்களின் வசதிக்கேற்ப வளைத்துக்கொள்ள முடியும்.

வாதாடும் வழக்கறிஞரும் பெரிதாய் அதனை கவனிக்காமல் அடுத்த வழக்கென்று சென்றுவிடுவார்கள்.

ஆனால் பாலாவிடம் அது நடக்காதே? பின்னால் ஷேஷாவும் இருக்க அதற்கு துளியும் வாய்ப்பில்லை. இந்த வழக்கை பாலா கையிலெடுத்ததுமே உள்ளுக்குள் உதறல் தான்.

இப்படி எதுவும் நடந்துவிட கூடாதென தான் அதற்கு முக்கிய சாட்சியும் ஆதாரமுமான சாலாட்சியை ஒழித்துக்கட்ட முடிவெடுத்தது.

அந்த அவசர முடிவிற்கு பின்னர் தான் இந்த வழக்கு பாலாவின் வசம் நேரடியாக சென்றது.

Advertisement