மின்சார சம்சாரமே -18

 

அத்தியாயம் -18

 

சபரியும் இன்னொரு பெண்ணும் இந்த நேரத்தில் இங்கு வந்து நிற்பதை காணவும் பகீர் எனதான் கபிலனுக்கு இருந்தது.

 

“உள்ள கூப்பிடாம இங்கேயே நிக்க வச்சிருக்கீங்களே மாமா?” சபரி கேட்கவும், வழி விட்டு உள்ளே வரும் படி தலையை மட்டும் அசைத்தான் கபிலன்.

 

அந்த பெண்ணுக்கு ஓய்வறை எங்கே இருக்கிறது என காண்பித்து அனுப்பிய சபரி, இன்னும் திகைப்பிலிருந்து விடுபடாத மாமனின் கையை பிடித்துக்கொண்டு, “உங்களை நம்பி அழைச்சிட்டு வந்திட்டேன், நீங்கதான் ஹெல்ப் பண்ணனும் மாமா” என்றான்.

 

“என்ன வயசு உனக்கு? இன்னும் படிப்பை கூட முடிக்காம… தப்பு சபரி” என்றான் கபிலன்.

 

“ஐயோ மாமா! நாங்க ஓடி வந்திட்டோம்னு நினைச்சீங்களா? லவ் எல்லாம் இல்லை மாமா. நாங்க ஃபிரெண்ட்ஸ்” என சொல்லி, கபிலனின் வயிற்றை குளிர செய்தான் சபரி.

 

அந்த பெண்ணின் பெயர் ரம்யா, இவனுடைய வகுப்புதான். அவளுடைய ஒன்று விட்ட மாமா மகன் ஜீவாவை விரும்புகிறாளாம். அவள் மீதும் தவறில்லை, சிறு வயதிலிருந்து அவனுக்குதான் திருமணம் செய்து வைக்க போகிறோம் என பெரியவர்கள் சொல்லி சொல்லியே இருவருக்கும் நேசம் உண்டாக செய்து விட்டனர்.

 

இப்போது ஏதோ குடும்பத் தகராறு ஏற்பட்டு இரு வீட்டிலும் பகைமை பாராட்டி, இவர்களுக்கு திருமணம் நடத்தி வைக்க மறுக்கிறார்களாம்.

 

அந்த பையன் ஜீவா இராணுவத்தில் பணி புரிகிறனாம். இப்போது விடுப்பு கிடைக்கவில்லையாம். ஜீவா வந்தால் மகள் அவனுடன் சென்று விடுவாள் என பயந்து, படிக்கும் பெண்ணுக்கு திருமண ஏற்பாடு செய்து விட்டார்களாம்.

 

ஜீவாவின் வீட்டிலும் இவர்களின் காதலுக்கு பலத்த எதிர்ப்பு என்பதால் அவளால் அங்கும் செல்ல முடியவில்லை, ஜீவா அடுத்த மாதம் விடுப்பில் வந்து விடுவானாம், அதுவரை கட்டாயத் திருமணதிலிருந்து தப்பிக்க வழி தெரியாமல் வகுப்பில் அமர்ந்து அழுதிருக்கிறாள்.

 

எங்கேயாவது சென்று விடு என சபரிதான் யோசனை கொடுத்திருக்கிறான்,  ஆனால் எங்கு செல்வது என தெரியவில்லை. தோழிக்கு உதவி செய்கிறேன் என இங்கு அழைத்து வந்து விட்டான்.

 

“நான் என்ன பண்ண முடியும் சபரி? நான் எம் ஜி ஆர், ரஜினிலாம் இல்லைடா. நீயே வேற ஏதாவது செய்ய முடியுமான்னு பாரு” என கபிலன் சொல்லிக் கொண்டிருக்க, பாவமான தோற்றத்துடன் ஒரு ஓரமாக நின்றிருந்தாள் ரம்யா.

 

“என் மாமா சென்னைல பெரிய ஆளா இருக்காரு, வேணுங்கிறது செய்வாருன்னு நம்பிக்கையா சொல்லி அழைச்சிட்டு வந்திருக்கேன், நீங்க ரியல் ஹீரோ மாமா. ஒரு ஒரே ஒரு மாசம் மட்டும் இவ தங்க ஏதாவது அரேஞ் பண்ணி தாங்க மாமா” கபிலனின் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டு கெஞ்சினான் சபரி.

 

அந்தப் பெண்ணும் கண்ணீர் விட்டுக் கொண்டே, “அவரை என் ஹஸ்பண்ட்டா நினைச்சுதான் வாழுறேன் அண்ணா, இப்போ திடீர்னு வேற ஒருத்தவரை கட்டி வைக்க பார்க்கிறாங்க. அப்படி ஏதாவது நடந்தா செத்தே போயிடுவேன் ண்ணா. அவர் ஆயுதங்கள் இருக்கிற யூனிட்ல பாதுகாப்பு பணில இருக்கார். அங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட். எல்லா நேரமும் அவரால ஃபோன் யூஸ் பண்ண முடியாது, நினைச்ச நேரம் ஃபோன் பேசவும் முடியாது. என் நிலைமையை சொன்னாலும் அவருக்கும் டென்ஷன்தானே ஒழிய உடனடியா அவரால எதுவும் செய்ய முடியாது. அவர் வர்ற வரைக்கும் தங்க இடம் கொடுத்தா போதும்” என்றாள்.

 

கபிலனுக்கு இரக்கமாக போய் விட்டது. ஆனாலும் இதனால் தனக்கு ஏதும் பிரச்சனை வருமோ என தயங்கினான்.

 

“மாமா! நாட்டுக்காக உழைக்கிற ஒருத்தருக்கு ஹெல்ப் பண்ண வேண்டியது நம்ம கடமை, ஹெல்ப் பண்றேன், நான் பார்த்துக்கிறேன்னு சும்மா கெத்தா சொல்லுங்க மாமா” என்றான் சபரி.

 

“அடேய்! இவ்ளோ பில்டப் கொடுக்காதடா, நான் அவ்ளோ ஒர்த் இல்லடா. நான் பாவம்டா, என்னைய ஆள விட்ரு” பாவமாக சொன்னான் கபிலன்.

 

“அப்ப ஹெல்ப் பண்ண மாட்டீங்களா மாமா? இவ ஏதாவது பண்ணிக்கிட்டா நீங்கதான் காரணம் மாமா!” மிரட்டினான் சபரி.

 

சபரியின் தலையில் வலிக்க கொட்டியவன், “கனவு கண்டுக்கிட்டு சொகமா தூங்கிட்டிருந்தவனை எழுப்பி விட்டு பிளாக்மெயில் பண்றியா? அடி கொன்னுடுவேன்டா” என்றான்.

 

“ப்ளீஸ் மாமா, ப்ளீஸ் ப்ளீஸ்…” சபரி கெஞ்ச, “இப்ப இந்த பொண்ணு காணோம்னு தேட மாட்டாங்களா சபரி, நீயும் அங்க இல்லையே, உன் மேல சந்தேகம் வராதா?” என விசாரித்தான் கபிலன்.

 

சபரி இரண்டு நாட்களாகவே கல்லூரிக்கு செல்லவில்லையாம், நாளை சென்று விடுவானாம். இந்த பெண்ணும் தன் காதலனை தேடி செல்வதாகத்தான் கடிதம் எழுதி வைத்து விட்டு கிளம்பியிருக்கிறாளாம், ஆகவே தன் மீது சந்தேகம் வராது என்றான் சபரி.

 

உதவுவதாக சொன்ன கபிலன், வசுமதியிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டு செய்கிறேன் என்றான்.

 

“அக்காட்ட பொய் சொன்னாதான் தப்பு மாமா, இது விஷயமா வாயே தொறக்காதீங்க. அடுத்த மாசம் ரம்யா அவ ஆளோட சேர்ந்த பிறகு வேணும்னா அக்காட்ட சொல்லிக்கலாம். விஷயம் லீக் ஆனா இவளுக்கு ஆபத்து மாமா” என ஏதேதோ பேசி வசுவிடம் சொல்ல விடாமல் செய்து விட்டான் சபரி.

 

சபரியும் ரம்யாவும் அந்த வீட்டிலேயே குளித்து தயாராகி விட காலை உணவு தருவித்திருந்தான் கபிலன். தற்காலிகமாக சென்னையிலேயே ஏதாவது விடுதியில் தங்க வைக்கலாம் என கபிலன் சொல்ல, மற்ற இருவரும் ஒத்துக் கொண்டனர்.

 

அந்தப் பெண் தன் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை கழட்டி தர, “என்ன நீ என் மாமாவை அவ்ளோ கேவலமா நினைச்சிட்டியா? கழுத்துல போடு முதல்ல, எல்லாம் என் மாமா பார்த்துப்பார்” என அவளை அதட்டினான் சபரி.

 

மச்சானை முறைத்த கபிலன், “என் வீட்டு மாப்பிள்ளை என்கிட்ட என்ன பாடுபட்டிருப்பாருன்னு இப்போதான்டா புரியுது. என்னை விட சூப்பர் மச்சான்டா நீ!” என கேலியாக சொன்னான்.

 

“சபரி எம்மேல உள்ள பாசத்துல சொல்றான் ண்ணா. செயின் வாங்கிக்கோங்க ண்ணா. ஹாஸ்டலுக்கு கட்ட பணம் வேணும்தானே?” என்றாள் ரம்யா.

 

“அதான் என் மச்சான் ‘இது என் கடமை’ன்னு சொல்லிட்டானேமா, செயின்லாம் வேணாம். நான் பார்த்துக்கிறேன்” என பெருந்தன்மையாக சொல்லி விட்டான் கபிலன்.

 

மூவரும் வீட்டை விட்டு வெளியில் வந்தனர். ஒரு மாதம் வரை ஏன் இங்கு இருக்க வேண்டும், ஜீவாவை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்லி விடுவது நல்லது. அவருடைய எண்ணுக்கு முயன்று கொண்டே இருங்கள் என அறிவுறுத்தினான் கபிலன்.

 

“அவர் நம்பருக்கு அழுத்தி அழுத்தி என் கை கட்டை விரல்தான் தேயுது மாமா” சலித்தான் சபரி.

 

“கட்டை விரல் காணாம போனாலும் பரவாயில்லை, இது நம்ம கடமை, கடமையை ஒழுங்கா செய்டா” என சொல்லி சென்ற கபிலன் வீட்டு ஓனரிடம் அவருடைய ஸ்கூட்டரை கேட்டு வாங்கினான். சந்தேகமாக பார்த்த ஓனர் யார் இவர்கள் என கேட்டு குடைந்தார்.

 

“அவன் என் மச்சான், அந்த பொண்ணு என் மச்சினிச்சி, ரெண்டு பேரும் அண்ணன் தங்கச்சி. அவளுக்கு படிப்பு சம்பந்தமா சென்னைல தங்குற மாதிரி இருக்கு, அதான் ஹாஸ்டல்ல சேர்க்க போறோம்” என சமாளித்தான் கபிலன்.

 

“மாமா ஸ்கூட்டர் கிடைச்சுதா இல்லயா? இவ ஆளு எந்த அத்துவான காட்டுல இருக்காரோ, ரிங் போகவே மாட்டேங்குது. லவ்வுனாலே பெரிய தொல்லை மாமா” என்றான் தள்ளி நின்றிருந்த சபரி.

 

ஓனர் கபிலனை குழப்பமாக பார்க்க, “அது…” என ஏதோ சொல்வது போல ஆரம்பித்து பலமாக இருமி, தண்ணீர் வேண்டும் என சாடை காண்பித்தான். அவர் வீட்டிற்குள் சென்ற நேரம் பார்த்து, சபரியை கடிந்து விரைவாக ஸ்கூட்டரை எடுக்க சொன்னான்.

 

சபரியும் ரம்யாவும் சேர்ந்து வர, கபிலன் அவனது பைக்கை எடுத்துக் கொண்டான்.

 

தண்ணீர் சொம்புடன் வந்த ஓனர் யாரையும் காணாமல் உள்ளே சென்று தன் மனைவியிடம் நடந்ததை சொல்லி “ஏதோ சரியில்லை” என்றார்.

 

“ஆமாம், இவரு பெரிய சி ஐ டி சிங்காரம்! வெளக்கெண்ணெய் வேணும்னு கேட்டா வெளக்கமாத்த கொண்டு வர்ற ஆளு நீங்க. இப்போல்லாம் மோசத்துக்கு உங்க காது கேட்க மாட்டேங்குது, முதல்ல மெஷின் வாங்கி மாட்டுங்க” என நொடிப்பாக சொன்னார்.

 

பயந்து போன ஓனர் தன் காதை குடைந்து கொண்டே எந்த மருத்துவமனை செல்லலாம் என யோசிக்க ஆரம்பித்தார்.

 

ஏதாவது அவசரம் என்றாலும் பார்த்துக் கொள்ளலாம் என்பதால் தன் வீட்டு பக்கத்தில் உள்ள விடுதிக்கே அழைத்து சென்றான் கபிலன். அங்கு இடமில்லை என கூறப் பட்டது. இதே விடுதியின் இன்னொரு கிளையில் இப்போதைக்கு சேர்ந்து கொண்டால், நான்கு நாட்கள் கழித்து இந்த விடுதிக்கு மாறிக் கொள்ளலாம் என்றார்கள்.

 

ஆகவே தூரமாக இருந்தாலும் பரவாயில்லை என அந்த விடுதிக்கு சென்றனர்.

 

ரம்யா வீட்டில் இல்லை என்ற விஷயம் தெரிந்து தேடுதல் வேட்டை ஆரம்பித்திருந்தனர் அவளது வீட்டினர்.

 

ரம்யாவை விடுதியில் விட்டு இரு ஆண்களும் வீடு வந்து கொண்டிருக்க, பாதி வழியிலேயே கணவனுக்கு அழைத்து பேசினாள் வசு.

 

“சபரி ரம்யாங்கிற பொண்ணோட உங்கள பார்க்க வந்திருக்கானா?” எடுத்த உடனே மனைவி இப்படி கேட்கவும் அதிர்ந்து போனான் கபிலன்.

 

“பதில் சொல்லுங்க” வசு அதட்டவும், “ஆமாம் வசு, உனக்கு எப்படி தெரியும்?” என உள்ளே போன குரலில் கேட்டான்.