அத்தியாயம் – 8-1

மாடியில் மதிய வேளை உறக்கத்தை தழுவ ஆரம்பித்திருந்த காவேரி அது நழுவிப் போனவுடன், கோபத்துடன் அவரது படுக்கையறையிலிருந்து வெளியே வந்தார். மாடி வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்து அவனது மடிக்கணினியில் வேலை பார்த்துக்  கொண்டிருந்த உத்தம், அவனது தலையை உயர்த்தாமல்,

“ஏசி போட்டுக்கிட்டு கதவை அடைச்சிட்டு படுங்க.” என்று கட்டளையிட,

“உங்கப்பாக்கு ஏசி ஒத்துக்காது..கொஞ்ச நேரத்திலே அணைச்சிடு அணைச்சிடுன்னு என் உயிரை எடுப்பார்.” என்று காவேரி பதில் கொடுக்க,

“அப்போ கதவைச் சாத்திட்டு தூங்குங்க.” என்று அவன் சொல்ல,

“என்ன டா நினைச்சிட்டு இருக்க? நம்ம வீட்லே நான் தூங்கறத்துக்கு கண்டிஷன் போட்டிட்டு இருக்க..அந்தப் பையன் முதுகிலே நாலு போட்டா எல்லாச் சரியாகிடும்..அதைச் செய்யாம இந்த மணியும் சின்னபுள்ளையாட்டும் அவனோட விளையாடிட்டு இருக்கா.” என்று கத்தினார். 

“அவ அதட்டிட்டு தான் இருக்கா..பத்து வயசு பையன் அப்படித் தான் இருப்பான்..நான் இவனை விட சேட்டை செய்திருக்கேன்.” என்று உத்தம் சொல்ல,

“இது நம்ம வீடு.” என்று அவர் பதில் கொடுக்க, அதில் அவனது தலையை உயர்த்தி அவரைப் பார்வையால் அவன் எரிக்க,

“உங்கப்பாக்கும் உனக்கும் அந்த நினைப்பு இருந்தா இப்படி எல்லோரையும் கூட்டி வைச்சிட்டு, சோறு போட்டு, படிக்க வைச்சுன்னு சொத்தை கரைச்சிட்டு இருப்பீங்களா? ஏதோ எங்கப்பா எனக்குன்னு விட்டிட்டுப் போனதாலே நான் தெருவுக்கு வராம கௌரவமா இருக்கேன்.” என்று மிகைப்படுத்தி பேசி, கண்களிருந்து வராத கண்ணீர்த் துளிகளைத் துடைத்தார் காவேரி.

அவரது நாடகத்தில் மனம் இளகாமல்,”யார் உங்களைப் பொறுத்திட்டு இருக்கச் சொல்றாங்க? அனுப்பிடுங்க..முதல்லே மீனம்மா…அடுத்து மனோ..பெங்களூர்லே செட்டிலாக எனக்கு வசதியா இருக்கும்.” என்றான்.

வீட்டுக்கு வந்த போது அவரை அழைத்துப் போகப் போவதாகச் சொன்ன மகன் இப்போது மீனாவை அழைத்துச் செல்லப் போகிறேன் என்று சொன்னவுடன் பெரும் கோபமடைந்த காவேரியின் புத்தி வேலை நிறுத்தம் செய்ய, ‘மனோ’ யாரைக் குறிக்கிறது என்று புரியவில்லை. யாரென்று கேட்காமல்,

“என்ன டா, கல்யாணம் வேணாம் வேணாம் சொல்லிட்டு நீயே பொண்ணு பார்த்து வைச்சிருக்க போல..அதுக்கு தான் பெங்களூருக்கு வந்திட்டேயா? பொண்ணு எந்த ஊர்? எத்தனை வருஷமா இது நடக்குது? உனக்குப் பிடிச்சிருந்தாலும் என்னோட சம்மதமில்லாம இந்த வீட்டுக்கு மருமகள் வர முடியாது..உன் அக்காங்க இரண்டு பேரும் எத்தனை இடம் கொண்டு வந்தாங்க..அத்தனை வரனையும் வேண்டாம்னு சொன்னதுக்கு இந்த மனோ தான் காரணமா?”என்று காவேரி கன்னாபின்னவென்று பேச,  படுக்கையறைலிருந்து வெளியே வந்தார் சிவமூர்த்தி.

பட்டென்று அவனது மடிக்கணினியை மூடிய உத்தம்,”நான் சொல்றதைக் கவனமாக் கேட்டுக்கோங்க..வரப் போற பெண்ணு முதல்லே என்னோட மனைவி அப்புறம் தான் இந்த வீட்டு மருமகள்..எனக்குப் பிடிக்கணும்..நான் சம்மதிக்கணும்..உங்களுக்கும் மற்றவங்களுக்கும் பிடிச்சிருந்தாயெல்லாம் என் கல்யாணம் நடக்காது..அப்புறம்  உங்க சொத்தைக் கரைச்சிட்டு இருக்கான்னு கரிச்சுக் கொட்டினது மணியைத் தானே? நான் மனோன்னு சொன்னது அவளை தான்.” என்றான் உத்தம்.

மணியை மனோ என்று மகன் சொன்னது அவரது மனத்தில் பெரிய பிரளயத்தைக் கிளப்ப, கணவரைப் பார்த்து,”அப்போவே சொன்னேன் கேட்டீங்களா நீங்க..வேலைக்காரியா இருக்கறவ வீட்டுக்காரியா ஆகப் போறா..இத்தனை வருஷம் அவளுக்கு நான் அள்ளி அள்ளி சோறு போட்டதுக்கு இனி அவ எனக்கு எண்ணி எண்ணி பருக்கை பருக்கையாப் போடப் போறா.” என்று ஆத்திரமாகப் பேசியவர், மகனின் புறம் திரும்பி, “அப்போ அந்த மனோவை தான் பிடிச்சிருக்கா உனக்கு? அவ தான் இந்த வீட்டு மருமகளா? அதான் கார்லே அவ பக்கத்திலே உட்கார்ந்திட்டு வந்தேயா? காசைக் கொட்டி அவளை விமானத்திலே அழைச்சிட்டு வந்தேயா?” என்று காவேரி கேட்க, 

அதில் மகா கோபமடைந்த உத்தம் அவனது வாயைத் திறக்கும் முன்,”காவேரி, போதும்..கண்டபடி பேசிட்டு இருக்க..நீ விரும்பாத இடத்திலே போய் நின்னுடுவே..ஜாக்கிரதை.” என்று மனைவிக்கு எச்சரிக்கை விடுத்தார் சிவமூர்த்தி.

அந்த நேரம் கீழேயிருந்து மணி, அர்ஜுன் இருவரின் சிரிப்பொலி மாடியில் இருந்தவர்களுக்கு கேட்க, வேகமாக, பின்புற பால்கனி கதவைத் திறந்த காவேரி, 

“அத்தனை வேலை கொட்டிக் கிடக்கு..கெக்கபிக்கேன்னு சிரிச்சிட்டு என்ன விளையாட்டு? பெங்களூர்lலே இருக்கறதா நினைப்பா உனக்கு?” என்று மகன் மீது கொட்ட முடியாததை மணி மீது கொட்டினர்.

அவரது காட்டுக் கத்தலில் பயந்து போய் மணியோடு ஒன்றிக் கொண்டான் அர்ஜுன். காவேரியைப் பார்க்கக் கூட அச்சப்பட்டுக் கொண்டு கையில் இருந்த ஹோஸ் பைப்பை தரையில் தொப்பென்று போட்டு விட்டு, அர்ஜுனையையும் அழைத்துக் கொண்டு மணி வீட்டினுள் சென்று விட்டாள். ’எப்போதும் அமைதியா இருக்கறவ இன்னைக்கு சின்ன பிள்ளை மாதிரி அந்தச் சின்ன பையனோட சேர்ந்து அட்டகாசம் செய்யறா..எல்லாம் சாரதி வீடு கொடுத்த தைரியம்..இனி எத்தனை கெஞ்சி கேட்டாலும் இவளை அவ அண்ணன் வீட்டுக்கு அனுப்பக் கூடாது.’ என்று சாரதி வீட்டில் அவளது நிலையை உணராமல் அங்கே இருக்கும் நிலவரம் புரியாமல், உத்தம் சொன்னது மனத்தை முள்ளாக தைத்திருக்க, மகன் இருக்கும் பெங்களூருக்கு மணியை அனுப்பவே கூடாதென்று உறுதி பூண்ட காவேரிக்குத் தெரியவில்லை மணியை பெங்களூருக்கு அழைத்துச் செல்ல அவர் தயாராக இருந்தாலும் மகன் அவருக்குத் தடை விதிக்கப் போகிறானென்று. 

சில நிமிடங்கள் கழித்து வேறு உடைக்கு மாறி வெளியே வந்த மணி, தண்ணீர் குழாயை மூடி விட்டு, சாலையைக் கூட்டும் பெரிய துடைப்பத்தை எடுத்து தோட்டத்தைப் பெருக்க ஆரம்பித்தாள். பூமி ஈரமாகி இருந்தததால் தூசி அதிகமாக கிளம்பவில்லை. உதிர்ந்து போன இலைகளை ஆங்காங்கே குமித்தபடி தோட்டத்தைச் சுத்தப்படுத்தி முடித்த போது கையில் துவைத்த துணிகளோடு மீனாட்சி வந்தார். உடனே, துடைப்பத்தை தூக்கிப் போட்டு விட்டு வேகமாக அவரிடம் வந்தவள், அவரது கையிலிருந்த ஈரத் துணிகளை பறிக்க முற்பட, அவர் கொடுக்க மறுக்க,

“கொடுங்க மீனாம்மா..காலைலே துவைக்க உங்களுக்கு நேரமிருந்திருக்காது..இன்னைக்கு ஒரு நாள் தானே நானே காயப் போடுறேன்.” என்று மென்மையான குரலில் மணி வற்புறுத்த, அதற்கு மேல் மறுக்க முடியாமல் துணிகளை அவளிடம் கொடுத்தார்.

அதை வாங்கி கொண்டவள்,”நீங்க உள்ளே போங்க..நான் கொஞ்ச நேரத்திலே வர்றேன்.” என்றாள்.

அதற்கு,விரிந்திருந்த கூந்தலைக் கொண்டை போட்டபடி,“இந்திராவும் குழந்தைங்களும் வந்திடுவாங்க மணி.” என்று அவர் சொல்ல,

“நான் பார்த்துக்கறேன்..இத்தனை நீளமான கூந்தலோட ரகசியம் என்னென்னு எத்தனை முறை கேட்டாலும் சொல்லவே மாட்டீங்கறீங்க..உங்க கூந்தல் மேலே காதாலாகிட்டேன்.” என்று அவரைக் கேலி செய்ய, சட்டென்று மீனாட்சியின் கண்கள் கலங்கி விட்டன. எப்போதும் கூந்தலைப் பற்றி பேசும் போது ஒரு சிரிப்புடன் கடந்து விடுபவர் இன்று கண்ணீர் சிந்த,”என்ன மீனாம்மா? உடம்புக்கு ஏதும் செய்யுதா?” என்று கேட்டவள் அவரது பதிலை எதிர்பார்க்காமல் கையைப் பிடித்து அறைக்கு அழைத்துச் சென்றாள். அங்கே அவரது கட்டிலில் படுக்க வைத்து, போர்வையை போத்தி விட்டு,”தூக்கம் வரலைன்னாலும் சும்மா படுத்திட்டு இருங்க..இன்னைக்கு ரொம்ப நிறைய வேலை செய்திட்டீங்க.” என்று அவரிடம் சொன்னவள், இன்னொரு கட்டிலில் அமைதியாகப் படுத்தபடி அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுனிடம்,

“மீனாமாக்கு உடம்பு சரியில்லை..பார்த்துக்கோ..அக்கா சமையலறைலே இருப்பேன்.” என்று சொல்ல, உடனே, அவனது கட்டிலிருந்து எழுந்து வந்து, போர்வையை விலக்கி, மீனாம்மாவைக் கட்டிக் கொண்டு படுத்தான் அர்ஜுன். அதைப் பார்த்து மீனா, மணி இருவரின் மனதும் முதல் முதலாக மணி அந்த அறைக்கு வந்த போது நடந்த நிகழ்விற்கு பயணம் செய்தது. அர்ஜுனை விட வயதில் பெரியவளாக இருந்தாலும் அன்னையை இழந்த துக்கத்திலிருது மீள முடியாமல், புது இடத்தில் தனித்து உணர்ந்ததால் அர்ஜுனைப்  போலவே மீனாம்மாவைக் கட்டிக் கொண்டு அந்த முதல் இரவைக் கழித்தது அவள் நினைவிற்கு வந்தது. அதற்கு மேல அங்கே நிற்க முடியாமல் கதவைச் சாத்திக் கொண்டு வெளியே சென்றாள் மணி.

வீடே அமைதியாக இருந்தது. மாடியும் உறங்கப் போய் விட்டதென்று புரிய, சத்தம் எழுப்பாமல், மாமிக்கு மறுபடியும் வாய்ப்பு கொடுக்காமல் சமையலறைக்குச் சென்றாள். பகல் உணவிற்கு உபயோகப்படுத்திய பாத்திரங்கள் குமிந்து கிடந்தது எரிச்சலை ஏற்படுத்தினாலும் அந்த வேலையைக் கடைசிக்கு ஒதுக்கி விட்டு மாலை, இரவு இரண்டு வேளைக்கான உணவு தயாரிப்பில் இறங்கினாள். கிட்டதட்ட ஒன்றரை மணி நேரம் கழித்து மாடிப்படியில் காலடி ஓசை கேட்க, அந்த ஓசையை வைத்து வருவது உத்தம் என்று சரியாக யுகித்தவள், தேநீர் தயாரிக்க ஆரம்பித்தாள். ஒரு பக்கம் பால் காய்ச்சியவள், இன்னொரு பக்கம் அவனுக்காக தயாரித்த டீ டிகாக்‌ஷனில் இஞ்சியை சருவிக் கொண்டிருந்தாள். அந்த வாசனை வரவேற்பறையில் இருந்தவனின் நாசியைப் போய் சேர, அவனது கைப்பேசியில் இருந்த கவனம் சிதற,’இத்தனை வெய்யில்லே எப்படி சூடான டீ இவ்வளவு சுவாரசியமாத் தெரியுது?’ என்று யோசனை செய்ய, அவனது யோசனையை தடை செய்யும் விதமாய் கையில் தேநீர் கோப்பையுடன் வந்தாள் மணி.

அவனை நோக்காமல் அவனெதிரே இருந்த சிறிய மேஜையில் தேநீர் கோப்பையை வைத்து விட்டு திரும்பிச் செல்ல இருந்தவளிடம்,

“நான் டீ கேட்டேனா?” என்று கேட்டான்.

அதைக் கேட்டு அதிர்ந்து அவனை அவள் நோக்க, பார்வையாலேயே ‘என்ன’ என்று அவன் கேட்க, அதற்கு என்ன பதில் சொல்வதென்று மணிக்குத் தெரியவில்லை.

வீட்டினர்க்கும் விருந்தாளிகளுக்கும் அவர்கள் கேட்காமலேயே அந்தந்த வேளைக்கு ஏற்றார் போல் பானங்கள் கொடுத்து உபசரிப்பது அந்த வீட்டின் வழக்கம். உத்தம் அதற்கு விதிவிலக்கல்ல. எத்தனையோ முறை மீனாம்மா கையால் காப்பி, தேநீர் குடித்திருக்கிறான். அதெல்லாம் நடந்து சில வருடங்களாகி விட்டதால் இப்போது பழக்கம் மாறி விட்டதா? வேற ஏதாவது பானத்தை அருந்துகிறானா? அது தெரியாமல், அவனது விருப்பத்தை அறிந்து கொள்ளாமல் எப்போதும் போல் டீ போட்டுக் கொண்டு வந்த அவளது முட்டாள்தனத்தை நினைத்து அவளே அவளை வைது கொண்டிருக்க, உத்தம் அவளது பதிலிற்காக காத்திருக்க, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு,

“இல்லை” என்று மென்மையாக பதிலளித்தாள் மணி.

“இப்போ எனக்கு வேணாம்..கொண்டு போயிடு.” என்று கட்டளையிட்டான்.

மறுபேச்சு பேசாமல் அவன் சொன்னபடி செய்தாள் மணி. அதன் பின் வரவேற்பறை பக்கம் செல்லவே அச்சமாக இருந்தது அவளுக்கு. எனவே அவளுடையை அறைப் பக்கம் கூட எட்டிப் பார்க்கவேயில்லை. பத்து நிமிடங்கள் கழித்து அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த அர்ஜுன், வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்திருந்த உத்தமைப் பார்த்துத் தயங்கி அங்கேயே நிற்க, அவனைக் கவனித்து விட்ட உத்தம்,

“மனோ” என்று அழைக்க, அதற்கு எந்த எதிர்வினையும் இல்லை.

‘மனோ’ என்ற அழைப்பு காதில் விழுந்தாலும் மணியிடம் அதற்கான பிரதிபலிப்பு இல்லை. அவளைத் தான் அழைக்கிறானென்று அந்த பெயர் கொண்டவளுக்குப் போய்ச் சேரவில்லை. அர்ஜுன் அருகே சென்ற உத்தம்,”என்ன டா வேணும்?” என்று கேட்க, அர்ஜுனிடமிருந்து பதில் வரவில்லை.

உடனே அவனது கையைப் பற்றி சமையலறைக்கு அழைத்து சென்ற உத்தம், அதன் வாசலில் நின்றபடி,”மனோ” என்று மீண்டும் அழைக்க, இந்தமுறை அது மணியைப் போய்ச் சேர, விலுக்கென்று திரும்பியவள் அவனை வினோதமாக நோக்க, அதன் காரணத்தைப் புரிந்து கொண்டவன்,”மனோ உன்னோட பெயர் தானே?” என்று விசாரிக்க,

“அக்காவோட பெயர் மணி, மனோ இல்லை.” என்று அக்காவின் சார்பாக தம்பி பதிலளித்தான்.

“மனோவும் உன் அக்காவோட பெயர் தான்.” என்றான் உத்தம்.  

“இல்லவே இல்லை..மணி தான் அக்காவோட பெயர்..அக்காக்கு இரண்டு பெயரெல்லாம் கிடையாது.” என்று அர்ஜுன் பிடிவாதமாகச் சொல்ல,

“உன் அக்காக்கு இரண்டு பெயரெல்லாம் இல்லை..ஒரே பெயர் தான்.” என்று உத்தமும் சிறுவனோடு வாதம் செய்ய, உத்தமிடமிருந்து கையை விடுவித்துக் கொண்டு ஒடிப் போய் மணியைக் கட்டிக் கொண்டவன்,

“உன் பெயர் மணி தானே க்கா?” என்று மணியிடம் நேரடியாக கேட்க, அதற்கு அவள் ‘ஆமாம்’ என்று தலையசைக்க,

அர்ஜுனைப் போல் ஓடி வராமல், நிதானமாக நடந்து வந்த உத்தம், மணியை அணைத்து நின்றிருந்த அர்ஜுனின் கையில் தன்னுடைய கையை வைத்து, பார்வையை மணியின் முகத்தில் படர விட்டு,”உன் பெயர் மனோ தானே? என்கிட்டே அப்படிதானே சொன்ன.” என்று சொல்ல, மனோன்மணியின் மூச்சு நின்று போனது.