மனோவா? என்று ஒரு நொடி யோசித்த அகிலாவிற்கு அவன் மணியைத் தான் அப்படி அழைக்கிறான் என்று புரிந்து விட்டது. மணியின் முழுப்பெயர் மனோன்மணி என்று நியாபகத்திற்கு வர,’இவன் எதுக்கு அவளை மனோன்னு கூப்பிடறான்?’ என்று கேள்வி வந்தது.அதை அவள் வெளியிடுமுன்,
“லோகு எங்கே?” என்று அழுத்தமாக கேட்டான் உத்தம்.
தம்பியின் தொனியில் இருந்த அழுத்தம் அக்காவைப் போய் சேர்ந்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல்,”வீட்லேர்ந்து புறப்படறத்துக்கு முன்னாடி அவளை அழைச்சிட்டு வரலைன்னு ஏம்மா நீங்க எனக்கு சொல்லலை? என் மாமியார் அவளுக்காக தான் காத்திட்டு இருக்காங்க..இப்போ அவங்களுக்கு யார் சமாதானம் சொல்லப் போறாங்க..அதை விட அத்தனை வேலையையும் யார் செய்யப் போறாங்க..ஃபங்கஷன் வேலையைப் பார்ப்பேனா இல்லை வீட்டு வேலையைச் செய்திட்டு இருப்பேனா..இங்கே இன்னும் எத்தனை வேலை பாக்கி இருக்குன்னு பார்க்கறீங்க தானே..இங்கே இவ்வளவு வேலை இருக்கும் போது மணிக்கு அங்கே என்ன வேலை.” என்று அவர்கள் வீட்டு வேலைக்காரி மணியை காவேரி அபகிரித்துச் சென்று போல் ஆத்திரப்பட்டாள் அகிலா.
வீட்டுக்கு அருகே இருந்த காலி மைதானத்தில் விழாவிற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். பெரிய மேடை. வரிசை வரிசையாக நாற்காலிகள், பூ, மின் விளக்கு அலங்காரம் என்று மேடையின் இரு பக்கமும் சாமான்கள் குவிந்து கிடந்தன. ஆங்காங்கே பரபரப்பாக வேலை நடந்து கொண்டிருந்தாலும் அகிலாவிற்கு அதில் திருப்தி ஏற்படவில்லை போல.
“எதுக்கு டென்ஷன் ஆகற? மாப்பிள்ளை தான் நிறைய ஆள்களை வேலைக்குப் போட்டிருக்காரே..எல்லாம் நல்லபடியா நடக்கும்.” என்று மகளுக்கு ஆறுதலாகப் பேசினார் காவேரி. அந்த ஏரியாவின் எல்லையை அவர்கள் அடைந்தவுடனேயே வழி நெடுக சிறிதும் பெரிதுமாக திவ்யாவும் அவளின் வருங்காலக் கணவனும் பலவிதமாக போஸ் கொடுத்து கொண்டிருந்தானர். அவளது ஆச்சரியத்தைக் கட்டுப்படுத்த முடியாமல்,”திடீர் நிச்சயம்னு அக்கா சொன்னா..இதெல்லாம் பார்த்தா அப்படித் தெரியலையே..இத்தனை பிரம்மாண்டமா நடக்கப் போகுதுன்னு சொல்லவேயில்லை.” என்று வெளியிட்டாள் இந்திரா.
காவேரியிடம் அதற்கு எதிர்வினை இல்லை. ஆண்கள் இருவர் முகத்திலும் பலத்த யோசனை. பேனரில் தெரிந்த பேத்தியின் வருங்காலக் கணவனைப் பார்த்து ஏமாற்றமானது காவேரிக்கு. அவருக்கு அனுப்பியிருந்த ஃபோட்டோவில் வேறு விதமாக தெரிந்தான். அது சில வருடங்களுக்கு முன்பு எடுத்திருக்க வேண்டுமென்று இப்போது வழியில் இருந்தவைகளைப் பார்த்ததும் புரிந்து விட்டது காவேரிக்கு. திவ்யா, திலக் இருவரும் கர்வத்துடன் கேமராவைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாமல்,“ஏம்மா, இந்தப் பையன் நம்ம உத்தமை விட வயசானவனா தெரியறான்.” என்றாள் இந்திரா.
காவேரிக்கும் அதே போல் தோன்றினாலும் இந்திராவைப் போல் அதை வெளிப்படுத்தவில்லை. மாப்பிள்ளை திலக்கின் தோற்றம் முப்பது வயது கடந்தவனைப் போல் இருந்தது. கட்டுகோப்பான வாழ்க்கைமுறை இல்லை என்று அவனைப் பார்த்தாலே தெரிந்தது. அவனுக்கு ஏற்ற ஜோடி போல் தான் இருந்தாள் திவ்யா. இருபது வயது நங்கை போலில்லை அவளது தோற்றம். கண்ட நேரத்தில் கண்டபடி கண்டதை உண்ணும் பழக்கம் அவளிடமிருக்கிறது என்று பார்த்தவுடனேயே தெளிவாக தெரிந்தது. போன முறை அகிலா பிறந்த வீட்டிற்கு வந்திருந்த போது,’திவ்யாவை வெளிச் சாப்பாட்டை நிறுத்தச் சொல்லு..நல்ல சத்தான சாப்பாட்டை வீட்லே சமைச்சுக் கொடு..இந்த வயசிலே ஆரோக்கியமா சாப்பிட்டா தான் வயசான பிறகு பிரச்சனை வராது..வெயிட்டு போட ஆரம்பிச்சா அதை நிறுத்தறது கஷ்டம்..குறைக்கறது அதை விட கஷ்டம்..இப்போவே ஏதாவது திருத்தம் செய்தா தான் இரண்டு வருஷத்திலே கல்யாணத்துக்கு பார்க்கும் போது சரியா இருக்கும்.’ என்று காவேரி அறிவுரை சொல்ல,
“அவ ஒண்ணும் குண்டா இல்லை..கொஞ்சம் சதப் பிடிப்பா இருக்கா..அவ நிறத்துக்கு அப்படியே பொம்மை போல இருக்கா.” என்று மகளின் தோற்றத்தை சிலாகித்தாள் அம்மாகாரி.
அதன் பிறகு வாயைத் திறக்கவில்லை காவேரி. அவரது அறிவுரையை நல்ல விதத்தில் எடுத்துக் கொண்டிருந்தால் உண்மையாக அவரது மனத்தில் தோன்றியதை அதாவது,’மதமதன்னு வளர்ந்து நிக்கறா டீ..ஜாக்கிரதை..காதல் கீதல்ன்னு வந்து நிக்கப் போறா.’ என்று எச்சரிக்கை செய்திருப்பார். மகளின் பதில் அவரது வாயை அடைக்க, இதோ, சில மாதங்களில் கல்யாணம் நிச்சயமாகி விட்டது பேத்திக்கு. இது காதல் திருமணா இல்லை பெற்றோர் பார்த்து வைத்த திருமணமா என்ற விவரங்கள் எதுவும் அவருக்குத் தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் திருமணமாகி சகல செல்வங்களோட அவருடைய பேத்தி சந்தோஷமாக இருக்க வேண்டுமென்ற வேண்டுதலைக் கடவுளிடம் வைத்தவருக்குத் தெரியவில்லை நிச்சயதார்த்தற்குப் பின் திருமணம் இழுபறியாகப் போகிறதென்று.
விழா நடக்கும் இடத்தில் அகிலாவைப் பார்த்ததும் வண்டியை அங்கேயே நிறுத்தி விட்டனர். அங்கே தான் இந்தப் பஞ்சாயத்து நடந்து கொண்டிருந்தது. வண்டியினுள்ளே ப்ரியங்கா, வர்ஷினின் இருவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். வண்டியை நிறுத்தியதிலிருந்து மகள்கள் விழித்துக் கொள்வார்களோ என்று அஞ்சிக் கொண்டிருந்த இந்திரா,
“அக்கா, பிள்ளைங்க இரண்டு பேரும் பாதி தூக்கத்திலே விழிச்சிட்டா நை நைன்னு ஆகிடுவாங்க..வீட்டுக்கு போய் இவங்களை ஓர் அறைலே தூங்கப் போட்டிட்டா பிரச்சனையில்லை.” என்று சொல்ல,
மணி வராத எரிச்சலில்,“அறையுமில்லை எதுவுமில்லை..எல்லாத்திலேயும் ஆளுங்களும் சாமானும் கொட்டிக் கிடக்குது..விசேஷ வீட்லே எங்கேயிருந்து தனி ரூம் கிடைக்கும்..வரவேற்பறைலே தான் நீ படுக்க வைக்கணும்.” என்றாள் அகிலா.
அகிலாவின் வீடு மூன்று மாடிகளைக் கொண்ட பெரிய வீடு. கூட்டுக் குடும்பம் என்பதால் ஒவ்வொரு குடும்பத்தினர்க்கும் தனியாக தளம் ஒதுக்கப்பட்டிருந்தது. கீழ் தளம் முழுவதும் பொது உபயோகத்திற்கு. அதில் தான் வீட்டுப் பெரியவர்களும் வசித்து வந்தனர். அகிலாவின் குடும்பத்தினர்க்கு முதல் தளம். அவளின் இரண்டு மைத்துனர்களும் இரண்டாவது, மூன்றாவது மாடியில் வசித்தனர். விவசாயம், ரியல் எஸ்டேட், கன்ஸ்ட்ரக்ஷன் என்று அண்ணன் தம்பிகள் சேர்ந்து வியாபாரம் செய்ததால் வரவு, செலவு இரண்டும் பொது. எனவே அகிலாவின் ஆசைகள், பேராசைகள் இரண்டும் காவேரியின் பொறுப்பில் வந்துவிட்டது.
திடீரென்று நிச்சயதார்த்தம் என்று செய்தி வந்ததால் பேத்திக்கு பரிசு எதுவும் வாங்கவில்லை. பணமாக கொடுத்தால் கண்டிப்பாக மகளின் கைக்குப் போய் சேராது என்பதால் கல்யாணத்தோடு சேர்த்து செய்து விடாலமென்று முடிவு செய்திருந்தார்.’நிச்சயத்துக்கெல்லாம் பரிசு கொடுக்கறது வழக்கமில்லைன்னு என் மாமியார் சொல்லிட்டாங்க..கல்யாணத்துக்கு கொடுத்துக்கலாம்னு இவரும் சொல்றார்..நான் தான் ஒரு பட்டுப்புடவையாவது வாங்கிட்டுப் வரலாம்னு நினைச்சேன்..என் விருப்பம் திவ்யாக்குப் பிடிக்குமான்னு தெரியலை..அதான் எதுவும் வாங்கலை.’ என்று இந்திரா சொல்ல,’காஞ்சிபுரத்தைப் பக்கத்திலே வைச்சுக்கிட்டு இப்படிவெறும் கையாப் போறேன்..தறிலே சொல்லியிருந்தா வீட்டுக்கே கொண்டு வந்து காட்டியிருப்பாங்க..என்ன செய்ய..எதையும் செய்ய உன் அக்கா எங்கே அவகாசம் கொடுத்தா?’ என்று காவேரி பதில் சொல்ல, அவர்களுக்குள் கருத்துப் பரிமாறிக் கொண்டனர். அதைப் பகிர்ந்து கொள்ள கூட அவர்களுக்கு அகிலா ஒரு வாய்ப்பு கொடுக்கவில்லை.
அம்மா, சின்ன அக்காவைப் போலில்லாமல் பெரிய அக்காவின் மகளுக்கு கிஃப்ட் செக்குடன் வந்திருந்தான் தாய்மாமன். அம்மா, அப்பா இருவரும் அவர்கள் விருப்பம் போல் செய்வார்கள் என்று அவனுக்குத் தெரியும். அதைப் பற்றி அவன் விசாரிக்கவில்லை. இப்போது செய்யப் போவதில்லை என்ற இந்திராவின் முடிவையும் கேள்வி கேட்கவில்லை. அதே போல் அவனது எண்ணத்தை அவர்களிடம் வெளியிடவில்லை. அதே சமயம் அவனின் பரிசை பெற்றோர் கையால் தான் கொடுக்க முடிவெடுத்திருந்தான். அவனுடைய கேள்விக்குப் பதில் சொல்லாமல் அம்மாவோடு வாக்குவாதம் செய்து கொண்டிருந்த அக்காவைப் புறக்கணித்து விட்டு விழா நடக்கவிருந்த இடத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான் உத்தம்.
வீட்டில் நடக்க வேண்டிய விழா எப்போது மைதானத்திற்கு மாறியது என்று இவர்கள் யாருக்கும் தெரியவில்லை. திவ்யா, திலக் இருவரின் பெரிய பேனரைப் பார்த்து அதுதான் விழா நடக்கும் இடம் என்று யுகித்திருந்தனர். அதன் பிறகு பெரிய சரிகை வைத்த பட்டுபுடவையில் அதிகாரமாக கட்டளையிட்டுக் கொண்டிருந்த அகிலா அவர்கள் கண்களில் பட உடனேயே வண்டியை நிறுத்தி விட்டனர். எத்தனை தேடியும் மாப்பிள்ளை பாஸ்கர் அவர்களின் கண்களில் படவில்லை. வீட்டில் இருக்கிறாரோ என்று நினைத்த காவேரி அடுத்த நொடியே ‘அகிலா இங்கே இருக்கும் போது வீட்லே அவருக்கு என்ன வேலை..நிச்சயத்தார்த்த வேலையா வெளியே போயிருப்பார்.’ என்று அவரது நினைப்பைத் திருத்திக் கொண்டார்.
இன்று அவருக்கே மாப்பிள்ளை வரப் போகிற வேளையில் இப்போது வரை பெரிய மாப்பிள்ளை என்ற ஸ்தானத்தை விட்டு இறங்கி வந்ததில்லை பாஸ்கர். இவர்களும் அந்த ஸ்தானத்திற்கு உரிய மரியாதையில் குறை வைத்ததில்லை. ஆனால் இரு குடும்பத்தினர்க்கும் இடையே கண்ணுக்குத் தெரியாத ஒரு திரை இருக்கத் தான் செய்தது. கடப்பா கல் வியாபாரத்தை அவர்களிடம் கொடுத்து விடும்படி சிவமூர்த்தியிடம் பாஸ்கர் கேட்க, உத்தம் மறுக்க, லேசாக மனக்கசப்பு ஏற்பட்டது. ‘நம்ம யாருக்குமே வேணாம்னு தான் வெளி ஆளுக்குக் கொடுக்கறேன்..பாஸ்கர் மாமாக்கு கொடுத்தா அக்கா குடும்பத்தை நாமளே இதிலே இழுத்து விட்ட மாதிரி ஆகிடும்..வேணாம் இந்தத் தொழில்.’ என்று தமக்கையின் நலனைக் கருதி வியாபாரத்தை வேறொருவருக்கு விற்றுவிட்டான். அவனுடைய வீட்டினர்க்கு நம்பிக்கை அளித்திருந்த பாஸ்கருக்கு தலைகுனிவாகிப் போனது. அது நடந்து பல வருடங்கள் கடந்து விட்ட போதிலும் துரும்பு போல் அவர்களிடையே உறுத்திக் கொண்டு தான் இருந்தது. வியாபாரத்தை விற்று கிடைத்த பணத்தை மூலதனமாக வைத்து தான் புது இடம், வீடு, நிலம், வெளிநாட்டு படிப்பு, வேலை என்று தெளிவாகத் திட்டமிட்டு அவர்களின் வாழ்க்கை வளப்படுத்தியிருந்தான் உத்தம்.
அகிலா அக்காவின் வரவேற்பைப் பார்த்து இந்த விழாவிற்காக அவனது வேலைகளைக் கிடப்பில் போட்டு விட்டு வந்தது தவறான முடிவு என்று உத்தமிற்குப் புரிந்து போனது. இனியும் அங்கே நின்றால் வாயைத் திறந்து வார்த்தையை விட்டு விட்டுவானென்று அஞ்சி அவனுடைய கைப்பேசியோடு சிறிது தூரம் சென்று யாருக்கோ அழைப்பி விடுத்தான் உத்தம்.
காவேரிக்கும் அகிலாவின் பேச்சும் போக்கும் சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஏற்கனவே இந்தத் திடீர் நிச்சயதார்த்தம் அவருக்கு அதிருப்தியை அளித்திருந்தது. பேத்தியின் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு இல்லையென்றாலும் மரியாதைக்காவது அவர்களைக் கலந்தாலோசித்திருக்க வேண்டுமென்று அவருக்கு தோன்ற, அதை கணவரிடம் சொன்ன போது,’உன்னோட தம்பிக்கு கல்யாணத்தை முடிக்காம இங்கே எதுக்கு வந்து நாட்டாமை செய்யறாங்க உங்கம்மான்னு அவ மாமியார்கிட்டே அகிலா வாங்கிக் கட்டிப்பா..’ என்று சிவமூர்த்தி சொல்ல,’நானா முடிக்காம இருக்கேன்..அவன் தான் பிடி கொடுக்காம இருக்கான்..அவனுக்கு முடிக்கறத்துக்கு முன்னாடி இவளுக்கு என்ன அவசரம்னு எனக்குப் புரியலை..வயசு வித்தியாசம் அதிகமா இல்லைன்னா உத்தமுக்கு அவளைக் கேட்டிருப்பேனே.’ என்று சொல்ல,’வயசு வித்தியாசம் கம்மியா இருந்தாலும் உன் மூத்த மாப்பிள்ளை அவர் பெண்ணை அவனுக்கு கொடுக்க மட்டார்..அவங்க இரண்டு பேருக்கும் ஒத்துப் போகாது..இப்போ அதையெல்லாம் பேசி குட்டையைக் குழப்பாதே.’ என்று மனைவியிடம் கண்டித்தார்.
‘நான் பேசலைன்னாலும் எல்லோரும் இதையே பேசி பேசி என்னைக் கடுப்பாக்கப் போறாங்க.’ என்று காவேரி சிடுசிடுக்க, மனைவியின் கரத்தைப் பற்றி,’யாருக்கு யாருன்னு கடவுளுக்கு தான் தெரியும்..எங்கேயோ பிறந்து, வளர்ந்து பிழைப்புக்காக வந்த என்னைக் கல்யாணம் கட்டுவேன்னு நீ நினைச்சேயா?’ என்று கேட்க, ‘இல்லை’ என்று மனைவி தலையசைக்க,’அப்புறம் எதுக்கு மத்தவங்க சொல்றதைக் காதிலே போட்டுக்கற..அப்படியே பிடிவாதமா யாராவது கேட்டா, கடவுள் கைலே விட்டிட்டேன்னு சொல்லிடு..பேச்சு நீளாது..என்ன நடந்தாலும் அமைதியா இரு..விழாவிலே கலந்திட்டு எந்தப் பிரச்சனையும் இல்லாம நாம வீடு வந்து சேரணும்..அவ்வளவுதான்.’ என்ற திட்டத்தோடு தான் மனைவியை அழைத்து வந்திருந்தார் சிவமூர்த்தி.