Advertisement

மின்னல் – 8

           ஒருவாரம் ஆகிற்று ஜீவாவிற்கு உடல் சரியாகி வர. ஆங்காங்கே சிராய்ப்புகள் இருந்தாலும் காயங்கள் ஆறிவிட்டது.

அன்று காலை தென்றலுக்கு தேவையானவற்றை எடுத்து வைத்துவிட்டு மருத்துவமனைக்கு கிளம்பிக்கொண்டிருந்தாள்.

“மறக்காம ஒழுங்கா சாப்பிட்டு போகனும் தென்றல். மிச்சம் வைக்காம சாப்பிடு. கிளாஸ் முடிச்சுட்டு வந்து எதாவது செய்யறேன்னு நிக்காத. நான் வந்து சாதம் வச்சிக்கறேன். குழம்பு இருக்கு. அப்பளம் சுட்டுப்போம்…”

உடை மாற்றி தலை சீவியபடி தங்கைக்கு சொல்லிக்கொண்டே கிளம்பிக்கொண்டிருந்தாள்.

“குழம்பை மட்டும் ஈவ்னிங் வந்ததும் லேசா சூடு பண்ணிரு. கெட்டுட போகுது…” என சொல்லிவிட்டு செருப்பை மாட்டிக்கொண்டு  வெளியேற சோலையம்மாள் அப்போது தான் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

“வானதி கிளம்பியாச்சா?…” என கேட்டதும்,

“இப்ப கொஞ்சம் மின்னத்தான் போனா. இன்னிக்கு சீக்கிரம் போகனுமாம்….”

“என்கிட்டே ஒண்ணுமே சொல்லலையே இவ?…” ஜீவா கேட்க,

“நைட்டு வேலை பாத்த புள்ள வெரசா கிளம்பனும்னு சொல்லிருந்துச்சாம் நேத்தே. அதான் அடிச்சு புடிச்சு போய்ட்டா…”   

“ஹ்ம்ம் சரி. நானும் நேரமா போறேன்…” என்று நடையை எட்டி போட்டாள்.

வேகமாக நடந்து வந்ததில் மூச்சு வாங்கியது. இத்தனை நாள் லீவ் போட்டதும் இல்லாமல் இன்று நேரம் தவறி சென்றால் சரியிருக்காது என தான் அத்தனை வேகம் அவளிடத்தில்.

“குட்மார்னிங் வானதி…” என உள்ளே வந்து சொல்ல கையிலிருந்த லெட்ஜரை பார்த்துக்கொண்டு இருந்த வானதி ஜீவாவை நிமிர்ந்து பார்த்தாள்.

“எதுக்குடி இத்தனை அவசரமா வர? இன்னும் டைம் இருக்கே?…” என்று கடிந்துகொண்டாள்.

சேரில் அமர்ந்தும் மூச்சை இழுத்துவிட்டபடி ஜீவா புன்னகைக்க அவளுக்கு பேச நேரம் கொடுத்துவிட்டு வேளையில் திரும்பினாள் வானதி.

ஐந்து நிமிடம் பொருத்து ஜீவா எழுந்து சென்று அங்கிருந்த பிள்ளையாரை வணங்கிவிட்டு வந்தவளிடம்,

“ஹ்ம்ம், இப்ப சொல்லு…” என வானதி அவளிடம் கேட்க,

“என்ன சொல்லனும்? நீ தான் என்னன்னு சொல்லனும். ஒன்வீக் கேப். மிஸ் பண்ணாம பார்க்கனும்…”

“அதெல்லாம் நானே பார்த்துட்டேன். இப்ப உனக்கு ஓகே தானே?…”

“நேத்து நைட் தான் பேசினியே? அதுக்குள்ளே என்ன?…”

“அது அங்க. அது வேற இது வேற…” என்ற வானதி ஒரு கையால் தலையை தாங்கியபடி ஜீவாவை குறுகுறுவென பார்த்தாள்.

“இதென்ன பார்வை?…” என்ற ஜீவா,

“நான் கேட்டது என்னாச்சு?…” என கேட்க,

“இன்னைக்கு வினோதினி ஆஃப். அவங்கட்ட தான் சொல்லியிருக்கேன். மத்தியானம் வாங்கிட்டு வந்திருவாங்க…” என்றதும் அத்தனை கோபம் ஜீவாவிற்கு.

“நீ ஏன் அவங்ககிட்ட சொன்ன வானதி?…”

“ஏன் அவங்க வெளில போறாங்க? அதான் சொல்லியனுப்பிச்சேன். நீ முந்தா நாள் கேட்ட. நேத்து என்னால போக முடியலை. இந்த வீக்கென்ட் வரைக்கும் நீ வெய்ட் பண்ணனுமே?…”

“ப்ச் பேசாம நானே போயிருந்திருக்கனும் இன்னைக்கு ஒருநாள் பர்மிஷன் போட்டுட்டு…” என ஜீவா அலுப்புடன் சொல்ல,

“அது முடியாது ஜீவா…” என்றாள் வானதி.

“ஏன்? இத்தனை நாளோட இன்னைக்கும் ஒருநாள் லீவ். தரமாட்டாங்களா என்ன? எமர்ஜென்ஸிக்கு அலோவ் பண்ணுவாங்க…” என்றவளிடம் வானதி எந்த பதிலும் சொல்லவில்லை.

பாலமுரளிகிருஷ்ணா மூலமாக ஏற்கனவே வானதிக்கு வார்னிங் போல அறிவுறுத்தப்பட்டிருந்தது நிர்வாகத்திடம் இருந்து.

சூப்பர்வைசர் சரோஜா வேறு வானதியிடம் தனியே அழைத்து பேசியிருக்க என்ன விஷயமோ என்றே வானதி தலைசுற்றி இருந்தாள்.

உள்ளூர பயம் வேறு, என்ன பிரச்சனையோ? ஏன் இத்தனை அறிவுருத்தல்கள், எச்சரிக்கைகள் என பயத்துடன் தான் இருந்தாள் வானதி.

கூடுதலாக பாலாவே வானதியை தனியே அழைத்து சொல்லிவிட்டிருந்தான் ஜீவா எங்கும் செல்வதாக இருந்தால் தன்னிடம் தெரிவிக்கும்படி.

இனி தானுமே ஜீவாவுடன் சேர்த்து கவனிக்கப்படுவோம் என்பதே பெரும் பாரமாக தோன்றியது வானதிக்கு.

அதையும் மீறி பிரச்சனையை தெரியாமலே இப்படி எச்சரிக்கையுடன் இருக்க சொல்வது தலைவேதனையாக இருந்தது.

என்னவோ தனது இத்தனை வருட உழைப்பிற்கே அவப்பெயர் வந்துவிடுமோ என்னும் விதமாக ஒருநொடி யோசித்தேவிட்டாள் வானதி.

அதன் பின்னர் தான் ‘இதற்கு போய் இப்படி நினைத்துவிட்டாயே?’ என தன்னையே கடிந்துகொண்டு அமைதியாக இருந்தாள்.  

“வானதி இதென்னன்னு சொல்லு? ரெண்டு நாள் முன்னாடி வந்திருக்கிற விசிட்டர்ஸ் லிஸ்ட். அன்னைக்கு ரெண்டு விசிட்டரை ஒரே பேஷண்ட்க்கு அலோவ் பண்ணிருக்கு. எப்படி முடியும்?…” என ஜீவா கேட்கவும் தான் தெளிந்தவள்,

“எங்க?…” என பார்த்துவிட்டு,

“இதுவா? அன்னைக்கு பெரிய பிரச்சனை ஆகிருச்சு ஜீவா…”

“ஏன் என்ன விஷயம்?…”

“கிருஷ்ணா ஸார் பார்க்க வருவார்ல ஒரு பேஷன்ட். அவங்களை அன்னைக்கு அட்டாக் பண்ண வந்துட்டாங்க…”

“என்ன?…” அதிர்ச்சியாகிவிட்டாள் ஜீவா.

இத்தனை காவல்களை மீறி இது எப்படி சாத்தியம்? என்று இன்னும் நம்ப முடியவில்லை.

“ஆமா, அன்னைக்கு ரிசப்ஷன்ல இருந்த பொண்ணு இதை சரியா கவனிக்காம முதல்ல வந்தவருக்கு என்ட்ரி அப்ரூவ் பண்ணி கார்ட் ஸ்வைப் குடுத்திருச்சு…”

“ஏன் பேஷன்ட் அட்டண்டர்கிட்ட கேட்கலையா?…”

“ஆமா, எதுவும் கேட்கலை. வீட்டு ஞாபகத்துல டென்ஷன்ல என்னவோ பண்ணிருச்சு…”

“எப்படி கண்டுபிடிச்சாங்க?…”

“அடுத்து வந்த விசிட்டர் அதே மாதிரி கார்ட் குடுக்கவும் தான் அதையும் கவனிக்காம இந்த பொண்ணு குடுக்க அவர் அந்த ப்ளோர் செக்யூரிட்டிட்ட காண்பிக்க அவர் பிடிச்சுட்டார். இப்பத்தான ஒருத்தர் போனாங்கன்னு சொல்லவும் அவர் இல்லை நான் இப்பதான் வரேன்னு சொல்லவும் பயந்துட்டாங்க….”

“அப்பறம்…”

“கிருஷ்ணா ஸாரும் அந்த நேரம் வந்துட்டார். நேரா அந்த பேஷண்டை போய் பார்க்க அங்க அவன் அந்த பேஷண்டோட ஆக்ஸிஜன் சிலிண்டரை ஆஃப் பண்ணிட்டு கொலை பண்ண முயற்சி பண்ணிருக்கான். நல்லவேளையா அந்த ட்யூட்டி நர்ஸ் பார்த்து தள்ளிவிட்டு காப்பாத்திட்டாங்க…”

“தேங்க் காட்…” என்றவளுக்கு வியர்த்துவிட்டது.

இதை எல்லாம் அவள் கேள்விப்பட்டதுண்டு. ஆனால் நிஜத்தில் நடக்கையில் அதுவும் தானிருக்கும் மருத்துவமனையில் என்னும் பொழுது படபடப்பாய் வந்தது.

“கொலை செய்யற அளவுக்குன்னா என்னவா இருக்கும் வானதி?…” அவளே கேட்க,

“தெரியலை. இங்க ஒரே டென்ஷன். அந்த பொண்ணை பிடிச்சு பயங்கர திட்டு. அவ்வளோ எக்ஸ்க்யூஸ் பண்ணுச்சு. வீட்டுல நகை பிரச்சனை. மாமியார் பிரச்சனை பன்றாங்கன்னு சொல்லு. கொஞ்ச நாள் சஸ்பென்ட் பண்ணின மாதிரி செஞ்சிருக்காங்க…”

“அவங்களும் பாவம் தானே?…”

“பாவம் தான். ஆனா இங்க காப்பாத்தினதால தப்பிச்சாங்க. இல்லைன்னா? இத்தனை நாள் அந்த பேஷண்ட்க்கு ட்ரீட்மென்ட் குடுத்து எவ்வளவு தூரம் வச்சு பார்த்திட்டு இருக்காங்க? எல்லாம் வேஸ்ட்டா போயிருக்கும். உயிர் போயிருக்கும்…”

வானதி விவரித்து சொல்ல சொல்ல ஜீவா பதிலின்றி வெறித்த பார்வையுடன் இருந்தாள்.

‘ஒரு உயிர் போயிருந்திருக்கும்’ இந்த வார்த்தை பலமாய் தாக்கியது ஜீவாவை. அந்த நொடி எதிலிருந்தோ தப்பிவிட்டதை போல தோன்றியது அவளுக்கு.

இல்லை என்றால் அந்த இடத்தில் தன்னை நிறுத்தியிருப்பார்கள். நினைக்கவே நடுக்கமாக இருந்தது. 

அவளுக்கு தெரிந்துவிட்டது தன்னை தொடர்புகொள்ள முடியவில்லை என்று இதனை செய்ய இன்னொருவரை அனுப்பியிருக்கும் விஷயம்.

மீண்டும் வேலைக்கு வந்த அன்றே இப்படி ஒரு விஷயத்தை கேட்டு உள்ளூர ஒடிந்து போனாள்.

“நீ என்ன ஒரு மாதிரி ஆகிட்ட?…”  வானதி ஜீவாவை உலுக்க,

“ஹ்ம்ம், ஒண்ணுமில்லை….” என தலையசைத்தவள்,

“ஆமா நீ போய் பார்த்தியா அவங்களை? அவங்க யாருன்னு தெரியுமா?…”

“ம்ஹூம், ஏன் ஒரு வருஷமா இருக்க. உனக்கு தெரியாதா என்ன? இங்க நாம வேலை இங்கயோட முடிஞ்சிரும். போய் பார்க்க அதென்ன பொருட்காட்சியா?…”

“இல்லை சும்மா தான். அன்னைக்கு பிரச்சனை ஆனது இல்ல, எல்லாரும்  பார்த்திருப்பீங்களோன்னு…”

“நல்லா கேட்ட போ. அதுக்கப்பறமும் சீட்டை விட்டு கேர்லெஸ்ஸா போயிட முடியுமா? ம்ஹூம்….” என்ற வானதிக்கு இப்போது நடந்ததை போல இருந்தது அந்த நிகழ்வு.

“இதை ஏன் நீ அன்னைக்கே சொல்லலை?…” என்ற ஜீவாவிடம்,

“சொல்ற மாதிரியா இருந்த நீ? அதுவும் ரெஸ்ட்ல இருக்க உன்கிட்ட இதை சொல்லி எதுக்கு டென்ஷன் பண்ணனும்னு தான் சொல்லலை…”

“ஹ்ம்ம் ஓகே…” என்றவளுக்கு அந்த இரு நாட்களும் பாலாவிடம் இருந்து ஏன் போன் வரவில்லை என்று புரிந்தது.

அதற்கு முன் நித்தமும் இருவேளை அழைத்துவிடுவான். ஏதாவது கேட்டு வம்பிழுத்து இவளிடம் வார்த்தைகளை வாங்கிக்கொண்டே போனை வைப்பவன் கடந்த இருநாட்களும் அழைக்கவே இல்லை என்பது ஏன் என்று புரிந்து போனது.

“சரி விடு வேலையை பார்ப்போம்…” வானதி சொல்ல,

Advertisement