அத்தியாயம்-20-1

அந்தக் கேள்வியில் உத்தம், மணி இருவரும் மீனாவின் புறம் திரும்ப, எப்படி அந்தக் கேள்வியைச்  சமாளிப்பது என்று தெரியாமல் மீனா தவிக்க, பதில் கிடைக்காததனால்,”அக்கா சொன்னாங்களா?” என்று மீண்டுமொரு கேள்வியோடு வந்தான் அர்ஜுன்.

உடனே, மீனாவிடமிருந்து மணியின் மீது பார்வையை உத்தம் திருப்ப, மணியின் முகம் யோசனைக்கு செல்ல, அதற்கு மேல் அந்த பேச்சு தொடர்ந்தால் ஆபத்தென்று உணர்ந்து,”அப்படித் தான் இருக்கும்..நீ வர்றத்துக்கு முன்னாடிலேர்ந்து உங்கக்கா மீனாவோட தானே இருக்கா..இரண்டு பேரும் ஊர்க் கதை பேசி இருப்பாங்க..நீ போய் டிரெஸை மாத்திட்டு வா.” என்று காவேரி முற்றுப்புள்ளி வைக்க, அதை எதிர்த்து இல்லை, ஆமாம் என்று மணியிடமிருந்து  எந்தப் பதிலும் வராமல் அவள் முகமானது ஆழமான யோசனைக்கு செல்ல, அவள் எதுவும் ஊரைப் பற்றி சொல்லவில்லை என்று உத்தமிற்குப் புரிய, யார் மூலம்? எப்படி? என்று கேள்விகள் அவனது மனத்தில் குடி புகுந்தது. 

உடனே,“அண்ணா, வாங்க..டிரெஸ் மாத்திட்டு வரலாம்.” என்று சகஜமாய் உத்தமிடம் அர்ஜுன் பேச, சற்றுமுன் நடந்ததை மனத்திலிருந்து ஒதுக்கிவிட்டு அவனோடு சென்றாலும் மீனாம்மாவின் ‘பேட்டை சுழல்’ உத்தமினுள் சுழன்று கொண்டிருந்தது. நதி, இயற்கை அழகுகள், ஆபத்துக்கள் பற்றி படித்ததைத் விரிவாகப் பகிர்ந்து கொள்வதற்கும் அனுபவத்தால் துல்லியமாகச் சொல்வதற்கும் இடையே கண்டிப்பாக  வித்தியாசம் இருக்கும். உத்தமைப் பொறுத்தவரை மீனாம்மாவின் பேச்சு அனுபவப் பேச்சாக தான் தெரிந்தது. அதன் விளைவாக மீனாம்மாவும் மனோவும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்களா? ஆற்றுப் பாதையில் அமைந்திருந்த அக்கம் பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்களா? என்று கேள்விகள் வந்தது.

அவளின் முகபாவனையைப் பற்றி சில நொடிகளுக்கு யோசித்தவனுக்கு எத்தனை முயன்றும் அதற்கான விடை கிடைக்கவில்லை. எப்படி மீனாவிற்கு அந்த விஷயம் தெரியும் என்ற கேள்விக்கு விடை கிடைக்கும் போது, மீனாம்மாவைப் பற்றி  அனைத்தும் தெரிய வரும் போது அவனுடைய அம்மாவை அடித்துப் போடும் அளவிற்கு ஆத்திரம் வரப் போகிறதென்று அவனுக்கு தெரியவில்லை. 

அர்ஜுனைப் பார்வையால் பின்பற்றி கொண்டிருந்த மணியின் மனதும் உத்தமைப் போல் அவன் கேட்ட கேள்வியையும் அதற்கு காவேரி மாமி அளித்த பதிலையும் தான் அலசிக் கொண்டிருந்தது. ஒரு நாளும் மீனாம்மாவிடம் தன்னுடைய ஊரைப் பற்றி, குழந்தைப் பருவத்தை பற்றி பேசியிராதவளுக்கு காவேரி மாமியின் பதில் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. எதற்காக காவேரி மாமி இடையில் புகுந்து பொய்யான பதில் ஒன்றைத் தந்தார் என்று யோசிக்க, அந்த யோசனைக்கு விடை தான் கிடைக்கவில்லை. அவளது யோசனை உணர்ந்த காவேரி,

“நீ எங்கே போய் துணி மாத்திக்க போற?” என்று கேட்டு அவளது கவனத்தை அழகாக திசை திருப்பினார் காவேரி.

பெண்கள் உடை மாற்ற ஏதுவாக எந்த இடமும் அவள் கண்ணில் படவில்லை.  புதர் மறைவில் மாற்ற அவளுக்கு பயமாக இருந்ததால், கமீஸ்ஸின் நுனியைக் கைகளால் பிழிந்தபடி,”இங்கே அந்த மாதிரி  மறைவு எதுவும் இல்லை..சீட்டு மேலே பிளாஸ்டிக் விரிச்சு உட்கார்ந்துக்கறேன்.” என்றாள்.

காரின் இருக்கை ஈரமாகும் என்ற எண்ணத்தில் காவேரி அந்தக் கேள்வியைக் கேட்கவில்லை.  ஆனாலும் மணியின் அனுமானத்தைத் திருத்தவில்லை. அவளுடன் பேச்சை வளர்த்து அவளது சந்தேகத்தை வளர்க்க விரும்பவில்லை. 

மீனாவிடமிருந்து எதிர்பாராமல் வந்து விழுந்த வார்த்தைகள் அர்ஜுன் மூலமாக வெளி வந்ததில் மீனா, காவேரி இருவரும் பதற்றத்தில் இருந்தார்கள். இனி இதுபோலொரு தவறு நேர்ந்தால் அது பெரிய பிரச்சனையில் கொண்டு போய் விடும் என்பதால் எப்போதும் போல் பேசா மடந்தையாக இருக்க முடிவு செய்தார் மீனா.

ஒரு சின்ன பையன் கேட்ட கேள்விக்கே தனக்கு இத்தனை பதற்றம் என்றால் குடும்பத்தினருக்கு விஷயம் தெரிய வந்தால் என்ன நடக்குமோ என்று கவலை கொண்டார் காவேரி. கடைசிவரை யாருக்கும் தெரிய வரப் போவதில்லை, வர வாய்ப்பில்லை என்ற நினைப்பு சமீபக் காலமாக பொய்த்துக் கொண்டிருப்பதை ஏற்றுக் கொள்ள அவருக்கு கடினமாக இருந்தது. 

பல வருடங்களுக்கு முன்பு மீனாவின் எதிர்காலத்தை பற்றி முடிவெடுத்த போது அவருக்கு எந்த விதமான குழப்பமோ குற்றவுணர்வோ இருக்கவில்லை. அந்தச் சூழ்நிலையில் அது தான் சரியான முடிவாகத் தோன்றியது. இப்போதும் அப்படித் தான் தோன்றுகிறது. விஷயம் வெளியே வந்தால் மகள்களின் எதிர்விணையைப் பற்றி ஒரளவிற்கு யுகிக்க முடிந்தாலும் மகனின் எதிர்விணை என்னவாக இருக்கும் என்ற நினைப்பே அவருக்கு அச்சத்தைத் தந்தது.

அதே சமயம் அர்ஜுனைப் பற்றி அவனுடைய அம்மா சொன்னதை தான் அலசிக் கொண்டிருந்தான் உத்தம். அவர்களுடைய வீட்டில், அவனுடை பெற்றோரின் மேற்பார்வையில் வசித்து வந்தாலும் மனோ, அர்ஜுன் இருவரும் சாரதியின் பொறுப்பு என்பதால் இனி இதுபோல் உரிமை எடுத்துக் கொள்ளக் கூடாதென்ற முடிவிற்கு வந்திருந்தான். அதன் விளைவாக பெங்களூர் திரும்பிச் செல்லும் பயணத் திட்டத்திலிருந்து மணியையும் அர்ஜுனையும் அகற்றினான். நாளை வீட்டிற்குச் சென்றவுடனேயே பெங்களூர் செல்ல டிக்கெட் புக் செய்ய வேண்டுமென்று பயணத்தைத் திட்டமிட ஆரம்பித்தான் உத்தம்.

என்ன நடந்தது என்ற விவரம் தெரியாததால் கேள்வியாக மனைவியையும் மீனாவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார் சிவமூர்த்தி. அதை உணர்ந்தாலும் மௌனமாக அமர்ந்திருந்தார் மீனா. எப்படிக் கணவனுக்கு தெரியப்படுத்துவது என்று யோசனையில் இருந்தார் காவேரி. பெரியவர்களிடைய நடந்து கொண்டிருந்த மௌனப் போராட்டத்தை உணராமல் அவளது ஈர உடையை காய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாள் மணி. அங்கிருந்து அகன்று வெய்யில் வரும் இடத்தில் நின்று கொண்டு தீவிரமாக அவளது உடையைப் பிழிய முனைந்தாள் மணி. 

மணி அகன்றதும், மெல்லியக் குரலில் நதிக் கரையில் நடந்ததை கணவரோடு பகிர்ந்து கொண்டார் காவேரி. பேட்டை சுழல் பற்றிய பேச்சு எப்படி வந்தது என்று கேள்விக்கு அவருக்கு கிடைத்த போது, உடை மாற்றி வந்த உத்தம், நேரே சிவமூர்த்தியிடம் சென்று,”அப்பா, கிளம்பலாம்.” என்று சொல்லி விட்டு அவருடைய பதிலிற்கு காத்திராமல், யாருக்காகவும் காத்திராமல் அவனது பையோடு வண்டியை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அனைத்தையும் அவசரமாக பேக் செய்து கொண்டு, பெரியவர்களையும் அழைத்துக் கொண்டு, அர்ஜுனின் கையைப் பற்றியபடி அவனைப் பின்பற்றிச் சென்றாள் மணி.

அந்த இடத்திற்கு வந்த போது இருந்த சந்தோஷம், மகிழ்ச்சி இப்போது எங்கே போனதென்று தெரியவில்லை. முன்னால் சென்று கொண்டிருந்த உத்தமிடம் பார்வையைப் பதித்திருந்தாலும் அவனோட செல்லத் தயக்கமாக இருந்தததால் மணியின் கரங்களைப் பற்றியபடி அமைதியாக வந்தான் அர்ஜுன். அவ்வப்போது அக்காவின் முகத்தை உற்றுப் பார்த்தபடி நடந்து வந்தான் தம்பிக்காரன். அதை உணர்ந்தாலும் அவனிடம் ஒரு வார்த்தை பேசாமல் அமைதியாக இருந்தாள் மணி.

சில நொடிகள் கழித்து அவளது உள்ளங்கையை சுரண்டினான் அர்ஜுன். அதில் ஓர் அவசரம் தெரிய,”என்ன டா?” என்று வினவினாள் மணி.

“பாத்ரூம் வருது” என்றான்.

மணிக்கு பயங்கர கோபம் வந்தது. அதை வெளியிடாமல்,“டிரெஸ் மாத்தப் போன போது போக வேண்டியது தானே.” என்றாள்.

“போகணும்னு சொல்றத்துக்குள்ளே அண்ணன் துணியை மாத்திட்டு வந்திட்டாங்க..நானும் வந்திட்டேன்..இப்போ அர்ஜண்ட்டா வருது க்கா.” என்றான்.

இப்போது அந்தப் பாதையில் ஜன நடமாட்டம் அதிகமாகி இருந்ததால்,”ஆளுங்க வர ஆரம்பிச்சிட்டாங்க..கொஞ்சம் பொறுத்துக்க..பெட்ரோல் பங்க் எதிலேயாவது நிற்கச் சொல்றேன்.” என்றாள்.

அதற்கு அமைதியாக தலையசைத்தவனைச் சந்தேகமாகப் பார்க்க, “முடியலை க்கா” என்றவுடன்,”சரி..வேகமா வா..எங்கேயாவது மறைவு இருக்குதான்னு பார்ப்போம்.” என்று அவனின் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துச் சென்றாள் மணி. சில நிமிடங்களில் உத்தமையும் கடந்து சென்று விட்டனர் அக்காவும் தம்பியும். அதுவரை ஏதோ யோசனையில் இருந்தவன் அவர்கள் சென்ற வேகத்தை பார்த்து ஏதோ பிரச்சனை என்று சரியாக யுகித்தவன் விரைந்து சென்று அவர்களோடு இணைந்தான். அவனைக் கண்டு கொள்ளாமல் அக்காவும் தம்பியும் படுவேகமாக நடக்க,”என்ன டா? என்ன ஆச்சு?” என்று அர்ஜுனிடம் விசாரித்தான் உத்தம்.

“அண்ணா, ரொம்ப அவசரமா பாத்ரூம் வருது.” என்று உத்தமிடம் அடைக்கலமானான். 

“வா” என்று உத்தம் அவனது கையை நீட்டினான். மணியிடமிருந்து விடுவித்துக் கொண்டு உத்தமின் கரத்தை அர்ஜுன் பற்றிக் கொள்ள, ஓட்டமெடுத்தனர் இருவரும். சில நொடிகளில் இருவரும் மணியின் பார்வையிலிருந்து மறைந்து போயினர். வண்டி நிறுத்தியிருந்த இடத்தை மணி அடைந்த போது வண்டியையும் ஆண்கள் இருவரையும் காணவில்லை. காலையில் அவர்கள் வந்த போது ஆள் ஆரவாரமில்லாமல் இருந்த இடம் இப்போது வண்டி, மக்கள் என்று ஒரே கூட்டமாக இருந்தது. அடுத்தடுத்து என்று நான்கு சக்கர வாகனங்களும் இரு சக்கர வாகனங்களும் வந்த வண்ணம் இருந்தன. 

சில நிமிடங்கள் கழித்து வந்த காவேரி,“மணி,  வண்டியைக் காணலை..இவனுங்களையும் காணாலை..எங்கே போயிருக்காங்க இரண்டு பேரும்?” என்று விசாரித்தார்.

வெய்யிலில் நின்றபடி அவளது உடையை காய வைத்துக் கொண்டிருந்த மணி,“பாத்ரூமுக்குன்னு நினைக்கறேன் மாமி..அர்ஜுனுக்கு அவசரம்.” என்றாள். அடுத்து வந்த நிமிடங்கள் அமைதியில் கழிய,

“பாத்ரூம் இல்லாத இடத்துக்கு அழைச்சிட்டு வந்திருக்கான்..அதுக்காக வண்டியை எடுத்திட்டு எத்தனை தூரம் போயிருக்கானோ? பக்கத்திலே புதரெல்லாம் இருக்கறது அவன் கண்ணுக்கு தெரியலையா?” என்று புலம்பிக் கொண்டிருந்த போது அவர்களரருகே வண்டியை நிறுத்தினான் உத்தம்.

அனைவரும் உள்ளே அமர்ந்தவுடன்,”கொஞ்சம் வெயிட் பண்ணியிருந்தா நாங்களும் வந்திருப்போமில்லே..எங்களுக்கும் அவசரமிருக்காதா? எங்களைப் பற்றி யோசிக்க மாட்டியா?” என்று மகனிடம் பாய்ந்தார் காவேரி.

“உங்களைப் பற்றி எல்லாம் யோசிச்சு தான் இவனை அழைச்சிட்டுப் போய் அந்த இடம் உங்களுக்கு தோதுப்படுமா இல்லையானு பார்த்திட்டு வந்தேன்..சர்வே செய்யாம எங்கேயாவது அழைச்சிட்டுப் போனா என்னை சும்மா விட்டிடுவீங்களா நீங்க?” என்று பதிலளித்தான் உத்தம்.

“பாத்ரூமில்லாத இடத்திற்கு அழைச்சிட்டு வந்திட்டு உன்னைப் புகழ்ந்து பாடுனும்மா? வயசனாவங்களும் சின்ன புள்ளைங்க மாதிரி தான்.” என்று காவேரி சொன்னவுடன்,

“மாமி, அடக்கி வைச்சுக்கோங்க..அண்ணா, வேகமா ஓட்டுங்க.” என்று கட்டளையிட்டான் அர்ஜுன்.

அதம் பின், நொடிக்கு ஒருமுறை, “இதோ..இதோ வந்திடுச்சு.” என்று காவேரிக்கு தைரியம் கொடுத்தவன், “வேகமா போங்க..வேகம் ண்ணா.” என்று பின்னிருக்கையிலிருந்து உத்தமை விரட்ட, அதைப் பொருட்படுத்தாமல் நிதானமாக உத்தம் வண்டியைச் செலுத்த,”இப்படி ஓட்டிட்டுப் போனா போன மாதிரி தான்” என்று காவேரி அங்கலாய்க்க, “ஐயோ போகாதீங்க.” என்று அர்ஜுன் அதிர்ச்சியாகி கத்த, அவன் அனர்த்தமாக புரிந்து கொண்டது புரிய, கொல்லென்று சிரித்தனர் அனைவரும்.