Advertisement

அவனை அங்கே அந்த நேரம் எதிர்பாராதவள் அதிர்ந்து விழிக்க மிக இயல்பாக வந்து அவளுக்கெதிரே ஸ்டூலில் அமர்ந்தான்.

“இப்போ பரவாயில்லையா ஜீவா?…” என கேட்க,

“நீங்க எதுக்கு இப்போ வந்தீங்க?…”

“சும்மா உன்னை பார்த்தது நீ எப்படி இருக்கான்னு கேட்டுட்டு போக தான்…”

“நான் நல்லா இருக்கேன், கிளம்புங்க…” என்றாள் உடனே.

“கூல், எதுக்கு இவ்வளோ டென்ஷன்?…”

“நீங்க இங்க வந்திருக்கிறதை யாராவது பார்த்தா இன்னும் ஏதாவது பேசுவாங்க…”

“பேச என்ன இருக்கு? அதுவும் இன்னும் அப்படின்னா?…”

“ஐயோ என்னால உங்களுக்கு பதில் சொல்ல முடியலை ஸார். நேத்து நைட் நீங்க செஞ்சதுக்கே வினோ சிஸ்டர் பார்வையே சரியில்லை. நமுட்டு சிரிப்பாவே சிரிக்காங்க…” கடுப்புடன் சொல்ல,

“ஓஹ் அதுவா…” என்றான் இலகுவாக.

“இப்ப நீங்க எதுக்கு வந்தீங்க?…”

“இதை குடுத்துட்டு போக தான். உன்னோட போன் தான்…” என சொல்ல,

“இல்லையே இது புதுசு மாதிரி இருக்கு…” வாங்க மறுத்தாள் அவன் நீட்டியதை.

“நிஜமாவே உனக்கு தான்…”

“எனக்கு சரி. ஆனா என்னோடதுன்னு சொல்லாதீங்க…”

“ஓகே, உனக்கு தான். இது போதுமா?…”

“வேண்டாம்…”

“ஏன்?…”

“என்ன ஏன்? எனக்கு தான் என் போன் இருக்கே? நீங்க ஏன் இதை எல்லாம் செய்யறீங்க?…”

“எல்லாம் ஒரு பிராயச்சித்தம்ன்னு வச்சுக்கோ…”

“என்ன?…”

“நேத்து நைட் உன்னோட போன் உடைஞ்சிருச்சு. அதான் அதுக்கு பதிலா கொண்டு வந்தேன்…”

“என்னோட போன் உடைஞ்சிருச்சா?…” என தனது ஹேன்ட் பேக்கை தேட,

“நானே சொல்றேனே. நேத்து நீ மயங்கி விழுந்ததும் நான்தானே தூக்கினேன். அந்நேரம் போன் கீழே விழுந்திருச்சு. உன்னையும் கைல வச்சுட்டு போனை எடுக்க முடியலை. காலால யாரும் எடுத்திராம இருக்க ஓரம் தள்ளிவிட்டேன். திரும்ப அதை எடுக்க போறப்போ பைக் ஏதோ ஏறிருக்கும் போல….”

“எவ்வளோ அசால்ட்டா சொல்றீங்க நீங்க…”

“அதான் எனக்கே கில்டியா இருந்துச்சு. புது போன் வாங்கிட்டு வந்துட்டேன்…”

“இதைத்தான் அலட்சியம்ன்னு சொல்றேன். எனக்கு இது வேண்டாம். என்னோட போன் குடுங்க. நான் சர்வீஸ் குடுத்து வாங்கிப்பேன்…”

“அட சொன்னா புரியாதா உனக்கு? உடைஞ்சு சுக்கல் சுக்கலா நொறுங்கிருச்சு. நானும் அதை பார்த்துட்டு ஒன்னும் வேலைக்காகாதுன்னு தான் வீசி எறிஞ்சுட்டேன்…”

“என் போனை நீங்க ஏன் தூக்கி வீசினீங்க?…”

“அதான் வீசிட்டேனே? என்ன செய்ய? அதான் புது சிம்கார்ட், போனோட இருக்கு…” என்று அதனை கட்டிலில் வைக்க கீழே தள்ளி விட கூட முடியாமல் அவனை முறைத்து பார்த்தாள்.

“ஓகே, இத்தனை ஹாட்டா பேச வேண்டாம். கொஞ்சம் கூலா பேசுவோமே? சாப்ட்டியா?…” என கேட்டவனின் மேல் அத்தனை கோபம் வந்தது.

“என்னை நீங்க எப்பவும் என்னை இப்படி ஒருமையில பேச மாட்டீங்க தானே?…” என கூர்மையுடன் அவனிடம் கேட்க,

“அப்படியா? ஞாபகம் இல்லையே?…” என்றான் புன்னகை முகமாய்.

“இல்லை என்னவோ சரியில்லை…” என அவள் சொல்ல,

“இதையே நானும் சொல்லலாமே? என்னவோ சரியில்லை. சொல்லு எதுக்காக நைட் அங்க போன?…” என்றதும் நெஞ்சுக்குழி வற்றி போனது அவனின் கேள்வியிலும், சற்றென்று மாறிவிட்ட முகபாவனையிலும்.

“நேத்தே சொன்னேன் தானே?…”

“ஓஹ், பெட்டரா நான் ஒரு பொய் சொல்லி  தரவா? இங்க கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லறதுக்கு…”

“பொய்யா?…”

“எஸ், நீ இதை சொன்னா நம்ப இங்க யாருமே சின்ன குழந்தைங்க கிடையாது. வானம் குழுமத்தை அத்தனை ஈசியா நீ நினைச்சிருக்க வேண்டாம் ஜீவா…”

“நான் எதுவும் நினைக்கலை. நீங்க ஏன் என்னை குற்றவாளியை கேட்கிறது போல கேட்கறீங்க?…” அவளின் படபடப்பு அவனை நிதானிக்க செய்தது.

“வெய்ட், நேத்துல இருந்தே நீ ஏன் அந்த ஆங்கிள்லையே யோசிக்கிற? இன்வெஸ்டிகேஷன், குற்றவாளி ஹ்ம்ம் எனக்கு இது எதுவும் சரியாப்படலை…”

ஜீவாவின் முகம் வெளிறிப்போய் இருக்க தலை சுற்றியது அவளுக்கு இதிலிருந்து எப்படி மீள போகிறோம் என்று.

“ஓகே, ரிலாக்ஸ். ஒன்னும் பட்டபட வேண்டாம். இந்த மொபைல்ல என்னோட நம்பர் இருக்கு. பர்ஸ்ட் நேம் என்னோடது தான். உனக்கு எப்போ எந்த ஹெல்ப் வேணும்னாலும் என்னை காண்டேக்ட் பண்ணலாம்…” என்று அவன் எழுந்துகொள்ள நிமிர்ந்து பார்த்தவள்,

“என்னோட போன் நிஜமா உங்ககிட்ட இல்லையா?…” என்றாள் பாவமாக.

“எத்தனைமுறை கேட்ப? ரெஸ்ட் எடு. நாளைக்கு வந்து பார்க்கறேன் உன்னை…”

“இல்லை வராதீங்க…” என்று வேகமாய் சொல்ல அவன் முகத்தில் மறைந்திருந்த புன்னகை மீண்டது.

“நீ இனிமே இதை சொல்ல முடியாது ஜீவா. நான் வருவேன்…”

“தென்றல் பயப்படுவா…”

“உனக்கு பயமில்லைல, அது போதும்…”

“ஏன் உங்களுக்கு புரிஞ்சுக்க முடியலை? நாங்களே பல கஷ்டத்துக்கு அப்பறம் இங்க வந்திருக்கோம். திரும்ப உங்களால எங்களுக்கு ஒரு பேச்சு. நிச்சயம் தாங்க முடியாது. போதும். விட்டுடுங்க…” என கை கூப்பி அவள் சொல்ல அவளருகே சென்று அவள் கையை பிடித்தான்.

“ப்ச், விடுங்க விடுங்க ஸார்…” என உருவிக்கொள்ள,

“ஷ்ஷ் கத்தாத…” என்றவன் முணுமுணுப்பில் மௌனமாகிவிட அவளின் கையில் போட்டிருந்த பேண்டேய்டை எடுத்துவிட்டு வேறு ஒன்றை பிரித்து ஒட்டி வைத்தான்.

“வலிக்குதா?…” மென்மையாக கேட்க அவனின் பார்வையும் கனிவும் ஜீவாவை அமைதியாக்கியது.

“ஹ்ம்ம், கொஞ்சம்…” முனங்கலாக அவள் குரல்.

“வேற எங்க அடி பட்டிருக்கு? உன்னை ஹாஸ்பிடல் போக சொன்னேனே? போகலையா?…” என்றதற்கு பதிலில்லை.

“யாரையாவது வர சொல்றேன். வீல் சேர் கொண்டுவருவாங்க. போய் பார்த்துட்டு வா…”

“ம்ஹூம் வேண்டாம். நான் போகலை…”

“உன்னை அங்க யாரும் எந்த கேள்வியும் கேட்க மாட்டாங்க…” என சொல்ல ஆச்சர்யமாக பார்த்தாள்.

“ஏன்? எப்படி? நான் நேத்து நைட் வெளில போனதுக்கு…”

“அது நானே பேசி மேனேஜ் பண்ணிட்டேன். உன்னை கேட்க மாட்டாங்க. நான் அந்த ரெஸ்பான்ஸிபிலிட்டியை ஏத்துக்கிட்டேன்…” என்றவனை நம்ப முடியவில்லை.

“நீங்களா? அது எப்படி? இல்லை என்னை கேட்காம இருக்க மாட்டாங்களே?…” என்றாள் இன்னும்.

“அட நம்பும்மா, நிஜமாதான். யாராச்சும் என்னவும் கேட்டா நான் சொன்னது உண்மைன்னு சொல்லிரு…”

“நீங்க என்ன சொன்னீங்க?…”

இப்போது பாலாவின் முகத்தில் வந்துவிட்டிருந்த குறும்பில் சந்தேகத்துடன் அவனை பார்த்தாள் ஜீவா.

“நான் சொல்லிருவேன். ஆனா நீ தான் குதிப்ப…”

“என்னவோ ஏடாகூடமா சொல்லிருக்கீங்க. என்ன பண்ணுனீங்க?…”

“உன்னை கேட்காம இருந்தா போதாதா? இதெல்லாம் எதுக்கு?…”

“இல்லை எனக்கு தெரியனும். இப்ப சொல்ல போறீங்களா இல்லையா?…”

“நீ என்னை மீட் பண்ண தான் எகிறி குதிச்சு வந்தன்னு சொன்னேன். எல்லாரும் ஆஃப்…” என்று அவன் படக்கென்று சொல்லவும் ஜீவாவின் விழிகளில் கனல் தெறித்தது கோபத்தில்.

“உங்களுக்கு எதாச்சும் மூளையில இருக்கா? நான் எதுக்கு பயந்தேனோ அதை தான் சொல்லிட்டு வந்திருக்கீங்க. இனி ஹாஸ்பிட்டல் ஃபுல்லா கிண்டல் பண்ணுவாங்க. இத்தனை நாள் நான் வாங்கியிருந்த பேர் எல்லாம் போச்சு…”

விட்டால் எழுந்து வந்து அவனின் சட்டையை பிடித்திருப்பாள். அத்தனை கோபம் அவளிடத்தில் அவன் மேல்.

“தீயின்னா உடனே சுட்டுடுமா என்ன? இதெல்லாம் ஒன்னும் நினைக்காம நீ ரெஸ்ட் எடு. அப்பறம் ப்ரீயாகிட்டா கால் பண்ணு. ஒரு முக்கியமான விஷயம் பேசனும்…” என்றவன் கிளம்பிவிட,

“என்ன விஷயம்? என்னன்னு சொல்லிட்டு போங்க…”

“அதை போன் பன்றப்போ சொல்றேன். இப்ப நீ ரிலாக்ஸா இரு…” என்று சொல்லிவிட்டு அவள் அழைக்க அழைக்க காதில் வாங்காதவன் போல கதவை சாற்றிவிட்டு சென்றுவிட்டான்.

ஜீவா தான் இயலாமையில் தன் தலையில் கை வைத்தபடி அப்படியே அமர்ந்துவிட்டாள்.

தன்னிடம் யாரும் எதையும் கேட்க போவதில்லை என்பதில் நிம்மதியாவதா? இல்லை இனி தன்னை மற்றவர்கள் பார்க்க போகும் பார்வையே வேறு என்பதில் நொந்துகொள்வதா என தவித்து போனாள்.

‘என்னை போய் எப்படி இப்படி சொல்ல தோணுச்சு?’ என ஒருமனம் கேட்க,

‘போலீஸ், வக்கீல் இந்த சட்டம் எல்லாம் தனக்கொரு காரியம் ஆகனும்னா என்ன வேணா செய்யும்’ என இன்னொரு மனம் இடித்துரைத்தது அவள் அறிந்த உண்மையை.

அங்கே பாலாவோ ஜீவாவிடம் இருந்து எடுத்து வைத்திருந்த அவளின் மொபைலில் சமீபமாய் வந்திருந்த அழைப்புகளை பார்க்க ஆரம்பித்திருந்தான்.

Advertisement