அத்தியாயம் – 7

அரக்கோணம் டவுன் எல்லைக்கு வெளியே இருந்த குடியிருப்பு பகுதி ஒன்றை அடைந்தது டாக்ஸி. தனி வீடுகள், சில அடுக்குமாடி கட்டிடங்கள், ஓட்டு வீடுகள், காலி மனைகள் என்று கலவையாக இருந்தது அந்தப் பகுதி. மெயின் ரோட்டில் ஸுப்பர் மார்க்கெட், ஹார்ட்வேர், துணிக் கடை, செங்கல், சிமெண்ட், துணிக் கடை, சின்ன உணவகம், மருந்தகம் என்று வளர்ந்து வரும் பகுதிக்குத் தேவையான கடைகள் இருந்தன. அதிலிருந்து பிரிந்து சென்ற கிளைச் சாலையில் சிறு தூரம் சென்ற பின் இரண்டு பக்கமும் பிரிந்த அகலமான சாலையின் வலதுப் பக்கத்தில் திரும்பியது வண்டி. கான்க்ரீட் சாலையின் இரு புறத்திலும் சிறிதும் பெரிதுமாக மாடியுடன் கூடிய தனி வீடுகள் இருந்தன. தெருவின் கோடியில் இருந்த பெரிய வீட்டின் முன் டாக்ஸி நின்றது. கேட்டிலிருந்து உள்ளடக்கி இருந்தது வீடு. முதல் மாடி பால்கனி கதவருகே நின்றபடி ஃபோன் பேசிக் கொண்டிருந்த காவேரிக்கு டாக்ஸியிலிருந்து இறங்கிய மூவரையும் பார்த்தவுடன் திக்கென்றானது. 

மணியை அவனுடன் அழைத்து வர வேண்டுமென்று மகனைக் கட்டாயப்படுத்தியது அவர் தானென்றாலும் ஒரே இருக்கையில் அவளுடன் அமர்ந்து பயணித்திருக்கிறான் என்பதை அவரது மனம் ஏற்றுக் கொள்ள மறுத்தது. டாக்ஸியின் பின் இருக்கையிலிருந்து மகனிற்கு அடுத்து மணி இறங்குவாளென்று அவர் எதிர்பார்க்கவில்லை. ‘என்ன செய்யறான் இவன்? எதுக்கு அவ பக்கத்திலே உட்கார்ந்து வந்திருக்கான்.’ என்று அவரது மனது எச்சரிக்கை அடைந்தது. மாடியில் இருந்தபடி பார்வையாலேயே மகன், மணி இருவரையும் காவேரியின் பார்வை தொடர்வதை இருவரும் உணரவில்லை. உணரும் நிலையில் மணி இருக்கவில்லை. உணர்ந்திருந்தாலும் அதைப் பொருட்படுத்தி இருக்க மாட்டான் புருஷோத்தமன்.

கேட்டைத் திறந்து கொண்டு மூவரும் உள்ளே வர, சில நொடிகள் கழித்து அழைப்பு மணி ஒலிக்க, அந்த ஓசையில், மாடியில் அவரது அறையில் மதிய தூக்கத்திலிருந்த சிவமூர்த்தி விழித்துக் கொண்டார். 

பால்கனி கதவை மூடி விட்டு அறைக்குள் வந்த காவேரி,”உத்தம் வந்திட்டான்.” என்று கணவருக்கு தகவல் கொடுத்தார்.

கீழ் தளத்தில், வாசலில் அவர்கள் வண்டி இல்லாததனால் வெறிச்சோடிக் கிடந்த போர்ட்டிக்கோவை யோசனையோடு பார்த்தபடி உத்தம் இருக்க, அக்காவும் தம்பியும் மூடியிருந்த வாசல் கதவைப் பார்த்தபடி நின்றிருந்தனர். சில நொடிகளில் வாசல் கதவு திறக்க, அவனது முகத்தை திருப்பி, கதவைத் திறந்த மீனாட்சியிடம் பெரிய புன்னகை சிந்திய உத்தம்,”அம்மா வெளியே போயிருக்காங்களா?” என்று விசாரித்தான்.

“இல்லை தம்பி..மேலே தான் இருக்காங்க..நீங்க எப்படி இருக்கீங்க?” என்று விசாரித்தார் மீனாட்சி.

“நல்லா இருக்கேன்..வீடு தேடிட்டு இருக்கேன்..நல்ல வீடா கிடைச்சதும் உங்களை என்னோட பெங்களூருக்கு அழைச்சிட்டுப் போயிடுவேன்..எனக்கு அலுத்துப் போகற வரை நீங்க அங்கே என்னோட தான்.” என்றான் உத்தம்.

அதற்கு சிறிய புன்னகையைப் பதிலாக அளித்தார் மீனாட்சி. 

இந்த உரையாடல் நடந்து கொண்டிருந்த போது அர்ஜுனோடு வீட்டிற்குள் சென்றிருந்தாள் மணி. வரவேற்பறையைத் தாண்டி அதன் ஒருபுறத்தில் இருந்த சமையலறைக்கு எதிர்புறத்தில் சாப்பாடு மேஜை அருகே, மேல் தளத்திற்கு சென்ற மாடிப்படியின் கீழே இருந்த கதவைத் திறந்து கொண்டு அவளுடைய பைகளோடு மணி உள்ளே செல்ல, அவளைத் தொடர்ந்து அர்ஜுன் செல்ல, மாடியிலிருந்து இறங்கி வந்தார் காவேரி.

அவர் வருவதைப் பார்த்து சமையலறைக்குள் அடைக்கலமாகி விட்டார் மீனாட்சி.

காவேரி கீழே வருவதற்குள் அவனது பையை சோஃபா மீது வைத்து விட்டு வேகமாக மாடிப்படியில் ஏறிய உத்தம், அவரை நெருங்கியவுடன், தோளோடு அவரை அணைத்து, கன்னத்தில் முத்தமிட்டு,”வீடு ஃபிக்ஸ் ஆனதும் நீங்களும் அப்பாவும் பெங்களூர் வந்திடுங்க..மீனாம்மவும் உங்களோட வந்திடுவாங்க..ஓகேவா?” என்று கேட்டான்.

மகனது உற்சாகமான பேச்சில் சிறிது நேரத்திற்கு முன் காவேரியின் மனத்தில் இருந்த உறுத்தல் காணாமல் போனது. 

“எப்படி டா நாங்க அங்கே வர முடியும்? திவ்யா கல்யாணம் முடிஞ்சு தான் இங்கேயிருந்து நான் நகர முடியும்.” என்றார் காவேரி.

“இந்த மாதிரி அகிலா அக்கா சொன்னா அர்த்தமிருக்கு.” என்றான் உத்தம்.

“என்ன டா அர்த்தமில்லாம சொல்லிட்டேன்? நான் பேசறது எல்லாம் உனக்கு அப்படித் தான் தோணுது.” என்று மகனைக் கோபித்துக் கொண்டார் காவேரி.

“டாக்ஸி புக் செய்து திரும்பவும் திருப்பதி போயிடவா?” என்று மகன் கேட்க, 

“திருப்பதியா?” என்று காவேரி கேள்வி கேட்க, 

“ஆமாம்..சென்னை ஃபிளைட்லே டிக்கெட் கிடைக்கலை.” என்றான் உத்தம்.

“ஃபிளைட்லே வந்தீங்களா?” என்று காவேரி அதிர்ச்சியாக,

“அவசரமா வரணும்னு அது ஒண்ணு தான் வழி..வேற ஏதாவது இருந்தா சொல்லுங்க அடுத்த முறை அதிலே அழைச்சிட்டு வரேன்.” என்று கிண்டலாக பதிலளித்தான் உத்தம்.

”சரி..சரி…அப்பா விழிச்சிட்டார்..அவரைப் பார்த்துப் பேசிட்டு வா சாப்பிடலாம்.” என்று மகனை மேலே அனுப்பி வைத்து விட்டு கீழ் தளத்திற்கு வந்தார் காவேரி. 

சமையலறையில் மீனாட்சி பிஸியாக இருந்ததால்,”மணி” என்று குரல் கொடுத்தார் காவேரி.

”மணி.” என்று மீண்டும் உரக்க அழைக்க, அவசர அவசரமாக சமையலறைக்கு வந்தாள் மணி.

“எத்தனை முறை கூப்பிடறது..உள்ளே என்ன செய்திட்டு இருக்க? அலுங்காம குலுங்காம ஃபிளைட்லே வந்திட்டு..மீனாட்சிக்கு உதவி செய்யாம அறைக்குள்ளே அடைஞ்சிருக்க.” என்று மணி மீது பாய்ந்தார் காவேரி. 

அதற்கு என்ன பதில் சொன்னாலும் விமானத்தில் வந்ததை இழுத்து வைத்து வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பார் என்பதால், உடனே,”சாரி மீனாம்மா.” என்று மீனாட்சியிடம் மன்னிப்பு கேட்ட மணி மிக்ஸி அருகே இருந்த பாத்திரத்தைச் சுட்டிக் காட்டி,”மையா அரைச்சிடவா?” என்று கேட்க, ‘ஆமாம்’ என்று தலையசைத்தார் மீனாட்சி.  

அதற்கு மேல் அங்கே நின்றால் வாயிலிருந்து வார்த்தைகள் விழுந்து விடுமென்பதால் வரவேற்பறைக்கு சென்று விட்டார். மகனது பையை ஒதுக்கி வைத்து விட்டு சோஃபாவில் அமர்ந்தவர் மனத்தில் மகன் சொன்ன தகவல் தான் உலா வந்து கொண்டிருந்தது.’என்ன ஒரு வார்த்தை கேட்காம எதுக்கு இப்படி அவளையும் விமானத்திலே இழுத்திட்டு வந்திருக்கான்? அவளுக்கு எதுக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுத்திருக்கான்?’ என்று தப்பாக யோசித்துக் கொண்டிருந்தவருக்கு புரியவில்லை மணிக்கு இல்லை அவருக்கு, அவருடைய வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கான் அவரது மகனென்று.

 சில நிமிடங்கள் கழித்து, குளித்து ஃப்ரெஷ்ஷாக அவனது கைப்பேசியுடன் அவர் அருகில் வந்து அமர்ந்தான் உத்தம்.

அதுவரை மனத்தில் உழன்று கொண்டிருந்த அனைத்தும் மகனைப் பார்த்ததும் காணாமல் போக,“அப்பாவைப் பார்த்தேயா?” என்று அவனிடம் விசாரித்தார் காவேரி.

“ம்ம்..ஃபோன் வந்திச்சு..பேசிட்டு வரேன்னு சொன்னார்.” என்று பதில் அளித்தவனும் அவனுடைய ஃபோனில் ஐக்கியமானான்.

அதே நேரம் சமையலறையில் மீனாட்சிக்கு உதவி செய்து முடித்த மணி ஏற்கனவே தயாராகியிருந்த உணவு பொருள்களை ஒவ்வொன்றாக கொண்டு வந்து சாப்பாடு மேஜையில் வைத்தாள். தப்பி தவறி கூட வரவேற்பறை பக்கம் பார்வையைக் கொண்டு செல்லவில்லை. ஓர் அடி பிசகாமல் பல வருடப் பழக்கத்தில் சமையலறைக்கும் சாப்பாடும் மேஜைக்கும் இடையே பம்பரமாக சுழன்றாள்.

கடைசியாக, சாப்பிடும் தட்டை மேஜையில் வைத்து விட்டு,”மாமி, சாப்பிட வாங்க.” என்று காவேரியை அவள் அழைத்த போது மாடியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தார் சிவமூர்த்தி.

“வாடா சாப்பிடலாம்.” என்று மகனை காவேரி அழைக்க, கண்களைக் கைப்பேசிக்கு கடன் கொடுத்து விட்டு அவனுடைய அம்மாவைத் தொடர்ந்தபடி சாப்பாடு மேஜைக்கு வந்தான் உத்தம்.

“மணி, மோர் கலந்திட்டு வா ம்மா.” சிவமூர்த்தி.

“எதுக்கு இப்போவே மோர்? முதல்லே சாப்பாடு சாப்பிடுங்க..கடைசியா மோர் குடிங்க.” என்று கணவருக்குக் கட்டளையிட்ட காவேரி,”இப்போ கொண்டு வராதே.” என்று மணியிடம் சொன்னவர், மேஜையில் இருந்த உணவுப் பொருள்களை நோட்டம் விட்டபடி”மீனா.” என்று கத்த, பதற்றத்துடன் சமையலறையிலிருந்து மீனா வர,”அப்பளம் பொரிக்கலையா? அதையும் நான் சொல்லணுமா..விருந்து சாப்பாடுன்னு சொன்னா போதாதா? பிள்ளை வீட்டுக்கு வரான்னு நீங்களே செய்ய வேணாம்.” என்று பொரிந்தார்.

“இதோ.” என்று வேகமாகச் சமையலறைக்குச் சென்றார் மீனா. அவரைப் பின் தொடர்ந்து சென்ற மணி,”நீங்க எண்ணெய் வைங்க நான் பொரிச்சு எடுக்கறேன்.” என்று அப்பளம் இருந்த டப்பாவை எடுக்க ஸ்டூல் மீதேறினாள்.

அப்பளம், வடகம், வத்தல் அனைத்தையும் அலமாரியின் மேல் தட்டில் வைத்திருப்பதால் அதை எடுக்க மீனாட்சிக்கு உதவி தேவைப்படும். சில வருடங்கள் முன்பு வரை அவர் தான் ஸ்டூல் மீது ஏறி நின்று அந்த அடுக்கை சுத்தம் செய்வார். இப்போது பிடிமானத்தோடு கூட ஸ்டூலில் மீது ஏறி நிற்க அவரால் முடியவில்லை. அதனால் தான் அவர் அப்பளம் பொரிக்கவில்லை என்று மணிக்குப் புரிந்தது. 

அடுத்த சில நிமிடங்களில பரபரவென்று தக்காளி, அரிசி, உளுந்து என்று வகைக்கு சிலவற்றை பொரித்து வெளியே எடுத்துச் சென்றாள் மணி.

விருந்தை ஆரம்பிக்காமல் அப்பளம் வருவதற்காக காத்திருந்தனர் வீட்டினர். 

“அப்பளம் வந்திடுச்சு டா.” என்று காவேரி சொன்னதும் அவனது கைப்பேசியை அணைத்து பேக்கெட்டில் போட்டுக் கொண்டு சாப்பிட ஆயுத்தமான உத்தம், மணியிடம்,”இன்னொரு சாப்பாடு தட்டு எடுத்திட்டு வா.” என்றான்.

இயந்திரம் போல் அவன் சொன்னதை செய்ய சமையலறைக்கு மணி சென்றவுடன்,”யாருக்காக?” என்று கேட்டார் காவேரி.