Advertisement

“நீ சொல்லாம வெளில போனன்னு தெரிஞ்சா மட்டும் யாரும் ஒன்னும் சொல்லமாட்டாங்களோ? அப்போ உன் பேர் கெட்டு போகாதா?…” சுள்ளென்று அவன் கேட்க,

“அதை பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம்…”

“அப்போ உனக்கு இது ஒரு விஷயமே இல்லை. என்னோட சேர்ந்து பேசறது தான் விஷயம். இல்லையா?…” என்று அவன் கேட்க என்ன பதில் சொல்வாள்?

“ப்ளீஸ் ஸார்…” என்று ஜீவா குரல் கலங்கி போய் இருந்தது.

“எனக்கு நீ என்ன பிரச்சனைல இருக்கன்னு தெரிஞ்சுக்க வேண்டாம். ஆனா என்னவோ உனக்கு ஹெல்ப் பண்ணனும்னு தோணுச்சு. அதான் அப்படி சொன்னேன். வேணும்னா நீ இல்லைன்னு மறுத்துக்கோ…”  என்று சொல்லி போனை வைத்துவிட்டான்.

ஜீவா தான் சஞ்சலத்துடன் அமர்ந்திருந்தாள். அந்த எண்ணிலிருந்து  தனக்கு அழைப்பு வருமே? அழைப்பு போகாவிட்டால் என்னவாகும்? தான் எடுக்கவில்லை என நினைத்து ஏதாவது விபரீதமானால்?

ரயிலின் வேகத்தை விஞ்சி ஓடிக்கொண்டிருந்தது அவளின் பதட்டம். கண்ணை மூடியபடி எத்தனையோ யோசித்து பார்த்தாகிற்று. ஒன்றும் பிடிபடவில்லை.

மீண்டும் அவளின் எண்ணிற்கு அழைப்பு வந்தது. எடுத்து பார்க்க இப்போதும் பாலா தான்.

“என்ன?…” என்றாள் எடுத்ததும் காட்டமாய்.

“டிடி போட வந்தாங்களா?…” அவன் கர்மசிரத்தையாக கேட்க,

“வேற எதாச்சும் ஒரு ஊசியை போட்டு மொத்தமா என் சோலியை முடிக்க சொல்லிருங்க நிம்மதியா இருப்பேன்…” என்று அவளின் இயலாமையில் வார்த்தைகள் தீயாய் வந்து விழ,

“ஓஹ் இதை நீ முதல்லையே சொல்லிருக்க கூடாதா? இட்ஸ் மை ப்ளஷர்….” என்று சொல்லியவன் போனை வைத்துவிட இன்னும் ஆத்திரம் அவளுக்கு.

வினோதினி தான் இடையில் ஒருமுறை வந்து ஜீவாவிற்கு இன்ஜெக்ஷன் போட்டுவிட்டு சென்றாள்.

“நானும் எத்தனையோ பார்த்துட்டேன். ஆனா உனக்கு ஏன் இந்த சலுகைன்னு  தான் எனக்கும் புரியலை. ஆனாலும் குடுத்து வச்சவ நீ. கிருஷ்ணா ஸார் ஆளுன்னா சும்மாவா?…” என பிபியை ஏற்றிவிட்டு சென்றிருந்தாள்.

‘போச்சு போச்சு, இனி தன் முன்னாலும், பின்னாலும் இப்படியே பேசி தன்னை பார்க்கும் பார்வையை மாற்ற போகிறார்கள்’ என்று கோவம் கனன்றது.

அதிலும் பாலாவின் அலட்சியமும், அந்த பேச்சு தொனியும் இன்னும் இன்னும் அவளை காயப்படுத்தியது.

இவன் யார் எனக்கு உதவ? இதிலிருந்து என்னால் மீண்டிருக்க முடியாதா? மீள முயற்சிப்பேன்.

இல்லையென்றால்? அந்த இல்லையென்றால் என்ற நினைப்பின் ஆதாரம் விழிகளில் ஜனிக்க அதில் ஜுவாலை தெறித்தது.

‘தென்றல் இவளுக்காக வேண்டும் நான் மீள முயற்சிப்பேன்’ மனதிற்குள் எடுத்த சபதம்.

இப்போதெல்லாம் வெகு இறுக்கமான தருணங்களில் மனது அன்னையை நாடியது. விழிகள் கசிய காத்திருக்க ம்ஹூம் முயன்று விழுங்கினாள் கண்ணீரையும் கேவலையும்.

எந்தளவிற்கு போகிறதென பார்க்கலாம் என்ற திடம் அவளை இன்னும் இரும்பாய் மாற்றியது.

பாலா கொடுத்து சென்ற போனில் தனது மெயில் ஐடி கொண்டு தனது சேகரிப்புகளை பதிவிறக்கம் செய்தவள் மீண்டும் அந்த எண்ணிற்கு அழைத்தாள்.

போன மாதம் வரை உபயோகத்தில் இருந்த எண் இப்போது இல்லாது போக என்னவோ என பதறியது ஜீவாவிற்கு.

இங்கே ஜீவாவின் எண்ணை தன்னுடைய இணைப்பில் மாற்றியிருந்தவனுக்கு அவள் யாருக்கோ முயற்சிப்பது தெரியவர பல்லை கடித்தான்.

“கொஞ்ச நேரம் அடங்கியே இருக்கமாட்டா. இப்ப எதுக்கு தானா போய் விழனும்?…” என்று கோபத்துடன் முணங்கிக்கொண்டவன் பேசட்டும் என்று காத்திருக்க அந்த எண் உபயோகத்தில் இல்லை என வந்தது.

அதையும் குறித்துக்கொண்டவன் உடனே ராமிற்கு அழைத்தான். அவனுக்கு அதற்கு முன்பே அந்த அலைபேசி எண்களை அனுப்பிவிட்டு அழைப்பு விடுக்க,

“இப்போவாச்சும் ஒழுங்கா பேசுடா. யார் நம்பர் அது?…” என ராம் கேட்டதும்.

“அதை நீ தான் கண்டுபிடிச்சு தரனும்…” என்றான் பாலா.

“நான் கவர்மென்ட்க்கு வேலை பார்க்கறேனா உனக்கு பார்க்கறேனான்னு தெரியலைடா. சரி வை. யாருன்னு பார்த்துட்டு சொல்றேன்…”

“ஹ்ம்ம்…” என பாலா சொல்ல,

“என்னடா சீரியஸ் மூட் போல?…” ராமிற்கு பாலாவின் இந்த அமைதியே அவனின் உணர்வுகளை காண்பிக்க,

“ப்ச், அதை விடு. இந்த நம்பர் எல்லாம் யார் பேர்ல வாங்கிருக்கு, எங்க எங்க எல்லாம் எவ்வளவு நேரம் இருந்திருக்கு எல்லா டீடெய்ல்ஸும் வேணும். முக்கியமா வேற யாருக்கெல்லாம் கால் போயிருந்திருக்குன்னு வேணும்…”

பாலா சொல்ல முழுதாய் விவரம் சொல்லாமல் மெலிதாய் கோடிழுத்து காட்ட ராமிற்கு நா உலர்ந்தது.

“விஷயம் பெருசு தான் போல. சும்மாவே இருக்கமாட்டியா? எவனும் எப்படியும் போகட்டும். உனக்கு குடும்பம், பொண்டாட்டி, பிள்ளைன்னு இருந்தா இவ்வளவு ரிஸ்க் எடுக்க யோசிப்ப…” ராமின் பேச்சில் அத்தனை அக்கறை அவன் மீது.

“டேய், டேய் ஏன்டா நீ வேற? ஆகற கதையை பாரு. நான் கேட்டதுக்கு பதில் சொல்லு…” என பேசிக்கொண்டே எழுந்து வெளியே வந்தவன் எதிரே வந்த ஆளவந்தானை பார்த்ததும் இறுக்கம் கலைந்து கண்கள் சிரிப்பில் மின்ன,

“எனக்கு ஆள் இல்லைன்னு யார்ரா சொன்னா? என்னோட ஆளு தான் என் கூடவே இருக்காரே? போதாதா?…” என்று சிரிக்க அவன் தன்னை தான் சொல்கிறான் என்று ஆளவந்தான் பல்லை கடித்தார்.

“அடுத்த ஆள் சிக்கியாச்சு போல. சரி நான் வைக்கறேன்ப்பா. இல்லைன்னா எப்போ வேணாலும் டேக் டைவர்ஷன் போட்டுடுவ நீ…” என்று போனை வைத்துவிட்டான் ராம்.

“அப்பறம் ஆளு அங்கிள், என்ன இந்த பக்கம்? என்னை பார்க்க தானே?…” என்று அவரை வம்பிழுத்தான்.

“என் கிரகம், உன்னோட ஆபீஸ் ரூம் பின்னாடி தான் ஜட்ஜ் இருக்காரு. அவரை பார்க்க போறப்பவும் வரப்பவும் உன் மூஞ்சியில முழிக்க வேண்டியதா இருக்கு…” என தலையில் அடித்துக்கொள்ள,

“சும்மா பொய் சொல்லாதீங்க அங்கிள். உங்க கண்ணுல நான் என்னை பார்த்துட்டேன்…” என்று கிண்டல் பேச,

“என் எதுக்க யார் வந்தாலும் அவங்க தான் என் கண்ணுக்குள்ள தெரிவாங்க. வக்கீலாம், இது கூட உனக்கு தெரியலை…” என்றார் கடுப்புடன் அவனை மட்டம் தட்டுவதாக.

“அப்படியா? எங்க இந்த பக்கம் திரும்பி நில்லுங்க, யார் தெரியறான்னு பார்ப்போம்…” என்று அவரை திருப்பி நிறுத்திவிட்டு சத்தம் எழுப்பாமல் பாலா தள்ளி நிற்க ஆளவந்தான் பார்வையோ பாலாவை தான் மீண்டும் பார்த்தது.

“பார்த்தீங்களா? நீங்களே என்னை தான் பார்க்கறீங்க. அப்பறம் எதுக்கு இந்த சால்சாப்பு எல்லாம்?…” என்று சிரித்தான்.

“என் தலையெழுத்து? என்னை திரும்பி நிக்கவச்சு பின்னால என்னத்தையாச்சும் எழுதி ஒட்டிருவியோ, எதையும் சொருகிருவியோன்னு என்னை மறந்து உன்னை தான் பார்த்து தொலைக்கிறேன். போ அந்த பக்கம்…”  

ஆளவந்தான் கோபம் பொங்க சொல்ல பாலா இன்னும் அதிகமாய் சிரித்தான் அவரின் கோபத்தில்.

“கொஞ்சம் கூட வெக்கம், ரோஷம் எல்லாம் இல்லை…” என்று அவர் அவனை தாண்டி செல்ல பார்க்க வழி மறித்து நின்றான் பாலா.  

“நமக்குள்ள என்னத்துக்கு அங்கிள் இதெல்லாம்?…”

“எது?…”

“இந்த ரோஷம் வெக்கம் எல்லாம்? நாம இவ்வளோ நெருங்கின பின்னாடியும்?…”

“ஏன்டா பொம்பளைப்புள்ளைட்ட பேச வேண்டியது எல்லாம் என்கிட்டே பேசி உசுரை வாங்கற?…” நொந்துகொண்டார்.

“பார்த்தீங்களா? நான் என்ன நினைக்கிறேன், எனக்கு என்ன வேணும்னு கூட உங்களுக்கு தான் தெரியுது…”

“என்னடா வேணும் உனக்கு?…”

“நான் சொல்லிருவேன். அப்பறம் நீங்க தனியா உக்கார்ந்து பீல் பண்ண கூடாது…” என்று சிரித்தான்.

அவன் நிஜமாகவே ஏதேனும் சொல்லிவிட்டால் தன் தூக்கம் தான் போய்விடும் என ஆளவந்தான் அவனை தள்ளிவிட்டு வேகமாய் நடந்து சென்றுவிட்டார்.

“ஆளு அங்கிள்…” என சத்தமாய் பாலா அழைக்க அவனை திரும்பி பார்த்து விரலை நீட்டி கண்களை உருட்டி எச்சரித்தார்.

அவரின் வேகமும் பாலாவின் சிரிப்பும் சற்று அருகே இருந்தவர்களுக்கு பேச்சுக்கள் புரியவில்லை என்றாலும் பாலா அவரை வம்பிழுக்கிறான் என்றளவுக்கு புரிந்திருந்தது.

இருவருக்கும் ஏழாம் பொருத்தம் என்பது அங்கிருந்தவர்களுக்கு ஓரளவு தெரிந்த விஷயம் தான். அதனால் சிரித்துவிட்டே சென்றுவிடுவார்கள்.

இப்போதும் அப்படியே இருக்க பத்ரியும் இதை பார்த்துவிட்டு பாலாவிடம் வந்தான்.

“பாவம் மனுஷன், இந்த ரூமை க்ராஸ் பண்ணி போறதுனா கூட ஒளிஞ்சி ஒளிஞ்சி பார்த்துட்டு போறார். இதெல்லாம் அநியாயம் ண்ணா…” என்றான் பத்ரி.  

“இதெல்லாம் ஒரு ஜாலிக்கு. உனக்கு சொன்னா புரியாது…” என பத்ரியிடம் சொல்லியவன்,

“என்ன சொல்லு, நம்ம ஆளு அங்கிள் கிட்ட பேசினா எவ்வளோ டென்ஷன் இருந்தாலும் பறந்து போய்டும்…” என சிரிக்க,

“டென்ஷனா? உங்களுக்கா?…” பத்ரியின் பார்வையில் சற்றே சிரிப்பு மட்டுப்பட,

“ஹ்ம்ம், என்ன செய்ய? நம்ம பொழைப்பே அதுல தானே ஓடுது…” என்றான் பாலா.

“ண்ணா உங்க மொபைல் ரிங் ஆகுது…” பத்ரி சொல்லவும் திரும்பி பார்த்தவன்,

“நான் பார்க்கறேன். எனக்கு ஒரு ஜிஞ்சர் டீ சொல்லிடேன்…” என்றுவிட்டு உள்ளே சென்றான்.

மொபைலை எடுத்து பார்க்க அழைப்பு வானம் அறக்கட்டளை பவனிடம் இருந்து வந்திருந்தது.  அட்டன் செய்தவன்,

“பவன்…” என்றதும்,

“கிருஷ்ணா ஷக்தி மேம் பார்க்கனும்னு சொல்றாங்க…” என சொல்ல,

“இப்போவா?…”

“ஆமாம், ஜீவன்யா விஷயமா…”

“ஓகே, நான் வரேன்…” என சொல்லி வைத்துவிட்டான்.

ஒரு பெருமூச்சுடன் வேலைகளை எல்லாம் முடித்து முக்கியமானவற்றை பத்திரப்படுத்தியவன் கேஸ் பைல்ஸ், லேப்டாப்பையும் எடுத்து பேக்கில் வைத்து எடுத்துக்கொண்டவன் மொபைலில் நேரத்தை பார்த்தபடி கிளம்பினான்.   

Advertisement