Advertisement

மின்னல் – 12

          இன்னும் அவள் தன்னிலைக்கு மீளவில்லை. பாலாவின் அணைப்பில் சுருண்டிருந்தவள் கன்னத்தை தட்டியவன்,

“ஜீவா இங்க பார். எல்லாம் சரியாகிடும். நிமிர்ந்து பார், நான் தான் சொல்றேன்ல…” என தட்டி தட்டி நிமிர்ந்து பார்க்க வைத்தான்.

“நான் அன்னைக்கு வேணும்னு எதுவும் செய்யலை பாலா…”

“ஹ்ம்ம் புரியுது…”

“என்ன புரிஞ்சது உங்களுக்கு? முழுசா தெரிஞ்சா நீங்க கண்டிப்பா என்னை வெறுத்துடுவீங்க. அப்படி ஒரு பேக்ரவுண்ட். ஆனா எதுக்கும் நான் காரணமில்லை. இல்லவே இல்லை…”

“ப்ச், இப்ப எதுக்கு இதெல்லாம்? அமைதியா இரு…”

அவளை மனம் விட்டு பேச வைத்தவனே இந்த புலம்பல்களை நிறுத்த நினைத்தான்.

அவள் பேச்சுக்கள் தான் இன்னும் இன்னும் வேறு திசையில் பயணம் போக பாலாவிற்கு பொறுமை இல்லை.

“கொஞ்ச நேரம் பேசாம இரு ஜீவா. இப்ப என்ன நடந்துருச்சு?…” என்றவன் அவளின் பார்வையில்,

“நான் சொன்னேன்ல. எனக்கு தெரியும்…”

“தெரியும்ன்னா?…” ஜீவாவிற்கு மனதிற்குள் திடுக்கிடல்.

‘எல்லாம் என எதை சொல்கிறான்?’ என யோசனைகளுடன் அவள் பார்வை பாலாவை சூழ,

“எல்லாமேன்னா எல்லாமே தான். உன்னோட அப்பாவோட பிரபஷன், அம்மா டெத். எல்லாம் எல்லாம் தான்…” அவன் சொல்லிய நொடி முகத்தில் அடித்துக்கொண்டு கதற ஆரம்பிக்க,

“ஜீவா காம் டவுன்…” என அவளை பிடித்து கை கொண்டு வாயை பொத்தியவன் தன் சத்தத்தை குறைத்து அதட்டினான் பாலா.

“எதுக்கு இத்தனை அழுகை? போதும் அழுததெல்லாம். இதுக்கு மேல சொட்டு கண்ணீர் வரட்டும். தொலைச்சிருவேன்…” என்றவனுக்கு மடங்கி அமர்ந்திருந்ததில் கால்கள் வலியை கொடுக்க,

“எழுந்திரு…” என அவளின் கையை பிடித்து எழுப்பி தானும் நின்றுகொண்டான்.

“இதை இந்த ரூம்லயே விட்டுடு. ரிலாக்ஸா இருக்கனும்…”

“ஹ்ம்ம்…” என்றாலும் அவள் முகம் தெளிவில்லை.

“என்ன ஹ்ம்ம்? இங்க பேசினதை இங்கயே மறந்திட்டு வேலையை பார். புரியுதா?…”

“ஹ்ம்ம்…”

“உன்னை திருத்தவே முடியாது. பேசினா தேவை இல்லாம பேசறது. இல்லைன்னா வாயே திறக்கறதில்லை…” என அதட்டியதும் சற்றே நிதானத்திற்கு வந்து அவனின் கையிலிருந்து தன்னை உருவிக்கொண்டு தள்ளி நின்றாள்.

“ஹ்ம்ம், தெளிஞ்சிருச்சு போல?…” பாலாவின் குரலில் நக்கல் தெறிக்க,

“என்னை பார்த்தா எப்படி தெரியுது?…” இப்போது கோபத்துடன் பேசினாள் ஜீவா.

உடனே அவளின் கேள்விக்கு பதில் கூறாமல் படுக்கையில் இருந்தவரை திரும்பி பார்த்துவிட்டு ஜீவாவிடம் திரும்பிய நொடி,

“நான் கிளம்பறேன்…” என நகர்ந்தாள் ஜீவா.

அவனின் பார்வையும் புன்னகையும் இறுக்கத்தை குறைத்து புது உணர்வை பூவாய் தூவ அதனை மொத்தமாய் ஸ்வீகரிக்க முடியாது ஜீவாவின் மனது தள்ளாடியது.

“எங்க போற?…” பாலா கேட்கவும்,

“வேலை செய்ய தான். வேற எங்க? வானதி வெய்ட் பண்ணுவா…”

“ஓகே டேக் கேர்…” என்றதும் தலையசைத்துவிட்டு அவள் வெளியேறும் முன் படுக்கையில் இருந்த பாலாவின் அத்தையை மீண்டும் திரும்பி பார்த்தவள்,

“நான் இவங்களை பக்கத்துல போய் பார்க்கட்டுமா?…” என்றாள்.

அந்த கேள்வியிலுமே அத்தனை தயக்கம். தன்னை அனுமதிப்பானா? மாட்டானா? நம்புவானா? தான் எதுவும் செய்துவிடுவோம் என ஒரு நொடியாகினும் நினைத்துவிடுவானா? என அவன் பதில் சொல்லும் முன் ஆயிரம் சிந்தனைகள் வண்டாய் குடைந்துவிட்டது ஜீவாவை.

“பாரேன், என்னை ஏன் கேட்கிற?…” என்றான் இலகுவாக.

“ஹ்ம்ம்…” என்று அருகே சென்று பார்த்தவள் பார்வை அவரை உள்வாங்கினாலும் மனதிற்குள் ஒரு கேள்வி ஒலித்துக்கொண்டே இருந்தது.

“இவங்களை எதுக்காக கொலை செய்ய சொல்லியிருப்பாங்க?…” பாலாவிடம் கேட்க நினைப்பதாக எண்ணி தனக்குள்ளே அவள் முணுமுணுக்க உடனே பதில் வந்தது அவனிடமிருந்து.

“அது கூடிய சீக்கிரம் தெரிய வரும். நானே உனக்கு சொல்றேன்…” என அவளின் பின்னால் இருந்து பதில் சொல்லியவன் குரலில் திடுக்கிட்டு திரும்ப தன்னை உரசியபடி நின்றிருந்தவனை பார்த்து பின்னால் சாய போனாள்.

“ஹேய் பார்த்து ஜீவா…” பிடித்து நிறுத்திவிட்டான் அவளை நொடிபொழுதில்.

எங்கே படுக்கையில் இருப்பவரின் மீது சாய்ந்து அவருக்கேனும் ஆகிவிடுமோ என பயந்து போனான் பாலா.

சட்டென சுதாரித்து அவளை பிடித்து நிறுத்திய நொடி ஜீவாவிற்கும் படபடப்பில் கண்ணின் நீர் பொங்கிவிட்டது.

“நான் பின்னால நீங்க இருக்கறத கவனிக்கலை. ப்ராமிஸ். தெரியாம தான் என்னோட கேர்லஸ் தான். நிஜமா வேணும்னு செய்யலை…”

அந்த நிமிடம் சூழ்நிலை இருவருக்குமே கனமானதாக மாறிவிட்டது. அதிலும் ஜீவாவின் உணர்வுகள் அவனை இன்னுமே வலிக்க செய்தது.

“நான் எதுவும் நினைக்கலை. ஜீவா ரிலாக்ஸ். என்ன இது?…”

அவளை அமைதிப்படுத்த முயன்றாலும் மேலும் மேலும் சொல்லியதையே தான் கூறினாள் அவள்.

எங்கே தான் தெரியாமல் விழ போனதும் கோஅ திட்டமிட்டே என்று எண்ணிவிடுவானோ என்ற அச்சமும், தன்னிலையின் கழிவிரக்கமும் அவளை கூறுபோட்டது.

“ஜீவா என்னை பார்…” என்றவனுக்கு அவளை எப்படி சமாதானம் செய்வதென்றே தெரியவில்லை.

அறைக்குள் வந்து வெகுநேரம் ஆகிவிட்டது. வெளியே இருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் உள்ளே வரலாம்.

அப்படி இருக்க ஜீவாவின் புலம்பல்களும், மன்னிப்பும், தன்னிலை விளக்கமும் பாலாவால் சமாளிக்க முடியவில்லை.

ஒரு நொடி தயங்கினாலும் அவளை தனக்குள் இழுத்து இறுக்கமாய் அணைத்துக்கொண்டவன் அவள் முகத்தை அசையவிடாமல் தன் நெஞ்சில் புதைத்துவிட்டான்.

அந்த அணைப்பை கூட ஏற்க முடியாது முரண்டியவள் பின் அவனின் தலை கோதலில் மெல்ல நிதானத்திற்கு வந்தாள்.

“ஹ்ம்ம்…” என்று அவனிடமிருந்து விலக முணங்க,

“விடறேன், நீ திரும்ப ஏதாவது லூசுத்தனமா பேசின பார்த்துக்கோ. வாயை திறக்காம திரும்பி பார்க்காம அப்படியே போய்டு…” என்றவன் அவளை விட்டுவிடவும் வேகமாய் அவனை விட்டு விலகி கதவை திறந்துகொண்டு வெளியேறிவிட்டாள்.

அவள் சென்ற வேகத்தை பார்த்துக்கொண்டே வெளியே நின்றிருந்த இரண்டு நர்ஸும் உள்ளே நுழைய,

“பார்த்துக்கோங்க, நான் வெளில வெய்ட் பன்றேன்…” என சொல்லி பாலாவும் வெளியே வந்து முன்பை போல அந்த அறையின் வெளியே இருந்த இருக்கையில்  அமர்ந்துகொண்டான்.

ஜீவா தன் இடத்திற்கு வரவும் வானதி பார்ப்பதையும் கவனிக்காது வந்து அமர்ந்துகொண்டாள்.

நின்றுகொண்டிருந்த ஒருவரை பேசி அனுப்பி வைத்துவிட்டு ஜீவாவின் பக்கம் திரும்பிய வானதி,

“என்னாச்சு? இவ்வளோ நேரமா உனக்கு?…” என கேட்க ஜீவா ஒன்றும் பதில் சொல்லவில்லை.

“கேட்கிறேன்ல? ரொம்ப திட்டினாங்களா?…”

“ம்ஹூம்…” என்று தலையசைத்தாள்.

“பின்ன ஏன் இவ்வளோ நேரம்? இன்னுமா சரோ மேம் கிளம்பாம இருக்காங்க?…”

“அப்பவே கிளம்பிட்டாங்க…” ஜீவா உளற,

“அப்பவேன்னா? நீ என்ன இவ்வளோ நேரம் பண்ணிட்டிருந்த?…”

வானதி என்னவோ இதனை சாதாரணமாக தான் கேட்டாள். ஆனால் கேள்வியை எதிர்கொண்டவளுக்கு தான் பதில் சொல்லமுடியவில்லை.

“ஹ்ம்ம், இல்லை ஒரு நர்ஸ்கிட்ட பேசிட்டு இருந்தேன்…”  

“நீயா? நின்னு பேசினியா? நம்பற மாதிரி இல்லையே?…” கிண்டலுடன் சொல்லிய வானதி வேலையில் திரும்ப, தண்ணீரை குடித்துவிட்டு ஜீவா இயல்பாகவே நேரம் பிடித்தது.

அதன் பின்பு தான் நிதானமாக யோசிக்கவே செய்தாள் பாலாவுடன் பேசியவற்றை எல்லாம்.

ஒவ்வொன்றும் அவளின் மனதிற்குள் நீர் வற்றிய வறண்ட நிலம் போல ஆயிரம் வெடிப்புகளை உண்டாக்கியது. அத்தனையும் ரணமாய் எரிந்தது.

எல்லாம் தெரிந்தென்றால்? தெரிந்துமா தன்னை பிடித்தது என்றான்? எப்படி எப்படி?

அவன் தன்னிடம் பிடித்ததை கூறிய விதமும், கூறிய முறையும் மனதிற்குள் சந்தோஷத்தை தருவதை விட வேதனையை தான் தந்தது.

வேலையிலும் மனம் செல்லாமல், அங்கே அமைதியாகவும் அமர்ந்திருக்க இயலாமல் அவஸ்தையுடன் இருந்தவளிடம்,

“ஹப்பா, இப்ப கொஞ்சம் ப்ரீ. டீ சொல்லுவோமா ஜீவா?…” வானதி கேட்க,

“ஹாங்…” என திரும்பினாள்.

“என்ன ஹாங்? டீ சொல்லுவோமான்னு கேட்டேன்…”

“ஹ்ம்ம் சொல்லு. எனக்கும் சேர்த்து..”

“உனக்கென்னாச்சு? உனக்கும் சேர்த்து தானே எப்பவும் சொல்லுவேன்? இதை நீ புதுசா சொல்ற?…” என அவளை பார்த்த வானதி கேண்டீன் எண்ணிற்கு அழைப்பு விடுத்தாள்.

ரெண்டு டீ ண்ணே. வேற என்ன இருக்கு? சூடா எதாச்சும் போட்டிருக்கீங்களா?…” என போனில் கேட்டவள்,

Advertisement