Advertisement

“ஆறிருந்தா வேண்டாம். சூடா தான் வேணும்…” என்று சொல்லி மறுபக்கம் பதில் வரவும்,

“டீக்கு சைட்ல உனக்கு என்ன வேணும் ஜீவா?…”  என்று கேட்டாள்.

“எதுவா இருந்தாலும் ஓகே வானதி. நீயே சொல்லிடேன்…”

“அதை சொல்லிருவேன். ஆனா வந்த பின்னால் எனக்கு வேண்டாம்ன்னு எல்லாம் சொல்ல கூடாது…” என்றதும் முறைத்தாள் ஜீவா.

வானதிக்கு பப்ஸ் வகையறாக்கள் அத்தனை விருப்பம். அதற்கு அப்படியே நேர்மார் ஜீவா. அதில் ஒன்றை கூட தொட்டுவிடமாட்டாள்.

வேண்டுமென்றே இப்போது வானதி சொல்லவும் ஜீவாவிற்கு கோபம் வர அவளே இறங்கி வந்தாள்.

“ஓகே ஓகே, நான் சொல்லலை. உடனே முறைக்காத…” என்றவள் இருவருக்கும் வடையும், பஜ்ஜியும் சொல்லி வைக்க வினோதினி வந்துவிட்டாள் அங்கே.

“அப்படியே மூக்குல வேர்த்துடும் உங்களுக்கு இல்லையா வினோ க்கா?…”  என ராகமாய் வானதி கேட்கவும் ஜீவாவிற்கு சிரிப்பு வந்துவிட்டது.

“என்ன என்ன வேர்த்துச்சு?…” வினோதினிக்கு புரியவில்லை.

“இப்பத்தான் உங்களை பத்தி பெருமையா பேசிட்டு இருந்தோம். உடனே நீங்களும் டான்னு என்ட்ரி குடுத்துட்டீங்க. அதை தான் சொல்லிட்டிருந்தேன்…” வானதி சமாளிக்க,

“ஓஹ் அப்படியா?…” என கேட்டு வினோதினி அவர்களின் பக்கமாய் வந்து அமர  இன்னுமே சிரிப்பு அதிகமாகியது ஜீவாவிற்கு.

“உங்களுக்கு வேற வேலையே இல்லையா?…” வானதி கேட்க,

“என்ன கேட்ட?…” வினோதினி மீண்டும் புரியாமல் பார்த்தாள்.

“இல்ல இங்க வந்து உக்கார்ந்துட்டீங்களே? வேலை இல்லையான்னு கேட்டேன்…”

“அதை ஏன் கேட்கிற?..”

“அப்ப சரி…” என வானதி கணினி பக்கம் திரும்பிவிட,

“வானதி, என்ன இது?…” என கேட்ட ஜீவா எழுந்து வாஷ்ரூம் செல்ல வானதியும் சிரித்துக்கொண்டே மீண்டும் கேண்டீனுக்கு அழைத்து வினோதினிக்கும் சேர்த்து அனுப்பிவைக்க சொன்னாள்.

“வானதி கற்பூரம் மாதிரி. சொல்லாமலே புரிஞ்சுக்கற…”

“என்னைக்கு மொத்தமா பத்திக்க போறேனோ? வேற வழி?…” என்று வானதியும் சிரித்துவைத்தாள்.

“தமாசு…” என்ற வினோதினி ஜீவா வருகிறாளா என எட்டி பார்த்துவிட்டு,

“ஒரு விஷயம் தெரியுமா?…” என வானதியிடம் கேட்க,

“சொல்லுங்க. தெரியுதா இல்லையான்னு சொல்றேன்…” என்றாள் அசட்டையாக.

“ஜீவா இன்னைக்கு செகேன்ட் ஃப்ளோர் வந்தா…”

“ஆமா அது தெரியுமே? நான் தான் அனுப்பிச்சேன்…”

“என்னது?…”

“எதுக்கு இவ்வளோ ஷாக்?…” வானதிக்கு வினோதினியின் அதிர்ச்சி முகம் என்னவோ போல் இருந்தது.

“அப்ப உனக்கும் தெரிஞ்சுதான் எல்லாம் நடக்குதா? பார்த்தியா என்கிட்டே சொல்லவே இல்லை நீ?…” வினோதினி சோகம் போல சொல்லவும் வானதிக்கு எரிச்சலானது.

“இதுல சொல்ல என்ன இருக்கு? அவளை வர சொன்னாங்க. வந்தா. இது ஒரு பெரிய விஷயமா?…” பட்டென்று வானதி சொல்ல,

“ஓஹ் அப்படியா? சரிதான். அதான் அப்படி கூட்டிட்டு வந்து எங்களை வெளில போக சொன்னாரோ?…”

“வெளில போக சொன்னாரா? யாரு அவரு?…”

“நம்ம கிருஷ்ணா ஸார் தான்…”

“நான் சரோ மேம்மை சொல்றேன் வினோ க்கா…”

“இல்ல இல்ல, கிருஷ்ணா ஸார் தான் அந்த பேஷன்ட் இருக்கற ரூம்க்கு ஜீவாவை கூட்டிட்டு வந்தார். எங்களை வெளில போக சொல்லிட்டு ரொம்ப நேரம் ரெண்டுபேரும் பேசிட்டு இருந்தாங்க…” சொல்லும் பொழுதே ஒரு சிரிப்பு வேறு வினோதினிக்கு.

இதை சுத்தமாய் வானதி எதிர்பார்க்கவில்லை. உட்சபட்ச அதிர்ச்சியில் அவள் அமர்ந்திருக்க அதை கவனியாத வினோதினி,

“கையை பிடிச்சு கூட்டிட்டு வந்தவர் எங்கள போக சொல்லிட்டு பேசி முடிச்சு அங்கயே இருக்க ஜீவா தான் கதவை திறந்துட்டு ஓடிட்டா. நின்னு என்னன்னு கூட பேசலை…” முகத்தில் மறைமுகமாய் ஒரு கேலி சிரிப்பு வினோதினியிடம்.

“அதான் என்ன விஷயம்ன்னு கேட்க வந்தீங்களாக்கும்?…” வானதி சுள்ளென்று கேட்க,

“ஏய் இல்லப்பா, சும்மா பார்த்துட்டு போகலாமன்னு தான்…”

“அக்கா அவக்கிட்ட எதுவும் கேட்காதீங்க ப்ளீஸ்…” வானதி இறுக்கத்துடன் சொல்ல வினோதினிக்கு முகமே மாறிவிட்டது.

“ஹ்ம்ம் சரி…” என வினோதினி எழுந்துகொள்ள,

“இருங்க டீ வந்திரும். குடிச்சுட்டு போங்க…”

“இல்ல, நீ உனக்கு எடுத்துட்டு எனக்கு அனுப்பிவிடு.  நான் அங்க குடிச்சுக்கறேன்…” என வினோதினி சென்றுவிட்டாள்.

அதற்குள் ஜீவாவும் வந்துவிட முகத்தை கழுவி இருப்பாள் போலும். நீருடன் காதுக்கருகே இருந்த கேசம் முகத்தில் ஒட்டி இருக்க முகமே பளிச்சென்று இருந்தது.

“என்ன பேஸ்வாஷ் எல்லாம் இங்க வச்சு?…” வானதி அமைதியாக கேட்க,

“டயர்டா பீல் ஆச்சு. அதான் முகம் கழுவினேன்…” என்ற ஜீவா,

“எங்க வினோ சிஸ்டரை காணும்?…” என்றாள்.

“கிளம்பிட்டாங்க. வேலை இருக்காம்…”

“ஓஹ், அதிசயம் தான். நல்லவேளை…” என்று அமர்ந்துகொண்ட ஜீவாவிடம் வினோதினி சொல்லியதை பற்றி கேட்கவில்லை வானதி.

அவளே சொல்லும் பொழுது சொல்லட்டும் என்று இருந்துவிட்டாலும் தோழியாய் மனதிற்கு வருத்தமாக தான் இருந்தது.

அன்றுமட்டுமின்றி அடுத்து வந்த நாட்களும் ஜீவா இதனை பற்றி வானதியிடம் பேசவில்லை.

பாலாவின் அத்தை ஓரளவு உடல் தேறி வந்திருக்க அதுவே பெரும் நிம்மதியை தந்தது ஜீவாவிற்கு.

இப்போதும் அவனாக அழைத்தாலே ஒழிய தானாக அழைத்து பேசிவிடமாட்டாள்.

மனதின் நேசத்தை சொன்னதோடு சரி. அதன் பின்னர் அதை பற்றிய பேச்சுக்களுக்கு நேரமின்றி போனது பாலாவிற்கும்.

இன்னும் இரண்டே நாட்களிள் ப்யூச்சர்ஸ் பில்டர்ஸின் வழக்கு விசாரணைக்கு வர இருக்க அதில் பாலாவும் தீவிரமாக இருக்க அரங்கநாதன் பாலாவை அழைத்துவிட்டார் தன் அலுவலகத்திற்கு.

ஏன் எதற்கென்று தெரிந்தும் பெரிதாய் காட்டிக்கொள்ளாமல் எப்போதும் போலவே அவன் சென்று நின்றான்.

அங்கே ஆளவந்தானும் இருக்க இருவரையும் அமர சொல்லிவிட்டு தனது மொபைலை எடுத்துக்கொண்டு வெளியேறினார் அரங்கநாதன்.

பாலாவை திரும்பி பார்த்த ஆளவந்தான் அவனிடம் பேச்சுக்கொடுக்க கூடாதென வைராக்கியமாய் முறைப்புடன் இருந்தார்.  

பாலா அவரை பார்த்து சாதாரணமாக ஒரு புன்னகையை சிந்த அவரை அறியாமலே அவரும் பதிலுக்கு புன்னகைத்துவிட்டார்.

“சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய்…” என பாலா பாட ஆரம்பித்துவிட்டான்.

“ம்க்கும். என் புத்தியை…” என முணுமுணுத்தவர் மீண்டும் அவனை பார்க்க,

“அப்படி ஒரு வாய்ப்பு மட்டும் கிடைக்கட்டும்ன்னு தான உங்க மைண்ட் வாய்ஸ் ஆளு அங்கிள்?…” என்று அவரின் எண்ணபோக்கை சரியாய் பிடித்துவிட்டான் பாலா.

“எமகாதகன்டா நீ…” என்று முறைத்துக்கொண்டே அவனிடம் சொல்ல பாலாவிடம் புன்னகை.

அதற்குள் அரங்கநாதன் வந்துவிட்டார் உள்ளே. வந்தவரின் முகம் சீரியஸாக இருந்தது.

“சொல்லுங்க ஸார்…” பாலா அவரிடத்தில் கேட்க,

“ஷேஷாவை மீட் பண்ணனும் கிருஷ்ணா…”

“இப்போவா?…” என்றான் ஆச்சர்யமாக.

“ஹ்ம்ம், இன்னைக்கே கிடைச்சுட்டா நிம்மதி…”

“நீங்க அவங்க ஆபீஸ்க்கு போன் ட்ரை பண்ணி அப்பாய்ன்மென்ட் வாங்க பாருங்க ஸார்…” என்றான் பட்டுக்கொள்ளாமல்.

“கிருஷ்ணா…” என அவனை அதிர்ந்து பார்த்தவருக்கு முகமே சரியில்லை.

என்னவோ இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதை போல ஒரு அவஸ்தையில் இருக்க பாலா அதனை கவனித்தாலும் இளகவில்லை.

“நான் ஏற்கனவே உன்கிட்ட சொல்லியிருந்தேன்…”

“ஆமா, நல்லா ஞாபகம் இருக்கே. ஷேஷா ஸாரை மீட் பண்ணும் போது கூட வர சொன்னீங்க. எப்போன்னு சொல்லுங்க…” என்றவனிடம் என்ன சொல்லி சம்மதிக்க வைப்பது என்று புரியவில்லை.

“ஸார், பார்த்தீங்களா? இதுக்குத்தான் இவனுக்கு இடம் குடுக்க கூடாதுன்றது. உங்க முன்னாடியே எகத்தாளம் புடிச்சு  பேசறான்…”

“உங்க மடில எனக்கு இடம் குடுத்தீங்களா என்ன? என்னவோ குடுத்து வச்ச மாதிரி பேசறீங்க?…” என்று பாலா அவரை கிண்டலாய் பேச,

“ஏய்…” என்று கையை நேட்ட,

“யோவ் பேசாம இருய்யா…” என்றார் அரங்கநாதன்.  

“இப்ப என்ன சொல்ற கிருஷ்ணா?…”

“இப்போவும் உங்க கூட இப்படியே வர நானா ரெடி…” கொஞ்சமும் அசைந்துகொடுத்தானில்லை அவன்.

Advertisement