காவேரியின் ‘அசிங்கம்’ வரைவிலக்கணத்திற்குள் அற்புதமாகப் பொருந்திப் போகும் அழகானதொரு எடுத்துக்காட்டு சிவமூர்த்தியின் வாழ்க்கை. காவேரிக்கும் அவருக்கும் எந்த விதத்திலும் பொருத்தமிருக்கவில்லை. லட்சணம், அவலட்சணம், வளமை, வறுமை, கருமை, வெண்மை, குட்டை, நெட்டை, ஒல்லி, பருமன், அமைதி, ஆரவாரம் என்று துருவ எதிர்களை இணைக்கும் கல்யாண மாலையின் கயமைத்தனத்தால் காவேரியின் இணையானார் சிவமூர்த்தி.
பள்ளிப் படிப்பை முடிப்பதற்கே படாத பாடுபட்டவர் சிவமூர்த்தி. நான்கு உறுப்பினர்கள் கொண்ட அவருடைய குடும்பத்தில் மூன்று உறுப்பினர்கள் ஓயாது உழைத்து கொண்டிருந்தாலும் தினமும் ஒரு வேளை சாப்பாடு கிடைப்பது கூட அரிதான விஷயம். வாலிப வயதை அடையும் முன்பே மனித வாழ்க்கையின் வலிகளை, முரண்பாடுகளை முழுமையாக அனுபவித்திருந்தார். அந்தக் கடுமையான காலக்கட்டத்தில், எளிதாக இரும்பை வளைக்க கூடிய, கல்லை கரைக்க கூடிய, பூமியைப் பிளக்க கூடிய, உயிரைக் குடிக்க கூடிய வலிமையான பொருள் எதுவென்று கேட்டிருந்தால், எளிமையாக ‘வறுமை’ என்று ஒரு வார்த்தையில் பதில் அளித்திருப்பார்.
சுட்டெரிக்கும் சூரியனும் குளிர் நிலவும் அவரிடம் ஒரே போல் பாதிப்பைத் தான் ஏற்படுத்தியது. வெளிச்சமும் இருட்டும் அவரின் வாழ்க்கையில் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை. அந்த அவலமானக் காலங்களைக் கடந்து வர அவருக்கு உறுதுணையாக இருந்தது அவருடைய உற்ற தோழன் புண்ணியகோடி தான். இன்று அந்த தோழனின் குழந்தைகள் அனாதையாக நிற்பதை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. மனைவியின் மனநிலைக்கு மாறுபட்ட நிலையில், தோழனின் குழந்தைகளுக்குத் தேவையான எதையும் செய்யும் மனநிலையில் இருந்தார் சிவமூர்த்தி. மணியின் வயது, சாந்தமான தோற்றம், நடவடிக்கை அவருள் பழைய நினைவுகளை கிளறியிருந்தது.
அதே நேரம் அவருடைய மனைவி கடவுளிடம் முக்கியமான கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தார். அவருடைய இளைய மகள் இந்திராவிற்கு குழந்தை வரம் இன்னும் கிடைக்கவில்லை. காலம் கடந்து ஞானத்திற்குக் கிட்டியது போல் கிடைத்தால் அசிங்கம் என்பதால் அப்படியொரு நிகழ்வு நடக்கக் கூடாது என்று தெய்வத்திடம் வேண்டிக் கொண்டார். அவரைப் பொறுத்தவரை அவருக்கு அசிங்கம் என்று தோன்றுவதை யாருக்காகவும், அவர் பெற்ற மகளிற்காகவும் மாற்றிக் கொள்ள அவர் தயாராகயில்லை. மழலைச் செல்வம் கிட்டாதவர்களுக்கு அந்தச் செல்வம் எப்போது கிடைத்தாலும் அது அசிங்கமாகத் தோன்றாது. ஆண்டவன் அருளாக தான் தோன்றுமென்று அவர் உணரவில்லை. அவரை உணர வைத்தாள் இந்திரா.
சில மாதங்கள் கழித்து அகஸ்மத்தாக அவளுடைய அம்மாவின் கோணலானக் கருத்து இந்திராவிற்கு தெரிய வந்த போது வீட்டில் போர் மூண்டது.
‘அப்போ கல்யாணமான முதல் வருஷமே என்னை டாக்டர்கிட்டே அழைச்சிட்டுப் போயிருக்கணும்..எல்லாம் தன்னாலே நடக்கும், இரண்டு வருஷம் போகட்டும்னு எதுக்கு அறிவுரை கொடுத்தீங்க? இதுக்கெல்லாம் வயது வரம்பை ஃபிக்ஸ் செய்ய நீங்க யாரு? மகபேறு மருத்துவரா? கடைசிவரை பிள்ளை வரலைன்னாலும் முயற்சி செய்தோம்னு எங்களுக்குத் திருப்தி இருக்குமில்லே..எந்த முயற்சியும் செய்யாம நான் இப்படியே இருக்கணும்னு நினைக்கறீங்களா? எங்களுக்குன்னு வாரிசு எந்த வயசுலே வந்தா உங்களுக்கு என்ன? இப்போவே லேட்டுன்னு உங்களுக்குத் தோணுதா? அதான் சென்னைக்கு அழைச்சிட்டுப் போய் வைத்தியம் பார்க்க மாட்டேங்கறீங்களா? குழந்தை இல்லைன்னு உங்க இரண்டாவது மாப்பிள்ளை இரண்டாவது கல்யாணம் செய்துகிட்டா அதுக்கு நீங்க தான் காரணம்.’ என்று குண்டைத் தூக்கிப் போட்டவுடன் அரண்டு விட்டார் காவேரி.
இந்தக் கோணத்தில் அவர் யோசிக்கவே இல்லை. இரண்டாவது மாப்பிள்ளையின் தம்பிக்கு குழந்தைகள் இருந்ததால் வாரிசு வேண்டுமென்று இந்திராவிற்கு அழுத்தம் கொடுக்க மாட்டார்கள் என்று எண்ணியிருந்தார். மாப்பிள்ளை இப்படி யோசிக்க கூடுமென்று அவர் யோசிக்கவில்லை. அதனால் மகளை எப்படிச் சமாதானம் செய்வதென்று தெரியவில்லை. அவர் வைத்த கோரிக்கையை வாபஸ் வாங்கிக் கொண்டு எப்படியாவது எப்போதாவது இளைய மகளுக்கு பிள்ளைச் செல்வத்தைக் கொடுக்கும்படி கடவுளிடம் கையேந்தினார்.உடனடியாக சென்னை வீட்டிற்கு குடிபெயர்ந்து பல மருத்துவமனைகளுக்கு மகளை அழைத்துச் சென்று, குழந்தை செல்வத்திற்காக பெரும் செல்வத்தை செலவழித்தார். அதன் பயனாக ஒன்றில்லை இரண்டு பேத்திகள் பிறந்தார்கள்.
ஞானத்திடம் மனைவி துக்கம் விசாரிக்க காத்திருந்தார் சிவமூர்த்தி. ஞானத்தின். நிலை இளைய மகள் இந்திராவை நினைவுபடுத்தியது அவருக்குத் தெரியவில்லை. மனைவியின் மௌனம் கலையாததால்,”உங்கக்காக்கு என்ன ஆச்சும்மா?” என்று ஞானத்திடம் விசாரித்தார் மூர்த்தி.
“இன்னைக்கு நாளைக்குன்னு இரண்டு வருஷமா இழுத்திட்டு இருந்தா..பத்து நாள் முன்னாடி போய்ச் சேர்ந்திட்டா..பிள்ளைத்தாச்சியா வந்தேன்..என்னை உட்கார வைச்சு செய்வான்னு நினைச்சா அவ படுக்கையை பிடிச்சுக்கிட்டா..பச்சை உடம்போட அக்காவை கவனிச்சுக்க நான் பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும்..கைக்குழந்தையோட இருக்கற எனக்கு கடவுளா பார்த்து செய்த நல்லது இது.” என்று இரண்டு குழந்தைகளை அனாதையாக்கி விட்டு சென்ற உடன்பிறந்த சகோதரியின் மறைவைக் கடவுள் செய்த நன்மையாக நியாயப்படுத்தினார் ஞானம்.
அதன் பிறகு என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாகிப் போனார் மூர்த்தி.இனியும் தான் பேசாமல் இருந்தால் வந்த வேலையை முடித்துக் கொண்டு, வீட்டிற்குள் கொண்டு வந்திருந்த பெட்டியை வெளியே எடுத்துக் கொண்டு அன்றிரவே சென்னைக்குப் புறப்பட்டுச் செல்ல முடியாது என்றுணர்ந்த காவேரி,”நடந்தது நல்லதாகவே இருக்கட்டும்..இனி என்ன செய்யலாம்னு முடிவு எடுத்திட்டீங்களா?” என்று நேரே விஷயத்திற்கு வந்தார்.
அக்கம்பக்கத்து ஊரைச் சேர்ந்த சிதம்பரம், புண்ணியகோடி இருவரும் ஒரே பள்ளிக்கூடத்தில் படித்தவர்கள். பின்னணி எல்லாம் பெரிய விஷயமாக தெரியாத பருவம் பள்ளிப் பருவம். காலம் முழுவதும் பயணிக்க கூடிய கள்ளமில்லாத நட்புக்கள் உருவாகும் இடம் பள்ளிக்கூடம். பள்ளிப் பருவத்தில் மட்டுமில்லாமல் பெரியவர்கள் ஆன பிறகும் மூர்த்திக்கு நிறைய விதத்தில் உதவி செய்திருக்கிறார் புண்ணியகோடி. கல் உடைக்கும் குவாரியில் ஆரம்பித்த மூர்த்தியின் வாழ்க்கை கடப்பா கல் கடைக்கு முதலாளியாக மாறியதில் புண்ணியகோடியின் பங்கும் இருந்தது.
சிவமூர்த்திக்கும் மட்டுமில்லை அவரைத் தெரிந்தவர் அறிந்தவர் என்று பலருக்கும் அவரால் முடிந்த உதவிகளைச் செய்தார் புண்ணியகோடி. கடைசியில், இரவு நேரத்தில், உதவி செய்யும் பொருட்டு விதிகளை மீறி மூடியிருந்த இரயில் க்ராஸிங்கைக் கடந்த போது விரைவு இரயிலில் அடிப்பட்டு உயிர் நீத்தார்.
புண்ணியகோடிக்கு ஏற்ற துணையாக இருந்த கமலாம்பாளுக்கு அவருடைய கணவர் இறந்த பின் தான் எத்தனை அசடாக இருந்திருக்காரென்று புரிந்தது. அவர்களிடமிருந்து உதவி எடுத்துக் கொண்டவர்கள் அவருக்குப் புரிய வைத்தார்கள். அந்தக் கூட்டத்தில் மூர்த்தி மட்டும் தான்நண்பன் மறைந்த பின்னும் அவர்களின் நட்பிற்கு உண்மையாக இருந்தார். காவேரியின் எதிர்ப்பை புறக்கணித்து நண்பனின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு அதை நல்லவிதமாக நடத்திக் கொடுத்தார். வருங்கால வருமானமாக இருக்கட்டுமென்று கமலத்திற்கு பெருமளவு பொருளுதவியும் செய்தார். மற்ற நண்பர்களும் உறவுகளும் பொய்த்துப் போனதால் வேறு வழியில்லாமல் அதை ஏற்றுக் கொண்ட கமலம் இனி எத்தனை கஷ்டம் வந்தாலும் அவரிடம் எந்த உதவியும் கேட்கக் கூடாதென்று உறுதி எடுத்திருந்தது தெரியாமல் அவரது கைப்பேசி, தொலைப்பேசி இலக்கங்களை அவருடன் பகிர்ந்து கொண்டார் சிவமூர்த்தி.
அடுத்து வந்த மாதங்களில் கமலத்திடமிருந்து எந்தத் தகவலும் வராததால் நண்பனின் குடும்பம் பற்றிய கவலை அவ்வபொழுது எழுந்தது. ஆனாலும் அவர்களைத் தொடர்பு கொள்ளவில்லை சிவமூர்த்தி. அதற்கு காவேரியும் ஒரு காரணம். ‘உங்க வியாபாரத்திற்கு அவர் உதவி செய்தார் அதற்கு நன்றியா நீங்களும் அவரோட குடும்பத்துக்கு செய்திட்டீங்க..இத்தோட விடுங்க..நிலம், நீச்சல்லாம் இருக்குன்னு சொல்றீங்க..சமாளிச்சுக்குவாங்க..அப்படியே அவங்களாலே முடியலைன்னாலும் நாம ஒண்ணும் செய்ய முடியாது..அவங்களைப் பார்த்துக்கணும்ங்கற எண்ணத்தை இத்தோட விடுங்க..விதவைங்களுக்கு விடுதியா நடத்திட்டு இருக்கோம்.’ என்று ஓர் ஆட்டம் ஆட அடங்கிப் போய் விட்டார் சிவமூர்த்தி.
சொந்த ஊரையும் சொந்தங்களையும் விட்டு பெற்றோரையும் அழைத்துக் கொண்டு ஆந்திராவிற்கு வந்த பின், காவேரியைத் திருமணம் செய்த பின் ஊர்ப் பக்கம் அடிக்கடி அவர் போனதில்லை. வீட்டில் விசேஷம் ஏதாவது வந்தால் அது நல்லபடியாக நடந்து முடிந்த பின் குலதெய்வத்திற்கு நன்றி தெரிவிக்க ஓரிரு முறை மனைவியோடு சொந்த ஊர் சென்றிருக்கிறார். இந்தமுறை வித்தியாசமாக, விசேஷம் எதுவுமில்லாமல், உத்தம் வெளிநாடு செல்வதற்கு முன்பு, அவனுக்காக, அவனது புதுப் பாதையில் அவன் வெற்றியடைய வேண்டுமென்று குலதெய்வத்திடம் விண்ணப்பம் வைக்க வந்திருந்தனர் சிவமூர்த்தி தம்பதியர். உத்தமிற்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. அதே சமயம் இதுபோன்ற விஷயங்களில் அபார நம்பிக்கை வைத்திருக்கும் அவனுடைய அம்மாவின் நம்பிக்கையை அவன் விமர்சனம் செய்வதில்லை. எனவே இந்தப் பயணத்திற்குத் தடை விதிக்கவில்லை. சாதாரணப் பயணத்தில் இப்படியொரு திருப்பம் வருமென்று அவர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை.
காவேரி நேரடியாக கேட்டவுடன்,
“எல்லாம் அக்கா எடுத்த முடிவு தான்..நான் இங்கே வந்தவுடனேயே இந்த வீட்டை என் பெயருக்கு மாற்றிட்டா..அவளோட வைத்தியச் செலவு, வீட்டுச் செலவு, பசங்களோட படிப்புச் செலவு எல்லாம் இவர் தான் பார்த்திட்டு இருந்தார்..இவருக்கும் பெரிசா ஒண்ணும் வருமானம் கிடையாது..அக்காக்கும் இல்லை..வெள்ளாமை எல்லாம் முன்னே பின்னே இருக்குது..இப்போ கூட இந்த மழைனாலே எவ்வளவு நாசமோ?..எதுவும் காலத்தே நடந்தா தான் நல்லது..இல்லைன்னா நஷ்டம் தான்.” என்றார் கடவுளின் கருணையால் நாற்பது வயதில் ஒரு குழந்தைக்குத் தாயாகி இருந்த ஞானம்.
அவர் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் கண்டபடி பேசிக் கொண்டிருந்த ஞானத்தைப் பார்த்து எரிச்சலடைந்த காவேரி,”அப்போ எல்லா முடிவும் எடுத்திட்டுத் தான் உங்க அக்கா போய் சேர்ந்தாங்களா?” என்று துக்கத்தைப் புது விதமாக விசாரித்தார்.
அதில் சுதாரித்துக் கொண்ட ஞானம்,”இல்லை..திடீர்னு அவளுக்கு ரொம்ப முடியாமப் போயிடுச்சு..முடியலைன்னாலும்நடமாடிக்கிட்டு அவ வேலையை அவளே செய்திட்டு இருந்தவ பொட்டுனு போயிட்டா.” என்ற கூற்றின் மூலம் சற்றுமுன் அவர் சொன்னது அத்தனையும் பொய் என்று தெரிய வர, கணவரின் புறம் பார்வையைத் திருப்பிய காவேரி, கண்களாலேயே அவரை எச்சரிக்கை செய்தார். அதைக் கவனித்தாலும் அதைக் கண்டு கொள்ளாத மாதிரி இருந்த சிவமூர்த்தி,
“சாரதி, நீ என்ன படிக்கற?” என்று விசாரித்தார்.
“வல்லத்திலே பொறியியல் படிக்கறேன் மாமா.” என்றான்.
“எப்போ திரும்ப காலேஜுக்கு போகணும்?” என்று கேட்டார்.
“அடுத்த வாரம் மாமா.” என்றான் சாரதி.
“அதுக்குள்ளே காரியமெல்லாம் முடிஞ்சிடும்..இனி இந்த ஊர்லே இருந்து என்ன செய்ய? நாங்களும் எங்களோடஊருக்குப் போயிடலாம்னு நினைக்கறோம்.” என்றார் சிதம்பரம்.
உடனே,“அப்போ இந்த வீடு?” என்று காவேரி கேட்க,
“அப்போ மணி?” என்று கேட்டார் மூர்த்தி.
“வர்ற விலைக்கு இந்த வீட்டை வித்திட்டு அவளை எங்களோட அழைச்சிட்டுப் போயிடுவோம்.” என்றார் ஞானம்.
“எத்தனைக்குப் போகுது வீடு?” என்று காவேரி கேட்க,
“இங்கெல்லாம் பெரிசா ஒண்ணும் கிடைக்காது..கேட்கறவங்களுக்கு கொடுத்திடுவோம்..நிலத்தை வித்து வர்ற பணத்திலே சாரதிக்கு காலேஜ் ஃபீஸுக்கு ஒரு பங்கை ஒதுக்கிட்டு மிச்சம் எங்களுக்கு தான்.” என்றார் சிதம்பரம்.
“மணியோட பங்கு.” என்று நண்பனின் மகளுக்காக குரல் கொடுத்தார் மூர்த்தி.
“அவளை நாங்க தானே பார்த்துக்கப் போறோம்.” என்றார் ஞானம்.
“சாரதிக்குத் தனியா கொடுக்கற மாதிரி மணியோட படிப்பு செலவுக்குத் தனியா ஒதுக்கிடுங்க..கல்யாணச் செலவெல்லாம் சாரதி தலையெடுத்த அப்புறம் பார்த்துக்கலாம்.” என்று நியாயமாகப் பேசினார் மூர்த்தி.
“எங்க ஊர்லே பத்தாவது வரைக்கும் தான் இருக்கு..அதுக்கு மேலே டவுனுக்குப் போய் தான் படிக்கணும்..காலம் கெட்டு கிடக்கு..இவளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைச்சிட்டு நான் தான் வயத்திலே நெருப்பைக் கட்டிக் கிட்டு அலையணும்..என்னாலே முடியாது..பத்தாவது முடிச்சதும் வீட்டிலே இருக்கட்டும்..கல்யாண வயசு வந்ததும் நீங்க சொல்ற மாதிரி செய்திடலாம்.” என்றார் ஞானம்.
அவர் சொல்லும் அந்தக் கல்யாண வயசு எப்போது என்று கேட்க நினைத்தாலும் அதைக் கேட்காமல்,”நீங்க சொல்றதை என்னாலே ஒத்துக்க முடியாது..பெண் பிள்ளைங்களுக்கு படிப்பு ரொம்ப முக்கியம்..சாரதி போல இவளையும் படிக்க வைக்கணும்.” என்றார் சிவமூர்த்தி.
“நீங்க சொல்றதை நான் மறுக்கலை..ஏற்கனவே கொஞ்ச நிலத்தை வித்து தான் சாரதியைக் காலேஜ்லே சேர்த்தோம்..அவனோட படிப்பை முடிக்க தான் நிலத்தை விக்கறோம்..இப்போ நாங்க இருக்கற சூழ்நிலைலே மணியோட படிப்புக்கு என்னாலே உத்தரவாதம் கொடுக்க முடியாது..சின்ன பிள்ளையை வைச்சுக்கிட்டு இவளையும் பள்ளிக்கூடம் அனுப்ப எனக்கு ஆரோக்கியம் போதாது.” என்று ஞானம் சொன்னதைக் கேட்டு மணிக்கு திக்கென்றானது.
சின்னவளுக்குப் புரிந்தது அங்கே இருந்த மற்றவர்களுக்கும் புரிய, சாரதி, சிதம்பரம் இருவரும் வாயைத் திறக்கவில்லை. சிவமூர்த்தியால் திறக்காமல் இருக்க முடியவில்லை.
எனவே,”நான் அவளைப் படிக்க வைக்கறேன். மணியோட படிப்பு செலவு என் பொறுப்பு.” என்று வாக்குக் கொடுத்தார் சிவமூர்த்தி.
அவருடைய கணவர் எடுத்த முடிவினால் மணியை ஆதரவில்லா சிறுமியாக பார்க்காமல் வீண் செலவாகப் பார்த்தார் காவேரி.அந்தத் திட்டத்தில் அவருக்கு செலவில்லை என்றாலும் அது பிடிக்கவில்லை ஞானத்திற்கு. எப்படி அதை அவருக்கு சாதகமாக்கிக் கொள்ளலாமென்று யோசித்தவர்,
“அப்போ அவளை ஹாஸ்டல்லே சேர்த்து விட்டிடுங்க..விடுமுறைக்கு என் வீட்டுக்கு வரட்டும்.” என்று நிறுத்தியிருந்தால் மணியின் நிலை வேலைக்காரியாக மாறாமல் உறவுக்காரியாக மட்டும் இருந்திருக்கும். ஆனால் ஞானத்தின் வாய்,”எனக்கு ஒத்தாசையா இருக்கும்.” என்று இரண்டு வார்த்தைகளை அதிகமாக விட, உடனே,
“ஒரு விடுமுறைக்கு உங்க வீட்டுக்கு வரட்டும்..அடுத்த விடுமுறைக்கு எங்க வீட்டுக்கு வரட்டும்..எனக்கும் ஒத்தாசையா இருக்கும்.” என்று காவேரி சொல்ல, சிவமூர்த்தி மனைவியை முறைக்க, சாரதி மௌனமாக இருக்க, மணி ஊமையாக அந்த உரையாடலைப் பார்த்துக் கொண்டிருக்க,
“நீங்க சொல்றது ரொம்பச் சரி..புண்ணியகோடி இறந்த போது நீங்க பெரிய உதவி செய்தீங்க..இப்போவும் செய்தி கேட்டவுடனே வந்திட்டீங்க..உதவி செய்யத் தயாரா இருக்கீங்க…உங்களுக்கு உதவி செய்ய அவ கடமைப்பட்டு இருக்கா..நீங்க சொன்னபடியே செய்திடலாம்..ஒரு விடுமுறை உங்களோட ஒரு விடுமுறை எங்களோட.” என்று அந்த உடன்படிக்கைக்கு அவரது ஒப்புதலைத் தெரிவித்தார் சிதம்பரம்.
அடுத்து வந்த வருடங்களில் அவர் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்றி மணியைப் பட்டதாரியாக்கினார் சிவமூர்த்தி. அதே அவகாசத்தில் ஞானமும் காவேரியும் மணியைச் சக்கையாகப் பிழிந்து செய்ந்நன்றியை செவ்வனே வசூலித்துக் கொண்டிருந்தனர். இரு வீட்டிலும் ஒரே போல் அவளது பிரதிக்கடமையை செலுத்திய மணி, ஞானம் போன பின் அர்ஜுனை அவளுடைன் அழைத்து வந்து அவருக்கான அவளது நன்றியை வெளிப்படுத்தினாள். ஓர் இக்கட்டான நிலையில் காவேரிக்கான அவளது நன்றி கடனின் ஆழம் சோதிக்கப்படப் போவது தெரியாமல் ஆர்ஜுனும் உத்தமும் நீந்தி விளையாடிக் கொண்டிருந்த ஆற்றின் ஆழத்தை கண்களால் கணக்கிட்டுக் கொண்டிருந்தாள் மனோன்மணி.