அத்தியாயம் – 9

‘மனோ’ என்று அவளை அழைத்த ஒரே ஜீவன் இந்த உலகத்தை விட்டுப் போய் பத்து வருடங்களாகி விட்டது. உயிர் பிரியும் சில தினங்களுக்கு முன்பு, சுவாசம் பாராமகிப் போன நிலையில், உருக்குலைந்திருந்த உடலை அவள் சுத்தப்படுத்திக் கொண்டிருந்த போது, மிகச் சன்னமாக, ‘மனோ’  என்று அழைத்து, சுத்தம் செய்து கொண்டிருந்த கையை விரலால் மெல்ல வருடி விட்டதை, அவள் மறந்திருந்ததை இப்போது கேட்ட ‘மனோ’ என்ற அழைப்பு கிளறி விட்டது.  

மனோன்மணி அவளுடைய அம்மாவிற்கு ‘மனோ கண்ணு’ அப்பாவிற்கு அவள்,’மணி, கண்மணி.’ அவள் மீதான அன்பு பொங்கி வழியும் தருணங்களில் இருவருக்கும் அவள் ‘கண்ணு’. ‘ஸ்கூலுக்கு நடந்து போய் வந்தது கால் வலித்தால், ‘வலிக்குதா என் கண்மணிக்கு? இப்படி வாங்க கண்ணு பிடிச்சு விடறேன்’ என்று அப்பாவும், ‘இன்னைக்கு கண்ணுக்கு பிடிச்ச டிஃபன் செய்திருக்கேன்’ என்று அம்மாவும் ஒரே போல் அவளைக் கண்ணு என்று அழைத்த தருணங்கள், அவள் மறந்திருந்த நிகழ்வுகள் இப்போது பசுமையாக மனத்தில் வர, கண்கள் ஈரமாவதற்கு முன் மனத்தைக் கட்டுக்குள் கொண்டு வர மணி முயற்சி செய்து கொண்டிருக்க, 

“அக்கா” என்று அர்ஜுன் கத்திய நொடி நின்று போயிருந்த மூச்சை “ம்ம்” என்ற மெலிதான ஓசையோடு மேலும் உள்ளுக்குள் இழுத்தாள் மணி. அவளை அணைத்து நின்றிருந்த அர்ஜுனின் தலையை கலைத்த உத்தமின் விரல்கள், லேசாக, மிக லேசாக அவளது இடையைத் தொட்டுச் சென்றிருந்தன.

சுமார் பத்து வருடங்களுக்கு முன், அவர்கள் வீட்டின் லேண்ட்லைன் தொலைப்பேசி ஒலித்த போது, அழைப்பை ஏற்று, ஹலோ, யார் பேசறது? என்று உத்தம் கேட்க, அதற்கு பதில் வராமல் அடுத்த சில நொடிகள் மௌனத்தில் கழிய, பின்னணியில் ஓர் ஆண்குரல்‘என்ன, லைன் போச்சா இல்லையா?’ என்று கேட்டது இவனுக்கும் கேட்க,’நான் மனோ பேசறேன்.’ என்று மணி சொன்ன நொடி அவளது கையிலிருந்து ரிசீவரை வாங்கிய சிதம்பரம்,’சிவமூர்த்தி இருக்காரா?’ என்று உத்தமிடம் கேட்க, அதற்கு அவன் பதில் கொடுக்க, அதன் பின் அவருக்குத் தேவையான விவரங்கள் கிடைத்தவுடன் ரிசீவரை வைத்து விட்டார். 

அந்தப் பெயர் இத்தனை வருடங்களாக அவனது அமிக்டலாவின் புதைந்திருந்த ரகசியம் ‘மனோ’ என்று அவன் வாயிலிருந்து வந்த பின் தான் அவனுக்கே தெரிய வந்தது. அர்ஜுன் ஏன் இங்கு அவளோடு இருக்கிறான் என்ற காரணமும் அவனுக்குப் புரிந்து போனது. எந்த நிலையில் அவள் அவர்கள் வீட்டிற்கு வந்தாளோ அதே நிலையில் தான் அர்ஜுனும் வந்திருக்கிறான் என்று உணர்ந்தவன், அர்ஜுனின் கை மீதிருந்த அவனது கரத்தை அவனது தலைக்கு கொண்டு சென்று கனிவோடு அதைக் கலைத்து விட,”அக்கா” என்று அர்ஜுன் கத்த மணியின் மெல்லிய எதிர்வினை உத்தமைப் போய் சேரவில்லை.

“எதுக்கு டா கத்தின..என்ன டா செய்திட்டேன் உன்னை?” என்று உத்தம் கேட்க,

“அக்கா, பாரு க்கா, இந்த அண்ணன் எப்படித் தலையை கலைச்சு விட்டிட்டாங்க.” என்று மணியிடம் கம்ப்ளேண்ட் செய்தான் அர்ஜுன்.

“உன் தலையே புதர் மாதிரி இருக்குது..அதை கலைச்சு வேற விடறாங்களா?” என்று அர்ஜுனைக் கிண்டல் செய்தவன்,”காசை மட்டும் வாங்கிட்டு வேலையைச் சரியாச் செய்யலை..இப்படிக் காடு மாதிரி வளர்ந்து கிடக்குது..எந்தச் சலூனுக்கு அழைச்சிட்டுப் போற இவனை.” என்று மணியிடம் கேட்டான்.

மதியம் உணவு வேளையில் அவன் செய்த வேலை இப்போது சலூன் பற்றிய விசாரணை என்று அவர்களின் எல்லைக்குள் நுழைந்து சீராக சென்று கொண்டிருக்கும் வாழ்க்கை தடம் புரள்வது அவளுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், மரியாதை காரணமாக பதில் சொல்லித் தொலைக்க வேண்டியிருந்ததால்,”அவனுக்கு ரொம்ப சீக்கிரமே வளர்ந்திடுது.” என்று அவன் கேட்ட கேள்விக்கு பதில் கொடுக்காமல் வேறொரு பதிலைக் கொடுத்தாள்.

அது அவனுக்கும் புரிந்து போக, அர்ஜுனைப் பார்த்து பெரிதாக உத்தம் சிரிக்க, அதற்கு,

“எதுக்கு சிரிக்கறீங்க?” என்று அர்ஜுன் வினவ,

”இப்போவே உனக்கு இப்படி வேகமாக முடி வளருதுன்னா..நல்லாச் சப்பிட்டா இன்னும் வேகமா வளருமே..அப்போ நீ பார்க்க எப்படி இருப்பேன் யோசிச்சேன்.” என்று சொல்ல, அர்ஜுனுக்கு கேலி பிடிபட, கால்களை உதைத்து அவன் அழ ஆரம்பிக்க,

“என்ன பண்றீங்க? அவன் அழ ஆரம்பிச்ச என்னாலே சமாளிக்க முடியாது.” என்று அவளை மீறி உத்தமை மணி கடிந்து கொள்ள,

“சாரி டா..இப்போவே உன்னை அழைச்சிட்டுப் போய் ஹேர்கட் செய்து கூட்டிட்டு வரேன்..எந்தக் கடைன்னு சொல்லு.” என்று அர்ஜுனை சமாதானம் செய்தான் உத்தம்.

உத்தமின் சாரியில் சமாதானம் அடைந்த சின்னவன், அழுகையை நிறுத்தி, வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி,”அக்கா தான் தலை மேலே தட்டை கவிழ்த்து தலைமுடியை வெட்டி விடும்.” என்று அவனுடைய அக்கா மறைத்ததை அதாவது அவனுடைய ஹேர்ஸ்டைலிஸ்ட் அக்கா தான் என்ற ரகசியத்தைப் போட்டு உடைத்தான்.

‘கடவுளே’ என்று ஓசை எழுப்பாமல் அவளது ஆத்திரத்தை வெளியிட்டவள், உத்தம் உற்று நோக்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தாலும், அவனை ஏறெடுத்துப் பார்க்காமல், தம்பியின் முகத்தை முந்தானையால் துடைத்து விட்டபடி,”அது..சலூன் கடை வரை போயிட்டு வர ஒரு மணி நேரமாகிடுது..லீவு நாள்லே ரொம்ப கூட்டமா வேற இருக்கு” என்று காரணங்கள் கொடுத்தாள்.

வீட்டிற்கே வந்து முடி வெட்ட வசதியை அவனுடைய அப்பாவிற்கு செய்து கொடுத்திருந்தான். அந்த நபரிடம் கூட அர்ஜுனை அனுப்பி விட்டிருக்கலாம். அப்படி அர்ஜுனை அனுப்ப அவன் அந்த வீட்டு நபரில்லை என்று அவனுக்கு புரிந்ததால்,

“பெங்களூர்லே சாரதி வீட்டு பக்கத்திலே பெரிய மால் இருக்குதே அதிலே யுனிசெக்ஸ் சலூனுக்கு அழைச்சிட்டுப் போயிருக்கலாமே.” என்றான்.

‘சாரதி வீட்லே நான் சீராடப் போறேன்னு நினைச்சிட்டு இருக்காங்களா? இங்கேயாவது இவனும் நானும் சேர்ந்து இருக்க நேரம் கிடைக்குது..அங்கே அதுக்கும் வழியில்லை..இவனைப் பார்த்துக்க முடியாம, லயா குட்டியையும் விட முடியாம நான் கஷ்டப்படறது எனக்கு தானே தெரியும்..எதுவும் தெரியாம அட்வைஸ் மட்டும் கொடுக்கறாங்க..வெட்டி வேலை நல்லா செய்வாங்க போல.’ என்று மனத்தினுள் உத்தமை வறுத்தெடுத்தவள், அவனது கேள்விக்குப் பதில் கொடுக்காமல்,”எதுக்கு டா இங்கே வந்த?” என்று தம்பியிடம் விசாரித்தாள்.

அதற்கு அர்ஜுன் பதிலளிக்கும் முன்,“உன் ரூம் வாசல்லே நின்னுட்டு இருந்தான்..என்ன டான்னு விசாரிச்சேன்..பதில் சொல்லலை..உன்னைக் கூப்பிட்டேன் நீயும் பதில் சொல்லலை..அதான் அவனை இங்கே அழைச்சிட்டு வந்தேன்.” என்று பெரிய விளக்கம் ஒன்றைக் கொடுத்தான் உத்தம்.

உடனே,“அக்கா, மீனா பாட்டி தூக்கத்திலே பேசறாங்க க்கா..பயமா இருந்திச்சு..எழுந்து வந்திட்டேன்.” என்றான் அர்ஜுன்.

“என்ன டா உளர்ற?” என்று தம்பியிடம் பேசியபடி அவனையும் அழைத்துக் கொண்டு அவளின் அறையை நோக்கிச் சென்றாள் மணி. 

“மீனாம்மாக்கு உடம்பு சரியில்லையா மனோ?” என்று கேட்டபடி மணியைப் பின் தொடர்ந்தான் உத்தம்.

பின்பக்கக் கதவை அடைத்திருந்ததால் அறையினுள்ளே வெளிச்சம் இருக்கவில்லை. லைட்டைப் போட்டு விட்டு மீனாம்மாவின் கட்டில் அருகே சென்றாள் மணி. திடீரென வந்த வெளிச்சத்தில் மீனாம்மா விழிக்கவில்லை. அசைவில்லாமல் படுத்திருந்தவரின் நிலை ஏனோ அவளுக்கு அவளுடைய அம்மாவை  நினைவுப்படுத்த அவளுள் கிலியை உண்டானது, அவளுக்குப் பின்னால் வந்த உத்தம்,”நீ நகரு.” என்று கட்டளையிட, மறுப்பு சொல்லாமல் அர்ஜுனோடு பின்பக்கக் கதவை நோக்கி நகர்ந்து கொண்டாள் மணி.

மீனாவின் நெற்றியை உத்தம் தொட்டவுடன், கண்களைத் திறந்த மீனா உத்தமைப் பார்த்து திடுக்கிட்டுப் போய் பதற்றத்துடன் எழுந்து கொண்டார். 

”எதுக்கு எழுந்துக்கறீங்க..காய்ச்சலான்னு நெத்தியைத் தொட்டு பார்த்தேன்..டெம்பரேச்சர் இருக்கற மாதிரி எனக்குத் தெரியலை.” என்று அவரிடம் சொன்னவன், மணியின் புறம் திரும்பி,”தெர்மாமீட்டர் எடுத்திட்டு வா.” என்றான்.

நொடிப் பொழுதில் தெர்மாமீட்டரோடு திரும்பினாள் மணி. அதை வைத்து அவன் சொன்னதை பெண்கள் இருவருக்கும் ஊர்ஜிதம் செய்தவன்,”ரொம்ப களைப்பா தெரியறீங்க..அதான் தூக்கத்திலே ஏதோ பேசியிருக்கீங்க..சின்னவன் பயந்திட்டான்.” என்று மீனாம்மாவிடம் சொன்னவன், 

“எனக்கு போட்ட டீயை என்ன செய்த?” என்று மணியிடம் கேட்க,

“தர்மாஸ்லே ஊத்தி வைச்சிருக்கேன்.” என்று அவள் பதிலளிக்க.

“அதை டம்பளர்லே ஊத்திக் கொண்டு வா.” என்று கட்டளையிட்டான்.

டபரா டம்பளில் டீயோடு திரும்பிய மணியின் கையிலிருந்து அதை வாங்கியவன், சுவரோடு சாய்ந்து அமர்ந்திருந்த மீனாம்மாவிற்கு சிறிது சிறிதாக அதை புகட்ட அவன் தயாரான போது மீனாவின் உடல் அழுகையில் குலுங்கியது. 

“என்ன, என்ன செய்யுது?” என்று பதற்றமடைந்த உத்தமிற்கும் சிறிது பயம் ஏற்பட,”பாட்டி, டீ கசக்காது..நல்லா இருக்கும் குடிங்க.” என்று அர்ஜுன் பரிந்துரைக்க, அவரைக் கட்டுபடுத்திக் கொண்டு உத்தமிடமிருந்து டீயைக் கையில் வாங்கி கொண்ட மீனா,”பலகீனமா இருக்குது தம்பி..அதான்..” என்று அவரது அழுகைக்கான விளக்கத்தைக் கொடுக்க முற்பட,

“நீங்க ரெஸ்ட் எடுங்க மீனாம்மா..அம்மாகிட்டே நான் சொல்லிக்கறேன்.” என்று அவருக்கு வாக்கு கொடுத்தான்.

“.டீ குடிச்சிட்டு பாட்டி ரெஸ்ட் எடுக்கட்டும்..நீ வா டா என்னோட.” என்று அர்ஜுனை அவனோடு அழைத்துச் சென்றான் உத்தம்.

மீனா அருகில் அமர்ந்த மணி,”இராத்திரி சமையலுக்கு எல்லாம் ஏற்பாடும் செய்திட்டேன்..மதியம் விழுந்த பாத்திரத்தைக் கழுவிப் போட்டிட்டே சமைச்சிடுவேன்.” என்றாள்.

“காய்கறி நறுக்கி வைச்சிட்டேயா?” என்று மீனா கேட்டவுடன்,”ஏற்பாடுன்னா என்ன அர்த்தம்? நான் பார்த்துக்கறேன்னு சொல்லிட்டேனில்லே..நிம்மதியா தூங்குங்க.” என்று சொல்லி விட்டு டீ டம்பளரை அவரிடமிருந்து பெற்றுக் கொண்ட போது,

“கனகா இரண்டு நாளா வரலை மணி.” என்று மீனாம்மா சொன்னவுடன் ‘ஐயோ’ மனத்தில் அலறிய மணி,” நீங்க பெருக்கித் துடைச்சீங்களா மீனாம்மா?” என்று கேட்டாள்.

“இன்னைக்கு நேரம் கிடைக்கலை.” என்ற பதிலிருந்து நேற்று அந்த வேலையையும் சேர்த்து செய்திருக்கிறார் என்று புரிய,”அதான் இவ்வளவு சோர்வா இருக்கீங்க..எதுக்கு மீனாம்மா நீங்க செய்தீங்க..இஸ்திரிக்காரன் பொண்டாட்டியே வரச் சொல்லியிருக்கலாமே.” என்றாள் மணி.

“வரேன்னு சொல்லிட்டு வரலை மணி..விசேஷ நாள்ங்கறுதுனாலே துணி அதிகமா இருக்குன்னு காரணம் சொன்னா.” என்றார் மீனா.

“சரி..நான் பார்த்துக்கறேன்..நீங்க ஓய்வெடுங்க.” என்று சொல்லி விட்டு வெளியே வந்தவள், நேரே வாசலுக்கு சென்று செருப்பு அலமாரியைத் திறந்து புது செருப்பை மாட்டிக் கொண்டு  போர்ட்டிக்கோவிலிருந்து வெளியே வந்தவள், உத்தமும் அர்ஜுனும் காராஜ்ஜில் இருந்ததைக் கவனித்து,”அர்ஜுன், அக்கா தெருமுனை வரை போயிட்டு வரேன்.” என்று உரக்கத் தகவல் சொல்லி விட்டு கேட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

உடனே அக்காவை நோக்கி ஓடி வந்தவன் அவளது இடையைக் கட்டிக் கொண்டு அவளைப் போக விடாமல் பிடித்துக் கொள்ள, தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த உத்தமிற்கு என்ன நடக்கிறது என்று புரிந்து போக,”அர்ஜுன்..வா..பந்து கிடைச்சிடுச்சு.” என்று குரல் கொடுத்தான்.

அக்காவையும் உத்தமையும் மாறி மாறிப் பார்த்தவனின் செவிகளில் மணி ஏதோ சொல்ல,’சரி’ என்ற தலையசைவுடன் உத்தமை நோக்கிச் சென்றான் அர்ஜுன். ‘இவ எங்கே போறா?’ என்ற கேள்வியோடு கேட்டை சாத்திக் கொண்டு சென்ற மணியைப் பார்த்துக் கொண்டிருந்தான் உத்தம்.

பத்து நிமிடங்கள் கழித்து உத்தம், அர்ஜுன் இருவரும் ஒரு பழைய  பந்துடன் கேட்ச் கேம் விளையாடிக் கொண்டிருந்த போது டாக்ஸியில் வந்திறங்கினாள் இந்திரா. வாயிலில் டாக்ஸி சத்தம் கேட்டவுடன் கேட்டை திறந்து விட உத்தம் செல்லும் முன் அந்தப் பக்கத்திலிருந்து அதை திறந்து விட்டிருந்தாள் மணி. 

டாக்ஸியிலிருந்து இறங்கிய இந்திராவின் பெரிய மகள் ப்ரியங்காவை மணி தூக்கிக் கொள்ள, இடுப்பிலிருந்த வர்ஷினியை தூக்கிக் கொண்ட உத்தம்,”வா க்கா.” என்று வரவேற்றான்.

“வந்த பிறகு வான்னு கூப்பிடற..பெங்களூர்லேர்ந்து வந்தவன் வேலூர்லேர்ந்து என்னையும் கூட்டிட்டு வந்திருக்கலாமே..குட்டிங்க இரண்டையும் வைச்சிட்டு தனியா வந்திருக்கேன்..இதிலே சாமான் செட்டு வேற.” என்று சிடுசிடுத்தாள்.

பெங்களூர் பகுதிக்குப் பதில் கொடுக்காமல்,”இவளைத் தூக்கிட்டு நீ உள்ளே போ க்கா..சாமான் எடுத்திட்டு நான் வரேன்.” என்று வர்ஷினியின் கன்னத்தில் முத்தம் ஒன்றை வைத்து விட்டு அவளை மீண்டும் இந்திராவிடம் கொடுத்தான்.

“லோகு எங்கே டா?” என்று இந்திரா கேட்க,

அந்தக் கேள்விக்குப் பதில் கொடுத்து அக்காவைக் கடுப்பேத்த விரும்பாமல் அதைப் புறக்கணித்தான் உத்தமத் தம்பி.

சாமானுடன் வீட்டை நோக்கி சென்ற போது கையில் பந்துடன் காத்திருந்த அர்ஜுனிடம் உத்தம் ஏதோ சொல்ல, அவனும் தலையசைத்து தனியாக பந்துடன் விளையாட ஆரம்பித்தான்.

முதலில் உத்தம் உள்ளே செல்ல, அவனைத் தொடர்ந்து வந்த மணி, பெரியவள் ப்ரியங்கா கால்களில் இருந்த செருப்பை கழட்டி அலமாரியில் வைத்தாள். அடுத்தது இந்திரா அக்காவின் இடுப்பில் இருந்த வர்ஷினி குட்டியின் காலிருந்து ஷுவைக் கழட்டி வைத்தாள். மணி அவளுடைய புது செருப்பை கழட்டும் போது இந்திராவும் அவளுடைய பாதங்களில் மாட்டியிருந்ததைக் கழட்ட, புதுச் செருப்பு அவளது கண்களில் சரியாக மாட்டிக் கொள்ள, 

“புது செருப்பா?” என்று ஆச்சரியப்பட்டாள் இந்திரா.

அதற்கு என்ன எதிர்வினை ஆற்றுவதென்று மணிக்குத் தெரியவில்லை. சாமானை உள்ளே வைத்து விட்டு திரும்பிக் கொண்டிருந்த உத்தம்,

“ம்ம்ம்.புதுசு தான் பெங்களூர் ஏர்போர்ட்லே வாங்கிக் கொடுத்தேன்..அம்மா செய்த அவசரத்திலே செருப்பை கூட  மறந்து பேர் ஃபீட்டா (bare feet) கிளம்பி வந்திட்டா மனோ.” என்று அவனுடைய சின்ன அக்காவிற்கு பேரத்திர்ச்சி கொடுத்தான் உத்தம்.

‘மனோ’ என்ற அவனது புது அழைப்பில் புது செருப்பு வாங்கிக் கொடுத்தது கூட பெரிய விஷயமாக தெரியவில்லை. எனவே, “மனோவா?” என்று இந்திரா வாயைப் பிளக்க,

“ம்ம்..மனோ..மனோன்மணி..அதானே இவளோட பெயர்..நீங்கெல்லாம் மறந்திட்டீங்க..நானும் தான்..ஆனா என்னோட அமிக்டலா உங்க எல்லோரையும் விட ஸ்ட் ராங்க்..ஒரேயொரு முறை ஃபோன் மூலமா காது உள்ளே போனது இத்தனை வருஷம் கழிச்சு என் வாய் வழியா வெளியே வந்திடுச்சு..என்னோட அமிக்டலா அபாரமில்லே.” என்று அவனது அமிக்டலாவின் ஆற்றலை சிலாகித்துக் கொண்டான் புருஷோத்தமன்.

*******************

அமிக்டாலா ( amygdala) என்பது முதுகெலும்புகளின் பெருமூளை அரைக்கோளங்களில் இருக்கும் ஒரு ஜோடி அணுக்கரு வளாகமாகும் . இது லிம்பிக் அமைப்பின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. இது பல கருக்களைக் கொண்டுள்ளது , ஒவ்வொன்றும் மேலும் துணை அணுக்கருக்களால் ஆனது. அமிக்டாலா நினைவாற்றல் (memory) , முடிவெடுப்பது மற்றும் உணர்ச்சிபூர்வமான பதில்களை (பயம், பதட்டம் மற்றும் ஆக்கிரமிப்பு உட்பட) செயலாக்குவதில் முதன்மையான பங்கைக் கொண்டுள்ளது . Source – wikipedia