அந்தப் பாடலை ஏற்கனவே கேட்டது போல் இருந்தது உத்தமிற்கு. எங்கே? என்று யோசனை செய்து கொண்டிருந்தவனிடம்,”வேற பாட்டு போடு..நல்ல தமிழ் பாட்டு.” என்று கட்டளையிட்டார் காவேரி. உடனே,
“தெலுங்கு அம்மா எப்போ தமிழ் அம்மா ஆனாங்க? தமிழ்ப் பாட்டு கேட்கறாங்க.” என்று உத்தம் கேலி செய்ய,
“டேய் உன்னோட அம்மா, நானா இரண்டு பேரும் தமிழ் தான்..நான் சொன்னதை செய்.” என்றார் காவேரி.
அடுத்த சில நிமிடங்களில் இளையராஜாவின் மெலடி பாடல்கள் ஒலிக்க ஆரம்பிக்க அந்த இன்னிசையின் விளைவினால் ஓட்டுநனரை தவிர்த்து மற்றவர்களுக்கு கண்கள் சொக்கியது. உத்தமின் காதுகளில் தெலுங்கு பாட்டு ஒலித்துக் கொண்டிருந்ததால் இளையராஜாவின் ஆளுமைக்கு அவனது மனது அடங்கிப் போகவில்லை. எங்கே கேட்டோமென்று அவன் நினைவுக்கு வந்த போது குட்டி தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட காவேரி,”டேய், எங்கே டா போறா? சித்தூருக்கா?” என்று கேட்க, அதில் அர்ஜுனைத் தவிர அனைவரும் விழித்துக் கொண்டனர்.
“ம்ம்…அது பக்கத்திலே ஓர் இடத்துக்குப் போறோம்.” என்றான் உத்தம்.
“அங்கே சுத்தி பார்க்க என்ன இடம் டா இருக்கு? கீழ் புறம் கல்லும் மேல் புறம் காடும் இருக்கு.” என்றார் காவேரி.
அதற்குப் பதில் அளிக்காமல் அவர் புறம் திரும்பிப் பார்த்து லேசாகப் புன்னகைத்தான்.
உடனே,“காட்டுக்கா எங்களை அழைச்சிட்டுப் போற?” என்று பதறிய காவேரி, “எங்களைப் பார்த்தா எப்படித் தெரியுது உனக்கு? சிங்கம் புலியோட ஓடி விளையாடற வயசா எங்க மூணு பேருக்கும்? நேத்திலேர்ந்து எனக்கு கால் சரியில்லை, மீனாக்கு மூணு நாளா உடம்பு சரியில்லை, உங்கப்பாவைப் பற்றி சொல்லவே வேணாம், எப்போவும் ஏதாவது சரியில்லை..சின்னதா ஒரு ட் ரிப் அழைச்சிட்டுப் போறேன்னு நினைச்சேன்..இப்படி ஒரு பெரிய பிளான் இருக்கறது தெரிஞ்சிருந்தா நாங்க வந்திருக்க மாட்டோம்..எத்தனை முறை கேட்டேன் வாயைத் திறக்காம இருந்திட்டே..இப்போ கூட ஒண்ணும் குடிமுழுகிப் போகலை..டிஃப்னை எங்கேயாவது முடிச்சுக்கிட்டு வீட்டுக்குத் திரும்பிப் போயிடலாம்..எங்களாலே முடியாது..நான் சொல்றது சரி தானேங்க? திரும்பிப் போயிடலாம் தானே.” என்று சிவமூர்த்தியின் ஒப்புதலைப் பெற முயன்றார்.
சிவமூர்த்தி வேறொரு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். தங்களோடு மீனாவையும் சேர்த்துக் கொண்டது அவரது மனத்திற்கு குளிர்ச்சியையும் நம்பிக்கையையும் அளித்தது. எனவே மனைவியின் கேள்வி அவரிடம் போய் சேரவில்லை. மணியிடம் போய் சேர்ந்து அவளுள் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆரம்பத்தில் இந்தப் பயணத்தை மற்றொரு வேலையாக ஏற்றுக் கொண்டிருந்தாலும் இப்போது அந்த மனப்பான்மை அவளிடம் இல்லை.
இனிய காலை வேளையை மிக இனிமையானதாக மாற்றியிருந்தான் உத்தம். அவளுள் இப்படி ஓர் ஏக்கம், ஆசை இருந்தது அவளுக்கே இப்போது தான் தெரிய வந்திருந்தது. வீடு, பள்ளிக்கூடம், அர்ஜுன் என்று வருடத்தில் முக்கால்வாசி நாள்கள் கழிய மீதி நாள்கள் எப்படி கழிந்தது என்று தெரியாமல் கழிய, அவளுக்கென்று ஒரு நாள் கூட ஒதுக்கி வைக்க முடியாத நிலையில் அவளுடைய வாழ்க்கை சென்று கொண்டிருந்ததால் இன்று எல்லோருடனும் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தாலும் அவளுக்கான தனிப் பயணம் போல உணர வைத்திருந்தான் உத்தம். ஆரம்பிக்கும் முன்னரே இந்தப் பயணம் முடிவடைவைதில் அவளுக்கு உடன்பாடு இல்லை. அவளது ஒப்புதலை யாரும் கேட்கப் போவதில்லை என்ற நிதர்சனத்த்தை உணர்ந்து மனத்தை சமாதானம் செய்யும் முயற்சியில் அவள் இறங்க அது அடங்க மறுத்தது.
எப்போதும் அவனது அம்மாவின் பேச்சை காதில் போட்டுக் கொள்ளாதவன் இன்று அவரின் உடல் நிலையைக் கருதி அவனது திட்டத்தை மாற்றிக் கொண்டு விடுவானோ என்று அவளது மனத்தில் அச்சம் வந்தது. எனவே, அந்த நொடியை அப்படியே மனப்பெட்டகத்தில் பாதுகாத்து வைக்கும் முயற்சியில் இறங்கினாள் மனோன்மணி. கண்களை மூடி மனக்கண்ணால் அதை ஆழ்ந்து அனுபவித்தாள். இயந்திரம் போல் இருந்தவள் இயற்கையோடு இணைந்த அந்த நொடி மிக இனிமையாக அவளுள் போய் அமர்ந்து கொள்ள, அந்த மாற்றத்தை ஏற்படுத்தியவனும் இயல்பாய் அவளுள் கலந்து போனான். சட்டென்று கண்களைத் திறந்தவளுக்கு அவளுள் ஏற்பட்ட மாற்றம் புரிபடவில்லை. அப்போது,
“அதை எல்லாம் சரி செய்யவும் ஏற்பாடு செய்திருக்கேன்..என்ஜாய் தி டே அம்மா.” என்று காவேரியின் புலம்பல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
அதன் பின் மிகவும் அமைதியாக, அழகாக கழிந்தது பயணம். வழியில் ஓர் இடத்தில் வண்டியை நிறுத்தி அவர்களின் காலை உணவை முடித்துக் கொண்டு கிளம்பினார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு வறண்ட நிலப் பரப்பு பச்சை பசேல் என்று மாறி, தார் சாலை மண் சாலையாக உருமாறி கடைசியில் அதுவும் மாயமானது. மேடான இடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு கீழே இறங்கி உத்தம்,”இனி நடை தான்.” என்றான்.
“என்ன டா இப்படிச் சொல்ற? எவ்வளவு தூரம் டா நடக்கணும்?” என்ற காவேரியின் கேள்விக்கு,
“நீங்க தான் சொல்லணும்.” என்று இடக்காக பதில் கொடுத்த உத்தம் அப்படியே அனைவரையும் வண்டியிலிருந்து இறக்கும் பணியில் இறங்கினான்.
அவனது உதவியோடு வெளியே வந்த காவேரி,”எனக்கு எப்படி டா தெரியும்? எங்கே போறோம்னு எனக்கு தெரியவே இல்லை..இப்போ எனக்கு தான் தெரியுங்கற மாதிரி பேசிட்டு இருக்க? எங்கே டா அழைச்சிட்டு வந்திருக்க? உனக்கு எப்படி இந்த இடத்தைப் பற்றி தெரியும்?” என்று கேட்டார். அதற்கு பதில் சொல்லாமல் அவனது கைப்பேசியைத் தூக்கி அவரிடம் காட்ட, அந்த இடத்தைச் சுற்றி பார்வையைச் சுழல விட்டவர்,”மேப் இடம் மாறி அழைச்சிட்டு வந்திடுச்சா? அதான் எந்த இடம்னு என்னைக் கேட்கறேயா?” என்று அடுத்த கேள்வியோடு வந்தார்.
“அப்பா நீங்க தான் அம்மாக்கு சரியான ஜோடி..இவங்களோட கேள்விகளுக்குப் பதில் உங்ககிட்டே தான் இருக்கு.” என்றான்.
“காவேரி, கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு இருக்கேயா..ப்ளீஸ்” என்று மனைவியிடம் கெஞ்சினார் சிவமூர்த்தி. அதற்கு அவரிடமிருந்து பதில் வராமல் போக,”என்ன? இருப்ப தானே?” என்று சிவமூர்த்தி கேட்டவுடன் தலையசைவில் அவரது சம்மதத்தைத் தெரிவித்தார் காவேரி.
மீனாட்சி, அர்ஜுன், மணி என்று ஒவ்வொருவராக இறங்க,”மனோ, தண்ணீர் பாட்டில், அர்ஜுனோட மாற்று உடை எடுத்துக்க.” என்றான் உத்தம்.
“எல்லாம் பின்னாடி தானே இருக்கு.” என்றாள்.
உடனே அவளோடு வண்டியின் பின்பக்கம் சென்றவன் அப்படியே அவனுடையை பையையும் எடுத்துக் கொள்ள, அதற்கு மேல் அமைதி காக்க முடியாமல்,”எங்களோடது எடுத்திட்டுப் போக வேணாமா?” என்று காவேரி கேட்க,
“நீச்சல் தெரியுமா உங்களுக்கு?” என்று உத்தம் பதில் கேள்வி கேட்க.
“தெரியாதுன்னு உனக்குத் தெரியுமில்லே..அப்புறம் எதுக்கு என்னை மாற்றுத் துணி எடுத்திட்டு வரச் சொன்ன?..எங்கே வந்திருக்கோம்னு கூட உனக்குத் தெரியலை..எதுக்கு டா இப்படி அவசரமா ஒரு பயணம்? வீட்லே இருந்தா ஆகாதா உனக்கு? பெங்களூர் வந்து எத்தனை நாளாகிடுச்சு..இப்போ தான் வீட்டுப் பக்கம் வர உனக்கு அவகாசம் கிடைச்சது..அதுவும் நிச்சயம்னு சொன்ன பிறகு தான் வர்றத்துக்கு ஒத்துக்கிட்டே..வீட்லே இருக்காம எதுக்கு டா இந்தக் காட்டுக்கு அழைச்சிட்டு வந்திருக்க?” என்று எங்கே பாதியில் அவரது வாயை அடைத்து விடுவாரோ அவருடைய கணவர் என்ற பயத்தில் மூச்சு விடாமல் பேசி முடித்தார் காவேரி.
அதற்கு சற்றும் அலட்டிக் கொள்ளாமல்,“காட்டுலே இருக்கற உங்க உறவுக்காரங்களை பார்க்க தான் அழைச்சிட்டு வந்திருக்கேன்.” என்ற உத்தமின் ஒரு வரி பதிலைக் கேட்டு சிவமூர்த்திக்கு சிரிப்பு வந்து தொலைத்தது. அதை அடக்க அவர் கஷ்டப்பட, அதைப் பார்த்து காவேரியின் எரிச்சல் கூட,”என்ன சிரிப்பு உங்களுக்கு? பெரிய ஜோக் சொல்லிட்டான் உங்க மகன்..என்னோட உறவுக்காரங்க அவனுக்கும் உறவுக்காரங்க தான்.” என்று அவர் பதிலடி கொடுக்க, அவனது கையில் இருந்த பையைக் கீழே வைத்து விட்டு, காவேரியின் தோள்களைப் பற்றி,”யெஸ்..நம்ம எல்லோருக்கும் உறவுக்காரங்க தான்..அகிலா அக்கா வீட்டுக்கு ஆயிரம் முறைக்கு மேலே வந்திருப்பீங்க அப்போ ஒருமுறையாவது இங்கே இருக்கற நம்ம உறவுக்காரங்களைச் சந்திக்க வந்திருப்பீங்க…இந்த இடம் உங்களுக்குத் தெரியும், பழக்கம்னு நினைச்ச்சிட்டு இருந்தேன்.” என்றான்.
“நான் எங்கே டா இந்தப் பக்கமெல்லாம் வந்தேன்..நம்ம வீட்லேர்ந்து நேரே அவளோட வீடு அங்கேயிருந்து திரும்ப நம்ம வீடு.” என்றார் காவேரி.
அப்போது நொடிக்கும் குறைவான நேரத்தில் உத்தம் அருகில் வந்த மணி வேகமாக தரையில் இருந்த அவனின் பையை தூக்கி நெஞ்சோடு அணைத்து, ஸீரியஸான முகபாவத்துடன்,”உங்க உறவுக்காரங்க உங்க பின்னாடிலேர்ந்து உங்க பையை எடுக்க வந்தாங்க.” என்று அவள் விளக்கம் கொடுக்க அதைக் கேட்டு உரக்கச் சிரித்தார் காவேரி. அவரின் அந்தச் சிரிப்பு அதுவரை இருந்த இறுக்கத்தை தளர்த்தி சூழ் நிலையை இலகுவாக்கியது.
அவனுடைய அம்மா, அப்பா பொறுப்பை உத்தம் ஏற்றுக் கொள்ள, மீனாம்மாவின் பொறுப்பை மணியும் அர்ஜுனும் ஏற்றுக் கொண்டனர். முதியவர்களுக்கு களைப்பு ஏற்படாத வகையில் மெல்ல நடத்தி அழைத்துச் சென்றான் உத்தம். அரைமணி கடந்த பின் சலசலவென தண்ணீரின் ஓசை கேட்க, ஆவலை அடக்க முடியாமல் மணியின் கரத்தை உதறி விட்டு ஓடிச் சென்றான் அர்ஜுன்.
”அவன் பையைக் கொடு..இந்தப் பாதை கடைசிலே தான் ஆறுன்னு நினைக்கறேன்..எல்லோரையும் பார்த்து அழைச்சிட்டு வா..நான் முன்னாடி போறேன்.” என்று அர்ஜுனின் பையை எடுத்துக் கொண்டு வேகமாக சென்றான் உத்தம்.
ஆற்றின் கரையை மற்றவர்கள் அடைந்த போது பெரியவனும் சின்னவனும் நீந்தி கொண்டிருந்தனர். அவர்களின் துணியை வைத்திருந்த பை அனாதையாக ஒரு மூலையில் கிடந்தது. அதை எடுத்துக் கொண்ட மணி சிறு தொலைவில், ஆற்றின் கரையை ஓட்டி இருந்த மரத்தடியில் பைகளை வைத்து விட்டு அங்கேயே மீனாம்மா அமர ஏதுவாக அந்த இடத்தை சுத்தம் செய்தாள்.
ஆற்றை நோக்கி சென்ற காவேரி, மறுகோடியில் இருந்த உத்தமைப் பார்த்து,“ஏன் டா இப்படி அனாதையா பையை போட்டு வைச்சிருக்க..நம்ம உறவுக்காரங்க தூக்கிட்டுப் போயிட்டா வீட்டுக்கு எதை போட்டிட்டு வருவீங்க?” என்று கத்தினார்.
உத்தமை நோக்கி நீந்திச் செல்லத் தயாராக இருந்த அர்ஜுன், முகத்தில் வழிந்த நீரை துடைத்தபடி, பெரிய புன்னகையோடு,“மாமி, எதுவும் போடாம அப்படியே தான் வருவோம்.” என்று சொல்ல,
“இதோ வரேன்..உன்னை இரண்டு போடறேன்.” என்று வேடிக்கையாக மிரட்டி, கீழேயிருந்த குச்சியைக் கையில் எடுத்து வேகமாக அவனை நோக்கிச் செல்ல அதற்குள் மிக வேகமாக நீந்திச் சென்று மறுகோடியை அடைந்திருந்தான் அர்ஜுன்.
அவனது வேகத்தில் வியந்து போய்,”தண்ணீரைப் பார்த்து பயப்படாம மீன்குட்டி மாதிரி நீந்திப் போறான் பாருங்க.” என்று சிவமூர்த்தியிடம் ஆச்சரியப்பட்டார் காவேரி.
“தண்ணீரைப் பார்த்து பயமா….நாங்கெல்லாம் காவேரிக்கரை..நடக்கறதுக்கு முன்னாடி நீந்திடுவோம்.” என்று பெருமை பேசினார் சிவமூர்த்தி.
அதற்கு,“எனக்கு இன்னும் நியாபகமிருக்கு..மணி வீட்டுக்குப் முதல்முதலா போனது போது ஒரே மழை..காவேரி கரைப்புரண்டு ஓடிட்டு இருந்திச்சு..காடு மேடு ரோடுன்னு எங்கே பார்த்தாலும் தண்ணி தான்..வண்டி போகலைன்னா நீந்திப் போகப் போறேன்னு சொன்னீங்க..நல்லவேளை வெள்ளம் ரோட்டைத் தாண்டறத்துக்கு முன்னாடி நாம அதைக் கடந்து போயிட்டோம்..இல்லைன்னா கண்டிப்பா நீங்க நீந்தி போயிருப்பீங்க..சிலதெல்லாம் நாம மறந்து போனாலும் நம்மை அது மறக்காது.” என்ற காவேரியின் மனது அந்த நாளுக்குப் பயணப்பட, அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டபடி அங்கே வந்த மணியின் மனதும் பலவருடங்களுக்கு முன்பு முதன்முதலாக காவேரி மாமியை சந்தித்த அந்தத் தினத்திற்குச் சென்றது.