Advertisement

மின்னல் – 11

           இரவு முழுவதும் ஜீவாவின் மனதில் ஓயாத எண்ணங்கள் பாலாவை கொண்டு.

தூக்கத்தை தொலைத்தவளாக விழித்தே இருக்க காலை தென்றல் கிளம்பும் வரையிலும் ஜீவா வேலைக்கு கிளம்பவில்லை.

வானதியே இன்னும் அவள் வராமல் இருப்பதில் தேடி வந்துவிட இன்னும் குளிக்காமல் கூட அமர்ந்திருந்தாள்.

“என்ன ஜீவா? இன்னும் கிளம்பாம இருக்க?…” என்று அருகே வந்து நெற்றியில் கை வைத்து பார்க்க சோர்வுடன் அதனை எடுத்துவிட்டாள்.

“நல்லா தான் இருக்கேன் வானதி. தலை வலி. அதான்…”

“அப்போ இன்னைக்கு லீவா?…”

“இல்லை இல்லை. ஏற்கனவே ஒன் வீக் லீவ்ல தான இருந்தேன். லீவ் எல்லாம் இல்லை. ஏதோ ஞாபகம், அப்டியே இருந்துட்டேன்…”

“லீவ் இல்லைன்ற, ஆனா இன்னும் கிளம்பலையே?…”

“ஆமால…” என்றவள் மணியை பார்த்துவிட்டு,

“சரி நீ கிளம்பு. எனக்கு ஒரு மணிநேரம் பர்மிஷன் சொல்லிரு. நான் வந்திடறேன். சொல்லிடுவியா?…”

“அவ்வளோ தானே? நான் சரோ மேம்கிட்ட பேசிக்கறேன்…” என்று சொல்லியவள் கிளம்பிவிட்டாள்.

சமையலை மட்டும் முடித்து தங்கைக்கு கொடுத்து அனுப்பியிருக்க அந்த பாத்திரங்கள் எல்லாம் எடுத்து வைத்துவிட்டு தனக்கும் எடுத்துக்கொண்டு மிச்சத்தை கழுவி கவிழ்த்தினாள்.

வீட்டை பெருக்கி சுத்தம் செய்து முடித்து தானும் குளித்து கிளம்பியவள் வீட்டை பூட்டிவிட்டு வேகமாய் மருத்துவமனைக்கு விரைந்தாள்.

ஜீவா உள்ளே வருவதை பார்த்துவிட்ட வானதி அவள் வந்ததும் ஜீவாவின் கை பையை வாங்கி வைத்துவிட்டு,

“சரோ மேம் பேசனும்னு வர சொன்னாங்க…”

“உடனேவா?…”

“வந்ததும் பார்க்கனும்னு சொன்னாங்க. போய் பார்த்துட்டு வந்திரு…”

“அச்சோ, கோவமா இருக்காங்களா?…”

“தெரியலை. ஆனா அப்படித்தான் நினைக்கறேன். எதுக்கும் நீ பேசிட்டு வா. என்ன ரெண்டு திட்டு தானே?…”

“ஹ்ம்ம், சரி. எங்க இருக்காங்க?…” என கேட்க,

“செகெண்ட் ப்ளோர்ல இருக்காங்க…” என்றதும்,

“அங்கையா? சரோ மேம் ரூம் பர்ஸ்ட் ப்ளோர் தானே?…”

“தெரியலை. வந்ததும் உன்னை காணும்னு கேட்டுட்டு அங்க வர சொல்லிட்டு போனாங்க. நீ போய் பார்த்துட்டு வா…” என சொல்லி வேலையில் திரும்பிவிட ஜீவாவும் மேலே சென்றாள்.

என்ன கேட்பாரோ? எதுவும் பேசுவாரோ? என யோசனையுடனே தான் சென்றாள்.

அங்கே வேலைக்கு சேர்க்கும் பொழுதே அத்தனை கண்டிப்புடன் தான் சேர்த்தார் அவளை.

அவரைகொண்டே அவள் அங்கே வசிப்பதும், வாழ்வதும். இன்று அழைக்கவும் எதற்கோ? என்ன சொல்வாரோ என்றிருந்தது.

அங்கிருந்த ஸ்டாப்ஸ் அறையில் நுழையும் முன்பே சற்றே தள்ளி இருந்த இடத்தில் வரிசையான இருக்கைகள் இருக்க அதில் ஒன்றில் கண்ணை மூடியபடி சாய்வாக அமர்ந்திருந்தான் பாலா.  

அந்த நேரத்தில் அதுவும் அப்படி ஒரு நிலையில் அவனை இதுவரை பார்த்திராதவளுக்கு சட்டென மனதிற்குள் ஒரு அலை. அவனை பார்த்தபடியே நின்ற இடத்தில் இவள் தேங்கிவிட,

“என்ன ஜீவா இங்க வந்திருக்க?…” என்ற சத்தத்தில் திடுக்கிட்டு திரும்ப அங்கே வேலை செய்யும் செவிலி பெண்.

“அக்கா…” என்று அவரிடம் திரும்பி,

“இந்த நேரத்துல இங்க என்ன பன்ற ஜீவா?…”

“இல்லை சரோ மேம் என்னை வர சொன்னாங்களாம். அதான் பார்க்க வந்தேன்…”

“ஹ்ம்ம், உள்ள தான் இருக்காங்க. இன்னும் வீட்டுக்கு போகலை அவங்களும்…” என்றதும் தான் அவளுக்கு சரோவிற்கு நைட் ஷிப்ட் என்பதே ஞாபகம் வந்தது.

“நான் அதை மறந்தே போய்ட்டேன். எப்படி மேம் இன்னும் கிளம்பலைன்னு யோசிக்கலை. உங்களுக்கும் நைட் ட்யூட்டி தானே?..” என்றவள் மீண்டும் பாலாவை பார்த்தாள்.

“இவங்க இங்க…” என பாலாவை காண்பித்து கேட்க,

“அதை ஏன் கேட்கிற? அந்த ரூம்ல உள்ள பேஷண்ட்க்கு நைட் சீரியஸ் ஆகிடுச்சு. அவங்களை கவனிக்கிற டாக்டர்ஸ் கூட இன்னும் கிளம்பலை. இங்க தான் இருக்காங்க…”

“என்னாச்சு?…” என பதறிவிட்டாள்.

அந்த பேஷண்ட் பாலாவிற்கு எத்தனை முக்கியம் என்று ஓரளவு தெரிந்தது தானே? ஏற்கனவே அவரை கொலை செய்யும் முயற்சியில் எப்படியோ தப்பிவிட்டார்.

இப்போது இன்னொன்றா? என எண்ணியபடி பாலாவை திரும்பி பார்த்தாள் ஜீவன்யா.

“நைட் வந்த கிருஷ்ணா ஸார் இன்னும் கிளம்பலை. இங்கயே தான் இருக்கார். சுத்தமா தூங்கவும் இல்லை…”

“இப்போ எப்படி இருக்காங்க அந்த பேஷண்ட்?…”

“ஓகே தான். ஆனா எப்போ வேணா என்ன வேணா ஆகும்ன்ற நிலைமை தான். வழக்கம் போல இருபத்தி நாலு மணி நேர அவகாசம் குடுத்திருக்காங்க…” என்ற பெண்,

“சரி நீ போய் பாரு. நானும் கிளம்பறேன். நம்ம கைல என்ன இருக்கு?…” என்று சொல்லி நகர பாலாவை பார்த்துக்கொண்டே அந்த அறையை எட்டியவள் உள்ளே சரோஜா தீவிரமாக எதுவோ பேசிக்கொண்டிருந்தார் சக பணியாளரிடம்.

“மேம்…” என்ற ஜீவாவின் குரலில் திரும்பி பார்த்தவர்,

“உள்ள வா…” என்று சொல்லிவிட்டு அவர்களை பேசி அனுப்பி ஜீவாவிடம் திரும்பினார்.

“என்ன இன்னைக்கு புதுசா பர்மிஷன்?…” என கேட்க,

“ஸாரி மேம்…” என்றாள் உடனே.

“உன்கிட்ட ஸாரி கேட்கலை நான். ஏன் வர லேட்ன்னு கேட்டேன்…”

“கொஞ்சம் உடம்புக்கு…”

“இங்க பாரு ஜீவா, இங்க எல்லாருமே மனுஷங்க தான். உடம்புக்கு வரதும் சகஜம் தான். ஆனா நீ பிராப்பரா லீவ்க்கோ, பர்மிஷனுக்கோ இன்பார்ம் பண்ணிருக்கனும். இல்லையா எனக்கு நீ கால் பண்ணி சொல்லிருக்கனும். அதென்ன வானதிட்ட சொல்லி அனுப்பறது?…”

“தப்பு தான் மேம்…”

“அவ உன் ப்ரெண்ட். உன்னோட வேலையும் அவ ஷேர் பண்ணிப்பா. அது உங்களுக்குள்ள உள்ள அண்டர்ஸ்டேண்டிங். ஆனா இங்க ரூல்ஸ்ன்னு ஒண்ணு இருக்கு. முடியாதவங்களை வேலைக்கு வந்தே தீரனும்னு யாரும் கட்டாயப்படுத்த போறதில்லை…”

“ஆனா நீ பிராப்பரா எனக்கு தான் இன்பார்ம் பண்ணிருக்கனும். அதை விட்டுட்டு வானதிட்ட சொல்லி அனுப்பற? இதுவரைக்கும் யாருமே செய்யாத ஒண்ணு ஜீவா…” என்றார் கண்டிக்கும் குரலில்.

“இனி இப்படி நடக்காது மேம்…” அவரின் பேச்சை கேட்டுக்கொண்டவள் ஒப்புதல் தர,

“எனக்கு புரியுது. ஆனா நீயும் ஒண்ணை புரிஞ்சுக்கனும் ஜீவா…” என்றவர் குரலை தழைத்துக்கொண்டு,

“இங்க இதுவரைக்கும் நீ இருந்தது வேற. இப்போ உன்னை கிருஷ்ணா ஸாரை வச்சு தான் பார்ப்பாங்க…” என்றதும் முகம் மாற அவரை பாவமாய் பார்த்தாள்.

“நான் சொல்றது உனக்கு கஷ்டமா தான் இருக்கும். ஆனா சொல்லவேண்டியது என் கடமை….”

“சொல்லுங்க மேம்…” என்றால் முகத்தில் சட்டென வந்துவிட்ட இறுக்கத்துடன்.

“இப்போ உனக்கு உடம்பு முடியலைன்னு யாரும் நினைக்க மாட்டாங்க. புதுசா நீ பழக்கத்தை உண்டு பண்ணுறன்னு இங்க மத்தவங்க மேனேஜ்மெண்டை கூட இதை வச்சு பேசலாம். இது நமக்கு தெரியாதுன்ற வரைக்கும் தான். ஆனா யாரும் பேசாம இருக்கமாட்டாங்க…” என்றதும் இன்னுமே வாடி போனாள் அந்த பேச்சில்.

“உனக்கு கஷ்டமா தான் இருக்கும். ஆனா நான் சொல்லித்தான் ஆகனும். உன்னை இங்க சேர்த்தது நான். அப்போ எனக்கு அந்த ரைட்ஸ் இருக்கு தானே?…”

“எஸ் மேம்…” என்றாள் ஜீவா.

“ஓகே, நீ கிளம்பு. இனி முடியலைன்னா நீ என்னை தான் காண்டேக்ட் பண்ணும். இல்லையா விஜயா சிஸ்டர்கிட்ட பேசு. ஆனா நீ தான் நேரடியா பேசனும்…” என்றவர்,

“இப்போ கிளம்பு…” என்று சொல்லவும் தலையசைத்து கிளம்பிவிட்டாள் ஜீவா.

மனது குமுறியது. ‘இதற்கு தானே வேண்டாம் வேண்டாம் என சொல்லி கெஞ்சினேன். ஏத்தனை அசிங்கம் எனக்கு?’ என வேதனையாக இருந்தது.

தன்னிலையை நொந்துகொண்டே வெளியே வந்தவள் பாலா தன்னிரு கைகளாலும் முகத்தை துடைத்தபடி இருப்பதை கண்டு கோபமாய் அவனை நோக்கி சென்றாள்.

அவள் வந்த சத்தத்தில் அவளை திரும்பி பார்த்தவன் என்னவென்னும் உணர்வை தாங்கி அவளை பார்த்தான்.

“இப்ப உங்களுக்கு சந்தோஷமா?…” என முட்டி வந்த அழுகையை அடக்கியபடி அவள் கேட்க,

“என்னாச்சு? என்ன கேட்கிற நீ?…” என்றான் சோர்வுடன்.

“எல்லாம் உங்களால தான். வேண்டாம் வேண்டாம்ன்னு எத்தனை கேட்டேன். உங்களை யார் பேச சொல்லி சொன்னது? இன்னைக்கு எல்லா அசிங்கமும் எனக்கு தான்…”

கோபத்துடன் ஜீவா சொல்ல அவள் தன்னிலையில் இல்லாததை உணர்ந்த பாலா சுற்றும் முற்றும் பார்த்து அவளை கை பிடித்து இழுத்து தனக்கருகே இருந்த இருக்கையில் அமரவைத்தான்.

“விடுங்க என்னை…” என அவள் கையை உதறிக்கொள்ள,

“மெதுவா பேசு ஜீவா…” என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்.

“நான் கோபமா உங்களை பேசினா உங்களுக்கு தப்பா இருக்கா? என்னை பத்தி கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தீங்களா?…”

“ஜீவா என்ன நடந்துச்சுன்னு சொல்லு…”

“என்னால ஒரு பர்மிஷன் கூட போட முடியலை. உங்களை வச்சு என்னை பேசுவாங்கன்னு சொல்றாங்க…”

“யார்?…”

“சரோ மேம்…”

“உனக்கு பர்மிஷன் வேணும்னு நீ கேட்டும் இல்லைன்னு சொன்னாங்களா?…” என்றான் அவளிடத்தில்.

“ஹ்ம்ம், இல்லை அப்படி இல்லையே…” என்றவள் என்ன பேச வந்து எதை சொல்லிக்கொண்டிருக்கிறோம் என நினைத்தாள்.

“வேற என்ன?…” என்றவனிடம் அதற்கு மேலும் பேச விரும்பாமல்,

“ஒன்னும் இல்லை…” என்று எழுந்து செல்ல போக,

“ப்ச், சொல்லிட்டு போ. சண்டை போட தானே வந்த? என்னன்னு முழுசா சொல்லு. இல்லைன்னா நீ லீவ் போட்டுட்டு வந்து எனக்கு சொல்லனும்….”

“லீவா? அச்சோ வானதி தனியா இருப்பா…” என்று மீண்டும் எழுந்துகொள்ள பாலா அவளை இழுத்து அமர வைத்தவன் அவளை தாண்டி பார்க்க சரோஜா இவர்களை தான் பார்த்தார்.

“போச்சு, போச்சு…” என்றவளுக்கு இப்போது குரலும் உதற கண்ணீர் நிறைந்துவிட்டது.

“நான் உங்களை பார்த்ததும் வந்திருக்கவே கூடாது…” என்று அவனிடத்தில் கோபமாக சொல்லியவள் உதடு பிதுங்க அவளை பார்த்தவனின் சோர்வெல்லாம் பறந்து சிறு புன்னகை உதயமானது.

அதற்குள் சரோஜா வீட்டிற்கு கிளம்பி தனது பேக்குடன் இவர்கள் பக்கமாக நடந்து வந்தார்.

அவரின் ஸ்கூட்டி அந்த பக்கம் உள்ள பார்க்கிங்கில் இருப்பதால் அவ்வழி தான் செல்ல வேண்டும்.

அதனால் வேறு வழியின்றி கண்டும் காணாமல் சென்றுவிடுவோம் என நடந்து செல்ல,

“கிளம்பியாச்சா மேம்?…” என்றான் பாலா வலிய அவரை அழைத்து.

Advertisement