Advertisement

“அக்கா யார்க்கிட்ட பேசிட்டு இருக்க?…” தென்றலில் கேள்வியில் திடுக்கிட்டு நிமிர்ந்தவள் வெடவெடத்து போனாள்.

“யார்க்கிட்ட பேசிட்டு இருக்கன்னு கேட்டேன்? இல்லை பாட்டு எதுவும் கேட்கிறியோ? சத்தமே வரலை. வாய் மட்டும் அசையுது?…” என்று கேட்டுக்கொண்டே எழுந்து பாத்ரூம் சென்றுவிட்டு வந்து மீண்டும் படிக்க அமர்ந்தாள்.

தென்றல் மட்டும் தன்னை அழைத்திருக்காவிட்டால் நிச்சயம் மொத்தத்தையும் பாலாவிடம் ஒப்பித்திருப்பாள் ஜீவா.

இன்னும் சமநிலைக்கு வரவே நேரமெடுக்க காதில் வைத்த போனை இன்னும் எடுக்கவே இல்லை.

மூச்சுக்கள் வேகமாய் வர மறுமுனையில் இருந்த பாலாவிற்கு அவளின் பதட்டம் புரிந்துவிட்டது.

“ஜீவா…” என்றவனின் அழைப்பிற்கும் பதிலின்றி அமர்ந்திருந்தாள்.

“ஜீவா பேசு. என்னாச்சு திடீர்ன்னு சைலன்ட் ஆகிட்ட?…” என்றவனின் குரல் இப்போது வேகமாய் அவளிடம் வந்தது.

“இன்னும் என்ன பேசனும் ஸார்? உங்களுக்கு என்கிட்டே இருந்து என்ன தெரிஞ்சுக்கனும்? அதுக்கு இத்தனை அன்பா பேசனும்னு அவசியமில்லையே?…”

“ஜீவா என்ன பேசற?…”

“இவ்வளோ நேரம் என்ன பேசினேனோ அதை தான் இப்பவும் பேசறேன்…” என்றவள்,

“நானும் ஏதோ பாவமேன்னு பரிவுல பேசறீங்கனு உங்ககிட்ட பேசினா நீங்களும் என்னை…”

“ஷட் அப் ஜீவா…” என்றான் பாலா பல்லை கடித்தபடி.

“ஆமா, எனக்கு உன்கிட்ட நிறைய தெரிஞ்சுக்கனும். ஆனா நீ நினைக்கிறது இல்லை. நான் சாதாரணமா தான் பேச ஆரம்பிச்சேன். நானா எதையும் கேட்க நினைக்கலை…”

“ஆமா, அதை நம்பி நானும் உங்க கூட பேசினேன்ல…”

“எந்த தப்பும் இல்லைம்மா. அது உனக்கு ஏன் புரியலை?…”

“ம்ஹூம், புரிய வேண்டாம். தப்பு உங்க மேல இல்லை ஸார். என் மேல. மொத்த தப்பும் என் மேல தான்…”

“ஜீவா…”

“இனிமே கால் பண்ணாதீங்க. ப்ளீஸ். ப்ளீஸ்…” என்று சொல்லி அழைப்பை துண்டித்துவிட மீண்டும் அழைத்தான் பாலா.

“என்ன ஸார் வேணும் உங்களுக்கு? என்னை ஏன் இவ்வளவு சுத்தி வரீங்க? நீங்க எந்த நினைப்புல என்னை நெருங்க நினைச்சாலும் எதுவும் நடக்காது. வேற வேலையை நீங்க பார்க்கலாம். அது தான் பெஸ்ட்…”

“ஜீவா என்னை பேசவிடு…”

“தென்றல் திரும்ப என்னன்னு பார்க்கிறா. போனை வைக்கறேன். திரும்ப போன் பண்ணினா இந்த போனை தூக்கி போட்டு உடைக்கவும் யோசிக்கமாட்டேன்…” என கடுமையாக எச்சரித்துவிட்டு வைத்துவிட பாலாவிற்கு உள்ளூர சுறுசுறுவென பொங்கியது.

“அடமென்ட், அடமென்ட். கொஞ்சமும் புரிஞ்சுக்கறாளா? ம்ஹூம், கொஞ்சம் நேரம் பேசலாம்ன்னு போட்டா இவளா தான பிரச்சனை பக்கம் போனா. என்னை குத்தம் சொல்றா?…” என புலம்பியவன்,

“ஆனாலும் என் புத்தி இருக்குதே? வைக்கீல் புத்தி. கொஞ்சம் பேசி பழகலாம்ன்னு போன் பண்ணிட்டு அவ சொல்லவும் உடனே இதான் சாக்குன்னு நானும் ஆட்டோமேட்டிக்கா வாட்ச் பண்ண ஆரம்பிச்சுட்டேன்…” என்று தன் முகம் நோக்கி  ஆள்காட்டிவிரலை காண்பித்து,

“இந்த ஜென்மத்துல நீ கமிட்டட் ஆக மாட்டடா. ஆகவே மாட்ட.  இருந்திருந்து உள்ள என்னவோ பூத்திருக்கு. இப்ப அதுவும் முடிஞ்சிரும் போல. நீயே அப்படியே பிச்சு எறிஞ்சிடு…” என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவன் உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டான்.

“ஜீவா நீ எனக்கு செட்டாவியா?…” என்றவன்,

“ம்ஹூம், தப்பு தப்பு. நான் உனக்கு செட் ஆவேனா?…” என கேட்டுக்கொண்டவன் மனதோ முதல் முதலில் அவளை பார்த்த நாளுக்கு சென்றது.

ஒரு வருடம் முன்பு வானம் அதிகாலையே மருத்துவமனைக்கு கிளம்பி சென்றான் பாலா.

எப்போதும் ஏதாவது கேஸ் விஷயமாகவோ இல்லை அங்கிருந்து வர ஷேஷா  சொல்லியோ தான் செல்வான்.

அந்த முறை காய்ச்சலால் ஏற்பட்ட உடல்நிலை குறைபாட்டினால் தனக்கென சென்றிருந்தான் பாலா.

ரிசப்ஷனில் அன்று வானதி இல்லாமல் இருக்க அங்கே ரிசப்ஷனில் நின்றிருந்ததோ புதிதாய் வேலைக்கு சேர்ந்திருந்த ஜீவன்யா மட்டுமே.

“எக்ஸ்யூஸ்மீ…” என்று அழைத்ததும் நிமிர்ந்து பார்த்தவள்,

“எஸ், எந்த டாக்டரை பார்க்கனும்? அப்பாயின்மென்ட் இருக்கா? உங்க பேர் சொல்லுங்க….” என்று கடகடவென கம்ப்யூட்டர் வாய்ஸ் போல அவள் திகைத்தான்.

பதில் சொல்ல போனவள் மீண்டும் அவள் அதையே கேட்க அப்போது அவளின் பேச்சை கவனிக்காமல் அவளின் தோளில் அமர்ந்திருந்த பட்டாம்பூச்சியில் பார்வை பதிந்தது.

“ஹலோ எக்ஸ்க்யூஸ்மி பூச்சி…” என இருமலுடன் சொல்லி அவளிடம் தோள்பட்டையை தன் பார்வையால் காண்பிக்க, அதனை கவனிக்காதவள்,

“வெறும் பூச்சியா? முன்னாடி பின்னாடி வேற பேர் இருக்கா?…” என்றாள்  அத்தனை சீரியஸாக.

அவளின் கேள்வியிலும், முகபாவனையிலுமே அவள் விளையாடவில்லை, நிஜமாகவே தனது பெயரை அப்படித்தான் புரிந்துகொண்டாள் என்பதில் சிறு புன்னகை தோன்றியது பாலாவிற்கு.

“சொல்லுங்க ஸார்….” என ஜீவா கேட்க,

“ஹ்ம்ம் புள்ளைப்பூச்சி…” என்று இவனும் வேண்டுமென்றே ஒரு வேகத்தில் சொல்லிவிட,

“புள்ளைபூச்சி…” எழுதவே செய்துவிட்டாள். அதில் பாலாவிற்கு இன்னும் சிரிப்பு பொங்க,

“ஹலோ உங்க பேர் என்ன?…” என்றான்.

“அது எதுக்கு ஸார் உங்களுக்கு?…” என இப்போது அவனை நிமிர்ந்து பார்த்து ஜீவா கேட்க வானதி வந்துவிட்டாள்.

“குட்மார்னிங் ஸார்…” என பாலாவை பார்த்ததுமே சொல்லியவள் தன் இருக்கைக்கு வந்து அமர,

“புது ஸ்டாஃப்பா?…” என்றான் ஜீவாவை பார்த்து கண்காட்டி வானதியிடம்.

“ஆமா ஸார். அஞ்சு நாள் ஆகுது…” என வானதி சொல்ல ஜீவாவிற்கு ஒன்றும் புரியாமல் வேடிக்கை பார்த்தாள்.

“நீங்க ஸார்…”

“பீவர், அதான் தயாளன் சாரை பார்க்க வந்துட்டேன்…”

“அவர் இன்னைக்கு லீவ் ஸார்….” என்றவள் அந்த நேரத்தில் யார் ட்யூட்டில் உள்ளனர் என்று பார்த்து பெயரை சொல்ல,

“ஓகே, நான் பார்த்துக்கறேன்…” என்றவன் ஜீவாவிடம் திரும்பினான்.

“முதல்ல யார் வந்து என்ன பேசினாலும் அவங்க முகத்துல என்ன இருக்குன்னு கவனிங்க. என்ன பேசறாங்கன்னு பொறுமையா கேளுங்க…”

“ஹ்ம்ம்…”

“சொல்ல மறந்துட்டேன், ஐ’ம் பாலமுரளிகிருஷ்ணா. லாயர்…” என்று சொல்ல ஜீவாவின் விழிகள் விரிந்துகொண்டது அவன் வழக்கறிஞன் என்றதும்.

“ஆனா புள்ளைபூச்சியும் நல்லா தான் இருக்கு…” என கேலியாய் சிரிக்க ஜீவா முறைத்துவிட்டாள் உடனே.

“நீங்க தானே ஸார் பூச்சின்னு சொன்னீங்க?…”

“உங்க ஷோல்டர்ல வண்ணத்துபூச்சி இருந்துச்சு…” என்றதும் திடுக்கிட்டு பார்க்க அது இப்போது இல்லை.

“பறந்து போய்ருச்சு…” என்றதும் அவனை மீண்டும் பார்க்க,

“என்னோட நேமை மாத்திருங்க…” என்றான் மீண்டும் நமுட்டு சிரிப்புடன். அதில் ஜீவா இன்னுமே அவனை முறைக்க,

“எனக்கொண்ணுமில்லை. கண்டிப்பா உங்களை தான் யார் இதுன்னு கேட்பாங்க. என்னை தான் புள்ளைபூச்சின்னா ஒருபய நம்பமாட்டான்…” என்றதும் வானதியுமே சிரித்துவிட்டாள்.

இருவரையும் மாறி மாறி பார்த்தவள் குனிந்து லெட்ஜரில் அவனின் பெயரை மாற்றினாள்.

“சரியா எழுதிருக்காங்களான்னு செக் பண்ணிருங்க…” என வானதியிடம் வேறு அவன் சொலல் இன்னுமே கடுப்பாகிவிட்டது ஜீவாவிற்கு.

“பார்த்துக்கோங்க…” என வானதி பக்கம் தள்ளியவள் கணினியில் பதிய முற்பட்டாள்.

“ஆனாலும் நல்ல பேர் தான்…” என்று பாலா இலகுவாக சொல்லி சிரித்துவிட்டு செல்ல ஜீவாவிற்கு முதல் பார்வையிலேயே அவன் மீது எரிச்சல் படர்ந்துவிட்டது.

அதன் பின்னர் அவன் வரும்பொழுதும் போகும் பொழுதும் காரணமின்றியே முறைத்துக்கொண்டிருக்க அதுவே பாலாவை அவள் பக்கம் கவனத்தை ஈர்த்தது.

ஷேஷா சொல்லி ஜீவாவை பற்றி விசாரிக்க ஆரம்பித்தவன் அவளை பற்றிய முழுவிவரங்களையும் அவன் கைப்பிடியில் வைத்துக்கொண்டான். ஆனாலும் காட்டிக்கொண்டதில்லை.

இதோ இன்றுவரை அவளை மனதால் தொடரத்தான் செய்கிறான். வெளிப்படுத்த தான் தோன்றவில்லை.

தனக்கே இன்னும் உறுதியாகாத போது அவளிடம் எப்படி சொல்வது என்று ஒதுக்கினாலும் அது எல்லாம் வெறும் கண்துடைப்பு என்பது அவன் அறிந்ததுவே.

இப்போதும் அவளை காப்பாற்ற தான் இத்தனை மெனக்கெடுகிறான் என்பதை புரிந்துகொள்ளாமல் அவனை விட்டு விலகுவதிலேயே அவள் குறியாய் இருக்க இன்னுமே அதில் நெருங்கத்தான் செய்தான் அவன்.

Advertisement