Advertisement

பாலாவுக்கும், இவர்களுக்கும் உள்ள வேற்றுமை இதுதான். இத்தனை வருடத்தில் தன்னுடைய சின்ன சின்ன அசைவும் எதற்கென அவனுக்கு தெரிந்திருந்தது. 

அவன் தெரிந்துகொண்டதில் வியப்பில்லை. அதற்கு தானே தன்னிடம் அவன் வந்து சேர்ந்ததே? பலத்தை மட்டுமல்ல பலவீனங்களையும் கற்றுக்கொண்டவன் அவன். 

அதுவே சில நேரம் அவனிடத்தில் பெரிதாய் இடித்துக்கொள்ளாமல் செல்ல முடிந்தது அவரால். 

அரங்கநாதன் யோசனையில் இருக்க ஆளவந்தான் இன்னும் செல்லாமல் அமர்ந்திருந்தார். 

“ஆளவந்தான் நீங்க இன்னும் கிளம்பலை…” என சொல்ல,

“இல்லை ஸார், அந்த கன்ஸ்ட்ரக்ஷன் ஸ்டே விஷயமா பேசனும். நாளை மறுநாள் கேஸ் கோர்ட்டுக்கு வருது…” என்று சொல்ல தலையசைத்தார் அரங்கநாதன். 

அந்த கோப்புகளை எடுத்து வைத்து தங்களுக்கு சாதகமான குறிப்புகளை எல்லாம் ஆளவந்தான் பட்டியலிட அரங்கநாதனின் மூளை இதை பாலமுரகிருஷ்ணா எப்படி முறியடிப்பன் என்று யோசிக்க ஆரம்பித்தது. 

அவர் அவன் விஷயத்தில் கோட்டைவிட்டதும் அவ்விடத்தில் தான். திறமைசாலி, புத்தி கூர்மை என சில்லாகித்து அவனை மெருகேற்றியவர் அவனின் பலவீனங்களை அறியாமல் போனார். 

அதுவே அவனின் பலமாகவும் இருந்தது. ஒரு வழக்கை எத்தனை விதமாக கையாளலாம், எந்த வழியில் எல்லாம் செல்லலாம் என்னும் வித்தைகளை எல்லாம் கற்றுக்கொண்டவன் அவர் வழியில் சென்று அவரின் நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டவன் தன் பாணியை காண்பித்து கொண்டதில்லை. 

எத்தனை யோசித்தும் தன்னுடைய சாதுர்யம் தான் பார்வைக்கு விரிந்ததே தவிர அவன் எப்படி கையாளுவான் என அனுமானிக்க முடியவில்லை.

ஆளவந்தான் பேசிக்கொண்டிருக்க அதற்குள் இன்டர்காமில் அவன் வந்துவிட்ட தகவல்.

கண்ணாடி வழியே பார்த்துக்கொண்டே அவனை உள்ளே அனுப்புமாறு சொல்லிவிட்டு அவன் நுழைவதை கவனிக்க ஆரம்பித்தார். 

வெளி அறைக்குள் வந்தவன் நிதானமாக அங்கிருந்தவர்கள் அனைவரையும் பார்த்து பேசி சிரித்து பின்பே அரங்கநாதன் அறைக்குள் நுழைந்தான். 

வழக்கம் போல கதவையும் தட்டவில்லை. காத்திருக்கவும் இல்லை. மற்றவர்களுக்கு இதிலேயே தெரிந்துவிடும் இருவருக்குமான உறவு என்ன என்பது. 

“ஹலோ ஸார், குட் ஈவ்னிங்…” என்று உள்ளே வந்தவன்,

“நம்ம ஆலு இங்கயா இருக்கார்?…” என அவன் கேட்க,

“உட்கார் கிருஷ்ணா…” என்றார் அரங்கநாதன். 

“இப்படித்தான் இப்படித்தான் ஸார் ஆளு, ஆளுன்னு பேசறான்…” என்று குற்றம் வாசிக்க,

“சரி சரி, கண்ணை துடைச்சுட்டு அப்படி பெஞ் மேல ஏறி நில்லுங்க ஆளு…” என்றான். 

“இப்பவும் பாருங்க. கொஞ்சமாச்சும் வயசுல மூத்தவன்ற மரியாதை இருக்கா? சீனியர் லாயர்ன்னு கூட மதிக்கலை. ஆளு ஆளுன்னு. நான் என்ன இவன் ஆளா?…” 

“ஆளு அங்கிள். நான் சொன்ன ஆலு பொட்டேட்டோ இல்லை. ஆளு. ஆளவந்தானோட ஷார்ட் ஃபார்ம் தான் ஆளு. நீங்க உங்க சைஸை சொன்னேன்னு நினைக்காதீங்க…” என்றான் நக்கலாக. 

“பார்த்துக்கோங்க, இவன் எப்படியாப்பட்ட ஆள்ன்னு…” 

“நீங்க கூட தான் இப்ப என்னை ஆளுன்னு சொன்னீங்க. இதுக்கெல்லாம் கோச்சுக்கறதா?…”  அவன் சிரிக்க,

“உன்கிட்ட மனுஷன் பேசுவானா?…” 

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கோர்ட் கேம்பஸ்ல நீங்கதான் அக்கறைன்னு சக்கரையோட என்கிட்டே பேசினீங்க. அப்போ நீங்க மனுஷன்  இல்லையா?…”  

என்ன கேட்டாலும் அதற்கு ஒரு பதிலை அதுவும் நக்கலாய் இகழ்ச்சி பொதிந்த குரலில் பாலா பேச பேச ஆளவந்தானுக்கு பிபி தான் கூடியது. 

அதிலும் அரங்கநாதன் இருவரையும் வேடிக்கை மட்டுமே பார்த்தபடி இருக்க இவர் எதுவுமே இவனை சொல்லமாட்டாரா என்று தோன்றியது. 

“ஸார், நீங்களே கேளுங்க. இவனும் இவன் பேச்சும். மகா மட்டமான ஆளா இருக்கான். கொஞ்சமும் ஒரு லாயர்ன்ற கட்டர்சி இல்லை…” என தனது கடுப்பை இப்படி பேச,

“மிஸ் மிஸ் இவன் என்னை வின் பண்ணிட்டான் மிஸ்ன்னு இங்க வந்து ஸ்கூல் பையன் மாதிரி கம்ப்ளெயின்ட் பண்ணிட்டு. ஸ்டேன்ட் அப் ஆன் தி பென்ச் ஆளு அங்கிள்…” என்று அதற்கும் நக்கலாக பதிலளித்தவன்,

“இந்த மட்டமான ஆள்கிட்ட தான் மோசமா தோத்திருக்கீங்க லாயர் ஆளவந்தான். அதை மறந்திட வேண்டாம்…” என்றான் சிரிப்பு மறைந்த இறுக்கத்துடன். 

சட்டென்று மாறுபட்ட அவனின் முகபாவனையில் ஆளவந்தான் மூச்சு வாங்க முகம் திரும்பிக்கொண்டார். 

“நீங்க சொல்லுங்க ஸார்…” என்று நேராக அரங்கநாதனை பார்த்து கேட்க அவனின் கேள்வியின் அவனின் முகத்தை கூர்ந்தார். 

‘என் வழியில் தலையிடாதே என நேரடியாக சொல்லிவிட்டு அதற்கு இவன் முடியாதென்றால் தனக்கு அவமானம்’ என தெரிந்தது. 

‘கொஞ்சமும் பேச யோசிக்கமாட்டான். நிச்சயம் மறுத்து பேசிவிடுவான் இவன்’ என்பதில் அத்தனை நம்பிக்கை இருந்தது அவருக்கு.

வர சொல்லிவிட்டார் தான். ஆனால் அதை பேசமுடியவில்லை. அதுவும் தன் முன்னிலையில் ஆளவந்தானை வைத்து வாங்கியதில் பேச நினைத்ததை  அப்படியே நிறுத்திவிட்டார். 

“பார் கவுன்சில் எலெக்ஷன் வருது கிருஷ்ணா…” 

“எஸ், ஐ க்னோ…” 

“நீ கலந்துக்கறதா இருந்தா சொல்லு. உனக்கு சீட் அலாட் பண்ணனும்…” என கேட்க அவனுக்கு அத்தனை சிரிப்பு. கூடவே ஒருபக்கம் வருத்தம். 

அவரோடு தான் இருந்த நேரங்களில் தன்னிடம் எதையும் பேச தயங்காதவர் அரங்கநாதன். 

கற்றுக்கொள்வதோடு தனது தொடர்பு முடிந்துவிட்டதை போல தன் வழியில் அவன் தனித்து நடக்க ஆரம்பித்ததில் இருந்து இருவருக்குள்ளும் இறுக்கம். 

பழையபடி பேச கூட இத்தனை யோசிக்க வேண்டியதாக இருக்கிறதே என நினைக்க இருவருக்குமே சங்கடம். 

தொழிலை தாண்டி ஒரு ஆசானாக அவரை எப்போதும் அவன் குறைத்து எண்ணியதில்லை. இப்போதும் அந்த மதிப்பை அவன் குறைத்துக்கொண்டதே இல்லை. 

“நான் என்ன முடிவெடுப்பேன்னு உங்களுக்கே தெரியும். அப்படி இருக்கும் போது என்கிட்டே இந்த கேள்வி அநாவசியம்னு உங்களுக்கும் தெரிஞ்சிருக்குமே?…” என்றான். 

கண் கண்ணாடியை சரி செய்துகொண்டவரின் தொண்டையில் சிறு செருமல் ஏற்பட அவரின் முகவாட்டத்தை கண்டு,

“நம்ம ஆளுவை வேணா இறக்குங்களேன். மனுஷன் தம்க்கட்டி வருவார்…” என வம்பிழுத்தான்.

“உன் வேலையை பார்த்துட்டு போ…” என்றார் ஆளவந்தான் எரிந்துவிழுந்து.

“ஆனா இவரை எலெக்ஷன்ல நிறுத்தறதுக்கு முன்னடி பார் கவுன்ல்சில்னா எந்த பார்னு இவருக்கு தெளிவா சொல்லிருங்க. இன்னும் தெரியாமலே சுத்திட்டு இருக்கார் அங்க…” 

“ஸார் இவனை போக சொல்லுங்க. ரொம்ப பேசறான்…” 

“அப்படித்தான் பேசுவேன். இல்லைன்னா இந்த பார்க்கும், அந்த பார்க்கும் வித்யாசம் தெரியாம கனவிதுதான் நிஜமிதுதான் உலகினிலே என்னை யார் வெல்லுவார்ன்னு  ஃபுல்லா சுதி ஏத்திட்டு வந்து டான்ஸ் ஆடிருவார்…” 

“கிருஷ்ணா…” என ஆளவந்தான் கோபத்துடன் எழுந்து நிற்க முயல அந்த இருக்கைக்குள் அமிழ்ந்திருந்தவருக்கு உடனே முடியாமல் போனது.

அவரின் கனத்த சரீரம் இரு பக்க கைப்பிடியினுள் நுழைந்திருக்க இலகுவாக எழுந்துகொள்ள முடியாமல் போனது.

“மெல்ல மெல்ல…” என்று பாலா சொல்ல அரங்கநாதனின் முகம் கவலை மறந்து லேசாய் சிரிப்பை பூசியது. 

“கொஞ்சம் பெரிய சேரா வாங்கி போடுங்க இங்க. என்னோட ஆளுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு பாருங்க…”

“நீ கிளம்பு முதல்ல…” என்றார் அவனிடத்தில்.

“அவ்வளோ தானே? ஓகே. பை…” என்று சொல்லியவன்,

“ஆளு நாளைக்கு ஈவ்னிங் காபிஷாப். 6 ஓ க்ளாக். ரெண்டுபேரும் தனியா மீட் பண்ணி பேசலாம். புரிஞ்சிக்கலாம். பில் நான் பே பண்ணிடறேன். என்னை மட்டுமே நம்பி வாங்க ஆளு…” என்று சொல்லி கண்ணடிக்க,

“ஸார், இவனை உங்களுக்காக தான் விடறேன்…” என பேச,

“ஆளவந்தான்…” என அடக்கி வைத்தார் அரங்கநாதன். 

“நீ புறப்படு…” என்று சொல்லவும் அவனும் கிளம்பிவிட்டான். 

“நீங்க அவனுக்கு ரொம்ப இடம் குடுக்கறீங்க ஸார்…” ஆளவந்தான் தாங்கமுடியாமல் பேச,

“அவனுக்கு யாரும் இடம் கொடுக்கனும்னு இல்லை. அவனோட இடத்தை அவன் தான் யாருக்கும் கொடுக்கமாட்டான்…” என்று சொல்லியவர் பெருமூச்சுடன் வெளியில் நிற்பவனை பார்த்தார். 

“இங்க பாரு கிருஷ்ணா, அனுபவம் உள்ளவனா சொல்றேன். எல்லா கேஸும் நடத்து. இப்படித்தான் செய்வேன்னு பிடிவாதம் பண்ணாத. உன் திறமையை வீணடிக்காத…” என அவன் தன்னை தாண்டி செல்லும் அன்று சொல்லிய ஞாபகம் அவருக்கு இப்போது.

“என் முடிவை நான் எடுக்கறேன் ஸார். திறமை என்னைக்கும் வீணாகாது. யாருக்காவது உபயோகப்படும். அது யாருக்குன்னு நான் தான் முடிவு பண்ணுவேன்…” அவருக்கு அவனின் தெள்ளத்தெளிவான பதில். 

“அப்போ அதுக்கு நீ என்கிட்டே வேலை செய்ய வந்திருக்க கூடாது…” அன்றைய கோபம் அரங்கநாதனிடம் அபரிமிதமாக இருந்தது.

“நான் வேலை செய்ய வரலை. கத்துக்க வந்தேன். அப்பவும் அந்த முடிவை நான் தான் எடுத்தேன். இப்பவும் இந்த முடிவை நான் தான் எடுக்கறேன். உங்களை செய்ய கூடாதுன்னு நான் எந்த இடத்திலையும் சொல்லலை. அதே மாதிரி உங்களுக்காக நான் எதையும் காம்ப்ரமைஸ் பண்ணிக்க முடியாது…” 

உங்களை மாற்றுவதும் தீற்றுவதும் உங்களின் கையில். அதே நேரம் என்னை எதற்குள்ளும் அடக்கி வைக்க முயலாதீர்கள் என தெளிவாய் எடுத்துரைத்து சென்றுவிட்டான் பாலமுரளிகிருஷ்ணா. 

அன்றைய நாள் அவனின் தனித்த வெற்றிக்கான நாள். அரங்கநாதனின் முதல் தோல்விக்கான நாளாய் அமைந்துவிட்டது தான் அவரின் மனதை இன்றளவும் உறுத்திக்கொண்டு இருக்கிறது. 

அவனை தாண்டவும் முடியாமல், மிதித்து நசுக்கி தூக்கி எறியவும் முடியாமல் எதுவோ ஒன்று தடுத்துக்கொண்டே இருக்கிறது.

கசப்பு வந்துவிட்டது. அதையும் தாண்டிய அபிமானமும், உள்ளூர ஊறியிருந்த ஒருவகை அன்பும் அவரை நிதானமாக வைத்திருந்தது. 

ஆனால் அவனை நெருங்குவதும் அத்தனை சுலபமில்லை. யாருமற்றவன் தான் பாலமுரளிகிருஷ்ணா. 

ஆனால் யாருக்கும் தெரியாத ஒரு அரண் அவனை தாங்கிக்கொண்டு இருக்கிறது. வானம் குழுமம். ஷேஷா. ஆதிஷேஷனின் நிழல் இவன் என்று சிலர் சொல்லப்பட்டாலும் எங்கும் எதற்கும் சான்றில்லை. 

வானம் குழுமத்தில் வளர்ந்தவன் அவன் என்ற ஒரு தொடர்பு மட்டுமே என சுற்றுவட்டாரத்தில் அறிந்திருக்க அதையும் தாண்டி பாலமுரளிகிருஷ்ணா எடுக்கும் வழக்குகளை கொண்டு அனுமானித்திருந்தார் அரங்கநாதன். 

கண்ணாடி தடுப்பின் வெளியே தனது மகனுடன் சிரித்து பேசிக்கொண்டிருப்பவனை பார்த்தபடியே இருந்தவரின் பார்வை கூர்மையில் அன்னிச்சையாக திரும்பி பார்த்தான் பாலா. 

“ஸார்…” என ஆளவந்தான் அழைக்க கவனத்தை அந்த வழக்கின் மேல் திருப்பினார்.

அரங்கநாதனின் மகனிடம் சொல்லிக்கொண்டு வெளியே வந்த பாலா தனது காரில் ஏற பத்ரியின் முகத்தின் மாற்றத்தில் என்னெவென்று புருவம் உயர்த்தினான். 

“அந்த கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனில இருந்து மிரட்டல் கால்…” 

“அவனுங்களா? என்ன ஸ்டே ஆடரை வித்ட்ரா பண்ண சொன்னானுங்களா?…” என்று காரை கிளப்பினான். 

“ஹ்ம்ம், வழக்கம் போல தான் கொலை மிரட்டல். தூக்கிருவோம், இருக்கிற இடம் தெரியாம அழிச்சிருவோம்ன்னு…” பத்ரி சொல்ல,

“கேஸ் என்னைக்கு கோர்ட்டுக்கு வருது…” 

“நாளை மறுநாள்…” 

“ஓகே…” 

“என்ன பண்ணலாம்ன்னு இருக்கீங்க?…” 

“அந்த தயிருங்களுக்கு ஸ்பெஷலா என்ன பண்ண? கேஸ்ல அவனுங்களை மண்ணை கவ்வ வச்சா போதாத? அவங்களுக்கு அதுக்கு மேல யோசிக்க கூடாது பத்து…” என்று பத்ரியின் கன்னத்தில் ஒரு தட்டி தட்டிவிட்டு காரை நகர்த்தினான். 

Advertisement