Advertisement

மின்னல் – 6

          “என்னண்ணே எதாச்சும் முக்கியமான கேஸா?…” பாலா மிக தீவிரமாக பார்த்துக்கொண்டிருந்ததை கண்டு பத்ரி அவனிடத்தில் கேட்க,

“ஹ்ம்ம் ரொம்ப…” என்றபடி ஜீவாவின் மொபைலின் விவரங்களை எல்லாம் தனது பர்சனல் லேப்டாப்பில் சேகரித்துக்கொண்டு இருந்தான் பாலா.

“இந்த கேஸ் பத்தி எந்த விவரமும் சொல்லலையே நீங்க?…”

“நீ முதல்ல இந்த ப்யூச்சர்ஸ் கேஸ்ல கவனத்தை வை. அதை முடிச்சதும் இதை பத்தி பேசுவோம்…” சொல் அவனிடம் என்றாலும் பார்வை தன் முன்னடியில் இருந்த லேப்டாப்பில் இருந்தது பாலாவிற்கு.

ஜீவாவின் மொபைலில் பெரிதாய் வேறெந்த விவரங்களும் இல்லை இரண்டு அலைபேசி எண்ணும், ஒரு எண்ணில் இருந்து அனுப்பப்பட்டிருந்த ஒரு வீடியோவும் தவிர.

தீவிரபாவனையுடன் அவற்றை பார்த்தவனுக்கு மனது கனத்து போனது. அமைதியாய் வேறு இருக்கிறதா என தேடிக்கொண்டிருந்தான் அவன்.

ஓரளவு விஷயத்தை யூகித்துவிட்டான். ஆனால் உடனடியாக இதில் தான் எதுவும் செய்ய முடியாதே?

மேலும் வேறு உள்ளனவா என்றால் அவளின் ஜிமெயிலில் உள்ள விவரங்கள் எல்லாம் வெகுசாதாரணமகாவே இருந்தது.

சில புகைப்படங்கள், அவளுடைய படிப்பு விவரங்கள். அட்ரஸ் ப்ரூப் என்று இப்படித்தான் இருந்தது.

ஏதனும் அழித்திருப்பாளோ என ரெக்கவரி போட்டு பார்த்தாகிற்று. அந்த இரண்டு எண்ணும், அந்த வீடியோவும் மட்டுமே இருக்க அந்த எண் உறுத்திக்கொண்டு இருந்தது. தனக்கு தெரிந்த காவல்துறை அதிகாரியை தொடர்புகொண்டான் பாலா.

“ஹாய் ராம், ஹவ் ஆர் யூ…” என்று பார்மலாக பேச,

“என்ன விஷயம்ன்னு நேரா சொல்லு கிருஷ்ணா. சும்மா இந்த பார்மாலிட்டீஸ் வேண்டாம்…” என்றான் அவன்.

“ஹ்ம்ம், இல்லைன்னா உனக்கு எப்பவும் வேலை தான் என்னை விசாரிச்சியான்னு தண்ணிய போட்டு சலம்பல் பண்ணுவ. அதான் என்னத்துக்கு நீ கதறனும்னு முதல்ல குசலம் விசாரிச்சுட்டேன்…”

“அடேய் இதெல்லாம் அநியாயம், என்னைக்கோ ஒருநாள் ஒரு பேச்சுக்கு சொன்னா இப்படித்தான் பொட்டுன்னு போட்டு உடைப்பியோ? பக்கத்துல யாரும் இல்லையே?…”

“உண்மையை சொன்னேன். இல்லைன்னா மட்டும் நீ எப்டி இருப்பன்னு தெரியாதா எனக்கு?…” பாலாவின் நக்கல் சிரிப்பில்,

“அடங்குடா, நான் இங்க ஸ்டேஷன்ல இருக்கேன்…”

“நீ எங்க இருப்பன்னு தெரியாமலா கால் பண்ணேன்?…”

“நான் போனை வைக்கறேன். அப்பறமா…”

“நேர்ல வந்து கலாய்ன்னு சொல்ல வரியா? அவ்வளோ வெட்டி போல?…” பாலா பேச,

“என்ன விஷயம்ன்னு சொல்லித்தொலை…” என்றான் ராம் கடைசியாக.

“அப்படி வா, கூப்பிட்டா என்னன்னு கேட்கிறதை விட்டுட்டு ஓவரா பேசினா?…”

“யாரு நானு? மனசாட்சி இருக்கா உனக்கு? உன்கூட போய் சகவாசம் வச்சிட்டேன் பாரு. என்னை சொல்லனும்…”

“உன்னை யாருடா என்னை வச்சிக்க சொன்னா?…” பாலாவின் குரலில் ஏகத்திற்கும் விஷமம் வழிந்தது.

“ஏய் ச்சீ…”

“நான் சகவாசத்தை சொன்னேன். எப்ப பாரு இதே நினைப்பு. பேட் பெல்லோ…” அதற்கும் பாலா வம்பிழுத்து பேச,

“மனுஷனாடா நீ? என்னன்னு சொல்லித்தொலையேன். இங்க ஆளாளுக்கு என்னையே பார்க்கறாங்க…”

“ஓஹ் சைட்டா?…”

“நான் போனை வைக்கிறேன்…” ராமின் பொறுமை பறந்தது.

“ஓகே, நான் நேர்ல வந்து பேசறேன்…”

“ஆணியே…” என்று ராம் நிறுத்த,

“சொல்லித்தான் பாரேன்…” சவாலாக பேசினான் பாலா.

“என்ன காண்டுடா உனக்கு என் மேல? சொல்லாமகொள்ளாம எதையாச்சும் செஞ்சி தொலைச்சிட்டேனா?…”

“உன் வெடிங் டேக்கு விஷ் பண்ண கால் பண்ணா எங்க போன நீ?…”

“அய்யா சாமி, அது என் பொண்டாட்டி ப்ளான். லீவ் போடுங்கன்னதும் போட்டேன். கூட்டிட்டு மாமனார் வீட்டுக்கு போய்ட்டா. தெரியாம போய்ட்டேன்…” என்று சொல்லிக்கொண்டிருக்க மேலும் பாலா பேசும் முன் அவனின் எண்ணிற்கு இரண்டாம் அழைப்பு வந்துகொண்டு இருந்தது.

அழைத்தது ஜீவன்யா. எடுத்து பார்த்தவனின் இதழ்களில் குறுஞ்சிரிப்பு படர மீண்டும் ராமிடம் பேசியவன்,

“உனக்கு கொஞ்ச நேரத்துல கால் பன்றேன்…” என சொல்லி அவன் அழைக்க அழைக்க கட் செய்துவிட்டான்.

“இன்னைக்கு ராமண்ணாவா?…” பத்ரி சிரிக்க,

“வக்கீல்ன்னு ப்ரூவ் பண்ணாதடா. ஒட்டு கேட்டுட்டு இருக்க? எந்திச்சு வெளில போ…” என்றான் பாலா.

“இவ்வளோ நேரம் நான் வெளிலயா இருந்தேன்?…” என்றான் பத்ரி.

“இப்ப நீ போகத்தான் வேணும். போடா…” என்று சொல்ல மீண்டும் அழைப்பு வந்தது ஜீவன்யாவிடம் இருந்து.

“போயேன்டா…” என்றான் பத்ரியிடம்.

“ண்ணா…” அவன் சிரிப்புடன் பார்க்க,

“என்ன ண்ணா? போ போ…” என்று சொல்லி அழைப்பை துண்டித்துவிட்டு வீடியோ காலில் அழைத்தான் அவளுக்கு.

ஜீவா அதனை கட் செய்து சாதாரணமாக அழைக்க பாலாவின் முகத்தில் சுவாரஸியம் கூடியது.

“மேடம் பார்த்து பேச மாட்டாங்களோ?…” என்று வம்பிற்கென்றே மீண்டும் அவளுக்கு வீடியோவில் அழைக்க மெசேஜ் அனுப்பினாள்.

“வாய்ஸ் கால் அட்டன் பண்ணுங்க. நான் வீடியோ வரமாட்டேன்…” என்று அனுப்ப ஒரு தலையசைப்புடன் அவளுக்கு தானே வாய்ஸ் காலில் அழைத்தான்.

“ஹ்ம்ம் சொல்லு…” என பாலா கேட்கவும்,

“ஊருக்கு தான் உபதேசம். முன்னபின்ன தெரியாத பொண்ணுக்கு இப்படித்தான் வீடியோ கால் பண்ணுவீங்களா?…”

“உன்னை தான் எனக்கு தெரியுமே?…”

“என்ன?…”

“ஆமா எவ்வளவு உரிமையா எனக்கு பேர் எல்லாம் வச்சிருக்க? அப்பா தெரிஞ்ச பொண்ணு தானே?…” என விதண்டாவாதம் பேச எரிச்சலாகியது ஜீவாவிற்கு.

“என்ன சொல்ல? நீங்க தான் முக்கியமான விஷயம் பேசனும்னு சொன்னீங்க. என்னன்னு போன்ல சொல்றேன்னு. அதான் கேட்க கூப்பிட்டேன்…”

“ஓஹ் அதுவா?…”

“இங்க பாருங்க ஸார், இனிமே வீடியோ கால் பண்ணாதீங்க. நான் எனக்கு வேற போன் வாங்கிட்டு  இதை திருப்பி குடுத்திருவேன்…”

“ஏன்? இந்த போன் இருந்தா என்னவாம்?…” என்றான் இலகுவான குரலில்.

“ம்ஹூம், இது சரிவராது. எனக்கு வேண்டாம்…”

“அதுதான் ஏன்? உன் போனை நான் உடைச்சுட்டேன் தானே?…”

“அது தெரியாம தானே? நோ ப்ராப்ளம்…” விட்டால் போதும் என்பதை போல அவள் சொல்ல,

“ஆனா எனக்கு அது கில்டி பீல் தருதே….” என்றான் விடாமல்.

“ப்ச், நானே எதுவும் நினைக்கலைன்றேன். என்னால தானே உடைஞ்சது. ப்ளீஸ், பெருசு பண்ண வேண்டாம்…”  ஜீவா அவனை விட்டு விலகுவதில் தான் குறியாக இருந்தாள்.

“இப்போ உனக்கு என்ன பிரச்சனை? அந்த மொபைல் உன்னை என்ன பண்ணுச்சு?…”

“என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது. போதுமா? வேண்டாம்னா  விடுங்களேன்…” என படபடவென பொரிய,

“ஆஹாங்…” என்றவனின் குரலில் அத்தனை உல்லாசம்.

ஏனோ ஜீவாவின் பேச்சுக்களை வளர்த்து அவளுடன் வார்த்தையாடுவதில் தனி சந்தோஷம் தனக்குள் ஊற்றெடுப்பதை மனதார கண்ணுற்றான் பாலா.

“நான் உன்னை டிஸ்டர்ப் பன்றேனா ஜீவா?…” என்றவனின் சத்தம் அவளுள் ஆழ்ந்து ஒலிப்பதை போல இருக்க திக்கென்றானது ஜீவாவிற்கு.

“ஆமா, என்னோட நிம்மதியை கெடுக்கறீங்க. அதுல நீங்களும் சரி உங்க போனும் சரி. ஒண்ணுதான்…” என்ற அவளின் கோபம் பாலாவை தாக்க,

“என்னோட சாதாரண பேச்சும், செயலும் உன்னை ஏன் இவ்வளோ குழப்புது? நீ என்னை என்னனு நினைக்கிற ஜீவா?…” என்று மேலும் அவளை குழப்ப தான் முயன்றான்.   

அவன் எண்ணப்படி தான் ஜீவாவிற்குள்ளும் குழப்பம். இதெல்லாம் தன்னுடைய உருவகமா? தனக்கு மட்டும் தான் அப்படி தோன்றுகிறதோ? தன்னை வேவு பார்க்கிறானோ? என்று ஒருபக்கம் யோசித்தாலும் எதுவாகவும் இருந்துவிட்டு போகட்டும். வேண்டாம் என தோன்றியது.

“நீங்க என்னை இந்த பிரச்சனையில் இருந்து காப்பாத்த நினைக்க வேண்டாம். உங்ககிட்ட உதவி எதுவும் நான் கேட்கலை. அதனால இனி என் விஷயத்துல தலையிடாதீங்க…”

“நீ எந்த பிரச்சனையை சொல்ற ஜீவா?…” பாலா குறுக்கே கேள்வி கேட்க ஜீவாவிடம் படபடப்பு.

எதையும் உளறி வைத்துவிட்டோமோ என யோசித்தாள். இல்லையே என அவளின் வார்த்தைகளை மனது திருப்பி படிக்க,

“அதான் நான் நைட்ல வெளில போனேன்ல. அந்த பிரச்சனை தான். அதை தான் சொன்னேன்…” என தடுமாறினாள்.

“அப்போ அது பிரச்சனை தான் போல?…”  என பாலா பூடகமாக பேச,

“என்ன என்ன சொல்றீங்க?…”

“இல்லை நானும் அதை தான் சொன்னேன். நீ எந்த மீனிங்ல எடுத்து சொன்னன்னு எனக்கு புரியலை. அதான் யோசிக்கிறேன்…” என்று அவன் பொடி வைக்க ஜீவாவிற்கு தலைசுற்றியது.

“இல்லையே, பெருசா யோசிக்கிற அளவுக்கு எதுவும் இல்லை. நீங்க என்னை பத்தி எதுவும் யோசிக்க வேண்டாம்…” என்றவள்,

“நான் இங்க இருந்து போறதா இருந்தா கூட எனக்கு பிரச்சனை இல்லை. நீங்க ஏன் தலையிடறீங்கன்னு சொன்னேன். அதுவும் இதனால என் பேரும் தான் கெட்டு போகும்…”

Advertisement