Advertisement

மின்னல் கொஞ்சும் தாழம்பூவே 

மின்னல் – 1

          நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வந்தவன் தனது கருப்பு கோர்ட்டை லேசாய் தூக்கிவிட்டு மீண்டும் சரியாய் போட்டுக்கொண்டான். 

அவன் பாலமுரளிகிருஷ்ணா. கிரிமினல் லா முடித்தவன். வழக்குகளின் தன்மையை சட்டென்று கையாளும் திறமை அவனிடம் இயல்பிலேயே இருந்தது. 

அப்போதுதான் வழக்கு முடிந்து வெளியே வந்திருக்க அடுத்த கேஸ் நடைபெறுவதற்கான இடைவேளை நேரம் அது. 

தனது ஜூனியர் பத்ரியிடம் பேசிக்கொண்டே மறுநாளைய வழக்கை பற்றிய சிறு குறிப்புகளை சொல்லி கேட்டபடி நடந்து வந்தான். 

வழக்கு முடிந்து குற்றவாளி என நிரூபணம் ஆனவனை சிறைசாலைக்கு அழைத்து செல்ல அவனை இழுத்துக்கொண்டு காவலதிகாரிகள் அவர்களின் வாகனம் நோக்கி வந்துகொண்டிருந்தார்கள்.

“டேய்  சிலுப்பாம ஒழுங்கா வரமாட்ட?…” என காவலர் சத்தம் போட,

“என்னா போலீசு, ஓவர் ரவுசா இருக்கு. என்னைய புடிச்சு உள்ள போட்டதும் எகத்தாளம் காட்டுதியோ?…” அந்த குற்றவாளி தனது கறை படிந்த பற்களை நறநறவென கடித்தான். 

“ஆமா காட்டுதாங்க எகத்தாளம்? நீ கண்ட. கம்முன்னு வரியா இல்ல இங்கயே நாலு சாத்து சாத்தவா?…” என பினந்தலையில் பொளீர் என்று ஒரு அடி வைத்து இழுத்து செல்ல,

காவல்துறை வாகனத்தில் ஏற்றும் முன்னர் அங்கே நின்று பேசிக்கொண்டிருந்த ஆளவந்தானை பார்த்து முறைத்தான் அந்த குற்றவாளி. வேகமாய் திமிறிக்கொண்டு அவரருகே சென்றவன், 

“நல்லா கத்தையா காசையும் வாங்கிட்டு கேஸை கோட்டை விட்டுட்டீயல. பெயில் கிடைச்சு வெளில வந்தேன்…” என்று மிரட்ட, 

“இங்க பாரு செந்தூரம், நானும் எவ்வளவோ முயற்சி பண்ணினேன். ஆனாலும் முடியலை. எதிர்தரப்புல வாதாடினது லாயர் பாலமுரளிகிருஷ்ணன். அவர் இதுல ஆஜர் ஆவாருன்னு நானே எதிர்பார்க்கலை…” 

பொது இடத்தில் என பேசுவதால் பாலமுரளிகிருஷ்ணன் பெயருக்கு அவர் மரியாதை தரவேண்டி இருந்தது.

“யோவ் சும்மா சப்பைக்கட்டு காட்டாதீரும். நீர் படிச்ச அதே வக்கீல்ட்ட தானே அவனும் படிச்சான். அந்தாள் மூளையில உன் வயசுக்கேத்த அனுபவத்தில இத்துனூண்டு சரக்கு கூட ஏறலைன்னா என்னத்த படிச்சு கிழிச்சீரு?…” 

கொஞ்சமும் பயமற்று அத்தனை பேரின் முன்னிலையிலும்  வக்கீலை மிரட்ட காவல்துறை பணியாளர்கள் அடக்கியும் அடங்கவில்லை அவன். 

ஆனால் கேட்டுக்கொண்டிருந்த ஆளவந்தானின் முகம் தான் அவமானத்தில் சிறுத்து போனது.

“என்னய்யா தலைய குனிஞ்சி நின்னா ஆச்சா? பத்து வருஷம், பத்து வருஷம்லே. என்னால வெளில வர முடியுமா?…” 

“மேல் கோர்ட்டுக்கு அப்பீல் செய்யலாம். நான் முயற்சி பன்றேன். அங்க கண்டிப்பா நான் உன்னை வெளில எடுத்துடறேன்…” 

“கிழிச்சீரு, என் வாயில நல்லா வருது போம்…” என்று அவன் கத்தி பேசி இன்னும் அவ்விடமே கூட்டம் கூட அவனை இழுத்து சென்று வண்டியில் ஏற்றினார்கள். 

இன்னும் ஐந்து நிமிடம் விட்டிருந்தால் ஆளவந்தானின் கழுத்தை பிடித்து நிலத்தில் தள்ளி உருண்டிருப்பன் செந்தூரம். அத்தனை ஆக்ரோஷம் அவரின் மேல்.

“சார் நீங்க உள்ள போங்க…” என இன்னொரு லாயர் சொல்ல,

“எனக்கு தெரியும்…” என கோபத்துடன் சொல்லிவிட்டு நடக்க செல்லும் வழியில் பாலமுரளிகிருஷ்ணா நிற்பதை கவனித்து அவனிடம் சென்றார் ஆளவந்தான்.

“கிருஷ்ணா…” கோபத்துடன் அழைக்க திரும்பி பார்த்தவன்,

“அட நம்ம ஆளு அங்கிள்…” அவரை நோக்கி தன் கையை நீட்டினான் பாலமுரளிகிருஷ்ணா.

“என்ன நக்கலா?…” என கோபத்துடன் அவனை கேட்க,

“அப்படியா தெரியுது?…” என தாடையை தடவியவன் தன் ஜூனியர் பத்ரியிடம் திரும்பி பார்த்து கேட்டான். 

“கிருஷ்ணா…” 

“எஸ் அங்கிள்…” என்று அவன் அட்டென்ஷனில் நிற்க இன்னும் டென்ஷன் ஆனது ஆளவந்தானுக்கு.

“இது அரங்கநாதன் ஸார் எனக்கு குடுத்த அசைன்மென்ட். அவர் பிஸி, அவரால எடுத்து நடத்த முடியாதுன்னு என்னை நடத்த சொல்லி ஆடர் பண்ணின கேஸ்…”

“அட சும்மா தான் கேஸ்ல ஆஜரா நீங்க? இது எனக்கு தெரியாது பாருங்க. ச்சு, ச்சு. அப்ப வக்கீல் பீஸ்?…” 

“கிருஷ்ணா…” பல்லை கடித்தார் ஆளவந்தான். 

“உங்களுக்கு பீஸ் கிடைச்சதோ இல்லையோன்ற எண்ணத்துல கேட்டுட்டேன். ஓகே ஓகே. சொல்லுங்க…” என்றான். 

“ம்ஹூம், இது சரியில்லை. எதுக்கு இப்படி பன்ற நீ? தேவை இல்லாம அரங்கநாதனை பகைச்சுக்கிட்டே இருக்க. இது உனக்கு நல்லதில்லை கிருஷ்ணா…”

“எனக்கு எது நல்லது எது கெட்டதுன்னு நல்லா தெரியும் ஆளவந்தான் அங்கிள். ஆனா உங்களுக்கு தான் என்னை இன்னும் முழுசா தெரியலை…” 

அவனின் பேச்சில் ஒருநொடி தன்னை நிதானித்தார் ஆளவந்தான். உடனே தனது முகபாவனையை மாற்றிவிட்டவர் அவனை பார்த்து புன்னகைத்தார்.

“நீ ஏன் கிருஷ்ணா இப்படி இருக்க? நல்ல திறமை இருக்குது. வார்த்தை ஜாலம் இருக்குது. உன் வயசுக்கு நல்லா சம்பாத்தியம் செய்யலாம். இன்னும் வசதியா வாழலாம். ஆனா…” 

“பார்த்தீங்களா? நீங்க உங்க சம்பளம் பத்தி கேட்டதும் முகத்தை சுண்டிட்டீங்க. இப்ப என்னோட வாழ்க்கையை பத்தி நீங்க பேசறீங்க. நான் எல்லாம் சுண்டிட்டு நிக்கமாட்டேன். சுண்டத்தான் வைப்பேன்…” 

“உன் மேல ஒரு அக்கறையில தான் சொன்னேன்…” 

“இந்த புளிப்பு காட்டற வேலை வேண்டாங்கறேன் ஆளு…”

“நிஜமாவே எனக்கு உன் மேல அக்கறை தான்ப்பா. இப்ப உன்கிட்ட கேஸ்ல தோத்துட்டேன்ற ஈகோ இல்லாம நானே வந்து பேசறேன் தானே? நான் பார்க்க வளர்ந்து வந்தவன் நீ.  என்னை நீ புரிஞ்சுக்கவே மாட்டேன்றியே?…” 

“அச்சோ, நான் தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேனா? மை காட். சோ சேட், சோ சேட்…” என்று தலையில் கை வைத்து சோகம் போல சொல்லியவன், 

“இப்ப நான் கிளம்பறேன். இது எனக்கு அவுட்டிங் டைம். அதனால நாளைக்கு நீங்க ப்ரீயா இருக்கும் போது சொல்லுங்களேன். நாம ஒரு காபி ஷாப்ல உட்கார்ந்து விலாவரியா பேசி ரெண்டுபேரும் ஒருத்தரை ஒருத்தர் நல்லா  புரிஞ்சுக்குவோம்…” என்றான் சிரித்தபடி.

“கிருஷ்ணா…” பல்லை கடித்தார் ஆளவந்தான். 

“அப்பறம் ஒரு முக்கியமான விஷயம். அடுத்த கேஸ்ல எப்ப ஆஜராகறீங்கன்னு நீங்களே சொல்லிவிட்டா எனக்கு வசதியா போய்டும். இல்லைன்னா நானே தேடி அலைஞ்சு திரிஞ்சு கடைசி நேரத்துல கேஸ் எடுக்க வேண்டியதா இருக்கும். சில பாய்ன்ட்ஸ் எல்லாம் சொல்ல முடியாம போகுதுல?…” 

“கிருஷ்ணா இப்ப நீ என்னை ரொம்ப அவமானப்படுத்தற?…”

“பத்ரி, நான் சொல்லலை. ஆளு அங்கிள் அப்டியே கற்பூரம் அங்கிள்…” என சொல்லிவிட்டு,

“அடுத்த கேஸ்ல சந்திப்போமா?…” என சிரித்துக்கொண்டே சொல்லியவன் தனது மேல் அங்கியை கழற்றி  கையில் வைத்துக்கொண்டு அவ்விடம் விட்டு நகர ஆளவந்தானுக்கு கோபம் கூடியது. 

‘எத்தனை பேசினாலும் மடங்கமாட்டேன்னு இருக்கானே? இவனை எங்க சொல்லி மடக்கனுமோ அங்க சொல்றேன்’ என தானும் கிளம்பினார் அரங்கநாதன் வீட்டிற்கு.

டெல்லி வரை புகழ்பெற்ற கிரிமினல் லாயர் அரங்கநாதனை தெரியாதோர் எவருமில்லை. 

அத்தனை செல்வாக்கு மிகுந்தவர். அவர் ஒரு வழக்கை எடுத்து நடத்துகிறார் என்றால் நிச்சயம் அவர் பக்கம் தான் ஜெயிக்கும். அப்படி ஒரு பெயரை பெற்றிருப்பவர். 

அவரிடம் ஜூனியராக சேர்ந்து சட்டத்தின் அத்தனை நீக்கு போக்குகளையும் கற்று தேர்ந்தவன் பாலமுரளிகிருஷ்ணன்.

தனது வாழ்க்கையின் முக்கிய முடிவை சிறுவயதிலேயே யோசித்து தேர்ந்தெடுத்தவன். 

பதிமூன்று வயதிலேயே தனக்கெது நல்லது என்ற தெளிவான முடிவெடுத்து தன்னை தானே செதுக்கிக்கொண்டவன். செய்யும் தொழிலுக்கு நேர்மையாக இருப்பவன். 

அரங்கநாதனின் திறமைக்கு சவாலாக இருப்பவன். ஆனால் அந்த மிதப்பும், திமிரும் என்றும் அவனிடத்தில் இருந்ததில்லை. 

இபோதும் அரங்கநாதன் வா என்று சொன்னால் உடனே சென்று நிற்கும் சிறந்த சிஷ்யன். 

ஆனால் வழக்கு என்று வந்துவிட்டால் அவரை எதிர்த்து வாதாடவும் தயங்கமாட்டான் பாலமுரளிகிருஷ்ணன்.

சமீபமாக இருவருக்குள்ளும் உரசல். கிரிமினல் லா படித்தவன் அதை கரைத்து குடித்தவரிடம் பயிற்சி பெற்றது அவரை போல வாழ அல்ல. 

அதனை கொண்டு தன்னால் முடிந்தவற்றை செய்யவே. அதை தற்போது வெற்றிகரமாக செயலாற்றியும் வருகிறான். 

அரங்கநாதன் அழைத்து பேசியும் அவனிடத்தில் பெரிதாய் எந்த மாற்றமும் இல்லை. 

மீண்டும் ஆளவந்தான் அரங்கநாதனை தேடி சென்றார். அவர் செல்லும் முன் வழக்கை பற்றிய தீர்ப்பு அரங்கநாதனை எட்டியிருந்தது.

“ஸார்…” கதவை தட்டிவிட்டு அரங்கநாதன் அழைப்பிற்கென காத்திருக்க ஐந்து நிமிடங்கள் கழித்தே உள்ளே அவரை அனுமதித்தார். 

“உட்கார் ஆளவந்தான்…” என்றதும், 

“ஸாரி சார். என்னால இதுல…” 

“ஹ்ம்ம், எனக்கு ஜட்ஜ்மென்ட்டை பாஸ் பண்ணிட்டாங்க. நீ எதையும் விளக்கனும்னு தேவை இல்லை…” 

“நீங்க இதுக்கு ஒரு முடிவெடுக்கனும் ஸார். அவன் ஆட்டம் ரொம்ப அதிகமா போகுது…” 

“இப்படி சொல்ல உங்களுக்கு வெக்கமா இல்லையா?…” கோபத்துடன் அரங்கநாதன் பேச ஆளவந்தான் மௌனமானார்.

“சின்ன பையன் அவன், அவன்கிட்ட தோத்துட்டு வந்து இருக்கீங்க? அதுவும் என்னோட கேஸ். நான் உங்களுக்கு அனுப்பினது…” 

ஆளவந்தானுக்கு இதற்கு பதில் சொல்ல ஆசை தான். ‘உங்களால் மட்டும் அவனை தோற்கடிக்க முடிந்ததா?’ என கேட்டுவிட நாடி நரம்பெங்கும் துடித்தது.

ஆனால் கேட்கத்தான் முடியவில்லை. கேட்டுவிட்டு இந்த தொழிலில் தன்னால் நீள முடியுமா? 

அரங்கநாதனின் பின்புலம் யாதென்று தெரிந்திருந்த ஆளவந்தான் வந்த வார்த்தைகளை துவங்கிய இடத்திற்கே திருப்பி அனுப்பினர்.

“ஓகே ஸார், ஆனா நீங்களாவது சொல்லலாமே? அவனை கூப்பிட்டு பேசுங்க. என்னதான் பிரச்சனைன்னு கேளுங்க…” 

ஆளவந்தான் சொல்லிவிட்டார் தான். ஆனால் அரங்கநாதனால் சட்டென அதற்கு சம்மதம் தெரிவிக்க முடியவில்லை. 

கண்ணாடி தடுப்பை தாண்டி வெளியே நின்றிருந்த தனக்கென்ற ஜூனியர் பட்டாளத்தை திரும்பி பார்த்தார். 

இதற்கு முன்பும் தன்னிடம் பயின்றிருக்கிறார்கள். பாலமுரளிகிருஷ்ணன் சென்ற பின்னும் தன்னிடம் பயின்றுகொண்டு இருக்கிறார்கள். 

ஆனால் அவனை போன்ற ஒருவனை நிச்சயம் அவர் சந்தித்ததில்லை. ஒரு ஆசானாய் அதில் எக்கச்சக்க பெருமை இருந்தாலும் அந்த தங்க ஊசி சமீபமாய் தன் கண்ணை பதம் பார்த்துக்கொண்டிருக்க அதை தூர எறிந்துவிட்டால் என்ன என்று தான் நினைத்தார். 

ஏற்கனவே ஒருமுறை அவனை அழைத்து பேசியும் ஆகிற்று. பதில் எதுவும் சொன்னால் கூட சரி. அவன் எதையும் கவனிக்காததை போலவே பேசி சென்றுவிட்டான். 

முன்பும் சரி, இப்பொழுதும் சரி அவனிடம் பிடிக்காத ஒன்று உண்டென்றால் அந்த திமிர்த்தனம். 

அரங்கநாதனுக்கு தெரியும், தான் என்பதால் ஓரளவு அடக்கி வாசிக்கிறான். வேறு யாருமென்றல் என யோசிக்க முன்னால் அமர்ந்திருந்த ஆளவந்தானின் முகம் அதனை அப்பட்டமாய் காட்டியது. 

“எவ்வளவு நக்கல் பேசறான் தெரியுமா? என்னை போய் காபி ஷாப்க்கு வான்னு கூப்பிடறான். நான் என்ன வயசு பொண்ணா? இதுல விலாவரியா பேசி புரிஞ்சுக்கனுமாம். எனக்கு தேவைதான்…” 

அரங்கநாதனுக்கு கோபம் வந்தாலும் உள்ளுக்குள் ஒரு சிரிப்பு வேறு வரத்தான் செய்தது. 

அவனின் பேச்சுக்களை அருகில் இருந்து கவனித்திருப்பவர் ஆகிற்றே. ஆக்ரோஷமாக வாதாடும் நேரம் கூட சிறிது நக்கலை வேண்டுமென்றே தூவிவிட்டு செல்பவன். 

“சரி நான் பேசறேன்…” என்றார் அரங்கநாதன். 

தனது மொபைலை எடுத்து பாலாவுக்கு அழைக்க அவன் உடனே அழைப்பை ஏற்றுவிட்டான். 

“ஆபீஸ்க்கா? வீட்டுக்கா?…” எடுத்ததும் அவன் கேட்க அரங்கநாதனிடம் மௌனம். 

“ஓகே, டைம் என்ன?…” என தனது வாட்சை பார்த்தவன், 

“ஆபீஸ்க்கே வரேன்…” என சொல்லி வைத்துவிட்டான். 

“என்ன ஸார் போன் எடுக்கலையா?…” என்றார் ஆளவந்தான். பின் அவராகவே, 

“எனக்கு தெரியும், உங்க மேல கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்யுது. கூப்பிட்டா திட்டுவீங்கன்னு தான் எடுக்கலை. அவன் கிரகம் புடிச்சவன் ஸார்…” என சொல்ல,

“ஆளவந்தான்…” என பல்லை கடித்தார்.

“நான் போன் பன்றேன் சார்…” என தனது மொபைலை எடுக்க,

“அவன் இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வந்திருவான். வெளில வெய்ட் பண்ணுங்க…” என்றார். 

Advertisement