Advertisement

“இல்லை இல்லை…” உடனே சுதாரித்தவளாக,

“அதெல்லாம் இல்லை, நிஜமா…” என்று இருக்கையை விட்டு எழுந்து செல்ல கையை பிடித்து இழுத்து அமர்த்தினான் அதே இடத்தில்.

“பொய் சொன்னா கண்டுபிடிச்சிருவேன் நான்…” என்றதும் திக்கென்று அவனை திரும்பி பார்த்தாள்.

“இந்த முகம் முழுக்க பொய்யும், பதட்டமும் தான். என்னால உன்னை கவனிக்க முடியுது…” என்று கூற இன்னுமே பதறினாள்.

“இல்லை, நீங்க சும்மா எதையாவது…” என சொல்லி முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொள்ள,

“ஜீவா…” என்றபடி அவளின் நாடி பிடித்து தன் பக்கம் திருப்ப அவனின் கையை தட்டிவிட்டாள்.

“ஓகே, என் லிமிட்ல இருக்கேன். பட் எல்லா நேரமும் இப்படியே இருக்கமாட்டேன் நான்…” என்றவன் கோபத்தில் சொல்கிறானோ என நினைத்தாலும் அவன் பக்கம் திரும்பவில்லை.

“பிரபா ஆன்ட்டி யார்?…” என்றான் இப்போது.

தூக்கிவாரிபோட்டது ஜீவாவிற்கு. கவனிக்கவில்லை போல என நினைத்த தன் நொடி பொழுது ஆசுவாசம் ஓடி ஒளிந்துவிட்டது.

“என்ன?…”

“நீ சொன்னியே பிரபா ஆன்ட்டி, அவங்க வீட்டுக்காரர். அதான் யாருன்னு கேட்டேன்…”

“நானா? நான் எப்போ சொன்னேன்? சொன்னேனா?…” என சற்று தைரியத்துடன் அவள் பேச பாலாவின் கண்கள் இடுங்கின.

“திரும்பவும் பொய்யா?…” என்றான் சற்றே கோபமாக.

“இப்ப ஏன் தேவை இல்லாம பேசிட்டு இருக்கீங்க? நான் எதுவும் சொன்னதா எனக்கு ஞாபகம் இல்லை….”

“நான் சொன்னதும் கூடவா ஞாபகம் இல்லாம போச்சு?…”

“என்ன சொன்னீங்க? நான் வேற எதோ டென்ஷன்ல இருந்தேன்…” கழுவும் மீனில் நழுவும் மீனாய்.

“ஓஹ்…” என்றவன் தன் ஒரு கையை இடுப்பில் கைவைத்தபடி அவளை முறைப்பாய் பார்த்தான்.

அவனின் பார்வையை ஏறிட்டால் தானே இந்த கண்டுபிடிப்பு எல்லாம். திரும்புவேனா என்பதை போல இருந்தாள்.

“ஓகே, இங்க இருந்து கிளம்பனும்னு நினைச்சது ஏன்?…”

“நீங்க என்ன இத்தனை கேள்வி கேட்கறீங்க? எதுக்கு சும்மா எங்களை வாட்ச் பன்றீங்க?…” என படக்கென்று எழுந்துவிட்டாள்.

“தேவை இல்லாம இங்க இருக்க வேண்டாம்ன்னு தோணுச்சு. வேற எங்கையாவது போகனும்னு. அதுக்கு இங்க யார் பர்மிஷனும் எனக்கு தேவை இல்லை. இங்க எங்களுக்கு ஆதரவு குடுத்ததுக்கு காலத்துக்கும் நாங்க கடமைப்பட்டிருப்போம். அதுக்காக இப்படி எல்லாம் டார்ச்சர் பண்ணாதீங்க…”

படபடவென ஜீவா பொரிந்து தள்ள பாலாவிடம் மௌனம் மட்டுமே. அவளிடத்தில் அதட்டி மிரட்டி விஷயத்தை வாங்கிவிடலாம் தான்.

ஆனால் அதனை செய்ய அவன் விரும்பவில்லை. பாதிக்கப்பட்டவள் வேறு எப்படி நடந்துகொள்வாள்? பாலாவும் எழுந்துகொண்டான் அவ்விடத்தை விட்டு.

“குட் பெர்பாமென்ஸ். பட் உனக்கு சூட் ஆகலை….” என்றதும் ஜீவா திடுக்கிட,

“நீ பேசினது எல்லாம் சரி. ஆனா இங்க இருந்து நீ போக முடியாது…”

“ஏன்? ஏன் முடியாது? நான் போவேன். போகனும்…” என்றவள் குரல் அப்படியே நலிந்தது.

“போகனும், தென்றலுக்கு ஒரு நல்ல லைப். அதை காமிச்சா போதும்ன்னு நினைச்சேன். போகனும்…” என்றாள்.

‘போகத்தான் செய்வேன். ஒரு கொலை பண்ணினாலும் ஒரே தண்டனை தான். எத்தனை கொலை பண்ணினாலும் ஒரே தண்டனை தான்’ என மனதிற்குள் நினைத்து பாலாவை துட்சமாய் பார்த்தாள்.

அவளின் மனவோட்டத்தை கவனித்துக்கொண்டு இருந்தவன் தலையசைப்புடன் வெளியேற,

“உங்க போன்…” என்று நீட்டினாள் அவனிடத்தில்.

பாலாவின் அழுத்தமான பார்வையில் நீட்டிய கை கீழே இறங்கிவிட ஆற்றாமையுடன் பார்த்தாள் அவனை.

“ப்ளீஸ், எனக்கு இது வேண்டாம். என்னவோ நீங்க என்னை பார்த்துட்டே இருக்கிற மாதிரி இருக்கு. வாங்கிக்கோங்க…” என கெஞ்சலில் இறங்கிவிட்டாள்.

நொடிக்கு நொடி நிறம் மாறும் அவளின் உணர்வுகளில் அவன் தான் சிக்கி கொண்டான்.

அவளை எந்த வகையில் அணுகுவது என்ற யோசனையுடனே அவளை பார்த்தவன்,

“இந்த போன் உன் கூடவே இருக்கட்டும். எப்போ வேணாலும் உனக்கு ஹெல்ப் தேவைப்படலாம்…”

“ம்ஹூம், இல்லை…”

“நிஜத்தை சொல்லவா? நான் இத்தனை பொறுமையா யார்க்கிட்டயும் பேசினதில்லை. என்னோட பேச்சே வேற மாதிரி இருக்கும். உன்கிட்ட பேசறேன்னா…” என்றவன் வார்த்தைகளை மென்று தலையை கோதிக்கொண்டு நின்றான்.

நிலை வாசலுக்கு உள்ளே இவளும், வெளியே அவனும் என இருவரும் நிற்க இதற்காகவே காத்திருந்ததை போல ஓடிவந்துவிட்டாள் தென்றல்.

ஜீவாவை உள்ளே வந்து அணைத்தபடி பாலாவை பார்க்க இருவரையும் பார்த்துவிட்டு வேகமாய் சென்றுவிட்டான் பாலா.

“அக்கா என்ன சொன்னார் இவரு? இங்க ஏன் வராங்க?…” என கேட்க,

“ஹ்ம்ம், சொல்றேன். நீ முதல்ல உள்ள வந்து உட்கார்…” என்றவள் அதன் பின்னர் தென்றலின் கேள்விகளுக்கு பதில் தரமுடியாமல் ஓரிரு வார்த்தைளில் நின்றுகொண்டாள்.

தான் என்ன உணர்கிறோம் என்று பிரித்தறிந்தாலும் இது வேண்டும் வேண்டாம் என்று உள்ளுக்குள் போராட ஆரம்பித்தாள்.

——————————-

மறுநாள் கோர்ட் வளாகத்தில் இன்னொரு வழக்கறிங்கருடன் பேசிக்கொண்டு பாலா நிற்க தனது கேஸை முடித்துக்கொண்டு வெளியே வந்தார் ஆளவந்தான்.

அன்று பாலாவிற்கு எந்த கேஸும் இல்லை என்பதால் சற்றே இலகுவாக இருக்க அவன் இருப்பதை கவனிக்காமல் வந்தார் ஆளவந்தான்.

“என்ன ஸார், இன்னைக்கு பிச்சு உதறிட்டீங்க. உங்க ஆர்க்யூமென்ட் பார்த்து அசந்துட்டோம்…” என ஆளவந்தானுக்கு புகழாரம் சூட்ட பாலாவும் சிரித்துக்கொண்டே அவரை பார்த்தான்.

ஆளவந்தானுக்கு அப்படியே குளிர்ந்துபோனது. அதுவும் பாலாவை வைத்துக்கொண்டு அவர் பாராட்டியது தான் ஆளவந்தானுக்கு பரம திருப்தி.

“இதெல்லாம் நமக்கு சாதாரணம் வீரய்யன்…” என்று அவரிடம் இன்னும் பெருமிதமாக முகத்தை வைத்துக்கொண்டு அவர் பேச,

“என்ன கிருஷ்ணா நீங்க பார்த்தீங்களா?…” என அவர் கேட்க ஆளவந்தானோ   ‘சொல்லேன், சொல்லித்தான் பாரேன்’ என்பதை போல பாலாவை மிதப்பாய் பார்த்து வைத்தார்.

“ஆளு அங்கிள் தான் வாதத்துல புலியாச்சே…” என்று ஈ என சிரித்துவைக்க ஆளவந்தான் உஷாரானார்.

“அதானே அப்படி சொல்லுங்க…” என்று வீரைய்யன் சொல்ல ஆளவந்தான் அங்கிருந்து செல்லலாம் என பார்த்தல் பேச்சில் பிடித்துக்கொண்டார்.

அந்த நேரம் பாலாவின் போனிற்கு புது எண்ணிலிருந்து அழைப்பு வர எடுத்து பார்த்தவன் அதனை ஏற்று காதில் வைத்தான்.

“எஸ், பாலமுரளிகிருஷ்ணா…” என்று சொல்ல,

“தெரியும்டா, தெரிஞ்சு தான போன் போட்டிருக்கேன்…”

“அது எனக்கு தெரியாதுங்கண்ணாவ். இதை சொல்லத்தான் போன்  பண்ணுனீங்களா?…” என நக்கலுடனே பாலா பேச ஆளவந்தானுக்கு காது பாலாவின் பேச்சில் வந்து ஒட்டிக்கொண்டது.

ஒருபக்கம் வீரய்யன்னுடன் பேசிக்கொண்டிருந்தாலும் கவனம் எல்லாம் பாலாவின் மீதே இருக்க,

“அவனை எங்கடா வச்சிருக்கீங்க?…” போன் செய்தவன் மிரட்டலாய் கேட்டான்.

“எவனை?…”

“அதான் அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல பிடிச்சீங்கல்ல, அவனை?…”

“ஏன் ரவுடி ஸார், உங்களுக்கு யார் ரவுடின்னு ப்ரமோஷன் குடுத்தது?…”

“ஏன்?…”

“வாய்ஸ் கூட ஓகே. ஆனா ஒளிச்சு வச்சவன்கிட்டையே அட்ரஸ் கேட்கிறியே நீயெல்லாம் என்ன ரவுடி? இதுக்கா உனக்கு தண்டத்துக்கு சோத்தை போட்டு வளர்க்கா அந்த ப்யூச்சர்ஸ் ஓனர்?…”

பாலா சொல்லவும் போன் செய்தவனும், ஆளவந்தானுமே திடுக்கிட்டு போயினர் எப்படி கண்டுகொண்டான் என.

“டேய் ஓவரா பேசாத…”

“என் பொழப்பே பேசறது தான். இதுல ஓவரா ஏன்ன? கொஞ்சூண்டு என்ன?…”

ஆளவந்தான் மொத்தமாகவே வீரய்யனை விடுத்து பாலாவின் பக்கம் திரும்பிவிட வீரைய்யன் சென்றதை கூட அவர் கவனிக்கவில்லை.

யார் பேசுவது? ப்யூச்சர்ஸ் பில்டர்ஸ் ஆட்களா? இவன் என்ன பதில் சொல்கிறான்? என்பதில் கவனமாக நிற்க ஆளவந்தானின் தோளில் கை போட்டு பாலா பேசுவதை கூட அவரால் உணரமுடியவில்லை.

ஏற்கனவே அரங்கநாதன் சொல்லியிருந்தார் பாலாவின் மேல் ஒரு பார்வை இருக்கட்டும் என்று.

அதனை அப்பட்டமாக அவன் கவனிக்கவே வைத்துக்கொண்டிருந்தார் ஆளவந்தான்.

பாலா கிண்டலுடனே அந்த போன் காலில் பேசிக்கொண்டிருக்க இவரோ அதில் கவனமானார்.

“உன் கைவரிசையை என்கிட்டே காட்டிட்ட இல்ல…”

“அடடா, வேணும்னா வந்து பாரேன்டா என் கையையும், அதோட வரிசையையும்…”  

“என்ன நக்கலா?…”

“புரிஞ்சிருச்சா? போனை வைடா என் தயிரு…” என்று பாலா சொல்லவும் மறுபக்கம் மேலும் ஆவேச வசனங்களை தூவ,

“ஆளு அங்கிள், இந்த போனை கொஞ்ச நேரம் ஹேண்டில் பண்ணுங்களேன்…” என அவர் மறுக்கும் முன்னர் காதில் போனை வைத்துவிட அந்த வார்த்தைகளை கேட்க முடியாது பாலாவின் கையை தட்டிவிட்டுவிட்டு,

“மனுஷனாடா நீ?…” என்று கத்தினார்.   

“அட சும்மா பிகு பண்ணாதீங்க. இதை தெரிஞ்சுக்க தானே இப்படி என்கூட ஒட்டி உரசி நின்னு ஒட்டு கேட்கறீங்க?…” என கண் சிமிட்டி பாலா சிரிக்கவும் தான் பாலா தன் மீது கைபோட்டு வைளைத்திருப்பதையே கவனித்தார்.

“ரவுடி ஸார், அடுத்த தடவை உங்க ஓனர் தயிரை பேச சொல்லுங்க ஸார். இப்ப போனை விட்டா என் பிஸ்கட்டு…” என அழைப்பை துண்டித்து போனை பாக்கெட்டில் போட்டான்.

“டேய் கைய எடுடா, விடுடா…” என்று தட்டிவிட அவனோ விடாமல்,

“ஹ்ம்ம், ஆளு மேலையும் கை வைக்க முடியலை. ஆளு மேலையும் கை வைக்க முடியலை. என்ன ஆளுடா பாலா நீ?…” என அந்த மூன்று ஆளுக்கும் குரலில்  வித்தியாசங்களை காட்டி அவன் சொல்ல ஆளவந்தான் அவனின் கைப்பிடியில் இருந்து வெளியே வந்தார்.

Advertisement