Advertisement

மின்னல் – 7

           அன்றைகென்று தென்றல் பள்ளி நேரத்திற்கு முன்பே வீடு வந்து சேர்ந்துவிட்டாள்.

அந்த நேரத்தில் அவளை எதிர்பார்க்காத ஜீவா தங்கையை முறைக்க அவளோ வந்ததும் உடை மாற்றி முகம் கழுவிவிட்டு வந்து ஜீவாவின் அருகே அமர்ந்தாள்.

“ரெஸ்ட் எடுக்கலையாக்கா நீ? தூங்குவன்னு நினைச்சேன்…” என கேட்க,

“ஒழுங்கா ஸ்கூல்ல கவனத்தை வைக்க மாட்டியா?…” ஜீவாவின் கோபத்தை கண்டுகொள்ளாத தென்றல்,

“இப்ப உனக்கு பரவாயில்லயா க்கா? வலி இருக்கா?…” என்று கைகளை எல்லாம் வருடி பார்த்தாள்.

“தென்றல்…” என அதட்டினாள்.

“அந்த ஆளு அவன் என்ன சொன்னான்? எதுக்காம் அந்த நேரம் வர சொன்னான்? நீ போனியே? ரொம்ப மிரட்டினானா?…” தென்றலில் சஞ்சலத்தை ஜீவா புரிந்துகொண்டாலும் காண்பித்துக்கொள்ளவில்லை.

“அது எதுக்கு உனக்கு?…”

“பிரபா ஆன்ட்டிக்கு இன்னொருமுறை கூப்பிட்டு பாரேன். எடுக்காங்களான்னு?…”

“தென்றல் தென்றல் உனக்கு எத்தனைதடவை சொல்ல? நான் இந்த விஷயத்தை பார்த்துக்கறேன். நீ இதை நினைச்சு பீல் பண்ணாம இருந்தாலே எனக்கு பாதி டென்ஷன் குறையும்…”

“அக்கா ப்ளீஸ், எனக்காக ட்ரை பண்ணேன்…” என்றவள் அவளின் மொபைலை தேட ஜீவாவின் பின்னால் இருந்த அந்த புது மொபைலை பார்த்துவிட்டாள்.

“யார் மொபைல் ஜீவாக்கா இது? புதுசா இருக்கு?…” என அதனை எடுத்து திருப்பி திருப்பி பார்க்க ஜீவா ஒன்றும் பேசாமல் பார்த்தாள் அவளை.

“சொல்லுக்கா, யாரும் வந்து மறந்து வச்சிட்டு போய்ட்டாங்களா?…” என்று கேட்க,

“ம்ஹூம் இல்லை…”

“அப்போ யாரிது?…” என்றவள் பின் அவளாகவே,

“நேத்து வந்தாங்களே ஒருத்தர் உனக்கு ஹெல்ப் பண்ண. என்னை கூட அழாதன்னு திட்டினாங்க தானே?…”

“திட்டினாங்களா?…”

“ஆமா அவங்களுக்கு கோவம் நான் உடனே கதவை திறக்கலைன்னு. உன்னை தூக்கிட்டு வரப்போ என்னை ரொம்ப முறைச்சாங்க…”

“ஓஹ்…” என்றவளுக்கு பாலாவின் ஈடுபாடும், இந்த உரிமையான கோபமும் அதட்டலும் பதட்டத்தை தான் விளைவித்தது.

அங்கே தான் வந்து சேர்ந்த பொழுதில் பார்த்தவனுக்கும், சமீபமாய் பார்ப்பவனுக்கும் உள்ள வித்தியாசத்தை ஜீவாவால் உணர முடிந்தது.

“என்ன ஓஹ்? ஒருவேளை அவங்க மறந்து வச்சிட்டு போயிருப்பாங்களோ?…” என கேட்டவள்,

“இல்லையே இது காலையில நான் போறப்ப இல்லையே?…” என்றாள்.

“என்னை பேச விடேன் தென்றல்….”

“சரி சொல்லு. நீ முதல்லையே சொல்லியிருந்தா நான் ஏன் இவ்வளோ நேரம் பேச போறேன்?…”

“ப்ச், உன்னோட முடியலை தென்றல். நீ ஸ்கூல் முடியவும் வர வேண்டியது தானே?…” என்ற ஜீவா,

“படிக்கனும் தென்றல். படிப்பு எத்தனை முக்கியம்ன்னு உனக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. அந்த படிப்பு தான் நீ தனிச்சு நிக்க தைரியத்தை தரும்…”

“புரியுதுக்கா…” தென்றல் சலிப்பாய் சிணுங்க,

“ம்ஹூம், புரிஞ்சிருந்தா இப்படி கிளம்பி வந்திருக்க மாட்ட. இதைவிட பெரிய காயம் எல்லாம் இல்லையா என்ன எனக்கு?…” என்றதும் தென்றல் முகம் கன்ற தலை குனிந்தாள்.

“ப்ச், உடனே இப்படி முகத்தை மாத்த கூடாது. அதை எல்லாம் மறந்திடனும். நானும் அறிவில்லாம ஞாபகபடுத்தற மாதிரி பேசிட்டேன்…” என்றவளின் நெஞ்சில் தென்றல் சாய்ந்துகொள்ள அவள் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.

“ப்ச், தென்றல் என்னடா இது? அதை விடு…” என்று முதுகை நீவி தங்கையை அணைத்துக்கொண்டவள்,

“இங்க நாம எப்படி வந்தோம்ன்னு மறந்திடாத தென்றல். இங்க வேலை கிடைச்சதோட உனக்கு படிக்க இடமும் கிடைச்சதே பெரிய விஷயம். அதை இப்படி அலட்சியப்படுத்தலமா?…”

“அச்சோ இல்லை க்கா. இனிமே இப்படி பண்ண மாட்டேன்…”

“ஹ்ம்ம், குட். நினைச்சு பாரு. இந்த வாய்ப்புகளும் இல்லாம எவ்வளவு குழந்தைங்க கஷ்டப்படறாங்க?…”  

“ஸாரி ஜீவாக்கா…”

“அதெல்லாம் வேண்டாம். நீ இனிமே இதை செய்ய கூடாது. புரியுதா?…” என்று தலையை வருடி சிலுப்பியிருந்த முடிகளை பின்னால் ஒதுக்கியவள்,

“நேத்து அக்கா வெளில போனேன்ல. அங்க போனை மிஸ் பண்ணிட்டேன். அதுக்கு பதிலா இப்போதைக்கு இதை யூஸ் பண்ணுன்னு அந்த லாயர் ஸார் குடுத்தார்…”

“அவர் லாயரா?…”

“ஹ்ம்ம், ஆமா டா. ஏன்?…” என்றதும் தென்றல் முகம் யோசனையானது.

“என்ன தென்றல்?…”

“லாயர்னா என்ன தப்பு பண்ணிருந்தாலும் வாதாடி காப்பாத்திருவாங்க தானே? அப்போ நம்மளையும்…” என்று அவள் கேட்க,

“தென்றல், இது எதுக்கு உனக்கு? நமக்கு இந்த மாதிரி யோசனைகளே வேண்டாம். நல்லா படி. படிப்பு முடியவும் நாம இங்க இருந்து வேற எங்கையாவது போய்டுவோம்…”

“ஏன் ஜீவாக்கா இங்கயே நல்லா தானே இருக்கோம்?…” என்றவளுக்கு பதில் சொல்லமுடியாமல் இருந்தவள்,

“தென்றல் ஒரு விஷயம் மனசுல வச்சுக்கோ. இங்கையுமே நாம எவ்வளோ நாள் இருப்போம்ன்னு தெரியாது. எப்போ வேணாலும் கிளம்பலாம். உனக்கு இது பப்ளிக் எக்ஸாம். இதை மட்டும் நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ணிடு. அது போதும்…”

“ஜீவாக்கா நீ எதோ டிஸைட் பண்ணிட்ட. ஓகே. சரி ஏதாவது குடிக்கிறியா?…”

“ஹ்ம்ம், பால் இருக்காது. ப்ளாக் காபி போடேன். குடிப்போம்…” என்றாள் ஜீவா.

“ஓகே, இப்ப வந்திடறேன்…” என்று அந்த சிங்கிள் பர்னர் ஸ்டவ்வில் பாத்திரத்தை ஏற்றி வெந்நீர் வைத்தாள்.

சென்னையில் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தினாலும் அந்த வானம் அறக்கட்டளை முழுவதும் மரங்களும், பூஞ்செடிகளும் என குளுமைக்கு பஞ்சமிருக்காது.

எப்போதும் குளிர்ச்சியும், சுத்தமான காற்றும் என்று அந்த இடமே தனித்து தெரியும்.

ஜன்னல் வழியே தெரிந்த மேக கூட்டங்களை பார்த்துக்கொண்டே ஜீவா இருக்க தென்றல் வந்தமர்ந்ததும் அவளிடம் பேசியபடி ப்ளாக் காபியை அருந்தினாள் ஜீவா.

——————————————

“கிளம்பியாச்சா ண்ணா…” பத்ரி தானும் கிளம்பி இருக்க,

“இதோ டா. கிளம்பிட்டேன். உன்னை ட்ராப் பண்ணனுமா?…” பாலா அவனிடம் கேட்டான்.

“நோ ண்ணா. நான் பைக்ல வந்துட்டேன். அதுலயே போய்ப்பேன்…”

“ஓகே, பார்த்து பத்திரம்…”

“அதெல்லாம் பார்த்துக்கலாம் ண்ணா…” என்றவன் விடைபெற்று கிளம்பிவிட்டான்.

பாலாவும் கதவை பூட்டிவிட்டு கார் இருக்கும் திசைக்கு வர அங்கே ஆளவந்தான் அவனின் காரின் அருகே நின்றுகொண்டிருந்தார் இன்னொருவருடன் பேசியபடி.

“என்னைய்யா பெரிய இம்சை புடிச்ச கேஸா இருக்கு? இழுத்துட்டே போகுது. முடிச்சுவிட்டு கம்முன்னு இருக்கலாம்ன்னா முடியுதா பாரு? ச்சை…” என்று ஆளவந்தான் சக வழக்கறிங்கருடன் பேசிக்கொண்டு நிற்க,

“குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் கொண்டாட்டம்….” என பாடியபடி கார் சாவியை சுழற்றிக்கொண்டு அவரை இடிப்பதை போல பாலா கடந்து செல்ல,

“இவன…” என பல்லை கடித்தார் ஆளவந்தான்.

“என்ன ஆளு அங்கிள், டென்ஷனா இருக்கீங்க போல? வாங்களேன் ஜாலியா ஒரு லாங் ட்ரைவ் போலாம். நான் ப்ரீ தான் இப்ப?…” என்று கார் கதவை திறந்தபடி பாலா கேட்டதும் பல்லை கடித்தார் ஆளவந்தான்.

“என்னடா உன் பிரச்சனை?…” என்று எகிற,

“சொன்னா மட்டும் கூட வந்திருவீங்களாக்கும்?…” என்று கண் சிமிட்டி அவன் சிரிக்க இன்னுமே பிபி ஏறியது ஆளவந்தானுக்கு.

“முதல்ல என்கிட்டே இப்படி பேசறதை நீ நிறுத்து…” என கோபமாக கை நீட்டி அவர் சொல்ல பாலாவின் மனதிற்குள் ‘சிகிரெட்டை நிறுத்து’ என்ற காட்சி வலம் வர அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டான் அவன்.

“என்ன?…”

“நிறுத்துன்னு சொன்னீங்களே? நிறுத்தி பார்த்தேன். முடியல. சிரிப்பு வந்திருச்சு…” என்றதும்,

“கிளம்பும் போதும் நான் உன் கண்ணுல சிக்குவேனா?…” என்று தலையில் அடித்துக்கொண்டு சென்றார் ஆளவந்தான்.

“இன்னும் உங்களுக்கு நிறைய இருக்கே ஆளு. அதுக்குள்ளவா? கொள்ளையா வாங்கின காசுக்கு நிம்மதி கிடைக்குமா என்ன?…”   என்று இகழ்ச்சியான புன்னகையுடன் அவர் செல்வதை பார்த்துக்கொண்டே காரை கிளப்பினான்.

 பாலமுரளிகிருஷ்ணா அடுத்து நேராக சென்றது வானம் அறக்கட்டளை அலுவலகத்திற்கு தான்.

உள்ளூர படபடப்பாய் இருந்தது. மேனேஜ்மென்ட்டில் தன்னை காணத்தான் ஜீவா இரவில் வெளியேறி வந்தாள் என்று சொல்லிவிட்டான்.

ஆனால் நம்புவதற்கு அவர்கள் தயாராக இருந்தாலும் ஷக்தியிடம், ஷேஷாவிடம் பலிக்காதே?

காரை அனைவரும் நிறுத்துமிடத்தில் கொண்டு நிறுத்திவிட்டு முகத்தையும் தலையையும் சீர் செய்துகொண்டவன் காரிலிருந்து இறங்கி அவர்களின் அலுவலக கட்டிடம் நோக்கி நடக்கலானான்.

வெளியே கிருஷ் போனில் யாரோடமோ பேசிக்கொண்டிருக்க அவனை பார்த்ததும் பாலாவின் நடை ஒருநொடி நின்றது.

Advertisement