“அந்தப் பையன்..அர்ஜுனுக்கு.” என்று அவனுடைய அம்மாவிற்கு பதிலளித்தவன், தட்டோடு திரும்பிய மணியிடம்,”எங்கே உன் தம்பி..போய் அவனை அழைச்சிட்டு வா.” என்றான்.
எதற்காக அர்ஜுனை அழைத்து வர வேண்டுமென்று அவளுக்குப் புரியவில்லை. அதுவும் வீட்டினர் சாப்பிடும் போது அந்தப் பக்கம் அவர்கள் யாரும் வருவது காவேரி மாமிக்கு பிடிக்கவே பிடிக்காது.
தட்டை மேஜை மீது வைத்து விட்டு,“அவன் எதுக்கு இப்போ?” என்று தயக்கத்துடன் கேட்க,
“சாப்பிடத் தான்.” என்று பதில் அளித்தவன் அப்படியே அந்தத் தட்டை அவனருகே வைத்து, அர்ஜுன் அமர நாற்காலியை வெளியே இழுத்தான் போட்டான்.
அதிர்ச்சியில் நெஞ்சடைக்க கணவரை முறைத்தபடி காவேரி அமர்ந்திருக்க, மகிழ்ச்சியில் நெஞ்சடைக்க அமர்ந்திருந்தார் சிவமூர்த்தி. அவரது கடைசி காலம் உத்தமின் உபயத்தில் உத்தமக் காலமாக மாறப் போகிறது என்று அவருக்குத் தோன்றியது. எனவே, மனைவி அவரை முறைப்பது தெரிந்தாலும் அந்தப் பக்கம் பார்க்காமல் தனக்கு வேண்டியதை தட்டில் பரிமாறிக் கொண்டார்.
உத்தமின் கட்டளைக்கு அடிபணியாமல் அதே இடத்தில் அசையாமல் மாமியின் முகத்தை அச்சத்தோடு பார்த்தபடி நின்றிருந்தாள் மணி. அந்த நொடி காவேரி பெருமையாக உணர்ந்தார். அவரை மீறி அந்த வீட்டில் எதுவும் நடக்காது என்று திண்ணமாகத் தோன்ற அவரும் அவருக்கு வேண்டியதைப் பரிமாறிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தார்.
மணியைச் சட்டை செய்யாமல்,”அர்ஜுன்” என்று சத்தமாக விளித்தான் உத்தம். சில நொடிகள் கழித்து அறை வாசலில் வந்து நின்ற அர்ஜுனை சைகையில் ‘வா’ என்று அழைத்தான் உத்தம். மெல்ல சாப்பாடு மேஜை அருகே வந்தவனின் கையைப் பிடித்து அவனருகில் இருந்த நாற்காலியில் உட்கார வைத்தான் உத்தம். அதைப் பார்த்து பெண்கள் இருவரின் விழிகளும் விரிந்தன. மணியின் விழி வியப்பில் விரிய, காவேரியின் கண்கள் கோபத்தில் விரிந்தது.
“என்ன சாப்பிடற?” என்ற உத்தமின் கேள்விக்குப் பதில் அளிக்காமல் அவனெதிரே இருந்த பதார்த்தங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.
உடனே,”அவனுக்கு நீயே போட்டுக் கொடு.” என்று மணியிடம் சொல்லி விட்டு உண்ண ஆரம்பித்தான்.
இனியும் அமைதியாக நிற்க முடியாதென்று உணர்ந்த மணி அர்ஜுன் அருகே வந்து அவனுக்கு விருப்பமான ரசம் சாதத்தை பிசைந்து கொடுத்து விட்டு கொஞ்சம் போல் பீர்க்கங்காய் பருப்பு கூட்டை வைத்தாள். ஒரு கண்ணை அர்ஜுன் தட்டில் வைத்திருந்த உத்தம், உருளைக் கிழங்கு ரோஸ்ட்டைக் காட்டி,”மீனாம்மாவோட உருளைக் கிழங்கு ரோஸ்ட் மொரு மொருன்னு டேஸ்ட்டியா இருக்கும்.” என்றான்.
அதற்கு,’வேணாம்’ என்று அர்ஜுன் தலையசைக்க,”அவனுக்குக் காரம் ஒத்துக்க மாட்டேங்குது டா..கொஞ்சம் கொஞ்சம் கொடுத்துப் பழக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்கார்..ஆனா இவன் கொஞ்சம் கூட எடுத்துக்க மாட்டேங்கறான்.” என்றார் சிவமூர்த்தி.
“டாக்டர் சொல்றதைக் கேட்டா தான் உடம்பு குணமாகும்..நல்லா சாப்பிட்டா தான் என்னை மாதிரி உயரமா, ஸ்ட்ராங்கா வளர முடியும்.” என்றான்.
உடனே, உத்தமையும் உருளைக் கிழங்கையும் மாறி மாறிப் அர்ஜுன் பார்க்க, கரண்டியால் கொஞ்சம் கறியை அவனது தட்டில் போட்ட உத்தம், அப்படியே இரண்டு அப்பளங்களையும் வைக்க, அதில் வியந்து போனவன் ஆச்சரியத்துடன் உத்தமை நோக்க,”அந்த ரசம் சாதத்திலே அப்பளத்தை நல்லா நொறுக்கிப் போட்டு சாப்பிட்டா சூப்பரா இருக்கும்..அப்பளம் கூட உடம்புக்கு நல்லது..இந்த வயசுலே நீ எத்தனை வேணும்னாலும் சாப்பிடலாம்..ஆனா நல்ல சமாசரம் கூட என்னை மாதிரி பெரியவன் ஆன பிறகு கணக்கு பண்ணி தான் சாப்பிடணும்..உன்னை மாதிரி சின்னவனா இருக்கற போது நான் கண்டபடி சாப்பிட்டு இருக்கேன்.” என்று நீளமாக விளக்கம் கொடுத்தவன், மணியின் புறம் திரும்பி,”தக்காளி வடகம் இருக்கா?” என்று கேட்டான்.
அர்ஜுனை அருகில் அமர்த்தி அவர்கள் வீட்டுப் பிள்ளை போல் அவன் காட்டிய பரிவைப் பார்த்து பயந்து போயிருந்தாள் மணி. அதே சமயம் காலையிலிருந்து உணவு உண்ணாததால் உலர்ந்து போயிருந்த மணியின் நாவில் உத்தமின் ரசம் சாதம் வர்ணனையைக் கேட்டு எச்சில் ஊற, அவசரமாக அதை விழுங்கியவள், மிகவும் சிரமப்பட்டு,”இருக்கு” என்று ஒரு வார்த்தையில் பதிலளிக்க,”பொரிச்சு எடுத்திட்டு வா.” என்று கட்டளையிட்டான்.
அடுத்து வந்த நிமிடங்களில் அவனுக்காக தயாரிக்கப்பட்டிருந்த விருந்திலிருந்து ஒரு பதார்த்தம் விடாமல் அனைத்தையும் அர்ஜுனுடன் பகிர்ந்து கொண்டான் உத்தம். விரைவாக சாப்பிட்டு முடித்தாலும் மேஜை நாகரிகத்தை கடைப்பிடித்து அர்ஜுனுக்கு கம்பெனி கொடுத்தான். காவேரிக்கு சாப்பாடே இறங்கவில்லை. சிரமப்பட்டு சாப்பிட்டு முடித்தார். சிவமூர்த்திக்கு வயிற்றில் சில பிரச்சனைகள் இருந்ததால் நிதானமாக தான் உண்டார்.
இறுதியில் அவருக்காக நீர் மோர் கொண்டு வந்த மணியிடம்,”இவனுக்கும் சின்ன கிளாஸ்லே மோர் கொண்டிட்டு வா.” என்றான் உத்தம்.
‘வேண்டாம்’ என்று மறுத்த அர்ஜுனிடம்,”இதை குடிச்சா வயிற் சரியா இருக்கும்..காரம் சாப்பிட்டாலும் பிராப்ளம் வராது.” என்று சொல்லி மொத்தத்தையும் குடிக்க வைத்ததான் உத்தம்.
அன்றைய விருந்தின் முடிவில் அதை உண்ட மூவரும் வெவ்வேறு சுவையை உணர்ந்தனர். சிவமூர்த்திக்கு இனிப்பாக உணர, காவேரிக்கு கசப்பாக இருந்தது. வெகு திருப்தியாக உணர்ந்தான் அர்ஜுன். அனைவரும் சென்ற பின் மேஜையை சுத்தம் செய்து விட்டு, மீனாம்மாவிடம் மதிய உணவை மறுத்து விட்டு அவளது அறைக்கு வந்தாள் மணி. மீனாம்மாவின் கட்டிலில் வயிற்றை தடவியபடி அமர்ந்திருந்தான் அர்ஜுன்.
“என்ன டா அங்கே உட்கார்ந்திட்டு இருக்க..கொஞ்ச நேரத்திலே மீனா பாட்டி வந்திடுவாங்க..தூக்கம் வர்ற மாதிரி இருந்தா இங்கே வந்திடு.” என்றாள்.
அதற்கு,“வயிற் டோம்னு இருக்கு க்கா..அண்ணா சொன்னது உண்மையா க்கா..நல்லா சாப்பிட்டா சீக்கிரமே பிக் ஆகிடுவேனா க்கா.” என்று கேட்டான் சிறுவன்.
“நல்லாச் சாப்பிட்டா மட்டும் போதாது சுறுசுறுப்பா இருக்கணும்..ஓடணும், ஆடணும், விளையாடணும், நிறைய சிரிக்கணும் இல்லைன்னா வயிற் மட்டும் தான் பெரிசாகும்..பிள்ளையார் மாதிரி.” என்று சொல்லி தம்பியின் கரத்தை வயிற்றிலிருந்து அகற்றி அதில் முத்தம் ஒன்றை வைத்தாள் அக்கா. அக்காவின் இடுப்பைக் கட்டிக் கொண்டு அவனது அன்பை வெளிப்படுத்தினான் தம்பி.
சில நொடிகளுக்கு அவனுடைய தலையைக் கோதி விட்டு அவனுக்கு அவளது அன்பினைக் கடத்தியவள்,“அக்காக்கு பசிக்குது டா..சாப்டிட்டு வரேன்..இரண்டு பேரும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கலாம்.” என்று சொல்லி இடுப்பைச் சுற்றி இருந்த அவனது கரத்தை அகற்றி விட்டு எதிரே இருந்த அவளது கட்டிலுக்குச் சென்றாள் மணி.
அவளது கட்டிலுக்கு கீழே பெங்களூரிலிருந்து அவள் எடுத்து வந்த உணவுப் பை இருந்தது. அதை எடுத்து கட்டில் மீது வைத்தவளிடம்,”நீயும் என் பக்கத்திலே உட்கார்ந்து சாப்பிட்டிருக்கலாமே க்கா.” என்றான் அர்ஜுன்.
அதற்கு என்ன எதிர்வினை ஆற்றுவதென்று மணிக்குத் தெரியவில்லை. மதிய உணவு வேளையில் உத்தமின் நடவடிக்கைகள் அவளது மனத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தன. அர்ஜுனை அவர்கள் வீட்டுப் பிள்ளை போல் அவன் நடத்தியதால் அடுத்து என்ன நடக்குமோ என்ற கலக்கம் ஏற்பட்டிருந்தது.
அதே கலக்கத்தில் தான்,
“என்ன டா நினைச்சிட்டு இருக்க? அந்தப் பையனை மேஜைலே உட்கார்த்தி வைச்சு உனக்காக செய்த விருந்தை அவனுக்கு ஊட்டி விட்டிட்டு இருக்க..அவன் என்ன நம்ம வீட்டுப் பையனா? ஹரியா அவன்? அகிலா காதுக்கு இந்த விஷயம் போச்சுன்னா அவ்வளவு தான்..ஆடித் தீர்த்திடுவா.” என்று மகனிடம் கத்தி, ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தார் காவேரி.
அத்தனையையும் அமைதியாகக் கேட்டவன், கடைசியில், சிவமூர்த்தியிடம்,”அப்பா, எந்தச் சூழ்நிலைலே அவன் நம்ம வீட்டுக்கு வந்தான்னு எனக்குத் தெரியாது..நம்ம வீட்டுக்கு வந்த பிறகு அவன் பட்டினியா படுத்திருக்க மாட்டான்..வேளா வேளைக்கு அவனுக்கு சாப்பாடு போடறது பெரிய விஷயமில்லை..ஆனா அந்தப் பையனை காக்க வைச்சு அவன் பசியோடு இருக்கற போது நாம சாப்பிடறது அரக்கத்தனம்.” என்றான்.
அந்த விளக்கத்தை கேட்டு காவேரிக்கே ஒரு மாதிரி ஆகிப் போனது. மணியும் மீனாட்சியும் வேலைகளை முடித்த பின்னர் தான் உணவு அருந்தவார்கள். அதே பழக்கத்தில் தான் அர்ஜுனும் மணியோடு சேர்ந்து கடைசியாக உண்வு அருந்துவது வழக்கமாகி இருந்தது. ஒரு நாளும் ஒரு வேளையும் வீட்டினர் உண்ணும் முன் அவனுக்கு உணவு அளித்ததில்லை. விருந்தினர்கள் வந்து விட்டால் மணியின் உணவு நேரம் என்று ஒன்று கிடையவே கிடையாது அந்த நேரத்தில் அவன் எப்போது உணவை முடித்துக் கொள்கிறானென்று இதுவரை அவர் யோசித்தது கூட கிடையாது. இத்தனை வருஷக் காலமாக மணியின் பொறுப்பை சரி வர செய்தவருக்கு இந்தச் சிறுவனால் கெட்டப் பெயர் வரக் கூடாதென்று முடிவு செய்து,”உங்கப்பா படுக்கைலே விழுந்ததிலேர்ந்து நான் ஒரேயொரு ஆள் எல்லாத்தையும் பார்க்க வேண்டியிருகு..அந்தப் பொடியன் எப்போ சாப்பிட்டான்? எதைச் சாப்பிட்டான்னு அவன் பின்னாடி ஓடிட்டு இருக்க முடியுமா? அவனை அழைச்சிட்டு வந்த அக்காகாரி தான் பார்த்துக்கணும்.” என்று மணியைக் குற்றவாளி ஆக்கினார் காவேரி.
“நான் மாடியோட இருக்கேன்..கீழே வரும் போது அவனை இரண்டு வார்த்தை, ஸ்கூல் போனேயா? ஹோம்வர்க் செய்தேயான்னு விசாரிப்பேன் டா..மணியோட போறான், வரான்..அவ பார்த்துகறதுனாலே நான் தலையிடறதில்லை..அப்படியே நான் அந்தப் பையனுக்கு ஆதரவா பேசிட்டா அகிலா..” என்றவரின் பேச்சை இடைமறித்து,”அகிலாவை எதுக்கு இழுக்கறீங்க..அவ சொன்னதிலே எந்தத் தப்பும் இல்லை..நம்ம ரத்தம் நமக்கு உசத்தி தானே டா?” என்று முழுக் கதையும் சொல்லாமல் மகனிடம் முடிவு மட்டும் கேட்டார்.
அதற்கு,“சில பேரோட உடம்புலே ஓடறது மனுஷ ரத்தமான்னு சந்தேகம் வருது ம்மா..மனுஷ வர்கத்திலேயே சேர்க்க முடியாத மிருகங்களோட வாழ்ந்திட்டு இருக்கோம்..ஒரே ரத்தம், நம்ம ரத்தம் அது தான் உசத்தி கிசத்தின்னு மனுஷ ரத்தத்தை கரைச்சு குடிச்ச கைதேர்ந்த ஹிமட்டோபதாலஜிஸ்ட் (hematopathologist) மாதிரி பேசாதீங்க.” என்றான் புருஷோத்தமன்.
உடனே, கணவனின் புறம் திரும்பி,”என்னை என்னங்க சொல்றான் இவன்?” என்று காவேரி கேட்க,
அவரருகே வந்து அவருடைய தோள்களின் மீது கைகளை வைத்து,”அங்கே எதுக்கு கேட்கறீங்க..என்கிட்டே கேளுங்க..நான் சொல்றேன்.” என்று உத்தம் சொல்ல,
“சரி நீயே சொல்லு.” என்று காவேரி அனுமதி அளிக்க,
“ரத்தக்காட்டேறின்னு சொன்னேன்.” என்றான்.
“டேய்..உன்னைப் பெத்த அம்மாவையே இரத்தக்காட்டேறின்னு சொல்வேயா” என்று செல்லமாக மகனை காவேரி இரண்டு அடி அடிக்க,
“நீங்க இரத்தக்காட்டேறி இல்லைன்னா நம்ம ரத்தம் தான் உசத்தி, கிசத்தின்னு ஒரு வார்த்தை இனி உங்க வாய்லேர்ந்து வரக் கூடாது.” என்று வீட்டிற்கு வந்த சில மணி நேரத்திலேயே உத்தமநீதியின் சரிநிகர் சமான விதியை அமுல்படுத்தினான் புருஷோத்தமன்.