Advertisement

மின்னல் – 9

           இந்த நேரத்தில் அங்கே குடியிருப்பினுள் பாலாவை ஜீவா எதிர்பார்க்கவே இல்லை.

“என்ன இவ்வளோ ஷாக்?…” என கேட்டபடி இலகுவாய் உள்ளே வந்தவனை தென்றல் திகைப்பாய் பார்த்தாள்.

“வீட்டுக்கு வந்தவங்களை வாங்கன்னு சொல்லமாட்டியா தென்றல்?…” என கேட்டுக்கொண்டே வந்து கட்டிலில் அமர்ந்தவன்,

“நீ வானதி வீட்டுக்கு போ…” என்றான் அவளிடம்.

“நீங்க எதுக்கு வந்தீங்க?…” ஜீவா கோபத்துடன் பாலாவிடம் கேட்க அக்காவிற்கு பிடிக்கவில்லை என புரிந்துகொண்ட தென்றலும்,

“நீங்க முதல்ல போங்க. ஏன் இங்க வந்தீங்க? நீங்க வந்தது அக்காவுக்கு பிடிக்கலை…” என்றாள் கோபமாய்.

“வானதி வீட்டுக்கு போன்னு சொன்னேன் உன்னை…” பாலா அன்றைக்கு போல இன்றும் உறுத்து விழித்து பார்க்க மிரண்டுபோய் ஜீவாவின் பின்னால் சென்று நின்றாள் தென்றல்.

“அவளை பயங்காட்டாதீங்க. சின்ன பொண்ணு…”

“ஓஹோ, எனக்கு தெரியாதே?…” என்றவன்,

“உன்கிட்ட பேசனும் ஜீவா. தென்றலை வானதி வீட்டுக்கு அனுப்பு. நீயா அனுப்புறியா இல்ல?…” பாலாவின் கேள்வியில் மனது திடுக்கிட்டது.

“என்ன என்ன பேசனும்?…” ஜீவா தடுமாற,

“தென்றலை வச்சே தான் பேசனுமா?…” என பாலா கேட்டுக்கொண்டிருக்கும் பொழுதே வானதி வந்துவிட்டாள்.

“ஜீவா நைட்டுக்கு சட்னி செய்ய தேங்காய் இல்லை. நீ தான் பொடி வச்சிருப்பியே. அதான் வாங்க வந்தேன்…” என சொல்லியவள் அப்போதுதான் பாலாவை பார்க்க,

“வானதி தென்றலை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க…” என்றான் அவளிடம்.

“ஸார்…”

“சொன்னதை செய்ங்க வானதி…” என்று அழுத்தமாக சொல்ல ஜீவாவும் தென்றலை போகும் படி பார்த்தாள்.

“ம்ஹூம், இல்லை உன்னை தனியா விட்டு போகமாட்டேன்…” என ஜீவாவை கட்டிக்கொண்ட தென்றல்,

“நீங்க போங்க. நீங்க எந்திச்சு போங்க…” என கோபத்துடன் சொல்ல கையை கட்டிக்கொண்டு பார்த்தான் அவளை.

“தென்றல் நீ போ, நான் பேசிட்டு வரேன்…” என்ற ஜீவாவின் பேச்சை எங்கே தென்றல் காது கொடுத்து கேட்டாள்?

“க்கா, போக சொல்லு. ம்ஹூம் இவங்க போக வேண்டாம். வா நீ சொன்னியே எங்கையாவது போகலாம்ன்னு. நாம போவோம்…” என தென்றல் சொல்லவும் பாலா கூர்மையாக ஜீவாவை பார்க்க, வானதி அதிர்ந்து பார்த்தாள்.

“என்ன நினைச்சுட்டு இருக்கீங்க ரெண்டுபேரும்?…” என்ற வானதி,

“ஜீவா இவ என்ன சொல்றா? நீ அப்படி சொன்னியா?…” என பதட்டத்துடன் கேட்க,

“வானதி தென்றலை கூட்டிட்டு போங்க…” பாலா மீண்டும் வலியுறுத்த,

“அக்கா சொன்னா கேளு தென்றல். இங்க நம்ம வீட்டுக்குள்ள தானே இருக்கோம்?…”

“ம்ஹூம், ஜீவாக்கா…” என்றவளின் கையை பிரித்து வானதியிடம் நீட்டியவள் கண்கள் வெறுமை பூசி இருந்தது.

தெரிந்துவிட்டது போல? அதற்கு தான் பேச வந்திருக்கிறான் என மனதை எதற்கும் தயார்செய்து வைத்துக்கொண்டாள். ஆனால் ஏன் அவன் மட்டும்?

“ஜீவா எதுவும் வேணும்னா கூப்பிடு…” என சொல்லி வானதி தென்றலை  இழுத்துக்கொண்டு சென்றாள்.

“அக்காவை எதாச்சும் சொன்னீங்க, அவ்வளோ தான். அவ்வளோ தான்…” என கோபத்துடன் பாலாவை கையை நீட்டி எச்சரித்துக்கொண்டே தென்றல் செல்ல ஜீவா பாலாவை திரும்பி பார்த்தாள்.

அவன் வீட்டை சுற்றி பார்வையை ஓட்டியவன் அங்கே திறந்து கிடந்த பெட்டியும் எடுத்து வைக்க இருந்த உடைகளும் கண்ணில் விழுந்தது.

“ஹ்ம்ம், எங்க டூர் எங்கயும் போறதா ப்ளானா?…” என்ற பாலாவை திடுக்கிட்டு பார்த்தாள்.

“என்ன? என்ன டூர்?…”

“இல்லை ட்ரெஸ் எல்லாம் எடுத்து அடுக்கிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு.  அதான் லாங் டூர் கிளம்பிட்டன்னு நினைச்சேன்…” என்றவனின் பேச்சில் தொனித்த நக்கலில் ஜீவா இறுக்கமாய் நின்றாள்.

அந்த சூழ்நிலையின் தாக்கத்தால் அவளின் முகம் உணர்த்திய வேதனையில் சற்றே நிதானித்தவன்,

“இங்க வா. சிட்…” என்று கட்டிலில் அமர சொல்ல இன்னும் முகம் ஜிவுஜிவுத்து போனது அவளுக்கு.

“இங்க இந்த தூரத்தில நீங்க எது சொன்னாலும் எனக்கு கேட்கும். அப்படி ஒன்னும் தூரம் அதிகமில்லையே…” ஜீவாவின் வெடுக்கென்ற பேச்சில் கட்டிலை தன் கைகொண்டு தட்டினான்.

எதையோ பேச நினைத்து அதை அடக்கியபடி உதடுகடித்து கட்டிலில் தனது வேகத்தை காண்பிக்கிறானோ என அவனை பார்த்தாள்.   

உள்ளூர உண்டாகிக்கொண்டிருந்த கலவரம் வெளியே முகத்தில் தெரியாதபடி விறைப்பாய் நின்றாலும் கண்கள் காட்டிக்கொடுக்க அவளின் மேல் இரக்கம் சுரந்தது பாலாவிற்கு.

“ஓகே, நான் இப்படியே பேச தயார். உனக்கு கேட்கும் தான். ஆனா வெளிலையும் கேட்கும். பரவாயில்லையா?…” என்று சொல்ல இறுக்கம் களைந்து உடல் தளர்ந்துவிட்டது ஜீவாவிற்கு.

மெல்ல நடந்து கட்டிலின் மறுபக்கம் வந்து அமர்ந்தவள் சுவற்றை வெறித்துக்கொண்டு இருந்தாள்.

“ஹ்ம்ம், இது என்ன போன்? புதுசா இருக்கே?…”

கட்டிலில் அவளின் ஹேண்ட்பேக்கில் இருந்து வெளியே எடுத்து வைத்த போனை பார்த்து பாலா கேட்டதும் சுயம் திரும்பியவள்,

“இருங்க காண்டெக்ட் மாத்திட்டு உங்க மொபைலை தரேன்…” என்று பாலா தந்த மொபைலை எடுத்து சிம்மை எடுக்க அவளின் கையை பாய்ந்து பிடித்துவிட்டான்.

“என்ன பன்றீங்க? சத்தம் போட்டுடுவேன் பார்த்துக்கோங்க. கையை எடுங்க, கையை எடுங்கன்றேன்ல…” என்றவளின் கடுமை அவனை சிறிதும் பாதிக்கவில்லை.

“போடு, எங்க கூப்பிடு. எங்க யார் வரான்னு பார்ப்போம். என்னை எவன் கேட்பான்?…” அதற்கு மேல் பாலா பேச விக்கித்து பார்த்தாள்.

அதுதானே? உண்மை தானே இவனை இங்கே யார் கேட்கமுடியும்? இல்லை தன்னிடம் பிரச்சனை செய்கிறான் என்று சொன்னால் யாரும் நம்பவும் மாட்டார்கள்.

அனைத்திற்கும் மேலாக ஏதோ ஒருவகையில் பாலாவின் மேல் அப்படி ஒரு தூற்றலை தன்னால் செய்துவிட முடியுமா? என்று தன்னையே கேட்டுக்கொண்டாள்.

இயலாமை பெரிதளவில் அவளை பாதிக்க ஆரம்பித்தது. தைரியமெல்லாம் கரைவதை போல தோன்ற இழுத்து பிடித்துக்கொண்டவள் கையை உதறிவிட அந்த வேகத்தில் கட்டிலில் அவளின் கை அடித்துக்கொள்ள முகம் சுருக்கினாள்.

“ம்மா…” என்ற சத்தத்துடன் மொபைலை விட்டு இன்னொரு கையால் கையை கூட்டி பிடித்துக்கொண்டு வலியை தாங்கினாள்.

“முதல்ல நிதானம் வேணும். யார் எதுக்கு பேசறாங்கன்னு யோசிக்கனும். இல்லன்னா இப்படி தேவையில்லாத அடிதான் படனும்…” பாலா அவளிடம் சொல்ல,

“வலி எனக்கொண்ணும் புதுசில்லை. எனக்கு நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்…” என்றவள்,

“நீங்க என்கிட்டே என்ன எதிர்பார்க்கறீங்க?…” என்றதும் பாலாவின் முகத்தில் சிறு மென்மை.

“அதை நான் அப்பறமா சொல்றேன். இப்ப உன்னோட பேச்சுக்கு வருவோம்…” என்றான்.

சிறு அமைதிக்கு பின் ஜீவாவாகவே பாலாவிடம் தனது முடிவை சொல்லிவிட்டாள் மறைக்காமல்.

“நான் இங்க இருந்து போறதா முடிவு பண்ணிட்டேன்…” என்றாள் அவளாகவே.

“ஹ்ம்ம், கெஸ் பண்ணேன்…” என்றவன்,

“எங்கன்னு முடிவு பண்ணிட்டியா?…”

“இன்னும் இல்லை. எங்க போகன்னு தெரியலை…”  என்று சொல்லு பொழுதே குரல் உடைந்துவிட்டது.

“ஜீவா…” என அவளின் இன்னொரு கையின் மேல் தனது கரத்தை வைத்து அழுத்த வேகமாய் உருவிக்கொண்டாள்.

“ஆனா இங்க இருக்கமாட்டேன். இனியும் இருக்க முடியும்ன்னு தோணலை…”

“அந்த முடிவெடுக்கற கட்டத்தை நீ தாண்டியாச்சு ஜீவா…” என்றவன்,

“இப்போ நீ இங்க இருக்கிறது தான் சேஃப்…”

“இல்லை, இனி இங்க இருந்தா பிரச்சனை எனக்கு மட்டுமில்லை, தென்றலுக்கும், இங்க இங்க…” என்று அவள் தயங்கி பேச்சை விழுங்க,

“அந்த பேஷண்ட் உயிருக்கும் கூட ஆபத்து தான் இல்லையா?…” என்றவனின் பேச்சில் அதிர்ச்சி எல்லாம் இல்லை.

எப்போது கொலைமுயற்சி செய்ய வந்தவன் மாட்டிக்கொண்டான் என்று தெரிந்ததோ அப்போதே தன்னை குறித்தும் தெரிய வந்திருக்கலாம் என்றே நினைத்து அமர்ந்திருந்தாள்.

உணர்வுகள் கரைபுரண்டு ஓட ஆரம்பித்தது. மனதின் கட்டுப்பாடுகள் எல்லாம் வெடித்து சிதற,

“அப்போ அது பிரபா ஆன்ட்டி வீட்டுக்காரர் தான் இல்லையா?…” என அந்த வேகத்தில் வாய்விட்டு உளறிவிட்டவள்,

“அதான் நீங்க ரெண்டுநாளா போனும் பண்ணலை. அப்படித்தானே?…” என்று கேட்க பாலாவின் புருவம் உயர்ந்து கண்கள் சிரித்தது.

இதழ்களை அழுத்தமாய் மூடிக்கொண்டவன் தன் விரல்களை கைகளுக்குள் மடக்கிக்கொண்டான்.

பெரும் மூச்சொன்றை இழுத்துபிடித்தவன் பார்வை ஜீவாவை விட்டு சற்றே அகன்றது.  

“எனக்கு தெரிஞ்சிருச்சு. அதுதான் அதுதான் நீங்க கோவமா இருக்கீங்க…”

“நான் போன் பண்ணுவேன்னு எதிர்பார்த்தியா ஜீவா?…” என பாலா கேட்கவும் தான் தான் என்ன பேசிக்கொண்டிருக்கிறோம் என்றே விளங்கியது.

Advertisement