உத்தம் சொன்னதைக் கேட்டு காவேரிக்கு பக்கென்றானது. உடனே பார்வையைக் கணவனின் புறம் திருப்ப, சிவமூர்த்தியின் முகம் உணர்ச்சியற்று இருக்க, அவரது உள்ளமானது அழுது கொண்டிருக்க,‘ஒரே ரத்தம் தான் உசந்ததுன்னு பேச உனக்கு என்ன அருகதை இருக்கு?’ என்று மனைவியைக் கேட்க நாக்கு துடித்தது. ஆனால் இதுவரை அவரைக் கேட்டதில்லை. இனியும் கேட்கப் போவதில்லை. குற்ற உணர்வின் காரணமாக செய்யும் செயல்களால் பழையக் கணக்கை, பாதியில் நின்று போனதை, துரோகத்தை சரி செய்ய முடியாது. அந்த நொடியை மீட்டெடுக்க முடியாது. காலம் கடந்த பின் கொடுக்கும் மரியாதை, செய்யும் உதவி, அளிக்கும் ஆறுதல் எதற்குமே மதிப்பு கிடையாது. அவை உபயோகற்றவை என்று சிவமூர்த்திக்குத் தெரியும்.
அவனது சொற்கள் அவனுடைய பெற்றோரின் மனத்தில் ஏற்படுத்திய பூகம்பத்தை உணரவில்லை உத்தம்.
“நம்மளோட கார் எங்கே ப்பா?” என்று சிவமூர்த்தியிடம் விசாரித்தான்.
அவரது யோசனையிலிருந்து வெளியே வந்து,“அகிலா எடுத்திட்டுப் போயிருக்கா டா..லோகநாதனுக்கு நீ ஃபோன் போட்டேயா?” என்று அவனிடம் கேட்டார்.
“ஆமாம் ப்பா..பெங்களூர்லேர்ந்து முயற்சி செய்திட்டு இருந்தேன்..லைன் கிடைக்கலை..திருப்பதி வந்து இறங்கின பிறகு அவனைக் கூப்பிட்டு பிரயோஜனமில்லைன்னு டாக்ஸிலே வந்திட்டேன்.” என்றான்.
“அவனுக்கு நெட்வர்க இல்லையாம்..சம்மந்தி வீட்டு சைட்லே அழைக்கப் போயிருந்தாளாம் அகிலா..அங்கே சிக்னல் கிடைக்கலையாம்..திரும்ப வீட்டுக்கு வந்ததும் தான் உன்னோட மிஸ்ட் கால்லை பார்த்திருக்கறான்..உடனே எனக்கு ஃபோன் செய்து விசாரிச்சான்..அவனோட பேசிட்டு இருந்ததாலே தான் சாப்பிட வர லேட்டாகிடுச்சு.” என்று விளக்கினார் சிவமூர்த்தி.
“உங்க வசதிக்காக டிரைவரை மாசச் சம்பளத்துக்கு வேலைக்கு வைச்சிருந்தா நீங்க அவனை காரோட அக்கா வீட்டுக்கு அனுப்பி விட்டிருக்கீங்க..உங்களுக்கு ஒரு எமர்ஜென்ஸின்னா என்ன செய்வீங்க?” என்று கோபப்பட்டான் உத்தம்.
“ஒரு நாள் தானேடா..ஒண்ணும் ஆகாது.” என்று காவேரி கியாரண்டி கொடுக்க,
“நீங்க கடவுளா ம்மா?” என்று குரலை உயர்த்த,
“இல்லை டா..” என்ற காவேரியை இடையிட்டு,
“நோ..எந்த விளக்கமும் எனக்குத் தேவையில்லை..நம்மளோட கார் நம்ம வீட்லே தான் இருக்கணும்.” என்று சொன்னவன், சிறிது இடைவெளிக்குப் பின்,”டிரைவரும் தான்.” என்றான்.
“ஃபங்ஷன் வீட்லே கார் தேவைப்படும்னு அனுப்பி வைச்சது குத்தமா?” என்று காவேரி கேட்க,
“அது ஃபங்ஷன் வீடு..நம்ம கார் இல்லைன்னா வேறொரு காரை அவங்களாலே ஏற்பாடு செய்துக்க முடியும்..நம்ம வீட்லே அப்படி முடியுமா? நமக்கு தேவைன்னா யார் உங்களுக்கு டிரைவரோட கார் அனுப்பி வைப்பாங்க?” என்று உத்தம் கேட்க,
காவேரியிடம் பதிலில்லை. சிவமூர்த்தி தான்,”இந்த மாதிரி சந்தர்ப்பத்திலே உதவி செய்ய நரஸிம்மன்கிட்டே சொல்லி வைச்சிருக்கேன் டா.” என்றார்.
“நல்லவேளை உங்களுக்காவது புத்தி வேலை செய்யுதே.” என்று நக்கலாகச் சொல்லி விட்டு அவனது அறைக்குச் சென்று விட்டான் உத்தம். அதில் கடுப்பான காவேரி,
“என்னைக் காட்டேறிங்கறான்..கடவுளான்னு கேட்கறான்..இதெல்லாம் என்னென்னு அவனைக் கேட்க மாட்டீங்களா? இவ்வளவு வருஷம் கழிச்சு வந்திருக்கான்..இப்படித் தான் பெத்த அம்மாவை..” என்ற தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தவரிடம்,
“போதும்..இதோட நிறுத்திக்கோ..தூக்கம் வருது எனக்கு.” என்று சொல்லி விட்டு அறைக்குள் சென்று விட்டார் சிவமூர்த்தி. வேறு வழியில்லாமல் கணவரைத் தொடர்ந்து சென்றார் காவேரி.
“போதும டா..அக்கானாலே இதுக்கு மேலே சாப்பிட முடியாது.” என்று அர்ஜுனிடம் மறுத்துக் கொண்டிருந்தாள் மணி.
டிஃபன் பாக்ஸில் இருந்த உப்புமாவை பாளம் பாளமாக அவளது தட்டில் தள்ளிக் கொண்டிருந்தான் அர்ஜுன். சாப்பாடு மேஜையில் உத்தம் அவனுக்கு செய்த உபசாரத்தை இப்போது மணிக்குத் செய்து கொண்டிருந்தான். ஆனால் அங்கு போல் இங்கு பரிமாறுவதற்கு வித விதமான பண்டங்கள் இல்லாததனால் உப்புமாவையே கொஞ்சம் கொஞ்சமாக அக்காவின் தட்டில் வைத்து, ‘இதிலே இரும்புச் சத்து இருக்கு, புரதச் சத்து இருக்கு’ என்று உத்தமைப் போலவே சொல்ல, அழுகை, சிரிப்பு இரண்டும் ஒருங்கே வர, கண்ணீர் வழிய, சிரித்தபடி உப்புமாவை உண்டு கொண்டிருந்தாள் மணி.
அப்போது அறையினுள்ளே நுழைந்த மீனாம்மா, அவளது கண்ணீரைப் பார்த்து, படபடப்புடன்,”என்ன மணி? என்ன ஆச்சு?” என்று விசாரிக்க,
மணியின் கூற்றை ஆமோதிப்பது போல்,”மீனா பாட்டி, சாப்பிட்டீங்களா?” என்று சின்னவன் விசாரிக்க, மீனாவின் கண்கள் கலங்கின.
சின்னவனின் கன்னத்தை மென்மையாக தடவிக் கொடுத்து, அவரது கட்டிலில் அமர்ந்தவர்,”பெங்களூர்லே இருந்த கொஞ்ச நாள்லே சாப்பாடு ஆகிடிச்சான்னு பாட்டியை விசாரிக்கற அளவுக்கு பெரியவனா வளர்த்திட்டீங்களா நீங்க?” என்றார்.
“இன்னும் பெரியவனாகலை பாட்டி..இனிமேல் தான்..நீங்க நல்லா சமைச்சு கொடுங்க..நிறைய சாப்பிடுவேன்..உத்தம் அண்ணாவைப் போல பெரிசா வளர்ந்திடுவேன்.” என்று வெகுளியாக பதிலளித்தான் அர்ஜுன்.
இன்றைக்கு மதிய உணவு வேளையில் சாப்பாடு மேஜையில் நடந்த அனைத்தையும் அவரும் கேட்டுக் கொண்டு தானே இருந்தார். உத்தம் இங்கே இருக்கும் வரை அர்ஜுனுக்கு அந்த மேஜையில் இடமிருக்கும் அதற்கு பின் என்ன நடக்கும் என்று அவருக்குத் தெரியும். சிறுவனின் மனத்தை நோகடிக்க விரும்பாமல், உண்மையைச் சொல்லாமல்,”உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு..பாட்டி சமைச்சுக் கொடுக்கறேன்..எங்க உட்கார்ந்து சாப்பிட்டாலும் நல்லாச் சாப்பிட்டாதான் உடம்புக்கு தெம்பு கிடைக்கும்..ஆரோக்கியமா இருப்ப.” என்றார் மீனா.
‘சரி’ என்று தலையசைத்தவன், டிஃபன் டப்பாவை ஏந்தியிருந்த கையைக் காட்டி,”அக்கா, சீக்கிரம் சாப்பிடு..எனக்கு கை வலிக்குது.” என்றான் மணியிடம்.
“நீ பரிமாறினது போதும்..அக்காவே போட்டுக்கறேன்..நீ போய் படு..பழக்கமில்லாத அலைச்சல்லே உடம்புக்கு ஏதாவது வந்திடப் போகுது.” என்றாள்.
அவள் சொன்னபடி கட்டிலுக்கு சென்று கண்களை மூடி படுத்துக் கொண்டான் அர்ஜுன். ஆனால் உறக்கம் தான் வரவில்லை. அவருடைய கட்டிலில் சாய்ந்தமர்ந்திருந்த மீனா அப்படியே கண்ணசந்து விட்டார்.
மாடிப்படியின் கீழே குறுகலான இடத்தில் கதவு இருந்தாலும் உள்ளே விஸ்தாரமாக இருந்தது அந்த அறை. அறையின் கடைசியில் பின்பக்கம் செல்ல கதவு இருந்தது. அறையின் சுவரை ஒட்டி இரண்டு பக்கமும் எதிரும் புதிருமாக இரண்டு கட்டில்கள். அதில் வலதுப் பக்கம் குளியலறையை ஒட்டியிருந்த கட்டிலில் படுத்திருந்தான் ஆர்ஜுன். காற்றுக்காக பின்பக்கக் கதவை லேசாக திறந்து வைத்து விட்டு, மீதியிருந்த உப்புமாவை உண்டு முடிக்கும் முயற்சியில் இறங்கினாள் மணி.
இடதுப் பக்கச் சுவரில், மீனாம்மாவின் கட்டிலைத் தாண்டி இருந்த அலமாரியின் கீழ் தட்டில் சாப்பிடும் தட்டு, ஸ்டீல் டம்பளர், கப், ஸ்பூன், கரண்டி என்று மூவர் உணவருந்த தேவையான சாமான்கள் இருந்தன. அதே அலமாரியின் மேல் அடுக்குகளில் மூவரின் உடைகள் இருந்தன. மீனாம்மாவின் அடுக்கில் வெகு சில புடவைகள் இருக்க இவளுடைய அடுக்கில் கொஞ்சம் அதிகமாக இருந்தன. வேலைக்கு செல்ல ஆரம்பித்ததிலிருந்து புடவைகளின் எண்ணிக்கை அதிகமாகியிருக்க சுடிதாரின் எண்ணிக்கை குறைந்து போயிருந்தது. அந்தப் புடவைகளில் அவளுக்காக என்று வாங்கியவைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். ‘நல்லா இல்லை, வீட்டுக்கு வந்ததும் பிடிக்கலை, கலர் போயிடுச்சு, அளவு சரியில்லை..மூணு ப்லீட் கூட வைக்க முடியலை’ என்று அந்த வீட்டுப் பெண்கள் அவர்களுக்கு வேண்டாமென்று ஒதுக்கியவைகள் அனைத்தும் அவளது அலமாரியில் இடம் பிடித்திருந்ததால் அந்த் உடைகளைசுமார் புதுசு, பழசு, அரதப்பழசு என்று எளிதாக வகைப்படுத்தி விடலாம். மற்றபடி அந்த அறையில் பெரிதாக ஒரு பொருளுமில்லை. வீட்டு வேலைகளில் அவள் பிஸியாக இருக்கும் போது அர்ஜுன் அவனது பள்ளி சம்மந்தப்பட்ட வேலைகளை செய்ய அவனது புத்தகப் பையை அவர்களின் பிரயாணப் பையோடு கட்டிலின் கீழே தான் வைத்திருந்தாள்.
சாப்பிட்டு முடித்த பின் அந்தப் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு பின்பக்கக் கதவைச் சத்தமில்லாமல் திறந்து வெளியே சென்றாள் மணி. அதுவரை கண்களை மூடி உறங்க முயன்று கொண்டிருந்த அர்ஜுன் அதைக் கைவிட்டு அக்காவைத் தொடர்ந்து வெளியே சென்றான். அவனைப் பார்த்ததும்,
“என்ன டா தூங்கலையா?” என்று மணி கேட்க,
‘இல்லை’ என்று தலையசைத்த அர்ஜுன் அப்படியே சிறு தூரத்தில் இருந்த துணி துவைக்கும் கல்லின் மீது அமர்ந்து கொண்டான்.
“டேய்..வெய்யில் பொளக்குது..சுடும் டா.” என்று மணி அவளை மீறிக் கத்த, அர்ஜுன் அதை சட்டை செய்யவில்லை. பாத்திரங்களைக் கழுவி முடித்ததும் அங்கேயே வெய்யில் படும் இடத்தில் கவிழ்த்து விட்டு தம்பி அருகே அமர்ந்து கொண்டாள் மணி.
இருவரும் அமைதியாக தோட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். சில நிமிடங்களுக்கு முன் பார்த்த அர்ஜுன் காணாமல் போய் இருந்தான். பள்ளி, கல்லூரி விடுமுறைகளில் சித்தி வீட்டிற்கு சென்ற போது அவளது இடுப்பை விட்டு இறங்க மறுத்தவனைத் தூக்கிக் கொண்டு வேலை செய்தது, அவனோடு சேர்ந்துவிளையாடியது, அவனது மழலைப் பேச்சின் இனிமையில் மயங்கியது, அவனைப் போலவே பேசி அவனிடம் வம்பு செய்தது என்று சிறிது வயது அர்ஜுனோடு அவளெதிரே அமைதியாக அமர்ந்திருந்த அர்ஜுனோடு ஒப்பிட்டு பார்த்தாள் மணி. அவளைப் போலவே அவனும் மாறிப் போனதை நினைத்து வேதனை அடைந்தாள்.
இதுவரை நடந்த மாற்றங்கள் போறாதென்று இனிச் சாரதியினால் அவர்களின் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் வரப் போகிறதோ என்று எதிர்காலத்தைப் பற்றி யோசித்தபடி அமர்ந்திருந்தாள் மணி. தென்னை, மாங்காய், கொய்யா, பாதாம் மரங்கள் வெளிச் சுவரை ஒட்டி இருந்ததால் இவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் வெய்யிலின் வீர்யம் அதிகமாக இருந்தது. அவர்களைச் சுற்றி பூச் செடிகளும், எலுமிச்சை, மாதுளை செடிகளும் இருந்தன. சற்று தள்ளி இருந்த பெரிய கிணற்றை அடுத்து காய்கறி பாத்தி அமைக்கப்பட்டிருந்தது. தோட்டம், வீடு இரண்டையும் பரமாரிக்க ஆழ்க்குழாய் நீரை உபயோகித்தனர். கிணற்று தண்ணீரில் தான் சமையல் வேலை நடக்கிறது. குடிப்பதற்குத் தனியாக குடிநீர் வரவழைத்தனர். இரண்டு பெண்கள், அவர்களின் குடும்பம் என்று கோடை விடுமுறையில் வீடு முழுக்க விருந்தினர்கள் நிறைந்து இருக்கும் போதும் தண்ணீர் பஞ்சமே இருக்காது. வீட்டிற்கு முன்புறத்தில், போர்ட்டிக்கோவை அடுத்து இருந்த ஷெட்டில் பெரிய இன்வர்ட்டரை பொருத்தி இருப்பதால் மின்சாரம் இல்லாத நேரங்களில் கூட உணவு, உறக்கம் தடை இல்லாமல் நடைபெறும். இதே போல் சகல வசதியுடன் இருந்த சாரதியின் வீட்டிற்கு தாவியது மணியின் மனது. கடந்த சில வாரங்களாக அங்கே தங்கி, அவன் வீட்டின் செயல்பாட்டைக் கவனித்திருந்ததால் வாழ்க்கையை லேசாக்க, சொகுசாக மாற்ற காசு ஒன்று போதும் என்ற முடிவிற்கு வந்திருந்தாள் மணி.
சாரதியும் அவளும் ஒரே இரத்தம் என்றாலும் இருவரின் குணமும் வேறென்பதால் அவர்களுக்குள் கொஞ்சம் கூட பொருந்திப் போகாது. அவன் துணை போன்றதொரு வாழ்க்கைத் துணை அவளுக்கு கிடைத்தால், அவனைச் சந்தோஷப்படுத்துவதிலேயே அவளது வாழ்க்கை முடிந்து போய் விடும். அவளுடைய சூழ்நிலையில் அவளுக்குப் பிடித்தமானதொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வாய்ப்பும் கிடைக்கப் போவதில்லை. இதே போல் இந்த வீட்டில் அடுத்த பத்து வருடங்களை அவள் கழித்தால் தான் அர்ஜுனின் வாழ்க்கை வளமடைய வாய்ப்பு கிடைக்கும். அதன் பின் அவனும் சாரதியைப் போல் சுயநலமாக மாறிப் போனால் அவளது வாழ்க்கை என்னவாகும் என்ற கேள்வி வர, அது பயத்தைக் கொடுக்க, கேள்வியை அப்படியே மனத்தில் புதைத்து விட்டு, தோட்டத்திற்கு தண்ணீர் விடும் ஹோஸ் குழாயைக் கையில் எடுத்துக் கொண்டாள் மணி.
உடனே, தண்ணீர்க் குழாயைத் திறந்து விட்டு அவளுடன் சேர்ந்து தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்ச ஆரம்பித்தான் அர்ஜுன். அவனுக்குப் பிடித்தமான வேலை இது என்பதால் சிறிது நேரத்திற்கு பிறகு செடிகளைப் போலவே அக்கா, தம்பி இருவரும் தண்ணீரில் நனைதிருந்தனர். அர்ஜுனின் சிரிப்பு சத்தம், மணியின் அதட்டல் என்று அந்த மந்தமான மதிய வேளை மகிழ்ச்சியான வேளையாக மாறியிருந்தது. அக்கா, தம்பி இருவரும் எழுப்பிய ஓசையில் எழுந்து விட்டார் மீனாட்சி. சிறிது நேரம் அசையாமல் அதே இடத்தில் அமர்ந்திருந்தவர் வலுவைத் திரட்டிக் கொண்டு அழுக்குத் துணிகளைத் துவைக்க பாத் ரூமிற்குச் சென்றார்.