Advertisement

அமர்ந்திருந்த ஜீவா சட்டென எழுந்து நின்று அவனிடமிருந்து கையை உருவிக்கொண்டு செல்ல பார்க்க,

“ஜீவா நில்லு, உன்கிட்ட பேசனும்…” என்றான் உடனே.

செல்லவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் சரோஜாவை பார்த்துக்கொண்டே அவள் நிற்க,

“என்ன மேம் எதுவும் சொல்லலை?…” பாலா மீண்டும் சரோஜாவிடம் கேட்க,

“ஆமா ஸார். நேரம் ஆகிருச்சே. அதான் கிளம்பிட்டேன். நைட் ட்யூட்டிக்கு வருவேன்…” என தனது வாட்சை பார்த்துக்கொண்டே சொல்ல,

“ஓகே, மேம். கிளம்புங்க…” என்றுவிட்டான்.

“ஹ்ம்ம்…” என சொல்லி ஜீவாவை திரும்பியும் பாராமல் அவர் சென்றுவிட்டார்.

“என்ன நினைச்சுட்டு இதெல்லாம் செய்யறீங்க? ஏற்கனவே என்னை பேசிருக்காங்க. இப்போ இப்படி செஞ்சு…” என தன் தலையில் அடித்துக்கொண்டவள்,

“என்னை சொல்லனும். அப்படியே போகாம பாவமேன்னு நினைச்சு  உங்ககிட்ட வந்தேன்ல…” எனவும்,

“பாவமேன்னு நினைச்சு வந்தியா? அப்போ சண்டை போட வரலை, அப்படித்தானே?…”

“சண்டைக்கும் தான். ஆனா…” என்றவள் அந்த மூடியிருந்த அறையை பார்த்துவிட்டு அவன் புறம் திரும்பி,

“க்ரிட்டிக்கல் ஸ்டேஜ்ன்னு சொல்லிருக்காங்கலாம். இப்போ பரவாயில்லையா உள்ள இருக்கறவங்களுக்கு?…” என்றாள் மற்றதை மறந்து.

“ஏன்?…”

“இல்லை தெரிஞ்சுக்க தான் கேட்டேன்…”

“ஹ்ம்ம், பார்ப்போம். ட்வென்டி ஃபோர் ஹவ்ர்ஸ் டைம் குடுத்திருக்காங்க. பார்க்கலாம்…”  என்றவனின் முகம் ஜீவாவை அழுத்த,

“சரியாகிடும். சீக்கிரம் குணமாகி மீண்டு வந்திருவாங்க…” என்று சொல்லிவிட்டாள்.

அவளின் பேச்சில் ஆச்சர்யமாக அவளை நிமிர்ந்து பார்த்தவனின் முகத்தில் ஒரு அவதானிக்க முடியாத புன்னகை. என்னவென்று ஜீவாவிற்கு விளங்கவே இல்லை.

“என்ன என்ன சிரிக்கிறீங்க?…” என கேட்க,

“அதை நீ சொல்ற இல்லையா? அதுதான் சிரிப்பு வந்துருச்சு…” என்றான்.

இப்போது இருக்கும் இந்த பாலாவின் முகத்தில் தன் மீதான ஒட்டுதல் துளியும் இல்லை.

என்னவோ சொல்ல போகிறான் என மனது படபடவென அடித்துக்கொள்ள அவள் பயந்ததை போலத்தான் அவனும் பேசிவிட்டான்.

“இவங்க இருக்க கூடாதுன்னு தானே நீ நினைச்ச? இப்போ நீயே இப்படி பேசும் போது, அதான் சிரிப்பு வந்துருச்சு…”

“பாலா…” அதிர்ந்துவிட்டாள் ஜீவா.

“ஹ்ம்ம், பாலா தான் சொல்லு…” என்றவன் முகத்தில் மிதமிஞ்சிய வேதனை.

“இல்லை, நிஜமா இல்லை. நான் அப்படி எதுவுமே நினைக்கலை…”

“எதுவுமேன்னா?…”

“எனக்கு அவங்க யாருன்னு கூட தெரியாது பாலா…” என்றவள் பேச்சை யாரேனும் கேட்டுவிடுவார்களோ என நினைத்தவன் எழுந்து அவளை கை பிடித்து அந்த அறைக்கதவை திறந்துகொண்டு உள்ளே அழைத்து சென்றான்.

உள்ளே இருந்த நர்ஸ் இரண்டு பேரும் இவர்களை பார்த்ததும் திடுக்கிட்டு எழுந்துவிட்டனர். அதில் ஒருவர் வினோதினி.

“என்ன ஜீவா?…” என அவள் கேட்க,

“வெளில வெய்ட் பண்ணுங்க…” என்றான் பாலா.

“ஓகே ஸார்…” என்று சொல்லி அவர்கள் வெளியேறிவிட இன்னுமே அதிர்ந்த முகம் மாறவில்லை ஜீவாவிற்கு.

தன் பேச்சு அவளை எத்தனை காயப்படுத்தியிருக்கும் என்பதில் அவனுக்கு எந்தவித ஐயமும் இல்லை.

ஆனால் பேசாமல் இருக்கமுடியாதே? இது வெறும் உயிர் மட்டுமா சம்பந்தப்பட்டது? இன்னும் ஜீவா தன்னையே பார்த்திருக்க,

“அங்க பார்…” என காண்பித்தான் படுக்கையில் இருந்தவரை.

படுக்கையில் உடலில் எலும்பை தவிர வேறேதும் உள்ளதா என சோதித்து பார்க்கும் அளவிற்கு எலும்புடன் தோல் ஒட்டிய அந்த உடலில் உயிரை பிடித்துவைக்க அத்தனை உபகரணங்கள்.

இன்னும் சீரற்ற உடல்நிலை தான் அங்கிருந்தவருக்கு. அதனை காப்பாற்றிவிடவேண்டுமென்ற முனைப்பும், ஆவேசமும் என தன் முன்னே நின்றிருப்பவனின் உணர்வுகளை அவளால் ஓரளவு உள்வாங்க முடிந்தது.

“இவங்க…”

“பேர் சாலாட்சி. இங்க எல்லாரும் தெரிஞ்சுக்க, கொலை முயற்சி பண்ணன்னு தேடிட்டிருக்கிறவங்க…” என்றவன்,

“என்னோட அத்தையும் கூட…” என்றான்.

“அத்தையா? உங்க சொந்தமா இவங்க?…” இன்னும் அதிர்ச்சியுடனே அவனை பார்த்தவளுக்கு தலையசைத்தவன்,

“ஹ்ம்ம் ஆமா…” என்றான்.

“நிசமா எனக்கு இவங்க யாருன்னு தெரியாது….”

“ஹ்ம்ம், தெரியும்…”

“ஆனா ஏன் என்னை நீங்க அப்படி பேசினீங்க? நான் ஒன்னும் இவங்க இருக்க கூடாதுன்னு நினைக்கலையே?…”

“இருக்கனும்னு நினைச்சிருந்தா அன்னைக்கு நைட் உன்னை நான் பார்த்தப்பவே என்கிட்டே விஷயத்தை சொல்லியிருப்ப…”

“என்ன? என்ன விஷயம்?…”

“இன்னும் எவ்வளவு நாள் இப்படியே ஒன்னும் தெரியாத மாதிரியே இருப்ப ஜீவா?…” என்று கேட்கவும் இன்னுமே பயந்து போனாள்.

“உனக்கு மிரட்டல் கால் வரவும் ஏன் மேனேஜ்மேன்ட்ல சொல்லலை?…”

“பாலா…”

“எனக்கு தெரியும், அன்னைக்கு நீ பார்க்க போன அந்த ஆள் அந்த பிரபாவோட புருஷன்…”

“உங்களுக்கு எப்படி?…”

“அவன் தானே உனக்கு கால் பண்ணினான்? அவன் தானே உன்னை மிரட்டினான்?…”

“பாலா…”

“என்ன பாலா, பாலா? உண்மையை சொல்லுடி. எவ்வளவு அழுத்தம் உனக்கு? நானும் எத்தனை தடவை எத்தனை விதமா கேட்டிருப்பேன். வாயை திறந்தியா நீ?…” என்று கோபத்துடன் பேச முகத்தை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள்.

“அழாத. இரிட்டேட் ஆகுது. சொல்லு அன்னைக்கு என்னை நீ பார்க்காம இருந்திருந்தா இன்னைக்கு இவங்க இல்லை தானே?…” என கடுமையுடன் கேட்க,

“இல்லை, நான் அப்படி நினைக்கவே இல்லை. நிஜமா, நிஜமா நான் எதுவும் செஞ்சிருக்கமாட்டேன்…”

“என்ன செஞ்சிருக்கமாட்ட?…”

“பாலா ப்ளீஸ்…”

“நான் சொன்னதுக்கு மட்டும் அழற நீ. ஆனா நீ அப்படி இல்லையே?…”

“நிஜமா இவங்க இருக்க கூடாதுன்னும், சாகனும்னும் நினைக்கவே இல்லை பாலா. நம்புங்க…”

“எதையுமே சொல்லாம இருக்க உனக்குள்ள வச்சுக்கிட்டதுக்கு பேர் என்ன?…”

“பாலா நான்…”

“இவங்களை முடிக்க சொல்லி உனக்கு ஒருத்தன் சொல்றான்னா அப்ப இவங்க உயிருக்கு ஆபத்துன்னு உனக்கு தெரியும் தானே? இவங்களை நான் எவ்வளவு கேர் பன்றேன்னும் தெரியும் தானே? ஏன் என்கிட்ட சொல்லலை?…” என கேட்க வாயடைத்து நின்றாள்.

“அப்போ உன் மூலமா நடக்கலைன்னாலும் யாராவது இதை செய்யட்டும்ன்ற அலட்சியம் தானே?…” என பேச பேச ஒடிந்துபோனாள் மனதளவில்.

“என்னை நம்பலையா பாலா?…”

“எதை வச்சு நம்பனும்னு சொல்ற? உன்மேல விருப்பப்பட்டு உன்னை மனசால் நேசிச்சா கண்ணை மூடிட்டு நம்புவேன்னு நினைப்பியா நீ?…”

சொல்லிவிட்டான், பேச்சு வேகத்தில் அவள் மீதான ஆதங்கத்தோடு, தன் உள்ளக்கிடங்கையும் அவன் கொட்டிவிட அவள் சமைந்துபோனாள்.

“என்ன? என்ன பார்க்கிற?…” என கேட்க இன்னும் அந்த அதிர்வில் இருந்து மீளவில்லை.

“ஜீவா…” அவளின் கன்னம் தொட நீண்டவனின் கையை விட்டு விலகியவளாக,

“இல்லை இல்லை…” என்று பின்னால் மடிந்து அமர்ந்துவிட்டாள் தரையில்.

“என்ன இல்லை…”

“இல்லை நீங்க இப்படி பேச கூடாது. நான் நான் உங்களுக்கு. இல்லை வேண்டாம் பாலா…” கண்ணீர் வடிய அவனிடம் இறைஞ்சுதலாக அவள் சொல்ல,

“நீ தான் வேணும். உனக்கு விருப்பம் இல்லைன்னா சொல்லேன்…” என்றான் இன்னும் பிடிவாதமாக.

“விருப்பம், விருப்பமில்லைன்றது வேற. நான் வேண்டாம்….”

“என்னன்னு சொல்லு…”

“ம்ஹூம், முடியாது. என்னால எதையும் சொல்லமுடியாது…”

“அப்போ என்னையும் வேண்டாம்ன்னு சொல்லாத நீ…”

“ஏன் புரிஞ்சுக்கமாட்டேன்றீங்க? பாலா நான் ஒரு கொலைகாரி…” என்று சொல்லி மெல்லிய குரலில் கதற நிதானமாக அவளின் அருகே மண்டியிட்டு அமர்ந்தான் பாலாவும்.

“ஒரு கொலை தானே? தப்பில்லை…” என்றவனை திகைத்து பார்த்தவள்,

“இல்லை ரெண்டு. ரெண்டு பண்ணிருக்கேன்…” என்றாள் இன்னும் அழுகையுடன்.

“சோ வாட்? நான் எதுக்கு இருக்கேன்? நான் பார்த்துக்கமாட்டேனா? இது கூட முடியலைன்னா நான் என்ன வக்கீல்?…” என்றவன் அவளின் முகத்தை கையிலேந்திக்கொண்டான்.

அவனுக்கு தெரிந்திருக்கிறது என்பது ஒருபக்கம் என்றாலும், இப்படி அவன் முன்னிலையில் நிற்கிறோமே என்பதே அவளை இன்னும் வதைத்தது.

“என்னை நம்பு ஜீவா…” என்று அவளை தன் தோளில் சாய்த்துக்கொண்டான் பாலமுரளிகிருஷ்ணா.

உங்களுக்கு எல்லாம் தெரியும் இlல்லையா?…”

“ஹ்ம்ம் எல்லாமே…” என்றவனின் பேச்சில் ஆறுதல் காணமுடியாதளவிற்கு வெகுவாய் சுருண்டுபோனாள் ஜீவன்யா.

Advertisement