உத்தம் மீது எழுந்த கோபம் காணாமல் போயிருந்தாலும் அவளது மனம் ஏனோ முழுமையாக சமாதானம் ஆகவில்லை. எதற்காக இந்த விமானப் பயணம் என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. மாறாக அந்தக் கேள்வியைத் தொடர்ந்து வேறு சில கேள்விகள் வந்தன.’மாமாக்கு ஏதாச்சும் ஆயிடுச்சா? அதான் நம்மை விமானத்திலே கூட்டிட்டுப் போறாங்களா? என்ற கேள்வியின் விடையை நினைத்து உடல் முழுவதும் நடுக்கம் உண்டாக, அச்சத்தோடு உத்தமிருக்குமிடம் வந்தவள்,”மாமாக்கு என்ன ஆச்சு?” என்று அவனிடம் விசாரித்தாள்.
திடீரென்று அவளிடமிருந்து வந்த கேள்வியில் குழம்பிப் போனவன்,“என்ன ஆச்சு அப்பாக்கு?” என்று அவளிடமே விசாரிக்க,
அவனது கேள்வியில் அவளுடைய கேள்விக்கு பதில் கிடைத்து விட்டதை உணராமல்,”எதுக்கு ப்ளேன்ல போறோம்?” என்று வேறு விதமாக கேள்வியைப் போட,
அவளை தீர்க்கமாகப் பார்த்து,”சென்னைலே எனக்கு அவசர வேலை இருக்கு..உன்னையும் அழைச்சிட்டு வரச் சொன்னதாலே நீயும் என்கூட வர.” என்று விமானத்தில் உன்னை அழைத்து போவது உனக்காக இல்லை எனக்காக என்று அவளுக்குத் தெரியப்படுத்தினான் உத்தம்.
அந்தப் பதிலில் மனம் காயமடைய, எப்போதும் போல் அவளது வலியைப் புறம் தள்ளி, ‘நல்லவேளை மாமாக்கு எதுவும் ஆகலை’ என்று நிம்மதி அடைந்தாள் மணி. அவர்களின் உரையாடலின் இடையே உத்தமின் கையை கைவிட்டு மணியின் கையைப் பற்றியிருந்தான் அர்ஜுன். மணியின் கேள்விக்கு பதிலளித்து விட்டு, சிறுவனை முறைத்து விட்டு அவனது பையோடு அவர்களின் கேட் நோக்கி நடக்க ஆரம்பித்தான் உத்தம். ‘எதுக்கு இவனை முறைக்கறாங்க? சின்ன பையனுக்கு இவங்க யாருன்னு தெரியலை அதான் கையைப் பிடிச்சுக்க தயங்கறான்.’ என்று மனதுள் புலம்பியவள், அர்ஜுனிடம்,”அவங்க சிவமூர்த்தி மாமாவோட பையன்.” என்று உத்தமை அறிமுகம் செய்து வைத்தாள். அதைக் காதில் வாங்கிக் கொண்டாலும் அதற்கான அறிகுறி எதுவும் அவன் முகத்தில் வரவில்லை. ‘நான் பார்த்ததில்லையே..இவ்வளவு நாள் எங்கே போயிருந்தாங்க? இப்போ நாம எங்கே போறோம்?’ என்று எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. புது இடம், புது ஆள்கள், புதுப் பள்ளி, என்று மாற்றங்களின் மையமாக அவனது வாழ்க்கை இருந்ததால் பயப் புயல் அவனை ஆட்கொண்டிருந்தது. இப்போது வரை அதிலிருந்து வெளியேற அவனுக்கு வழி தெரியவில்லை. உயிர்களுக்கே உண்டான அறிவானது அக்கா மட்டும் தான் ஆதாரமென்று அவனுக்குப் புரிய வைத்திருந்தது. எனவே, அர்ஜுனின் அனைத்து உயிர் செல்களும் அவனின் மணி அக்காவிடம் தஞ்சமடைந்து இருந்தன.
பத்து நிமிடங்களுக்குப் பின் விமானத்தினுள் அமர்ந்திருந்தனர் மூவரும். ஜன்னலோரத்தில் அர்ஜுன் அமர்ந்திருக்க, அவனுக்கும் உத்தமுக்கிடேயே அமர்ந்திருந்தாள் மணி. சாப்பாடு பையை அவர்களுக்கு முன்னால் இருந்த இருக்கையின் கீழே வைத்தான் உத்தம். அடுத்து அவர்களின் பைகளை தலைக்கு மேலே பாதுகாப்பு செய்து, பெல்ட் அணிய இருவருக்கும் உதவி செய்து விட்டு, அவனது இருக்கையில் அமர்ந்து, பின்பக்கம் தலையை சாய்த்து, கண்களை மூடிக் கொண்டான். பாதுக்காப்பு முறைகளைப் பற்றி விமானப் பணிப்பெண் விளக்கியதை ஆர்வத்தோடும் அச்சத்தோடும் பார்த்தன் அக்கா, தம்பி இருவரும். விமானம் வேகத்தைக் கூட்ட, தரையிலிருந்து மேலே பறக்க ஆயுத்தமான போது மிரண்டு போன அர்ஜுன் மணியின் கையை இறுகப் பற்றிக் கொள்ள, தொடர் விளைவாக உத்தமின் கையை மணி பற்றிக் கொள்ள, கண்களைத் திறந்து மணியை உத்தம் நோக்க, அவளோ முகத்தைச் சுருக்கி, கண்களை இறுக மூடி, சஷ்டி கவசத்தை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.
பயத்தில் இருந்தவளைச் சீண்ட மனம் விழைய, அவனது உதடுகளை மடித்து, அவளது செவியருகே ”பா (bah)” என்ற ஓசையோடு காற்றை அவன் வெளியேற்ற, திடுக்கிட்டு, வாயைத் திறந்து “ஆ” என்று மணி சத்தம் எழுப்ப, ‘ஹா, ஹா என்று அர்ஜுன் சத்தமாக சிரிக்க, காற்றைக் கிழித்துக் கொண்டு வானத்திற்கு ஏறிய விமானத்தின் திறனில் இரண்டு சத்தங்களும் அமுங்கிப் போனது. அவன் செய்த வேடிக்கையில் வெகுண்டு போன மணி பார்வையால் உத்தமை பஸ்மமாக்கினாள்.
கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் அவனைப் பற்றியிருந்த கரத்தை அழுத்தி,”ரிலாக்ஸ்” என்று சொல்லி மணியைப் பார்த்து இதமாகச் சிரித்தான் உத்தம். அந்த இதத்தில் மணியின் இதயம் அவன் வசமாக, ‘அந்த எதிர்வினையில் அச்சமடைந்து அவளது இதயத்தை இறுக்கி, இதமான உணர்வை வெளியேற்றி, கண்களை இறுக மூடி இருளில் மூழ்கிப் போனாள் மணி.
அவளின் மனப் போராட்டத்தை உணராமல், உறங்க முயற்சி செய்கிறாளென்று நினைது அவளைப் போலவே அவனும் கண்களை மூட, தானாக அவனது நினைவுக் கதவுகள் திறந்து கொண்டன. நேற்று பின் இரவில் வந்த கைப்பேசி அழைப்பு அவன் வகுத்து வைத்திருந்த திட்டங்களை உடைத்துப் போட்டிருந்தது. இன்று விடியற்காலையில் ஒருபுறம் அவனுடைய அக்கா அகிலா, இன்னொரு புறம் அவனுடைய அம்மா காவேரி இருவரும் மாறி மாறி அவனது மனத்தை மாற்றி இந்தப் பயணத்தை மேற்கொள்ள வைத்திருந்தனர். சாரதி வீட்டில் இருக்கும் மணியை அவனுடன் அழைத்து வர வேண்டுமென்று அவனுடைய அம்மா சொன்ன போது, முடியாதென்று அவன் மறுக்க, அவனுடைய அப்பாவை இழுத்து வந்து, அவனது முடிவை மாற்றியிருந்தனர்.
சாரதி பெங்களூர்வாசி என்று அவனுக்குத் தெரியும். பட்டப் படிப்பு முடிந்தவுடன் வேலைக்காக பெங்களூர் வந்தவன், சில வருடங்களில் தெலுங்கு பெண்ணொருத்தியை மணந்து கொண்டதும் தெரியும். காற்று வாக்கில் அவனைப் பற்றிய விஷயங்கள் அவனுக்கு வந்து சேர்ந்து விடும். அவன் தான் அந்தத் தகவல்களைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வதில்லை. சராதி வீட்டில் மணி இருப்பதுபற்றி அவனுக்குத் தெரியாது. அர்ஜுன் என்ற புதிய முகம் பற்றி அவனுக்கு அறவே தெரியாது. இன்று காலையில் அப்பா சொல்லும் வரை மணி வேலை செய்கிறாளென்று கூட தெரியாது. அவனிடம் அவளைப் பற்றி சொல்லியிருக்காலம். அவனுக்குச் சம்மந்தமில்லாத விஷயங்களை மூளையின் மடிப்பில் மறைத்து வைத்துக் கொள்ள பழகியிருந்தான். அவனுக்கு தேவை ஏற்படும் போது அவைகள் நினைவிற்கு வருவது வழக்கம்.
மணி, சாரதி சம்மந்தப்பட்ட விஷயங்கள் அவனுக்குச் சம்மந்தமில்லாத விஷயங்கள். அவனுடைய அப்பா சம்மந்தப்பட்டது. மணியை அவர்கள் வீட்டிற்கு நிரந்தரமாக அழைத்து வந்து கிட்டதட்ட நான்கு வருடங்களாகிறது. அதற்கு முன் ஹாஸ்டலில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த போது விடுமுறைகளில் வந்து போவாள். அவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து கொண்டதில்லையென்றாலும் அறிமுகம் இல்லாதவர்கள் கிடையாது. இப்போது அவளைப் பற்றியோசித்தப் போது கொஞ்சம் கொஞ்சமாக மணியைப் பற்றிய விவரங்கள் உத்தமின் நினைவடுக்கிலிருந்து வெளி வந்தன. பட்டப்படிப்பு முடிந்ததும் அவர்கள் வீட்டருகே இருக்கும் பள்ளிக் கூடம் ஒன்றில் பணியாற்றுகிறாளென்று அவன் அம்மா சொன்னது லேசாக நினைவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து அவருக்கும் அவனுடைய அப்பாவுக்கும் இடையே நடந்த விவாதம் பற்றி அம்மா சொன்னதும் நினைவுக்கு வர ஆனால் எதனால் வாக்குவாதம் வந்தது என்று நினைவிற்கு வரவில்லை.
மணி வேலைக்கு செல்வது காவேரிக்குப் பிடிக்கவில்லை. எனவே அவளுக்கு அனுமதி அளிக்க அவர் மறுத்த போது,
“காவேரி, அவளுக்கு பதினாலு வயசில்லை இருபத்தியொரு வயசு ஆகப் போகுது..நம்மகூட இருக்கணும்னு அவளுக்கு அவசியமில்லை..தனியா இருந்துக்கலாம் இல்லை சாரதியோட போய் இருந்துக்கலாம்..அவ விரும்பறதுனாலே தான் நம்ம கூட இருக்கா..அவ இந்த வீட்டு வேலைக்காரி கிடையாது ஆனாலும் நீ சொல்றதை எல்லாம் தட்டாம செய்திட்டு இருக்கா….மேலே படிக்க, வேலைக்குப் போக அவ நம்மகிட்டே அனுமதி கேட்கணும்னு இல்லை..ஒரு மரியாதைக்காக சொல்றா..நீ வேணாம்னு சொல்லி அதை அவ மறுத்து உன்னோட மரியாதையைக் கெடுத்துக்காதே.” என்று காவேரிக்கு சிவமூர்த்தி அறிவுரை சொன்னது உத்தமிற்குத் தெரியாது.
அதற்கு,“அப்போ நமக்கு செய்யணும்னு கடமை இல்லையா அவளுக்கு..பெத்த அம்மா போய் அனாதையா இருந்தவளை அழைச்சிட்டு வந்தது யார்? நான் தானே..அதை அவ மறக்கலாமா? நம்ம வீட்டுக்கு செய்ய வேண்டிய கடமை அவளுக்கு இருக்கு..அதை செய்திட்டே வேலைக்குப் போகட்டும் வெளிக்குப் போகட்டும் எனக்கென்ன.” என்று காவேரி பதில் கொடுத்ததும் அவனுக்குத் தெரியாது.
“காவேரி.” என்று சிவமூர்த்தி கத்த, அந்தப் பேச்சு அத்தோடு முடிந்து போனது.
ஒருமுறை இவனின் திருமணத்தைப் பற்றி பேசிய காவேரி அந்தப் பேச்சினிடையே அவனை விட வயதில் இளையவனான சாரதி திருமணம் செய்து கொண்டதை அவனுக்கு தெரியப்படுத்த,’அது அவங்க அவங்க பர்ஸ்னல் ம்மா..எனக்கு இஷ்டம் வரும்போது கண்டிப்பா உங்கிட்டே சொல்றேன்.’ என்று அந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தான்.