Advertisement

“அவன் அந்தாள் மாட்டிக்கிட்டானா?…” ஜீவாவிற்கு தெரிந்துகொள்ளவேண்டும் என தோன்றியது.

“ஆங் அதெல்லாம் புடிச்சுட்டாங்க, உள்ள வந்தவனால வெளில போக முடியுமா என்ன?…” வானதியின் இகழ்ச்சியான பேச்சில் நெஞ்சில் திக்கென்றிருந்தது.

“புடிச்சுட்டாங்கன்னா, என்னாச்சு? எதுவும் சொன்னானா? எதுக்காக கொலை பண்ண வந்தானாம்?…”  படபடப்புடன் ஜீவா கேட்க,

“நீ ரொம்ப எக்ஸைட் ஆகிட்ட போல?…” என்ற வானதி,

“புடிச்சாங்கன்னு வரைக்கும் தான் தெரியும். எங்கையோ கையை காலை கட்டி தூக்கிட்டு போனாங்க. அவ்வளவு தான். அதுக்கு மேல என்ன நடந்ததுன்னு தெரியலை…”

“எதுவுமே தெரியலையா? யார் அனுப்பினது என்னன்னு எதுவும் சொல்லலையா?…”

“யார் கண்டா? சொல்லிருக்கலாம். ஆனா நிலவரம் இப்ப என்னன்னு இங்க இருக்கிறவங்களுக்கு தான் தெரியலை. நமக்கெதுக்கு அதெல்லாம். அதெல்லாம்  பெரிய இடத்து விவகாரம்…” வானதி ஈஸியாக சொல்லிவிட்டாள்.

ஆனால் கேட்டவளுக்கு தான் பொறுக்கமுடியவில்லை. இது அவனாக இருக்குமோ என மனதிற்குள் ஏக கூச்சல்.

அவனாக இருந்தால்? அவன் வந்து மாட்டியிருந்தால் தன்னை சொல்லியிருப்பானோ? அந்த வீடியோ? ஐயோ என மனது பதறியது.

தனக்கு அழைத்து தன்னுடைய எண் கிடைக்கவில்லை என்று அவனே இங்கே வந்திருந்து சிக்கியிருந்து சொல்லியிருந்தால்?

பாலா இரண்டு நாட்களும் தன்னிடம் பேசாமல் இருந்ததும் சேர்ந்து ஜீவாவை சுழற்றியது. கண்ணில் நீர் நிறைவதை போல இருந்தது அவளுக்கு.

அவன் ஒரு வக்கீல் தன்னை குறிந்த விஷயத்தை அறிந்துகொண்டவன் தன்னை என்னவென்று நினைப்பான்?

பாலா தன்னை தவறாக எண்ணியிருப்பானோ என முதல்முறையாக உள்ளம் பரிதவித்தது.

தொண்டை அடைக்க அந்த நினைப்பு கொண்டுவந்த அழுகையை முயன்று விழுங்கினாள்.

‘சாப்பிட்டியா?’

‘என்ன தூங்காம உடனே கால் அட்டன் பன்ற? பகல்ல கொஞ்சம் தூங்கினா என்ன உனக்கு?’

‘இவ்வளோ நேரம் லஞ்ச் எடுக்கலையா? ஒழுங்கா சாப்பிட்டு மாத்திரையை போடு.’

‘மருந்து போட்டா எரியத்தான் செய்யும், மேனேஜ் பண்ணிக்கோ.’

‘ஏன் அவங்க உனக்கு டவல் பாத் எடுத்தா என்ன கஷ்டம் உனக்கு? இது அவங்க பிரபஷன்’

‘நைட் எவ்வளவு நேரம் முழிச்சிருப்ப? நேரத்துக்கு தூங்கனும். ஒழுங்கா என் பேச்சை கேளு’

இப்படி எத்தனை எத்தனை அதட்டல்கள்? அதற்குள் பொதிந்திருந்த அத்தனையும் அக்கறையான ஆறுதல்கள். இல்லை இனி இல்லவே இல்லை. இது எதுவும் எனக்கு வாய்க்கபெறவில்லை.

உதட்டை கடித்து கண்ணீரை உள்ளிழுத்தாள். என்ன நினைப்பு இது? யாரோ ஒருவர். உதவி செய்ததற்காக நன்றியுடன் இருக்கலாம். ஏன் தன் நினைப்பும், எண்ணங்களும் அவனையே சுற்றுகிறது? என நிந்தித்துக்கொண்டாள்.

இத்தனை நாள் அவனா தன்னை கவனித்தான்?. ஏதோ அடிபட்டதற்கு உதவி ஆறுதலாய் பேசியதற்கெல்லாம் மனதிற்குள் இடம் தருவாயா நீ? என மனசாட்சியையும் புத்தியையும் மல்லுக்கட்ட வைத்தாள்.

‘நல்லது தான், இதை தெரிந்து தன்னிடம் இருந்து அவன் விலகினாலே போதும். தன்னை என்னவும் நினைத்துக்கொள்ளட்டும். இவன் யார் என்னை நல்லவிதமாய் பார்ப்பதற்கு. வேண்டாம் வேண்டாம்.’ என மனது கூவ புத்தியோ,

‘அவனுக்கு உண்மை தெரிந்தால் விலகி மட்டுமா இருப்பான்? கையில் மாட்ட விலங்கோடு இருக்கமாட்டானா?’ என்று எடுத்துரைக்க தூக்கிவாரி போட்டது அவளுக்கு.

கையில் இருந்த லெட்ஜர் நழுவ பதறி எடுத்து வைத்தாள் ஜீவா. அவளின் பதட்டத்தை பார்த்த வானதி,

“என்ன ஜீவா, நான் சொன்னதை நினைச்சு பயந்துட்டியா?…”

“ஹாங், ஹ்ம்ம். ஆமா…” என்று ஆமோதிப்பாய் சொல்லி தலையசைக்க கழுத்தெல்லாம் வியர்த்து வழிந்திருந்தது.

“ஹேய் என்ன இவ்வளோ ஸ்வெர்ட் ஆகுது?…” என தனது கை குட்டையால் வானதி அவளுக்கு துடைத்துவிட,

“இட்ஸ் ஓகே, ஓகே வானதி…” என்று விலகி அமர்ந்தாள்.

வானதி மேலும் பேசும் முன் ஆட்கள் அதிகமாய் வர ஆரம்பிக்க பேசவும் நேரமின்றி போனது.

மதிய இடைவேளை நேரம் வினோதினி வந்துவிட்டார் ஜீவா கேட்டதை வாங்கிக்கொண்டு. ஆட்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்திருந்தது.

“என்ன வினோ அரைமணி நேரம் லேட்?…” வானதி கேட்க,

“சத்தம் போடாத வானு. ஆமா எங்க நம்ம சரோ மேடம்?…”

“இப்பதான் சைல்ட் ப்ளாக் போனாங்க…”

“என்னை கேட்டாங்களா?…”

“ம்ஹூம், இல்லை…” என்று வானதி சொல்லவும் பெருமூச்சு விட்டவர்,

“கடைக்கு போய்டு வரவே நேரமாகிடுச்சு. வந்து சமைச்சு வேலையை முடிச்சுட்டு வரதுக்குள்ள தாவு தீர்ந்துருச்சு போ…” என்று சொல்லவும் அவரை பார்த்து புன்னகைக்கவும் அஞ்சி ஜீவா கணினியில் பார்வையை வைத்திருந்தாள்.

“என்ன ஜீவா? லீவ் முடிஞ்சிருச்சு போல?…” என நமுட்டு சிரிப்புடன் வினோதினி கேட்க,

“ஹ்ம்ம், ஆமா…” அவ்வளவு தான்.

“கிருஷ்ணா ஸார் வந்துட்டாரா? நேத்து முழுக்க இங்க தான் இருந்தார்…” அப்போதும் சிரித்துக்கொண்டு கேலியாய் சொல்ல,

“அட என்ன வினோ? அதை விடுங்க. நான் கேட்டது என்னாச்சு?…” என்று வானதி பேச்சை திசைமாற்றினாள்.

“ஓஹ், வாங்கிட்டேன். வாங்கிட்டேன்…” என்று தனது ஹேன்ட் பேக்கில் இருந்து அதனை எடுத்து கொடுத்தாள் வினோதினி.

“ஆமா எதுக்கு இந்த புது நோக்கியா போன்? சிம்கார்டோட?…” வினோதினி கேட்க ஜீவாவிற்கு திக்கென்றது.

“அம்மா போன் அப்பப்ப மக்கர் பண்ணுது. அதோட எனக்கு இன்னொரு சிம் தேவைப்பட்டுச்சு. அதான் கேட்டேன்…” என்று தனக்கருகே வைத்துக்கொண்டாள் வானதி.

“ஹ்ம்ம் சரி சரி, நான் கூட ஜீவாவுக்கோன்னு நினைச்சேன்…” என்றதும் ஜீவா நிமிர்ந்து பார்க்க,

“அன்னைக்கு பர்ஸ்ட் டே டிடி போட வரப்பவே உன் நம்பர்க்கு போட்டா கிடைக்கலை. அப்ப தான் வானதிட்ட கேட்டேன் உன் போன் மிஸ் ஆகிடுச்சுன்னு சொன்னா. அதான் இப்ப இது உனக்கோன்னு நினைச்சேன்…”

வினோதினி இப்படி யோசித்திருக்க என்ன அவளுக்கு பதில் கூற என ஜீவா நினைக்கும் முன்,

“இப்படியே நீங்க நினைச்சுட்டு இருங்க. அங்க சரோ மேம், திரும்ப வந்து உங்களை இங்க வச்சு பார்த்துட்டு நல்லா டோஸ் விட போறாங்க…”

“ஆமாமா, நல்லவேளை ஞாபகப்படுத்தின. இதுவே ஜீவான்னா கவலை இல்லை. கிருஷ்ணா ஸார பேச சொல்லிடலாம்…”

“வினோ…” வானதி கண்டிப்புடன் பார்க்க,

“அட எல்லாரும் அதத்தான் சொல்லிக்கறாங்க…” என்று அதற்கும் சிரித்துவிட்டே வினோதினி கிளம்ப ஜீவாவின் முகமே சுண்டிவிட்டது.

வந்ததும் வானதி மூலம் கேட்ட விஷயங்களால் ஜீவா அதனை கவனிக்காமல் விட்டுவிட்டாள்.

இப்போது நினைத்து பார்க்க தன்னை அந்த கண்ணோட்டத்தில் தானே அத்தனைபேரும் பார்த்திருக்க கூடும் என நினைத்தாள்.

அதனை தொட்டு மாட்டிக்கொண்டவன் அவனாக இருந்தால் பாலாவிடம் விஷயங்களை சொல்லியிருந்தால்? மீண்டும் அந்த படபடப்பிற்குள் சிக்கிகொண்டாள்.

“ஜீவா. இதை எடுத்து உள்ள வச்சுக்கோ…” என போனை வானதி நகர்த்த அதனை தன் பக்கமாய் எடுத்துக்கொண்டாள்.

அது ஒரு பழைய மாடல் நோக்கியா போன். கூடவே அதில் இணைப்பதற்கு ஒரு சிம்கார்ட்.

பாலா போனை கொண்டு வந்து தந்ததுமே இதனை வாங்கவேண்டும் என நினைத்து இதோ வாங்கிவிட்டாள்.

பாலா வரவும் அவனிடத்தில் அவன் போனை தரவேண்டும். இனியும் அவன் சம்பந்தமாக தன்னிடம் எதுவும்  இருப்பதை அவள் விரும்பவில்லை.

மனதில் நீர்க்குமிழியாய் சிறு விருப்பம் துவங்கிய பொழுதே தன் விதியும் ஆட்டத்தை துவங்கியதை எண்ணி ஜீவன்யா மனதிற்குள்ளேயே அதனை உடைத்துவிட்டாள்.

மாலை வரை பாலா வருவான் என்று பார்த்து வரவே இல்லை. வீட்டிற்கு கிளம்பியவள் துவைத்து ஆங்காங்கே இருந்த உடைகளை எல்லாம் எடுத்து பெட்டியில் அடுக்கி வைத்தாள்.

“என்னக்கா பன்ற?…” என்ற தென்றலின் கேள்வியில் அவளை அழைத்து அருகே அமரவைத்துக்கொண்டாள்.

“அக்கா சொல்றதை கவனி தென்றல். அக்காவை மட்டுமே நம்பி நீ இருக்க கூடாது. நீ தனியா தைரியமா எல்லாத்தையும் பேஸ் பண்ணனும். யாரும் நமக்கு ஹெல்ப் பண்ணுவாங்கன்னு நம்பாத….”

“என்னக்கா? என்னாச்சு?…”

“பிரபா ஆன்ட்டி வீட்டுக்காரர்…” என சொல்லும் பொழுதே வெளியே கதவு தட்டப்படும் சத்தம் கேட்க,

“நானே பார்க்கறேன்…” என தென்றல் போக,

“இல்லை நீ இரு…” என்று ஜீவா எழுந்து சென்று கதவை திறக்க பாலமுரளிகிருஷ்ணா நின்றிருந்தான்.

Advertisement